இரு கவிதைகள்

(1)

கதவு சாமரமாய் வீசும்

ஒருக்களித்திருந்த கதவு
மெல்ல மெல்லத்
திறக்கும்.

யாரும்
உள்ளே
அடியெடுத்து வைக்கவில்லை.

காற்று
திறந்திருக்குமோ?

காற்றாடை உடுத்திக் கொண்டு
கண்ணுக்குத் தெரியாது
யாராவது
திறக்க முடியுமோ?

எழுந்து சென்று
பார்த்து விடலாமா?

மலர்ந்து கொண்டிருக்கும் வேளையில்
மலரைப் பறிப்பதா?
மனம் மறுதலிக்கும்.

கதவுக்கு முன்
எந்தக் கதிரவன்
உதயமாகி விட முடியும்?

கண்கள் பரவசமாகிக்
காத்திருக்கும்.

கதவு முன்
முன்பின் தெரியாத
ஒரு சின்னக் குழந்தை.

தன்
”குஞ்சு மணியைப்”
பிஞ்சுக் கைகளில்
பிடித்துக் கொண்டு நிற்கும்.

ஒளி வீசும் கண்கள்
மலங்க மலங்க
மலரடிகள் எடுத்து வைக்கும்
உள்ளே.

மனங்களித்து
ஒருக்களித்திருந்த கதவு
வழிவிட்டு
ஒரு ’சாமரமாய்’ வீசும்.

(2)

சின்னக் குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

சின்னக் குழந்தைகள்
ஓடித் தொட்டு
விளையாடும்.

ஒன்று ஓட
ஒன்று தொட
ஒன்று ஓட என்று
விளையாடும்.

ஆரம்பமும் இலக்கும்
ஒன்றெனத் தோன்றும்.

தோற்பதிலா
ஜெயிப்பதிலா
விளையாட்டு?

விழுதலும்
எழுதலும்
விளையாட்டாகும்.

விளையாட்டு கண்டு
பூங்காவில்
ஓடி விளையாட விரும்பும்
ஒற்றைக் கால்
பூச்செடி.

முடியாது
மலர்ந்து சிரிக்கும்
இரசித்து
விளையாட்டை.

சின்னக் குழந்தைகள்
விளையாட்டு
மண்ணில்
கலைந்து போயிருக்கும்.

மனத்தில்
கலையாதிருக்கும்.

விட்டுப் போன
விளையாட்டு பார்த்து விட்டு
ஆகாய வெளியில்
தட்டான் பூச்சிகள்
ஓடித் தொட்டு
விளையாடுவதாய் விளையாடும்.

Series Navigationமகளிர் விழா அழைப்பிதழ்யாதுமாகி …