உப்பு பிஸ்கட்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 12 in the series 12 செப்டம்பர் 2021

 

 

 வேல்விழி மோகன்

பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்.. அவள் “நாலஞ்சு முறை கூப்பிட்டு அமைதியாயிட்டேன்.. “ என்றாள்..

“என்ன விழயம்..?” என்றான் சலிப்புடன்.. அவன் சலிப்பை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சுள்ளென்று விழுவான்.. அவனுக்கு பாட்டு கேட்கும்போது பேசினால் ஆகாது.. இளையராஜா பிரியன்.. அப்புறம் டி.எம்.எஸ்.. உதட்டில் விசில் வந்துக்கொண்டேயிருக்கும்.. சின்ன வயதிலிருந்தே உதடுகளில் அது நடக்கிறது..வீட்டில் .. பாத்ரூமில்.. பள்ளி மைதானத்தில்.. ஏதாவது மரத்தடியில்.. நடக்கும்போது.. பஸ்ஸில் .. இப்படி வடம் பிடித்து பள்ளியிலேயே “என்ன பாட்டு பாட.” விசிலடித்து கை தட்டல் வாங்கி..  அத விடுங்க.. இவளுக்கு அது பிடிக்கவில்லை.. ஆனால் இதுவரை அவனிடம் அதை சொன்னதில்லை.. சொன்னால் “நான் சென்னை போறேன்.. ஆபிஸ் விழயமா ..” என கிளம்பிவிடுவான்.. கோபித்துக்கொண்டு ஏழெட்டு முறை அப்படி போயிருக்கிறான்.. டிரெயின் ஸ்டேஷன் வரைக்கும் போய் திரும்ப வந்ததும் உண்டு..

அவள் திரும்ப முயன்றபோது “பொண்ண கூட்டிக்கிட்டு வரனும்.. அப்படித்தானே..?”

“ஆமாங்க..”

“இன்னிக்கு எனக்கு லீவு இல்லைன்னா..?”

“நான்தான் போயிருக்கனும்..”

“போ இப்ப..” திரும்பிக்கொண்டான்.. விசில் சத்தம்.. வெற்றுடம்பில் வெள்ளை முடிகள் தலைகாட்டி தலையிலும் பல்லை காட்டியது.. கழுத்தில் பின்புறம் ஒரு மரு.. லுங்கியில் கால்களை ஆட்டிக்கொண்டு ரோடில் போன யாருக்கோ கையாட்டி..”தா.. வர்றேன்..; என்று கிளம்பியவன் இவள் நிற்பதை பார்த்து  “இன்னும் என்னா..?” என்றான்..

“இல்ல.. நீங்க போறதா சொன்னதுனாலதான் நான் கிளம்பலை.. இப்ப கிளம்பினா ஆட்டோ புடிச்சு போறதுக்கு லேட்டாயிடும்.. அவ அங்க காத்திருப்பா.. வெயிட் பண்ணா பிரின்சிபால் கூப்புட்டு திட்டுவாரு.. “

“அந்நாளுக்கு அத்தான் வேலையா.. சும்மா புளுகாத.. ஸ்கூட்டர எடுத்துட்டு போ.. வரும்போது அண்ணாச்சி கடைல உப்பு பிஸ்கெட்டு வாங்கிட்டு வந்திடு.. போ.. அப்படியே பாத்துக்கிட்டு உங்கப்பன் மாதிரியே..”திரும்ப ரோடில் கையாட்டி..”இதா வர்றேன்.. காலைல அங்க போனியா இல்லையா..?” என்று கேட்டபடியே போய் விட்டான்.. இவள் .நேரம் பார்த்தாள்.. வெயில் குறைந்து ரோடில் நடமாட்டம் தெரிந்தது..  யாரையோ பார்த்து குறைத்த எதிர் வீட்டு நாய்.. இவன் மேல் உடம்பை தடவிக்கொண்டு கையை நீட்டி அந்த கண்ணாடி அணிந்தவருடன் வேகமாக பேசிக்கொண்டிருந்தான்.. 

உள்ளே நுழைந்து மொபைலை எடுத்தாள்.. ஆட்டோ டிரைவர் நம்பரை பிடித்தாள்.. “”அண்ணே.. ஜானகி அம்மா பேசறேன்.”

“தெரியுதும்மா.. “

“இன்னிக்கு ஆட்டோ வேணாமுன்னு சொன்னேன்.. வந்திருங்க..”

“வேற எடத்துல இருக்கேம்மா.. வடிவேலன்கிட்ட சொல்லட்டா..? மூணாவது சந்துக்கு வர்றான் அந்த ஸ்கூல்ல இருந்தே பசங்கள கூட்டிக்கிட்டு.. “

“இல்ல.. வேணாம்.. நான வந்து கூட்டிட்டு வர்றதுதான் எனக்கு பெஸ்ட்..”

“நீங்க மட்டும்தாம்மா அந்த மாதிரி..”

“எனக்கு பழகிருச்சு..”

“நீங்க அங்கேயே இருங்க.. ஆட்டொ ஸ்டேண்டுல இருந்து வேற யாறையாவது அனுப்பறேன்.. ஏன் ஆட்டோவ வேணாமுன்னு சொன்னீங்க..?”

“அவரு இருந்தாரு.. ஸ்கூட்டர் இருக்குது.. போவாருன்னு நினைச்சேன்..”

“அவரா.. ஆட்டோ வாடகைய குறைன்னு காலைல பத்து நிமிசம் பேசறாரு.. நான் மத்தவங்கள விட முப்பது ரூபா கம்மியா வாங்கறேன்.. அவரு பேசிட்டே இருக்காரு.. வளவளன்னு.. எப்படித்தான் அவர வேல செய்யற எடத்துல சமாளிக்கறாங்களோ.?.”

“அதையெல்லாம் பாத்துக்கலாம்.. ஆட்டோவ அனுப்பிச்சு விடுங்க..” பேசிவிட்டு வெளியே வந்தபோது அவன் கதவருகே நின்றபடி “ஏன் ஸ்கூட்டர எடுக்கல.?.”

“பயமா இருக்குது..”

“என்ன பயம்..?”

“கடைசியா இருபது நாளைக்கு முன்னாடி அவள கூட்டிட்டு வரும்போது வழியில மேம்பாலம் பக்கம் ஒரு ஆக்ஸிடென்ட பாத்துட்டோம்.. தலை நசுங்கி.. கையெல்லாம் நச்சு.. நச்சா.. அப்பப்பா.. ஜானு பயந்துட்டா.. அம்மா இனிமே ஸ்கூட்டரு வேணாம்மான்னு சொல்லிட்டா.. அதான்..”

அவன் யோசித்து.. “இப்ப எப்படி..?”

“ ஆட்டோ வரும்..”

“அதே ஆளா..?”

“இல்லீங்க .. வேற..”

“அந்தாள்கிட்ட வாடகை அதிகம்.. நிறுத்திடலாம் அடுத்த மாசத்திலிருந்து.. கண்ணன்னு ஒருத்தன் இதே ஏரியாவுல ஆட்டோ ஓட்டறான்.. நான் பேசறேன்.. வரும்போது உப்பு பிஸ்கட் மறந்துடாத.. “ என்றபோது ஆட்டோ வந்து நின்று ஒரு பையன் எட்டிப்பார்த்தான்.. 

“சிவப்பு கலர் பெயிண்டு வீடு. சரிதான்.. பெரிசாமி அனுப்பிச்சு விட்டாரு.. ஆட்டோ உங்களுக்குதானே..?” என்று இறங்கினான் அவன்.. “ஆமா..” என்று இவள் வாயை திறப்பதற்குள் அவன் “ஆமாப்பா.. எவ்வளவு வாடகை..?”

இவள்..”அத அப்பறம் பேசிக்கலாமுங்க..”

“இப்ப பேசலைன்னா நூறு ரூபா குடுன்னுவாங்க.. வழக்கமான ஆட்டோவா இருந்தா பரவாயில்ல.. “

“இல்லீங்க.. அவசரமுன்னு சொன்னாங்க .. அதான் வந்தேன்.. எனக்கு தெரியும்.. இந்த மாதிரி பேசுவீங்கன்னு.. அவரு அம்பது ரூபா வாங்கறாரு.. எனக்கு இருபது சேத்தி கொடுங்க..”

“ஏம்பா.. இங்கிருந்து ஆறு கிலொ மீட்டரு.. அதுக்குப் போயி….?”

“அப்பறம் உங்க இஷ்டம்.. “ அவன் தலையை ஆட்டோவுக்குள் நுழைக்க முயல இவள்..”இருப்பா.. இரு.. ஏங்க.. போயிட்டு போது விடுங்க.. ஸ்கூல் விட்டு பத்து நிமிழம் அதிகமாயிடுச்சு..” அவள் சட்டென்று “நானே கெளம்பறேன்.. “ என்று டிரைவரிடம்..”நடப்பா போலாம்..”  

“இரு.. இரு..”

“என்னங்க..?”

“ஸ்கூட்டர எடுத்துக்கிட்டு போ..  ஆட்டோவுக்கு கொடுக்கற காசுல பெட்ரோல போட்டுக்கலாம்.. “

“என்னால முடியாது..”

“என்ன முடியாது..?” என்றான் கோபத்துடன்.. அந்த பையன்.. “நான் கெளம்புட்டுங்களா..?” என்று சீட்டில் உட்கார்ந்தான்.. “வழியிலேயே ஒரு அம்மா கைய காட்டுச்சு.. அதையாவது புடிச்சிருக்கலாம்..”

இவள்..”இருப்பா..” என்று ஆட்டோவை நோக்கி நகர அவன் இடைமறித்து..”நீ போகாத.. நான் போறேன்..” என்றான்..

0000

ஸ்கூட்டர் பள்ளிக்கு வெளியே நின்றபோது சுஜாதா இல்லை.. வாட்ச்மேன் ஏதோ சைகை செய்தான்.. இவள் கிட்டே போய் “எங்க அவ?” என்றாள்..

“அவ கிரௌண்டுல வெளையாட போயிருக்கா..”

“கிரௌண்டா..? இங்க ஏது கிரௌண்டு..?”

“இல்லீங்க.. பின்னாடி.. மரத்தடியில்.. “

“அங்கெல்லாம் பாத்ரூமுங்கதானே இருக்குது..”

“அதுக்கு முன்னாடி.. பூச்செடிங்க பக்கம்..”

“இருங்க பாக்கறேன்..” என்றபோது அவன் “இருங்க கூட்டீயாறேன்..” என்றான்..

“பரவாயில்ல..” என்று நகர்ந்தாள்.. அலுவலக அறைக்கு வெளியே அந்த வெள்ளை உடை பள்ளி முதல்வர் இங்கேயே கவனித்துக்கொண்டிருந்தார்.. புன்னகைத்த மாதிரி இருந்தது.. இவள் கண்டுக்கொள்ளவில்லை.. வரிசையாக செடிகள்.. தட்டிகள்.. “கருவி உயிர் காக்கும்.. கல்வி வாழ்க்கை காக்கும்..”..தமிழ்லேயா..பரவாயில்லையே.. என்று முனகிக்கொண்டாள். இரண்டு டீச்சர்கள் கடந்து போகும்போது ஆங்கிலம் விளையாடியது.. இரண்டடுக்கு பிரம்மாண்ட கட்டிடங்களின் மீது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறம்.. ஒரு ஆள் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தான்..  

பின்புறம் பாத்ரூம்கள் தெரிந்தது.. குட்டை செடிகள்.. வெள்ளெழுத்துகளில் உபதேசங்கள்.. அங்கிருந்த மரங்களில் ஏராளமான காகங்கள்.. கா..கா…கா…கா… எங்கிருந்தோ “அம்மா..” என்கிற குரல்..

ஜானகி ஒரு செடியின் பின்னாடியிருந்து ஓடி வந்தாள்.. கூடவே இன்னும் இரண்டு பேர்.. அவளுக்கு கையை காட்டி சிரித்தார்கள்.. லேசான மூத்திர வாசனை.. இவள்..”இங்கதான் விளையாடனுமா..?” 

“வேற எங்கம்மா விளையாடறது..?”

“ஸ்கூலுக்கு முன்னாடிதான் காலியிடம் இருக்குதே..”

“அது பிரேயர் இடம்.. டீச்சருங்க திட்டுவாங்க..”

“அவங்களுக்கு திட்டறத தவர வேறென்ன தெரியும்.?. என்ன விளையாடினே..?” 

“தவக்கள..”

“அப்படின்னா..?”

“தவள மாதிரி கீழ உக்காந்து குதிச்சு குதிச்சு போகனும்.. நான்தான் ரண்டு முறை ஜெயிச்சேன்.. இனிதே தினமும் லேட்டா வாம்மா..”

“ஏங்கண்ணு..?”

“இங்க நாலஞ்சு பேரு இருக்காங்க.. லேட்டாதான் போவாங்க.. அதுவரைக்கும் பின்னாடி வெளையாடுவாங்க.. ஸ்கூல்ல வெளையாடறதுக்கே விடறதில்லை.. ப்ளீஸ்மா.. இப்ப கூட எனக்கு இந்த ஸ்கூலுக்கு வர்றதுக்கு புடிக்கவே இல்லை.. தவக்கள.. தொட்டுப்புடி.. குச்சி விளையாட்டுன்னு நிறைய இருக்குதும்மா.. பிஇடி வாத்தியாரு எப்பவாச்சும் பிரேயர் ஹால்ல நிக்கவச்சு குனிய சொல்லுவாரு.. நிக்க சொல்லுவாரு.. அவ்வளவுதான்.. “

“பாத்துக்கலாம் கண்ணு..”

“அடுத்த வருஷம் நான் நைந்து.. பந்து வாங்கித் தர்றியாம்மா.?.அப்படியே வேற ஸ்கூலு சேத்தி விடுங்க.. கிரௌண்டு இருக்கற ஸ்கூலா பாத்து..   எம்ஃபிரண்டு பந்து வச்சிருக்காம்மா.. அவங்க வீட்டு பக்கத்துல பெரிய கிரௌண்டு இருக்குதாம்.. அங்க அவங்கப்பா கூட்டிக்கிட்டு போவாராம் .. விளையாடறதுக்கு..”

“பாத்துக்கலாம் கண்ணு..” வெளியே ஸ்கூட்டரை பார்த்து சுஜாதா முகம் மாறி “எதுக்கும்மா ஸ்கூட்டர்ல வந்தே..?” என்றாள்..

0000

அந்த சந்து புதிதாக இருந்தது அவளுக்கு.. “இந்த ஊர்ல இப்படி ஒரு சந்து இருக்கறது தெரியலையே.?.”

“பத்திரமா போம்மா..” 

“என்னைய புடிச்சுக்கோ மகளே..”வண்டியை மெதுவாக ஓட்டினாள்.. அந்த வண்டி நுழையக்கூடிய அளவில்தான் இருந்தது அந்த சந்து.. இரண்டு பக்கமும் வீடுகள்.. இந்த வீட்டலிருந்து அந்த வீட்டுக்கு தாவலாம்.. பெண்கள் எட்டிப்பார்த்தார்கள்.. “இதுக்குள்ள வண்டில போக்கூடாதும்மா..” என்றது ஒரு கிழவி.. வழி பூராவும் செருப்புகள்.. தரையோடு வாசல்.. பல்லைக் குத்திக்கொண்டிருந்த ஒரு ஆள் நிறுத்தி..”இந்தப்பக்கம் எங்கம்மா போறீங்க..?”

“அண்ணா சிலை  போகனும்..”

“அதுக்கு இந்தப்பக்கம் எங்கம்மா போறீங்க.. மேம்பாலம் வழியா போகனும்..”

“தெரியுங்க.. அந்தப்பக்கம் டிராஃபிக் பிராப்ளம்.. அதுதான் இந்தப்பக்கம்..”

“அதுக்கு சுல்தான் தெரு வழியா போகனும்.. சம்பந்தமில்லாம பேசறீங்களே.. இன்னும் அர கிலோமீட்டர் போகனும் இப்படியே.. வயசு பசங்க கலாட்டா பண்ணுவாங்க. அதுக்குனே ஒரு குரூப்பு இருக்குது இங்க.. இப்படிக்க கட் பண்ணுங்க..” வலதுப்பக்கம் ஒரு திருப்பத்தை காட்டினார்.. 

“கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா அங்க பாருங்க.. ஒரு முள்ளு மரம் தெரியுது பாருங்க.. அங்கிருந்து ரைட்ல மண் ரோடு போகும்.. போங்க.. பாத்துப்போங்க..முள்ளு நெறைய இருக்கும்..” அவரே வண்டியை பின்னாடி லேசாக திருப்பிவிட்டு “எத்தனாவது பாப்பா..?”

“எட்டாவது..”

“பாத்துப் போங்க..”

திருப்பத்தில் மண் ரோடு வந்ததும் பயந்துப்போனாள்..”என்ன இது முள்ளு முள்ளா இருக்குது.?.”

பின்னாடியிருந்து ஒரு குரல்..”அப்படியே போங்க.. அஞ்சு நிமிழத்துல சுல்தான் தெரு வந்திடும்..”

சுஜாதா..”அம்மா. நமக்கு சொன்னவங்க சரியா சொல்லல..”

“அவங்கள விடு.. வண்டிக்கு முள்ளு ஏறாம இருந்தா சரி..” வளைந்து நெளிந்து ஓட்டினாள்.. கருவேல மரங்கள் இலைகளை உதிர்த்திருந்தது.. பின்புறமாக தெரிந்த வீடுகள்.. இன்னொரு பக்கம் காய்ந்து வரட்சி காட்டிய ஏரி.. ஒரு இடத்தில் நிழலில் சீட்டாட்ட கும்பல் நிமிர்ந்து பார்த்தபோது..சர்ர்..ரெ..ன்று முறுக்கினாள்.. 

“அம்மா.. மெள்ள. .பயமா இருக்கு..”

“எனக்கும்தான்..” ஒரு இடத்தில் வண்டி சாய இருந்தது.. சமாளித்துக்கொண்டாள்.. ஜானகிக்கு அந்த நசுங்கிப்போன தலை நினைவுக்கு வந்தது.. அம்மாவின் முதுகில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.. தடக்.. தடக்.. என்று சத்தம்.. அம்மாவின் கூந்தல் வாசனை.. யாரோ..”மெதுவா போங்க..” என்று சொல்லுகிறார்கள்.. வண்டி ஹாரன் சத்தம்.. ஒரு குழந்தையின் அழுகுரல்.. ஒரு போண்டா கடையை தாண்டும் வாசனை.. வண்டி நின்றது.. விழித்துகொண்டு..”“எந்த இடம்மா..?

“சுல்தான் பேட்ட..”

“ஏம்மா நிறுத்திட்ட..?”

“மறுபடியும் அங்கேதான் வந்திருக்கோம்.. மேம்பாலம் வழியாவே போயிடலாமா..?”

“இல்லம்மா.. வேணாம்.. வேணாம்..”பதட்டமாக அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டாள்.. “நாம வண்டிய நிறுத்திட்டு ஆட்டோவுல போயிடலாம்.. அப்பா வந்து எடுத்துக்கட்டும்..”

“சரி.. சரி..” வண்டியை கொஞ்சம் ஓரமாக தள்ளி அந்த சிக்கன் கடை பாயிடம் “அண்ணா செலைக்கு போகனும்..”

“இப்படி போயி மேம்பாலம் வரும்.. அது வழியா போயிட்…

“இல்ல..இல்ல.. வேற ரூட் சொல்லுங்க.. குறுக்கு வழி,,?”

“அதுல போனா உங்களுக்கு ஈஸி..”

“பரவாயில்ல.. “

“இந்தப்பக்கமா போங்க..”.. எதிர்புறம் காட்டி.. “இப்படி நேரா போனீங்கன்னா ஸ்கூல் கிரௌண்டு ஒன்னு வரும். அதுல இருந்து லெப்டு எடுத்து போயிட்டே இருங்க.. வசந்த் தியேட்டரு வரும்.. அங்கிருந்து ரைட்டு எடுத்து..”

“ஓகே.. ஓகே.. புரியுது. வசந்த் தியேட்டர் தெரியும்.. அங்கிருந்து வழி தெரியும்.. தேங்ஸ்..”

“வழியில நிறைய சந்துங்க வரும்.. பிரிஞ்சுறாதீங்க..” ஒரு கோழியின் தலையை வெட்டி ஒதுக்கி..”சிக்கன் எடுத்துக்கறீங்களா.?. கிலோ நூத்து இருபதுதான்..”

“வேணாங்க தேங்ஸ்..” வண்டியை நகர்த்தியபோது சுஜாதா..”அம்மா.. இனிமே நான் ஸ்கூட்டர்ல வரமாட்டேன்..ஆட்டோதான்”

“நானும்தான்..”

0000

வண்டி வீட்டருகே நின்றபோது அவன் உட்காரும் சேர் வேளியே காலியாக இருந்தது.. ஒரு ஐஸ் வண்டிக்காரன் பூம்.. பூம்.. என்று அழுத்திக்கொண்டே போனான்.. உள்ளே நுழைந்தபோது அவன் ஜன்னல் வழியாக..”இவ்வளவு நேரமா..?”

சுஜாதா “அப்பா.. அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் இன்னிக்கு..”

“ஏன்..?”

“வசந்த் தியேட்டருக்கு முன்னாடி வழி மாறி மறுபடியும் சந்து சந்தா சுத்திட்டு.. அப்பறம் தியேட்டர் பக்கம் வந்து.. அங்க ரஜினி படம் போட்டிருக்காங்க.. கூட்டிட்டு போறியாப்பா..?”

“வசந்த் தியேட்டரா.. அங்கெதுக்கு போனீங்க..?”

உள்ளே நுழைந்துகொண்டே. சுஜாதா .”எனக்கு புடிக்கல”

“என்ன புடிக்கல சுஜி..?”

“அந்த மேம்பாலம் ரோட்ல வர்றதுக்கு.. அன்னிக்கு பாத்தேன். தலையே இல்ல.. மூலை வெளியே வந்து.. ம்மா.. வாந்தி வர்ற மாதிரி இருக்குது..”அவனிடம்..”நீ வாப்பான்னா அம்மாவ அனுப்பி வச்சுட்டு.?.” செல்லமாக கோபித்துக் கொண்ட மகளை செல்லமாக அவன் கன்னத்தில் தட்டி அவனை தாண்டிப் போன அவளிடம்..”எங்க உப்பு பிஸ்கட்டு..?”

“உப்பு பிஸ்கெட்டா..? நகி..” அவள் கையை விரித்து வண்டி சாவியை அருகிலிருந்த டேபிள் மீது எறிந்துவிட்டு சமையலறைக்கு போனாள்.. சுஜாதா அவன் முகத்தை பார்த்தாள்.. அவன் மகளின் முகத்தை பார்த்தான்.. உதடுகள் மீது கையை வைத்து “உஸ்ஸ்…ஸ்” என்றாள் சுஜாதா..

“திட்டலையாப்பா அம்மாவ..?”

“இதா.. இப்ப திட்டறேன்.. நீ டிரஸ்ஸை மாத்திட்டு பாத்ரூமுக்கு போயி காலைக்கழுவு.. தலைல என்ன மண்ணு..?”

“அதுவா.. ஸ்கூல்ல வெளையாடினேன்..”

“வெளையாட்டா.. ?.. அப்படி ஒன்னு இருக்குதா அந்த ஸ்கூல்ல.?. மீதி இருக்கற எடத்துல பாத்ரூமுங்கதான் இருக்குது.. உங்கம்மா சொல்லிட்டே இருக்குது.. பொண்ணுக்கு விளையாட்டுன்னாவே என்னான்னு தெரியாதுன்னு.. அடுத்த வருசம் கவர்மெண்டு ஸ்கூல்ல சேந்துக்கலாமா..?”

“ம்..ம்..அடுத்த வருசம் நைந்து.. பந்து வாங்கிக்கொடுப்பா..”

“கண்டிப்பா.. ஒரு முத்தா கொடு அப்பாவுக்கு..”

“ப்ச்சா..” கொடுத்தாள்.. 

“சரி.. நீ போயி டிரஸ்ஸ மாத்து..” சமையலறை பக்கம் நகர்ந்தான்.. டீ வாசனை வந்தது.. அவள் “இன்னிக்கு லெமன் டீ..”என்று லெமனை அறுத்தவாறு “அந்த ஸ்கூல்ல இன்னொன்னு நடக்குது..” 

“என்ன..?”

“தமிழை கொலை பண்ணறாங்க..”

“இல்லை.. பண்ணிட்டாங்க.. அது மெட்ரிகுலேஷன் ஸ்கூலு.. அவங்க டூட்டிய செய்யறாங்க.. தெரிஞ்சுதான் பொண்ண அங்க சேத்தினேன்..அடுத்த பொறக்கப்போற குழந்தைக்கும் அங்கதான்.. தமிழ்ன்னு சொல்லி பசங்கள ஏமாத்த விரும்பல.. இங்கிலீஷ் தெரியலைன்னா எந்த கம்பெனிக்குள்ளேயும் போக முடியாது.. “

“அதெல்லாம் கற்பனை.. எல்லாம் அரசியல்.. தமிழ் அரசியல்ல மாட்டிக்கிச்சு.. தாய்ப்பால்தான் சிறந்ததுன்னு..” பாதியில் நிறுத்தி அவள் லெமனை தேனீரில் பிழிந்தவாறு அவனை திரும்பி பார்த்தாள்.. அவன் “ஏன் நிறுத்திட்ட.?. நான் அப்படிப்பட்ட ஆள்தான்..”

“ஜானகி சொன்னாளே.. ஏன் திட்டலைன்னு..?”

“கோவம் வரலை..”

“வராது.. நான் சுஜாதா பைய வைக்க கீழே குனிஞ்சப்போ பாத்துட்டே இருந்தீங்க.. எப்படி கோவம் வரும்..?”

“உப்பு பிஸ்கட்.. தாய்ப்பால்.. இதுல பிஸ்கட் மட்டும்தான் இங்கிலீஷ்.. நல்ல காம்பினேஷன் .. இல்ல..”

“இல்ல.. “ என்றபோது அவன் பின்னாடியிருந்து நெருக்கி கூந்தலில் முகத்தை புதைத்து  கழுத்தில் இறங்கி அதற்குள் அவனுடைய வலது கை இடுப்புக்கு கீழே “இந்த மேடுதான் என்னைய பைத்தியமாக்குது..”

“அவ வந்துருவா..” நகர்ந்துக்கொண்டு அவனுடைய பறிபோன அந்த இழப்பை முகத்தில் கண்டு சிரித்து “அவ இன்னொன்னு கேட்டா..?”

“என்ன..?”

“ஏம்மா நீ வந்தே.. அப்பா எங்கேன்னு..?”

“என்னா சொன்னே..?”

“ஆட்டோ டிரைவர் வயசுப் பையன்.. அழகா வேற இருந்தான்.. அதனால வண்டியும் மாறிடுச்சு… ஆளும் மாறிடுச்சுன்னு சொன்னேன்..” உள்ளே வந்த மகளிடம்..”உனக்கு லெமன் டீ புடிக்காது.. அதனால இஞ்சி டீ..”
“தேங்க்ஸ்ம்மா..”

அவன் உக்கிரமாக அம்மா.. மகள் இரண்டு பேரையும் பார்த்து கத்தினான்..”எங்கடி உப்பு பிஸ்கட்டு..?”

0000




Series Navigationகதிர் அரிவாள்    
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *