இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….

Spread the love

இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை
‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அமெரிக்காவில் கணினித் துறையில் பணியாற்றும் இரா. முருகன் சிறுகதை , குறுநாவல் , கட்டுரை , கவிதை ஆகிய இலக்கிய வடிவங்களில் பங்களிப்பு செய்துள்ளார். என். சி . இ . ஆர். டி. பரிசு பெற்றுள்ளார். இவர் கவிதைகளில் பெரும்பாலானவை ‘ கணையாழி ‘ இதழில் வெளியானவை. புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ . இது ஏழைப் பெண்ணின் பிரசவம் பற்றிப் பேசுகிறது. கவிதையின் போக்கில் மரபுக் கவிதை நடை அமைந்துள்ளது. எதுகை சரளமாக வருகிறது. இது புதுக்கவிதைப் போக்கை மாற்றிப் போட்டுவிடுகிறது.
மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்க
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
—- என்று தொடங்குகிறது . வானம் பற்றிய ஒரு புதுக்கருத்து காணப்படுகிறது.
பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலில் நின்று
வானம் வெறித்திருக்க
—- என்ற வரிகளில் பின்னிரவுப் பனி மூட்டம் பீடிப் புகைபோல் இருப்பதாகக் கூறுகிறார். பீடிப் புகை சாதாரணமாக அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாது. மிகைவுணர்வுதான். ஆனாலும் கவிதை என்பதால் புது உவமையாகக் கொள்ளலாம்.
அப்பெண்ணின் வறுமை பலவாறு சுட்டப்படுகிறது.
வீட்டுச் சுவர் விழுந்ததை
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை
பால் மரத்த பசு மாட்டை
பஸ் அடித்த வெள்ளாட்டை
—-என்றெல்லாம் குறிப்பிடுகிறார். குடும்பக் கஷ்டம் ஏழ்மையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
ஆரோ வந்து சொன்னார்
ஆண் குழந்தையென்று
ஆறுச் சலசலப்பில்
காலை விடிந்த பொழுது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு
—- என்று கவிதை முடிகிறது. புதுக்கவிதையில் மரபுக் கவிதை நடை தேவையற்றது என்பது தீர்மானமான கருத்தாகும்.
‘ பெண் ‘என்ற தலைப்பிலொரு கவிதை… பெண் கூற்றாக அமைந்துள்ளது. ‘ மாட்டேன் ‘ என்ற சொல்லோடு முதல் நான்கு பத்திகள் முடிகின்றன.
கனவிலும்
வரிசை தப்பாது வரும்
வீடுகள் கடந்து
கோபுர நிழல் நீளும்
சின்ன வீதியில்
நடக்க மாட்டேன்

—- பிறந்த வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண் இவள் என யூகிக்க இடமிருக்கிறது. ‘ தோழிகளைத் தேடமாட்டேன் ; இருண்ட நடையில் போகமாட்டேன் ; நின்ற கூடத்தில் பாதம் பதிக்க மாட்டேன் ‘ என்றெல்லாம் கூறுகிறாள் அவள் ! பிறகு என்னதான் செய்வாளாம் ? முத்தாய்ப்பு பதில் கூறுகிறது.
உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து
மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும்
பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க
மனம் மட்டும் அங்கெல்லாம்
மெல்லப் பயணம் போகும்
—- என்று கவிதை முடிகிறது. கணவன் வீட்டிலேயே இருப்பேனெங்கிறாள். ஆனால் மனம் மட்டும் பயணம் செய்வதைத் தவிக்க முடியவில்லை.
‘ புள்ளி ‘ என்ற கவிதையில் சில கேள்விகள் உள்ளன. சில யதார்த்தக் காட்சிகளும் உள்ளன.
பள்ளிக்கூடம் பற்றிய சில நினைவுகள் குறிப்பிடப்படுகின்றன. கவிதையின் திசை அவ்வளவு தெளிவாக
இல்லை.
ஒரு சக்கரம் உருண்டது
தொடங்கிய இடத்தில் புள்ளியிடு
இலக்கு உணரப்பட்டதா ?
நாம் கற்பித்துக் கொள்வோம்
திசைகள் மேலிருந்து கீழா ?
கீழிருந்து மேலா ?
அதையும் தான்
ஆரங்கள் உண்டா ?
இல்லையேன்றே சொல்லலாம்
என்ன போயிற்று ? கற்பித்துக்கொள்
—-என்பது தொடக்கப் பத்தி!

படிப்பில் கவனமில்லாமல் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் அலாதி மகிழ்ச்சி . இதைத்தான் சொல்கிறது கவிதையின் முடிவு.

கற்பிதமா முக்கியம் நமக்குப் பேச வேண்டும்
தொடங்கிய இடத்தில் புள்ளி?
அதை அழித்துவிட்டு வந்து உட்கார்.

‘ புவா ‘ என்றொரு கவிதை. வடநாட்டுப் பெண் பற்றியது. இவளுக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் ‘ சீமான் த புவா ‘ இக்கவிதையில் வாலிபக் குறும்பு பஞ்சமில்லாமல் தலை காட்டுகிறது.
அத்தை வீட்டுக்கு வருஷம் ரெண்டு தடவை போய்
உருண்டு திரண்ட உடம்பு – எருமைப்பால்
போன மாதம் தெராதூன் போய் வந்ததும்
டீ சர்ட்டில் ரெட்டைப் பனை மரங்கள்
இடைவெளி அதிகமாகி இறுகிய சட்டை
[ ” இரா. முருகன் சுஜாதா மாதிரி எழுதுவார் ” என்று சொல்லியிருக்கிறார் என் நண்பர் ஒருவர். மேற் கண்ட பத்தியைப் படிக்கும் போது நண்பர் சொன்னது உண்மைதான் என்று தெரிகிறது.]
‘ ரெண்டாம் செக்ஸ்’என்ற புத்தகத்தை ரஞ்சனா குப்தா கொடுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் முப்பதாம் பக்கத்தில் நீளத் தலைமுடி . ‘ ஒற்றை முடியைக் கன்னத்தில் இழைத்தேன் ‘ என்கிறார் இரா. முருகன். வாலிபக் குறும்பு நன்றாகவே செயல்பட்டுள்ளது. மற்றபடி கவிதையில் ‘ சீரியஸ் ‘ தன்மை ஏதும் இல்லை. தற்செயல் போக்கில் அமைந்துள்ளது.
‘ஜன்னல் ‘ என்ற கவிதை நன்றாகத் தொடங்குகிறது.
இருட்டை விதைத்திருக்கிறது
கருப்புத் திராவகமாய்
நிரம்பி வழிந்து
கம்பிகளைப் பற்றிய விரல்களையும்
அரிக்க ஊறும் இருட்டு
இதன் பின் தொடரும் வரிகள் ஜன்னல் கதவை மூடி வைக்க அறிவுறுத்துகின்றன. மற்றபடி புதிய தகவல்கள் ஒன்றுமில்லை.
இரா. முருகன் கவிதைகள் சராசரி என்னும் நிலையில் உள்ளன. கவிதை என்னும் வடிவச் சிறப்பை மேலும் உணர்ந்து கொஞ்சம் சிரத்தையோடு எழுதினால் நல்ல கவிதைகள் பிறக்க வாய்ப்பு ஏற்படும் !

Series Navigationsupport Thangavel Kids Education Fundraiserமுயல்கள்