உள்ளங்கைப்புண்

லாவண்யா சத்யநாதன்.

ஆடுதிருடி மாடுதிருடி

அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும்

களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும்

பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில்

கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று.

அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன்

தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது

உள்ளங்கைப்புண். ஆனால்

பகல்பொழுதுக் களவுக்கு

பூர்வஜென்ம புண்ணியம் யோகஜாதகமென்று

பொன்னாடை போர்த்தும்

உன் மூளைப்பாசியை

அமிலத்தால் கழுவினாலொழிய

நீ திருந்தப் போவதில்லை.

நானும் விடுவதாயில்லை.

–லாவண்யா சத்யநாதன்.

 

உங்களுக்கும் தெரிந்தவர்கள்தான்

வெளியில்

பயணவழி நெடுக

ஒலித்தபடியிருந்தது ஒரு பெண்மானின் கதறல்.

மலைகளும் கேட்டிருக்கவேண்டும்.

அவை நெருப்புமிழ வேறு காரணங்களிருக்கவில்லை.

சீற்றம் சிறிதும் குறையாமல் கரைமோதியது கடல்

ஒரு யுகம் கடந்து  புதுயுகத்தில் நுழைகிறேன்.

பெயர் தெரியாத

சிற்றூரொன்றைக் கடந்து கொண்டிருக்கிறேன்.

மலையடிவாரத்தில் பாண்டியாட்டம்

ஆடிக்கொண்டிருந்த இருமான்குட்டிகளை

புலிகள் வேட்டையாடிய கொடுமையை

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி

மெல்லிய குரலில் ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பெருநகரொன்றின் ராஜவீதியில்

நான் பிரவேசித்த சமயம்

எனக்கு முன்பாக இருவர்

யந்திர ரதங்களில் செல்லக் கண்டேன்.

உங்களுக்கும் தெரிந்தவர்கள்தான்.

 

–லாவண்யா சத்யநாதன்.

Series Navigationசிதறல்கள்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]