இறந்து கிடக்கும் ஊர்

Spread the love

பெருங் கோட்டைச் சுவர் தாண்டி
உள் நுழையத் தேரோடும் தார் சாலையின்
இருமருங்கும் புது வீடுகள்..
முப்பது ஆண்டுகளுக்கு முன்பான
ஊர் நெஞ்சுள் விரிகிறது..
நிரம்பித் தழும்பும் பெருமாகுளம்
இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்திப்
போகும் சிறுவர் கூட்டம்.. குளம்
களிப்படைந்துப் போயிருந்த பொற்காலம்..
கரையோர அரசமரத் திண்டில் காற்று வாங்கிக்
களைப்பாறும் வேளிமலை விறகு வெட்டிகள்
ஓயாதப் பறவைகளின் குரல்
சவக் கோட்டை மேல்ப் பறக்கும்
பருந்துக் கூட்டம்..
மாலையில் நாற் தெருவும் குழந்தைகள்
இளைஞர்கள் விளையாட்டு …
திடீரென வரும் சண்டை .. சற்று நேரத்தில் சமாதானம்
பள்ளிக்கூட நடையில் இரவெல்லாம்
உலகலசும் விவாதங்கள்
அதிகாலை ராமசாமி கோவில் சுப்ரபாதம்
ஊர் வாழ்ந்துக் கொண்டிருந்தது…
இன்றும்
ஊரில் மக்கள் வாழ்கிறார்கள்
ஊர் செத்துக் கிடக்கிறது….

– பத்மநாபபுரம் அரவிந்தன்-

Series Navigationபுதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)