உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்

This entry is part 4 of 10 in the series 20 மார்ச் 2022

 

 

குரு அரவிந்தன்.
 
யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றியவர். உக்ரைனின் அழைப்பை ஏற்று 40 வயதான கணனி மென்பொறியியலாளரான இவர் அங்கு சென்று சுயவிருப்பத்தின் பெயரில் படையில் இணைந்திருக்கின்றார். ஸ்னைப்பர் மூலம் யாரையும் குறிபார்த்து வீழ்த்துவதில் வல்லவர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் சேவையாற்றிபோது, ஸ்னைப்பர் தாக்குதலுக்குப் புகழ் பெற்றவர். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு ஸ்னைப்பர் வீரனால் ஐந்து அல்லது ஆறு பேரைத்தான் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் இவர் ஒரே நாளில் 40 பேரைச்சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டவர். இப்போது உக்ரைனுக்கு உதவும் நோக்கத்தோடு, ரஸ்ய படையினருக்காகத் தலைநகரான கீவ்வில் தனது .338 ஸ்னைப்பர் ரைபிளுடன் வீதியில் காத்திருக்கின்றார். இவரைப் போலவே, பிரபல டென்னிஸ் வீரரான சேர்ஜி ஸ்ராகேவஸ்கியும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருக்கின்றார்.
 
உக்ரைன் – ரஸ்யா யுத்தம் ஆரம்பித்து 22 நாட்கள் கடந்துவிட்டன. சென்ற பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஸ்யாவால் இந்த இந்த யுத்தம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரஸ்யா நாட்டின் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடக்காத படியால், யுத்தம் உக்ரைன் நாட்டில் நடப்பதால், இந்த யுத்தத்தில் உக்ரைன் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய போலாந்து நாட்டுப்பிரதமர், செக் குடியரசுப் பிரதமர், ஸ்லோவேனியா பிரதமர் ஆகியோர் உக்ரைனுக்கு சென்று, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி உக்ரைன் அதிபரைச் சந்தித்து உரையாடினார்கள். உக்ரைன் தலைநகரான கீவ்வில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. ஒரு வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய யுத்தம், நேசநாடுகள் உக்ரைனுக்கு உதவியதால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதே நேரம் உக்ரைன் நாட்டின் மீது ரஸ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து இருக்கின்றது. தலைநகரான கீவ்வையும், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வையும் கைப்பற்றினால் உக்ரைன் பலமிழந்து விடும் என்ற கணிப்பில் இந்தத் தாக்குதல்கள் ரஸ்யாவால் மேற்கொள்ளப் படுகின்றன.
 
இது இப்படி இருக்க, பேச்சுவார்த்தைகளைக் காரணம் காட்டி உக்ரைனை மந்த நிலையில் வைத்துக் கொண்டு ரஸ்யா உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அதேபோல உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தின் மீதும் கடும் தாக்குதல் இடம் பெற்றது. இதன் காரணமாக இந்த நகரங்களில் இப்போது ஊரடங்கு அமல் நடத்தப்படுகின்றது. கார்கிவ் நகரத்தில் மட்டும் சுமார் 600 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன. 500 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெருந்தொகையான கவசவாகனங்களை ரஸ்யா இழந்திருப்பதால், ரஸ்யாவின் ஏவுகணைத்தாக்குதலையும், விமானத் தாக்குதலையும் முறியடிக்கக் கூடிய வசதிகள் இதுவரை உக்ரைனிடம் இல்லை என்பதால், ரஸ்யா இத்தகைய வான்தாக்குதல்களையே இப்போது மேற்கொள்கின்றது.
 
சென்ற புதன் கிழமை மிகச்சக்தி வாய்ந்த குண்டுகளைத் தலைநகர் கிவ் மீதும், கார்கிவ் மீதும் ரஸ்யா பயன் படுத்தியிருந்தது. உக்ரைனின் விமான உற்பத்தித் தொழிற்சாலையும் இதுபோன்ற குண்டு வீச்சுத் தாக்குதல்களால் அழிக்கப் பட்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எப்படித் தந்திரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றிப்பிடித்தார்களோ அதே நிலைதான் உக்ரைன் தலைநகருக்கு ஏற்படப்போகின்றது. அரசியல் வாதிகளும், ஆயுத விற்பனையாளர்களும் உல்லாசம் அனுபவிக்க, காணாமல் போனவர்கள் எல்லாம் எங்கே என்றதொரு அவலநிலை உக்ரைன் நாட்டில் ஏற்படப் போவதால், உறவுகள் எங்கே என்று தேடித் தெருத் தெருவாகப் பதாகை பிடிக்கும் நிலை அந்த நாட்டிலும் நாளை ஏற்படத்தான் போகின்றது. அன்று இதே உக்ரைன்தான் தனது விமானிகளை இலங்கைக்கு உதவியாகக் கொடுத்து, வன்னியில் குண்டுமாரி பொழிய உதவியிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது. இப்போது விலாங்குமீன் மாதிரி இலங்கை நழுவப் பார்ப்பதால், இலங்கையில் உள்ள சில வெளிநாட்டுத் தூதுவர்கள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும்படி இலங்கையைக் கூட்டாகக் கேட்டிருக்கிறார்கள்.
 
 
உக்ரைனுக்கு உதவ முற்படும் நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்குக் கொண்டுவர முயற்சி செய்தால், ஆயுதங்களைக் காவிச் செல்லும் வாகனத் தொடரணிகள், கப்பல்கள், விமானங்கள் போன்றவை தாக்கப்படும் என்று ரஸ்யா எச்சரிக்கை விட்டிருக்கின்றது. இதற்கிடையே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை திங்கட்கிழமை நடைபெற்றது. ஆடத்தெரியாதவன் அரங்கு பிழை என்று குற்றம் சாட்டியது போல, இந்தப் பேச்சு வார்த்தைகள் மனசுத்தியோடு நடைபெறவில்லை. இது உலக நாடுகளுக்கான ஒரு கண்துடைப்புத்தான். இன்னுமொன்று தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்தான் இது. எப்பொழுதுமே இரண்டு பக்கம் என்று வரும்போது, தொடர் பேச்சு வார்த்தைகளின் போது பலவீனமானவர்கள் எப்பொழுதும் அடித்து வீழ்த்தப்பட்டதாகவே வரலாறு இருக்கின்றது. இஸ்ரேல் தலைநகரில் ரஸ்யா – உக்ரைன் சந்திப்பை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்திக்க ரஸ்ய அதிபர் புதின் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நடந்த பல பேச்சுவார்த்தைகளும் இப்படித்தான் இழுத்தடித்து, கடைசியில் எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கிறது. அதே தந்திரம்தான் இங்கேயும் பாவிக்கப்படுகின்றது. ‘எரியிற நெருப்பில பிடிங்கியது லாபம்’ என்ற நிலையில்தான் எல்லா நாடுகளும் இருக்கின்றன.
 
இச்சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு தொகை ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பியும் இருக்கின்றன. இதில் முக்கியமாக அமெரிக்கா அனுப்பிய கவசவாகனங்களை அழிக்கும் ஆயுதங்களும் இடம் பெற்றிருந்தன. வியாழக்கிழமையும் மேற்கொண்டு பல ஆயுதங்களை அனுப்பியதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த ஆயதங்கள் எலக்ரோனிக் சாதனங்கள் மூலம் இயங்குவதால், மிக இலகுவாகத் தனி ஒரு ராணுவவீரனால் மறைந்திருந்து இயக்கக் கூடியதாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. தோளிலே வைத்துக் கொண்டு கவசவாகனத்தை நோக்கி ஏவினால் குறிதவறாமல் அடிக்கக்கூடியவகையில் அது அமைந்திருக்கின்றது. கடந்த ஒரு வாரமாகப் பெருமளவில் ரஸ்யாவின் கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும். கவசவாகனங்களுக்கு எதிர்ப்பு இருக்காது என்ற எண்ணத்தில் ரஸ்யா ஏராளமான கவச வாகனங்களை உக்ரேனுக்குள் அனுப்பி இருந்தது.
 
இதே சமயம் ரஸ்யாவின் எல்லை நாடான, நேட்டோ நாடுகளின் அங்கத்துவ நாடான போலாந்து நாட்டிற்கு அதன் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இரண்டு நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை இயக்கிகளைக் கொடுத்திருக்கின்றது. 1982 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த விமான எதிர்பு ஏவுகணை இப்போது நவீன மயப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஈராக், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இதுபோன்ற ஏவுகணை முன்பு பாவிக்கப்பட்டது. கடந்த 23 வருடங்களாக போலாந்து நேட்டோவில் அங்கத்தவராக இருப்பதால், தனது எல்லையில் நேட்டோ படைகள் குவிக்கப்படுவதையும் ரஸ்யா விரும்பவில்லை என்பதும் ஒரு காரணமாகும். அதனால் பெலாரஸில் ரஸ்யா தனது படைகளைக் குவித்திருக்கின்றது. விமானத்தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் போன்றவற்றில் இருந்து இந்த ஏவுகணை நாட்டைக் காப்பாற்றக்கூடியது. இரண்டாம் உலகயுத்தத்திற்கு முன்பாகப் போலாந்து ரஸ்யாவின் கட்டுப்பாட்டுக்குள்ளேதான் இருந்தது. எனவே மீண்டும் போலாந்திற்குள் ரஸ்யா நுழையலாம் என்ற சந்தேகமும் இருக்கின்றது. இதற்கிடையே உக்ரைன் மீதான ராணுவநடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் ரஸ்யாவுக்கு உத்தரவிட்டிருக்கின்றது.
 
காணெளி மூலம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி உரையாற்றினார். உக்ரைனுக்கு உதவும்படியும், உக்ரைன் வான்பரப்பைத் தடை செய்யும் படியும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.  நெட்பிளிக்ஸ் நிறுவனம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 2015 ஆம் ஆண்டு ஆசிரியராக நடித்த தொலைக்காட்சித் தொடரை அமெரிக்காவில் மீண்டும் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டில் இருந்து யுத்தம் காரணமாக 2,505,000 மக்கள் இதுவரை அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். இவர்களில் 1,525,000 மக்கள் அகதிகளாப் போலாந்து நாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அமெரிக்கா ரஸ்யாவுக்கு எதிராகவும், ரஸ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராவும் பொருளாதாரத் தடை விதித்ததால், இப்போது பதிலடியாக ரஸ்யாவால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும், முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் யாருமே ரஸ்யாவுக்குப் போகப்போவதுமில்லை, அதனால் அவர்களுக்கு இதைப்பற்றிய கவலையுமில்லை!
Series Navigationமுருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! 
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *