இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்

Spread the love

பி.கே.சிவகுமாரின் ‘அறிவா உள்ளுணர்வா ‘ கட்டுரையில் எழுப்பப் பட்டிருக்கும் விஷயம் —இறந்து போன எழுத்தாளனைப் “போட்டுப்” பார்க்கும் தமிழ்க் குணாதிசயம் —- சில சிந்தனைகளை எழுப்புகிறது. கனிமொழியின் கைது விவகாரத்தில் பெருந்தன்மையுடன் எழுதும் அதே ஜெய மோகனின் பேனாதான் அடுத்த சில நாட்களிலேயே, மறைந்து விட்ட குத்தூசியைக் குத்திக் கிழிக்கிறது. கருணாநிதி பற்றிய கட்டுரையின் எதிர் வினை ஆக்கங்களினால் குத்தூசி மீது ஏற்பட்ட மனக் கசப்பு இன்று குத்தூசியின் மறைவுக்குப் பின் ஜெயமோகனை அம்மாதிரி எழுதத் தூண்டியதோ என்று சிவகுமார் சந்தேகப் பட்டால் ” ஜெயகாந்தன் 2000ல் எதிர்பார்த்ததை ஜெயமோகன் 2011ல் நிறைவேற்றியிருக்கிறார்” என்று எப்படிக் கூற இயலும் என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

குத்தூசி – ஜெயமோகன் இரு இலக்கியவாதிகள் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. ஒரு இலக்கியவாதியும் ஒரு அஇலக்கியவாதியும் சம்பந்தப்பட்டது. எனவே அது கவனத்தைக் கவரும் முக்கிய நிகழ்வு அல்ல என்று படுகிறது . ஆனால் இன்று தமிழ் இலக்கிய எழுத்து உலகுடன் நன்கு பரிச்சயம் கொண்ட ஒருவர், அதே நிலையில் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள இன்னொருவரை , பின்னவரின் மறைவுக்குப் பின் மிகவும் உதாசீனமாகப் பேசும் போது முதலாமவர் மீது அவரது “வெளிப்படையான” “மனம் திறந்த” கருத்துக்களைப் பற்றி சந்தேகம் வருகிறது. அவரது நேர்மையைப் பற்றி சந்தேகம் வருகிறது. இந்த விஷயத்தில் நான் சிவகுமாரின் நண்பரின் கட்சி. ‘ செத்துப் போனவன் வரவா போகிறான் என்ற தைரியத்தை விட்டு விட்டு, அவன் திரும்ப உயிரோடு வரட்டும் அப்புறம் சொல்கிறேன் என் கருத்தை ‘ என்று அந் நண்பர் எதிர்பார்க்கும் நேர்மையை நான் விரும்புகிறேன் .
“அவருக்கு ஸ்ட்ராங் லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ் இருந்தது. அது எழுத்துக்களை எடை போடுவதையும் இன்ப்ளுயன்ஸ் பண்ணித்து…. க.நா.சு. வைப் பிடிக்காது.” சொல்வனம் சமீபத்தில் வெளியிட்ட தி. ஜானகிராமன் சிறப்பிதழில் அசோகமித்திரன் ஜானகிராமனைப் பற்றிக் கொடுத்த பேட்டியில் இவ்வாறு இருக்கிறது. இதைப்படித்ததும் அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. அழ வேண்டாம் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என்றும் சொல்லக் கூடும். மேற் சொன்ன பேட்டியில், தி.ஜா.வின் நாவல்களைப் பற்றி, சிறுகதைகளைப் பற்றி , நாடகங்களைப் பற்றி அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார். அவரது கருத்துக்களுடன் ஒத்துப் போகிறவர்களும், போகாதவர்களும் இருக்கக் கூடும். ஆனால் அவை அவரது விமரிசனங்கள் என்ற அளவில் அவற்றைக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது. அவற்றின் மேல் நமக்கு ஏதும் விமரிசனம் இல்லை.

ஆனால் தி.ஜா.வின் விருப்பு , வெறுப்பு , பற்றி அசோகமித்திரன் சொன்னவற்றை அவர் தவிர்த்திருக்க வேண்டும். ஏனெனில் அசோகமித்திரன் லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ் இல்லாதவரா என்று கேள்வி எழ அவருடைய வாதம் வழி வகுக்கிறது. ஒருவர் ரமணர் அல்லது காஞ்சி மகாப் பெரியவாளாக இருந்தால் ஒழிய இது சாத்தியமில்லை. அசோகமித்திரன் தி.ஜா.வை மகானாகக் கற்பனை செய்து ஏமாந்து விட்டார் என்று நான் நம்ப விரும்பவில்லை. அதே மாதிரி அவர் தன்னையும் மகானாகக் கற்பிதம் செய்து கொள்பவரல்ல என்றே நினைக்கிறேன்.

ஜானகிராமனின் விருப்பு வெறுப்பு பற்றி சரியாகச் சொல்லக்கூடிய ஒரே ஆள் ஜானகிராமன்தான். அதைப் பற்றி மற்றவர் சொல்வது மற்றவரின் ஜானகிராமன் மீதான விருப்பு வெறுப்பாகி விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இம்மாதிரி சூழ்நிலையில் ஜானகிராமன் இறந்து முப்பது வருடங்களாகிய பிறகு, இத்தகைய “விசாரங்களை” அசோகமித்திரன் எழுப்புவதற்கான நிர்பந்தம் என்ன என்று சந்தேகம் வருகிறது. மேலே குறிப்பிட்ட பேட்டியின் முதல் பதிலிலேயே “ஜானகிராமன் இறந்து முப்பது வருடங்கள்தானே ஆகிறது. அதற்குள் அவரைப் பற்றி என்ன சொல்லிவிடமுடியும்? ” என்று கூறுகிற அசோகமித்திரன், இன்னொரு அமெரிக்க எழுத்தாளரைக் குறிப்பிட்டு, ஒருவரைப் பற்றிக் கருத்துச் சொல்ல அவர் மரணமடைந்து எழுபது சிரார்த்தங்களாவது முடிந்திருக்க வேண்டும் என்கிறார் .இதன் நீட்சியில் அசோகமித்திரன் தி. ஜா.வைப் பற்றி கருத்து சொல்ல நாம் இன்னும் நாற்பது வருஷங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ் நடுவில் வந்து விழுகிறது.

இதே போல் அசோகமித்திரன் கூறும் இன்னொரு விஷயம் தி.ஜா.வின் லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ் எழுத்துக்களை எடை போடுவதையும் பாதித்தது என்கிறார். இது பாராட்டாகச் சொல்லப் பட்டதில்லை என்பதால் அடுத்த கேள்வி எழுகிறது. எதற்காக இவ்வளவு பெரிய குற்றச் சாட்டு? எதற்காக இந்த நிழல் யுத்தம்? இதை அசோகமித்திரன் தி. ஜா. உயிருடன் இருந்த போதே சொல்லி, எழுதி ஆட்சேபித்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. “சமூகத்துடன் முரட்டுத்தனமாக முரண்படும் போரிடும் சுபாவம் அவரதல்ல. இயல்பிலேயே அடங்கிப் போகும் ‘சரிதான்’ என்று ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்” என்று ‘யாத்ரா’ வில் வெங்கட் சாமிநாதனால் அஞ்சலி செலுத்தப் படும் தி. ஜானகிராமனை அசோகமித்திரன் பார்க்கவில்லை என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இன்னொரு பார்வையில் ஆச்சரியத்தை தரவில்லை கூட.

ஜானகிராமனுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது என்கிறார். ஏனாம்? தெரியவில்லை. ஒரு வரி சொன்னதோடு நிறுத்திவிட்டார். அவர் சொன்னதை விட சொல்லாமல் சொன்னதுதான் ஜாஸ்தி என்று அடிக்கடி அசோகமித்திரனின் எழுத்துக்களைப் பற்றி சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதி வருவதை நான் படிக்கிறேன். ஒரு வேளை தி.ஜா.வுக்கு க.நா.சு. வைப் பிடிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம் அதனால் என்ன ? இதன்னால் க.நா.சு.வின் தரம் கெட்டுப் போய் விட்டதா? அல்லது ஜானகிராமனின் தரம்தான் தாழ்ந்து விட்டதா?. எனக்கென்னவோ இறந்து போய் விட்ட இருவரும் ஒருவேளை உயிரோடு இருந்து இதைக் கேட்டிருந்தால் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு போயிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

கணையாழியில் மரப் பசு வந்ததால் சந்தவையே நா. மகாலிங்கம் நிறுத்தி விட்டார் என்று இந்தப் பேட்டியில் அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார். க.நா.சு. பிடிக்கவில்லை என்கிற தி.ஜா.வின் எழுத்துக்கள் கணையாழியில் வந்ததால் வேறு சில சந்தாக்களும் நின்று விட்டனவோ ? தெரியவில்லை. கஸ்தூரி ரங்கன் இந்த மாதிரி “அபிப்பிராயங்கள்” எதுவும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதில் இன்னொரு ஜாதி இருக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த சௌகரியங்களுக்காக இறந்தவரை இழுத்து வந்து மனையில் கட்டுவார்கள். தற்போது தில்லியிலிருந்து எழுதி வரும் என் நண்பர் ஒருவர் சொன்னார். மறைந்தவர்களைப் பற்றி உயிருடன் இருப்பவர்கள் “துதிப் “பது இரண்டு விஷயங்களுக்காக. ஒன்று,உயிருடன் இருப்பவரின் எழுத்துக்களைப் பற்றி, நாடகங்களைப் பற்றி செத்துப் போன மனுஷன் சொல்லாத புகழ் ஆரங்களை எல்லாம் சூட்டிக் கொள்ள . இரண்டாவது , மறைந்தவர் உயிருடன் இருந்த போது அவரது கஷ்ட காலத்தில் எல்லாம் நான்தான் கை தூக்கி விட்டேன் என்று மார் தட்டிக் கொள்ள .

நான் இந்த இரண்டாவது ஜாதியைப் பரிவுடன் ஏற்றுக் கொள்ளத் தயார். ஏனெனில் அவர்கள் முதல் ஜாதியைப் போல் மனப் புழுக்கமும், பொறாமைக் காய்ச்சலும் குழு மனப்பான்மையும் கொண்டு தடுமாறுபவர்கள் அல்லர்.

Series Navigationவினா ….எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)