இரு கவரிமான்கள் – 3

This entry is part 11 of 26 in the series 30 டிசம்பர் 2012

என்ன தயக்கம் மாதவி?…ஃபோன் எடுத்துப் பேசுங்கள்…..எனிதிங் பர்சனல்..? நான் வேணா..வெளிய இருக்கட்டுமா..?..என்று சீட்டிலிருந்து எழுதிருக்க முயன்றான் ரமேஷ்.

நோ…நோ…ப்ளீஸ் ..பி  சீட்ட்ட் …..பைரவி தான் மும்பையிலிருந்து பண்ணியிருக்காள், சொல்லியபடி..”ஹலோ ” எனும் போது இணைப்பு கட் ஆனது.

சுழல் நாற்காலியில் சுழன்று உட்கார்ந்து கொண்ட ரமேஷ் …எவ்வளவு அழகு…….ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்…மாதவியைப் பார்த்த ரமேஷின் கண்களில் குறும்பு தாண்டவமாடியது

எதுக்கு..திடீர்னு..ஆண்டவுனுக்

கு நன்றி ..? என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள் மாதவி.

“அத்தனை அழகையும் உனக்கே கொடுத்ததற்கு”  சரிதானே..?

இதைக் கேட்டதும் கல கல வென்று சிரித்தபடியே ‘யூ ஆர் கிட்டிங்’ என்றாள் மாதவி. அவளது மேனியிலிருந்து மின்காந்த கவர்ச்சி அலைகள் வெளிப்பட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தன அவனுக்குள்..

அவனைச் சுற்றிலும் எழில் தேவதைகள் பறந்து பூமழை பொழிவது போலிருந்தது. பெண்மைக்கு இத்தனை காந்த அதிர்வலைகளா? மனத்தின் அடியிலிருந்து ஓரு கேள்விக்குறி மேலெழுந்தது.  மாதவி தான் எனக்காகவே பிறந்தவள் என்று…அவன் உள்ளம் துடியாய்த் துடித்துச் சொல்லியது. “இவளை இழந்து விடக் கூடாது…இந்தக் கலைமான் எனக்குத் தான் சொந்தம்…”

ரமேஷ் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் மாதவியின் கைபேசி மணியடித்தது.

“மாதவி..!  .நான் ரெகார்டிங் இப்போ போகணும்.அதுக்குள்ளே உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டு போகலாம்னு பேசறேன்.” – பைரவி

கேளு பைரவி..நான் கூட ஒரு விஷயம் சொல்லணும்…

இங்க உனக்கொரு அலையன்ஸ் பார்த்து வெச்சுருக்கேன். அவரிடம் உன்னைப் பற்றிச்  சொல்லணும்…உனக்கு ரொம்பப் பொருத்தமானவர் .. உனக்கு கண்டிப்பாப் பிடிக்கும்…- மாதவி !  அவர்ட்ட  சொல்லிடவா..? என்று ஆவலாகக் கேட்டாள் பைரவி.

அச்சச்சோ வேண்டாம்…வேண்டாம்….ப்ளீஸ்...பைரவி…நோ..நோ.. நோ..நோ….உன்கிட்ட நான் அன்னிக்கே சொன்னேனே.. .இப்போ எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை யில்லை. பண்ணிக்கவும் இஷ்டமில்லை. என்னை சுதந்திரமா பறக்க விடேன்.. ! ப்ளீஸ்…  யாரிடமும் பேசி இந்த மாதிரி எந்தக் காரியமும் பண்ணிடாதே..அப்பறம் அவர் உன்னைத் தப்பா நினைப்பார்.  என்று பரபரப்பாகப் பேசினாலும் குரலில் பிடிவாதத்தை பதித்தாள் .

அப்படியா…? சரி..விடு…உன் இஷ்டம்…ஒரு நல்லவருக்கு எதிர்கால மனைவியாகும் பாக்கியம் உன்னை விட்டுப் போகிறது..அதான் என் வருத்தம்.

அந்த பாக்கியம் உனக்கே கிடைக்கட்டும்…என் வாழ்த்துக்கள் பைரவி. இப்ப நான் எங்கே இருக்கேன் தெரியுமா.? ஒரு நல்லவரோட ஆஃபிஸில்…எனக்கு ரெண்டு பெரிய ப்ராஜெக்ட்ஸ் தந்திருக்கார் வானவில்லில். இதைப் பத்தி உன்னிடம் நீ வந்த பிறகு பேசறேன்…டூ யு வான்ட் டு டாக் டு ஹிம்….ஹி இஸ் .ஹியர்

………

ஓகே …ஒகே…நான் சொல்லிக்கறேன்.  யு கேரி ஆன்..! இணைப்பைத் துண்டித்தவள்…இப்போ அவசரமா தியேட்டர் போறாளாம். அவளே உங்களோட பேசுவாளாம் .. என்று புன்னகை முகத்தோடு சொல்லவும்.

அந்த அவசரத்திலும்….ஸோ … ‘ஆதித்தனிடம் பேச ஒன்றுமில்லை’ என்று தோன்றியது பைரவிக்கு. அதே சமயம், “இப்ப மாதவிக்கு ரமேஷோட வானவில் ஆபீசில் என்ன வேலை….? அங்கே ஏன் போயிருக்காள்  ? என்று யோசித்த படியே தியேட்டருக்குள் நுழைகிறாள் பைரவி.

ரமேஷ் ஆவலுடன் ஆமா…என்ன விஷயம்…மாதவி..நீ..நீங்க வேக வேகமா நோ..நோ..ன்னு சொன்னியே….நான் தெரிஞ்சுக்கலாம்னா….என்று இழுத்தான்.

அதுவா..என் கல்யாணம்….பற்றியது. ஒரு அலையன்ஸ்  பற்றி பைரவி சொன்னாள் . அதான் வேண்டாம்னு சொல்லிண்டிருந்தேன்.  எனக்கு இந்தக் கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாதுன்னு ஏற்கனவே அவளிடம் சொல்லியிருக்கேன் .தெரிஞ்சும்  கேட்கிறாள்.அதான். …!

இந்தப் பதிலைக் கேட்டதும் ரமேஷுக்கு தூக்கி வாரிப் போட்டது.. .”டேய்… ரமேஷ்..நீ மச்சக்காரன்டா…..பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுகிறது…” ஒருவேளை மாதவி உன்னை விரும்பறா போல….”  நினைக்கும் போதே நெஞ்சம் இனித்தது ரமேஷுக்கு.

“மாதவி உனக்காகப் பிறந்தவள்…அவளை விடாதே…இன்னும் என்ன சொல்லத் தயக்கம்…அவள் தான் உனக்கு முன்னாடிப் பச்சைக் கொடி  பிடிச்சாச்சே… இனிமேல் நீ தான் ஸ்டார்ட் பண்ணணும் …ரமேஷுக்கு தைரியம் தலை தூக்கியது.

அதற்குள் ஒரு அழகிய பெண் இருவருக்கும் சாசரில் காபி கொண்டு வந்து வைத்து விட்டுப் போனாள் .

நானே கேட்கணும்னு நினைச்சேன்….இங்க எல்லாருமே ஒரே மாதிரி உடை உடுத்திக் கொண்டு இருக்காங்க…. அதே சமயத்தில் எல்லாரும் ரொம்ப அழகா இருக்காங்க….இப்படி அமைவது கூட கடினம் தான். என்கிறாள் மாதவி.

எஸ்…மாதவி…யூ ஆர் ரைட்.  ஐ அப்ரிசியேட் யூ . நல்லா கவனிச்சுருக்கே. இந்த இடம் மான்களுக்கும் கலை மான்களுக்கும் ஒரு உல்லாசப் பூங்கா மாதிரி… எல்லா மான்களும் ஒரே மாதிரி….இங்கே இப்போ நீ ஒரு கலைமான்…என்று சொல்லிச் சிரிக்கிறான் ரமேஷ்.

” இல்லை கவரிமான்”….என்று அழுத்திச்  சொல்லித் அவனைத் திருத்துகிறாள் மாதவி. மீண்டும் அவளது மொபைல் அபாய மணி அடிப்பது போல அடிக்கிறது .

இவள் ஏதோ..”மறந்தே போயிட்டேன் ” என்று  உணர்ந்தவள் போல் காபியை வேகமாகக் குடித்துவிட்டு அப்போ நான் கிளம்பறேன். முக்கிய வேலை வந்திருக்கு…போயாகணும்…மீண்டும் சந்திப்போம்..என்று சொல்லி எழுந்து விடுகிறாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு..நல்ல சந்தர்ப்பம் கை நழுவி போயிடிச்சே என்று தோன்றுகிறது. கூடிய சீக்கிரம் இன்னொரு மாஸ்டர் ப்ளானில் இந்த பெட்டையை  அமுக்கிப் பிடிச்சு பஞ்சாரத்துல பாதுகாக்கணும். அவன் மாதவியைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

அவனது கைபேசியில் பைரவி சிரித்தபடி அழைத்தாள்.

மாதவி வெளியேறி நடக்க நடக்க அங்கிருக்கும் பெண்களின் அழகும், கவர்ச்சியும் அவளை என்னவோ செய்தது. தனது காரை எடுத்துக் கொண்டு எங்கிருந்தோ விடுபட்டு சுதந்திரமாகப் பறப்பதைப் போல உணர்ந்தாள் . வெளியில் இருண்டு மழை மேகங்கள் கூடி, மழை பெய்து நின்று இவளை வாழ்த்துவது போலிருந்தது.

“காலங்கள்..மழைக் காலங்கள்….
புதுக் கோலங்கள்…ராகங்களே சுகங்கள்
நாங்கள்..கலைமான்கள் ..பூக்கள் ..”

காரினுள் பைரவியின் குரல் குழைந்து கொண்டிருந்தது..

மும்பையில் பைரவி தனது பாடலின் டிராக் முடிந்ததும் ..ஆதித்தன் வயலின் வாசிப்பதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் .

இவள் பாடிய பாடலின் வரிகள் வயலினில் அழுது காட்டியது…ஆதித்தன் கண்களை மூடிக் கொண்டு இசையில் லயித்து அவனது கை அசைவில் வயலின் அழுதது,அழுதது, அழுது சோக கீதம்  பொங்கிது….தவித்துப் பேசியது… இறுதியில் வாயடைத்து மௌனமானது.

அந்த இசை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த பைரவிக்குத் தான் திடீரென நாணறுந்த வீணையாக உணர்ந்தாள் .

வெறும் ஒரு முழ மரப் பெட்டியிலிருந்து இசையை நீர்வீழ்ச்சியாக வடித்துக் கொட்டுகிறாரே  ….இவர்…இவர் தான் இந்த ராகங்களுக்கு அதிபதி போல ஒரு பாவனை….எல்லாம் முடிந்து தியேட்டர் கலைந்த பின்பும்…அத்தனை நிசப்தத்திலும் பைரவிக்கு காதில் வயலின் இன்னிசை எதிரொலித்துக்  கொண்டிருந்தது போலிருந்தது.

காருக்குள் அமர்ந்திருந்தவள் அவர்கள்  தங்கியிருந்த  ஹோட்டல் ரூமுக்குள் போகும் வரைக்கும் கூட எதையும் பேச மறந்தவளாக அந்த இசையில் இணைந்த ஆன்மா கண்மூடிக் கொண்டே லயித்தபடியே கரைந்து வலது கன்னத்தில் கண்ணீர் கோடுகள் .”வயலின் வேவ்”  போல அது அவளது கன்னத்தைத் தடவின.. சிலிர்த்தவள்…..சுதாரித்தபடி டிஸ்ஸுவால் கண்களை ஒற்றிக் கொண்டாள் .

அருகில் அமர்ந்திருந்த விஜய் ஜேசுதாஸ் “அநியாயத்துக்கு பிழிஞ்சு எடுத்துட்டாங்க சோகத்தை…”ஆதித்தா !….நீ கிரேட் பா….அவர் எதிர்பார்த்ததை விட அசத்திட்டீங்க….இல்லையா பைரவி..? என்று இவள் பக்கம் திரும்பவும்..

எஸ்….எஸ்…சரியா சொன்னீங்க…வயலின் ரொம்ப மெலோடியஸ். கண்களில்  நீர் சொரிந்தது.  நான் என்ன பாடினேன்னு கூட மறந்துடுச்சி இன்னும் வயலின் நாதம் மட்டும் காதில் ஒலிக்குது என்று புன்னகைத்தாள் .

ஆதித்தன் பணிவான குரலில்.இவள் பக்கமாகத் திரும்பி “ரொம்ப தாங்க்ஸ் மேடம்”…என்றார். விஜய் ஜேசுதாஸும் இவளைப் பார்த்து புன்னகைத்தார்.

பைரவியின் பார்வை முதன் முதலாகத் தன்னை வித்தியாசமாக நோக்கித் தொட்டுச் சென்றதுபோலிருந்தது ஆதித்தனுக்கு . உடனே அந்தப் பார்வையை ஆதித்தன் விழிகளை மூடி உள் வாங்கினான். இதயத்துக்குள் லேசான அதிர்வு,  என்றுமில்லாத ஓர் துடிப்பு நேர்வது கண்டு திகைத்தான் ஆதித்தன்.

பைரவி இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்தது ஒரு நிமிடம் போலத் தோன்றியது ரமேஷுக்கு.அதற்கு மாதவிக் கலைமான் தான் காரணம்… இன்னும் ஒரு வாரம் பைரவியைப் பார்க்கவில்லை என்றால் மாதவி அருகில் இருக்கும் தைரியத்தில் பைரவியை  மறந்தே போயிருப்பான் . ஆனாலும் பைரவி சொல்லியிருந்தாள் , ரமேஷ், நாளைக்கு ஏர்போர்ட் வந்துடு….என்னை பிக் அப் பண்ணிக்கோ…என்று. அதற்காகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் பைரவி வந்து விடுவாள் அதற்குள் சீக்கிரம் போகணும் என்று நினைத்துக் கொண்டே . தலையை வாரிக் கொண்டிருந்த ரமேஷைப் பார்த்து….”ரமேஷ், என்னடா…..எல்லாரும் பேசிக்கறாளாமே….நீ அந்தப் பாடகி பைரவியோட பழகறேன்னு….நிஜமா …? அப்போ ஒரு நல்ல நாளாப்  பாரத்து நாங்க பெரியவா பேசி முடிவு பண்ணலாம் இல்லையா? ஏன் ஒத்திப் போடணும் ?   பைரவி நல்ல பெண். நீ கொடுத்து வெச்சுருக்கே.

திடுக்கெனத் திரும்பிப் பார்த்தவன், அம்மா….நான் யாரையும் இன்னும்  முடிவு பண்ணலை….இசையில் நாட்டம் இருக்கு…அது சலங்கை ஒலியா ?  அல்லது வீணையின் நாதமான்னு .  குழப்பமா இருக்கு…இன்னும் கொஞ்சம் பொறு … சீக்கிரமாச் சொல்றேன்… .ஆனால் நிச்சயமா பைரவியா…..?  சிந்திக்கிறேன் . ஒகே… என்றவன் எர்போர்ட்டுக்குக்  கிளம்பி விட்டான்.

ரமேஷைக் கண்ட பைரவி “தேங்க்ஸ் ஃபார் பீயிங் ஹியர்” …..  என்றபடி சிரித்துக் கொண்டே காருக்குள் ஏறுகிறாள். அதில் ஒரு உரிமை இருந்ததைப் பார்த்து ரமேஷுக்கு “நாம ஏதோ  விளையாட்டுக்குச் செய்யப் போக இது பெரிய ப்ராப்ளத்துல கொண்டு விடுமோ ..? அம்மா வேற இப்ப ஒரு மார்க்கமா பேசினாளே ….என்று உள்மனசு சொன்னாலும்….போற வரைக்கும் போகட்டும் … பார்த்துக்கலாம் என்று அசட்டுத்தனம் தைரியம் சொன்னது.

ரெண்டு நாள் தான்  உன்னைப் பார்க்கலை…அதுவே ரெண்டு யுகம் போறது மாதிரி இருந்தது….உன் முகத்தை, உன்  குரலைக் கேட்காமல் ரொம்பத் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?  உனக்கு எப்படி இருக்கோ தெரியாது .? ஆமா…போன விஷயம்…. ஹிந்திப் பாட்டு நல்லாப்  பாட முடிஞ்சுதா? என்ன பாட்டு அது.? ..ஒரு வரி பாடிக் காமியேன்…பைரவி.

“பத்தர் பனாதியா
முஜே….
ரோனே நஹி தியா…”

அப்டின்னா அர்த்தம் சொல்லேன்….

“கல்லாக்கி விட்டாய்
என்னை
கதற விடாமல் …நீ..”

ஓ …சூபெர்ப்…! ச்ச்ச்ச்ச்ச்ச்ச்……அப்படியே பிழிஞ்செடுத்துட்டே …..! குட்..

ம்ம்ம்ம்ம்….அப்புறம்…இங்க எப்படி? எனி நியூஸ்..?

இதைக் கேள் பைரவி !  நான் ஒரு மெகா கலா நிகழ்ச்சி நடத்தப் பிளான் பண்றேன். நீயும், மாதவியும் சேர்த்து..வானவில் டிவி க்கு ஒரு நிகழ்ச்சி பண்ணித் தரணும்…ரெடியா இரு.

மார்கழி மாச மஹா உற்சவம்..ன்னு நிறைய பெரிய பெரிய ஸ்பான்சர்ஸ் கிடைச்சிருக்காங்க…”பாட்டும் பரதமும்” ன்னு  ஒரு கலைப்போட்டி நிகழ்ச்சி. அஞ்சு லட்சம் பரிசுத் தொகை. ஆர் யூ  ரெடி…மாதவியோட சலங்கைக்கு ஸ்வரம் சொல்லிப் பாடு……ஆனால் இந்த போட்டியில் ஜெயித்தால்  தான் பரிசு.

ஒகே.

வாவ்…..வொன்டர்ஃபுல் ஐடியா….. கிரேட்…..இந்த விஷயம் மாதவிக்குத் தெரியுமா?

நீயே சொல்லேன்…நான் வேறு ஏற்பாடுகள் செய்து கொள்கிறேன்..நல்ல பாடலாக நீயே செலக்ட் செய்து பாடிப் பரிசைத் தட்டிச் செல், ஒரே ஷாட்ல அஞ்சு லட்சம்… என்று சொல்லி அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். அப்படியே மனதுக்குள்….பரிசு யாருக்குக் கிடைக்க முடிவு செய்வது ?  பைரவிக்கா ?  மாதவிக்கா ?  இரு கலைமான்களில் எந்தக் கலைமானுக்கு ?  “அதான் நான் ஏற்கனவே பரிசு  எனக்குப் பிடித்த ஒருத்திக்குத்தான் கிடைக்கணும்னு முடிவு செய்து ஏற்பாடும் பண்ணியாச்சே.. என்று ரமேஷ் சிரித்துக் கொள்கிறான்.

பரிசுத் தொகையை விட தனது கௌரவம் தான் முக்கியம் என்று  பைரவி எண்ணியவள்.. இருந்தாலும் பரிசு பெறுவதே ஒரு கௌரவம் தான்  அங்கீகாரம்..தான். அவளுக்கு அதில் வெற்றி தனக்குத் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனம் பூரா வியாபித்திருந்தது

அதே சமயம் மாதவிக்குக் கூட ஆடுவதற்கு  இது ஒரு நல்ல வாய்ப்பு, மேடை.. இதுவே அவள் எதிர்பார்ப்பது…அவளும் மனதுக்குள் …பரிசு எனக்குத் தான் கிடைக்க வேண்டும் என்றும் விரும்புவாள் .

சரி ரமேஷ்…இந்த ப்ரோக்ராமுக்கு நானும் மாதவியும் கலந்துக்கறோம். நான் சொன்னால் அவள் கேட்பாள். நான் எனக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் வராமல் பார்த்துக்கறேன்….அதுவரை இதற்காக கொஞ்சம் தனிப்பட்ட பயிற்சி எடுக்கணும்… அந்த ஒத்திகை பார்த்துக்கறேன். மற்றபடி எங்களது ஒத்துழைப்பு என்றும்  இருக்கும். அப்போ நான் இறங்கிக்கறேன்…வீட்டுக்குள் வந்து காபி சாப்பிட்டு விட்டுப் போகலாமே….அழைத்தாள் பைரவி.

இல்லை  பைரவி, ஐ ‘ல் கம் சம்மதர் டைம்…..பை என்று காரைத் திருப்பினான் ரமேஷ்..

மும்பை சென்று திரும்பிய பைரவி ரமேஷின் காரில் வந்து இறங்கியதும்….” அவரும் மும்பை வந்திருந்தாரா என்ன? ” என்று அதிர்ச்சியோடு கேட்ட அம்மாவைப் விநோதமாகப் பார்த்தாள் பைரவி.

இல்லையே…ஏர்போர்ட்டுக்கு வந்தார்…அதுக்கு ஏன் நீ இப்படி ஷாக் ஆனா மாதிரி இருக்கே..நான் தான் வரச் சொன்னேன். நேற்று நம்ம ட்ரைவர் ரத்தினத்துக்கு ஃ போன்  பண்ணி ஏர்போர்ட் வரச் சொன்னேன்…..அவருக்குப் பாவம்  வைரல்  ஃபீவர்ன்னு  சொன்னார். அதனாலத் தான் ரமேஷுக்கு ஃபோன் பண்ணினேன். மாதவிக்கு வீடு ரொம்ப தூரம்.

ரமேஷ் வரும்போது சொன்னார். வானவில் டி வி யில் ‘பாட்டும் பரதமும்’ னு ஒருபோட்டியாம்…அதைப் பற்றி சொன்னார். நானும் மாதவியும் சேர்ந்து பண்ணப் போறோம்.முதல் பரிசு ஐந்து  லட்சமாம். என்று நிறுத்திவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள் பைரவி.

அது மாதவிக்கே கிடைக்கட்டும்….நீ ஏன் இதிலெல்லாம் கலந்துக்கணும் . உனக்கு நேரம் இருக்காதே. ஆனாலும் சின்னத் திரைக்கு ஏன் போகணும்…?

அம்மா….!இப்போ நான் சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சிக்குப் போறதில்லையா? அது மாதிரி தான் இதுவும்..

சரி..சரி..என்னவோ செய் உன் இஷ்டம்.

பைரவி மாதவியிடம் சொன்னதும் மாதவி சந்தோஷத்தில் குதித்தாள் …..நீயா எனக்காக பாட்டுப் பாடப் போறே..? நம்ம நல்ல நட்புக்கு இந்தப் போட்டி எல்லாம்  வெறும் வெளி உலகுக்குத் தான். எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா என்ன? நீ தான் பரிசுக்கு சொந்தக் காரி..இப்பவே லிஸ்ட் போட்டுக்கோ பரிசுத் தொகையில் என்னவெல்லாம் பண்ணலாம்னு….என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

இல்லை மாதவி…நாம ரெண்டு பேருமே இதை ஒரு சாலஞ்சா எடுத்து திறமையைக் காட்டணும் .இதில் பரிசை விட கெளரவம் முக்கியம்.. இல்லையா?

ஆமாம்..பெயரும் புகழும் கிடைத்து ஏற்கனவே உனக்குன்னு  கெளரவம்  இருக்கு. இதன் மூலமா அது ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகும்…அவ்ளோதான். நீ தான் பரிசை வாங்கணும். வாங்குவே…அது தான் சரி.

இதில் எந்த மாஜிக்கும் இல்லை….திறமைக்குத் தான் வெற்றி. ரமேஷ் கண்டிப்பா சொல்லிட்டார். யாரடி நீ மோகினி…? ன்னு நான் கேட்பேன்…பதில் சொல்லு….உன் நாட்டியத்தில்…!

இருவரும் மனம் விட்டுச் சிரிக்கின்றனர். சிரித்துச் சிரித்து மாதவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளி ததும்பி வழிகிறது . பைரவி அதைத் துடைத்து விடுகிறாள்.

இருவரும் பணத்துக்கு மட்டுமா போட்டி போடுகிறார்கள் ?  இல்லை செல்வந்த ரமேஷைத் தன்வசம் கவரவே  திறமையைக்  காட்டப்  போகிறார்கள்.

அவர்கள் இருவரும் ஒத்திகை பார்ப்பதில் ரமேஷைப் பார்ப்பதை ஒத்தி வைத்திருந்தார்கள். போட்டிக்கான அந்த நாளும் வந்தது.

பாட்டும் பரதமும்…விளம்பரத்தோடு  டைரெக்ட் டெலிகாஸ்ட் ஆரம்பமானது.

அழகான செட்டிங்கில் மாதவியின் எழில் மயக்கும் அலங்கார மோகினியாக பைரவியின் குரலுக்கு அவளது சலங்கைக் கால்கள் காத்திருந்தன.

கணீரென்ற குரலில் தாள ஜதி ஒலிக்கிறது….மாதவி தன்னை மறந்தாள். பைரவியும் தன்னை மறந்தாள் . பாட்டும் பரதமும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தது போட்டியில்.

தொலைகாட்சி நேயர்கள் பார்த்த மாத்திரத்தில்  அந்த நிகழ்ச்சியில் தங்களைப் பறிகொடுத்தனர்.

பைரவியின் இன்னிசை நாதம் பொங்கி எழுந்தது.

தாகிட தகஜம் தரிகிட தகஜம்
தாகிட தகஜம் தரிகிட தகஜம்
தாங்கிட தக ரீம்கிட தக நீம்கிடதக
தீன்கிட தக நம் கிட தக ஜம்
தகஜம் தகஜம் தகஜம் தகஜம்

ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி….எந்தன்   தோழி..!
ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி….எந்தன்   தோழி..!
ஆ…ஆஅ…ஆஆ…ஆஆ..

மாலை ஏற்கும் மன்னனோ…?
நேரில் காணும்  கண்ணனோ…?
சேர வேண்டும்
எந்தன் தீரனை…யி ….யி ….யி ….!

தேவதை  நான்… விண்ணுலக
ஊர்வசி தான்…ஆஆ.ஆஆ.
மேனகை தான்..
மன்மதனின்
ரதியும்   நான்…..
ஆ…ஆஅ…ஆஆ…ஆஆ…..(2)

நேற்று வந்த மானிடம்…
பார்வை  தேடித் போகுமா?
இன்று உந்தன் ஆடலில்
பாதை மாறிப் போகுமோ..?

உன் எண்ணம் பொல்லாது
உன் ஜம்பம் செல்லாது
என்னை இங்கு வெல்லும்
உந்தன் சதங்கை காட்டடி…..!

மேடைதனில்  ஏறி நில்….
போட்டியிதில் தோற்றுச் செல்…
என் ஆசை தீராதா.
உன் கோபம் மாறாதா….
சலங்கையும் வீணையும்
கலங்கித்  தவிப்ப தேனடி….?

என்னில் ஒரு வேதனை
உன்னால் வந்த சோதனை
தேவை  யில்லை
உனது சாதனை..!

ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி…இனிய தோழி..!
மாலை ஏற்கும் மன்னனோ
நேரில் பார்க்கும் கண்ணனோ
சேர  வேணும் என் தேவனை…!

ஆனந்தம் தந்தவன் யாரென்று
கேளடி தோழி…இனிய தோழி..!
மாலை ஏற்கும் மன்னனோ
நேரில் பார்க்கும் கண்ணனோ
சேர  வேணும் என் ஜீவனை …!

தத்தித்தோம் தகதிமித் தோம்
தத் தகிட தீம் தத் தகிட
தகஜம் தாம் தீம் தத் தரிகிட
தாம் தீம் தகிட தஜம்
தஜம்  தஜம் தஜம் தஜம்.

பாட்டுக்கு ஏற்ப மின்னல் போல் வெட்டி மாதவி பம்பரமாய் ஆடினாள்.  பார்த்தோரை தன் உடல்  அசைப்பால்  மயக்கினாள்.

பைரவிக்கு பாடி முடித்ததும் பயங்கர கரகோஷம் ஹாலை அதிர  வைத்தது.  கைதட்டலின் சப்தத்தில்  இருவருக்கும்.  ஜிவ்வென்று மனம் பறந்தது. நினைத்ததை விட நன்றாக  பாடியது போலத் தோன்றியது பைரவிக்கு. பரிசின் அறிவிப்பில் யார் பெயரைச் சொல்வார் என்று ஆவல் அவளுக்குள் தயாராக இருந்தது.

மாதவி ஆடி முடித்த கையோடு எழுந்த கைதட்டலைக் கண்டு அவள் பைரவியைப்  பார்க்கிறாள். ” அதில் உன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பார்த்தாயா ? என்ற மொழி இருந்தது.  ஆனால் பரிசு குரலுக்கா ? உடல் நெளிவுக்கா ?

ரமேஷ் முன்னமர்ந்த நீதிபதிகளை மேடைக்கு அழைத்து முடிவு அறிவிக்கிறார். கண்ணுக்கு விருந்து தந்து அந்தப் பாடலைச் சிறப்பித்த மாதவிக்குத் தான் பரிசு கிடைக்கிறது.  அஞ்சு லட்சம் பரிசு என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய செக் போர்டும்  தனது பையிலிருந்த  காசோலையையும்  எடுத்து தலைமை நீதிபதியுடம் கொடுக்கிறார்.

ஒருமித்த கரகோஷம்….பூ மழைத் தூவல்…மாதவிக்கு இன்ப அதிர்ச்சி  பொங்குகிறது …! ஒரு நொடியில் உலகை  மறந்து போகிறாள் மாதவி.

யார் யாரோ பேச வருகிறார்கள்…..மாதவிக்கு மலர் மாலைகள் விழுந்து கொண்டே இருக்கிறது. பைரவிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. இதயத்தில்  ஏதோ பாரம் அழுத்த ஆரம்பித்தது. இதில் ஏதோ சதி….! உள்மனது சொல்லியது. என்னை வேண்டுமென்றே ரமேஷ் இங்கே அழைத்து வந்து மேடையில் அவமானப் படுத்தியது போலே உள்ளம் கூனிக் குறுகியது.  பரிசு யாருக்கென்று ஏற்கனவே முடிவு செய்து காசோலையில் பெயர் எழுதப் பட்டதுபோல் தெரிந்தது !

என்னதான் பரிசு பெற்றவள் தன் தோழியாக இருந்தாலும் இந்த நிமிடத்தில் அவள் மனதுள் பொறாமைத் தீ கப கப வென்று பற்றிக் கொண்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது. பாடிய குரல் உள்ளுக்குள் அமுங்கியது. எதையும் வெளிக் காட்டாமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்  விறு விறுவென்று அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் பைரவி.
அவளது காரின் அருகே சென்று “ரத்தினம்….”வண்டியை எடுங்க ” என்கிறாள் பைரவி.

அவளது குரலில் அடிப்பட்ட பாம்பின் சீற்றம் இருந்தது.

(தொடரும்)

Series Navigation“காப்பி” கதைகள் பற்றிபதில்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *