எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’

1622094_1230327383648861_4793759472237178644_n

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகாலத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான  எல்லீஸ் டங்கன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவர் சில ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. அவற்றில் தமிழ்நாட்டுக் கிராமங்களைப்பற்றிய சித்திரத்தை வழங்கும்வகையில் இருபது நிமிட அளவில் ஓடக்கூடிய ஒரு படமும் ஒன்று. உடனடியாக அந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். ஒரு வயல்வெளிக்காட்சியிலிருந்து தொடங்குகிறது அந்தப் படம். அருமையான பின்னணி இசையுடன் ஒவ்வொரு காட்சியும் உயிர்த்துடிப்புடன் அழகாக இருக்கிறது. அதிகாலையில் உழவர்கள் ஏர்பூட்டி வயல்களில் உழும் காட்சி. நாற்று நடும் காட்சி. ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சும் காட்சி. பிறகு பலவிதமான தொழிலாளிகளும் தத்தம் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள். மரமேறுபவர்கள். துணிவெளுப்பவர்கள். நெசவாளிகள். தெருகூட்டுபவர்கள். உலைக்களத்தில் இரும்பை அடிப்பவர்கள். அவை நீண்டு கோவில் வளாகம் வரைக்கும் வருகிறது.  ஒவ்வொரு தொழிற்களத்திலும் அந்தந்தக் களங்களுடன் நேரடித் தொடர்புள்ள தொழிலாளிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள்.

இரவு கவிகிறது. அடுத்த காட்சியில் ஒரு கூத்தரங்கம் காட்டப்படுகிறது. மேலே சொன்ன தொழிற்களங்களில் செயற்பட்ட ஒவ்வொருவரும் குழுக்குழுவாக வந்து அரங்கத்தில் கூட்டமாக உட்கார்கிறார்கள். வெறும் தரையில் உட்கார்பவர்கள், மண்ணைக் குவித்து உட்கார்பவர்கள், பாய்விரித்து உட்கார்பவர்கள், கயிற்றுக்கட்டிலைப் போட்டு உட்கார்பவர்கள், நாற்காலிகளைக் கொண்டுவந்துபோட்டு உட்கார்பவர்கள், வீட்டோரத் திண்ணைகளில் உட்கார்பவர்கள் என அனைவரும் காட்டப்பட்டு, கடைசியில் கூத்துக்கலைஞர்கள் மீது காட்சி குவிகிறது. உச்சக்குரலில் அவர்களுடைய பாடல் ஒலிக்கிறது. அருமையான தாளம் அதிர்கிறது. அடவுகளின்போது அவர்களுடைய காற்சலங்கை ஒலிக்கிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு கூத்துமேடையை மையப்படுத்தியபடி காட்சிவட்டத்தில் அங்கங்கே உட்கார்ந்திருக்கும் பலவிதமான பார்வையாளர்கள், கோவில், தெருக்கள், வயல்வெளிகள், தோப்புகள், ஊர் என மெல்ல மெல்ல விரிந்து வளர்வதோடு அந்தப் படம் முடிவடைகிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டுக் கிராமச்சித்திரம். தொழில்களாலும் சாதிகளாலும் தனித்தனித் தொகுதியாக இருக்கும் மக்கள் ஒரு நிகழ்த்துகலையின் முன்பு ஒரே தொகுதியாக அமர்ந்திருக்கும் தருணத்தை மிகமுக்கியமான ஒரு வாழ்க்கைத்தருணம் என நினைத்த டங்கனின் அவதானிப்பைப் பாராட்டத் தோன்றுகிறது. பார்வையாளர்களாக மனித சமூகத்தை ஒன்றிணைக்கிற கலையின் மகத்துவத்தையும் அற்புத ஆற்றலையும் முன்வைக்கும் ஆவணமாக அந்தத் திரைப்படம் விளங்குகிறது. இந்தப் பேராற்றலை தமக்குள் கொண்டிருப்பதாலேயே கலைகள் இன்றளவும் உயிர்த்திருக்கின்றன. கலைகள் உயிர்த்திருந்தாலும் தமிழ்ச்சமூகத்தில் கலைஞர்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய மதிப்பு போதிய அளவில் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

கூத்து, கட்டைக்கூத்து, தோல்பாவை, பொம்மலாட்டம், பின்பாட்டு, பாகவதமேளா, இசை, நாடகங்கள் ஆகிய விதவிதமான நிகழ்த்துகலைகளோடு தம்மை இணைத்துக்கொண்ட  கலைஞர்கள் இன்று தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கிருக்கும் சமூகமதிப்பு என்ன, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் என்ன, அவர்கள் அடையும் மனநிறைவு எத்தகையது என்பதைத் தொகுத்துக் காட்டும் ஓர் ஆவணமாக ரங்கராஜனின் புத்தகம் விளங்குகிறது. டங்கனின் முயற்சிக்கும் ரங்கராஜனின் முயற்சிக்கும் ஒரு நூற்றாண்டுகாலத் தொடர்ச்சி இருக்கிறது. கலையின் மகத்துவத்தை டங்கன் ஆவணப்படுத்தியிருக்கும்போது, கலைஞர்களின் தற்கால வாழ்க்கை நிலையை ரங்கராஜன் ஆவணப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கை நிலை என்பது வறுமை, வசதியை மட்டும் குறித்ததல்ல. போதுமான சமூககவனம் அக்கலைஞர்கள்மீது குவியவில்லை என்னும் ஆதங்கத்தையும் உள்ளடக்கியது. தாங்கமுடியாத அந்த ஆதங்கத்தின் வெளிப்பாட்டையே ‘வெளிச்சம்படாத’ என்னும் முன்னொட்டில் உணரமுடிகிறது. தமிழ்நாட்டுக் கலைஞர்களை புகழ்வெளிச்சத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு தமிழ்ப்பார்வையாளர்களுக்கே உண்டு. தமிழ்ப்பார்வையாளர்களாகிய நாம் நமக்குரிய பொறுப்புக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பது நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. ரங்கராஜனின் புத்தகத்தை வாசித்து முடித்ததும் அப்படி ஒரு கேள்வி எழுவது உண்மை. அதுவே ரங்கராஜனின் புத்தகத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

இந்தப் புத்தகத்தில் இருபது கலைஞர்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கிறார் ரங்கராஜன். ஒருசிலர் வாழ்ந்து மறைந்த கலைஞர்கள். மற்றவர்கள் நம்மிடையே இன்றும் வாழும் கலைஞர்கள். நாடகக்கலைஞர் எம்.எஸ்.காந்திமேரியில் தொடங்கும் பட்டியல் நாட்டுப்புறக்கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி, தெருக்கூத்துக்கலைஞர் அம்மாபேட்டை கணேசன், கும்பகோணம் பாலாமணி, ஆர்மோனிய பின்பாட்டுக் கலைஞர் கமலவேணி, பாகவத மேளா நடனக்கலைஞர் கோபி என பலரையும் தொட்டு இறுதியில் துடும்பு இசைக்கலைஞர் காரமடை சாமிநாதனைப்பற்றிய கட்டுரையோடு முடிவடைகிறது. காந்திமேரி ஒரு கல்லூரி ஆசிரியர். கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைகளைத் தாமும் கற்று பலரும் கற்கும்படியாக கல்வித்திட்டத்தில் அவற்றுக்கு இடமளித்ததும் அவருடைய முக்கியப்பணியாகும். ஒரு நகர்ப்புறக் கல்விச்சூழலில்  நம்முடைய தொன்மை ஆடற்கலைகளான பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காவடி, கும்மி, கோலாட்டம், முளைக்கொட்டு போன்ற வடிவங்களைப் பயில்வதற்கான சூழலை உருவாக்குவது முக்கியமானது. அவரை நினைக்கும்போது ராமானுஜத்தின் இயக்கத்தில் அவர் நடித்த ‘வெறியாட்டம்’ நாடகத்தை நினைக்காமல் இருக்கமுடியாது. போரில் தந்தையையும் கணவனையும் இழந்த நாச்சியார் தன் மகனையும் எதிரிகள் கவர வரும்போது வீறுகொண்டு எழுவதாக அமைந்த இந்த நாடகம் முற்றிலும் ஒப்பாரிப்பாடல்களின் பின்புலத்தில் நிகழ்த்தப்பட்டது. இலங்கைப்போரை நினைவூட்டும் சமகாலப் படிமமாக முழுநாடகமும் அமைந்து தமிழ்நாடக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது.  பாரதியாருக்கு ‘பாஞ்சாலி சபதம்’ போல ராமானுஜத்துக்கும் காந்திமேரிக்கும் ’வெறியாட்டம்’ பெருமை சேர்க்கும் படைப்பாகும்.

பாவலர் ஓம்முத்துமாரி அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஓர் ஆளுமை. அவருடைய வாழ்க்கை வரலாற்றை ‘கிழக்குத்திசையின் கூத்துக்காரன் பாவலர் ஓம் முத்துமாரி’ என்னும் தலைப்பில் ஒரு நூலாகவே தொகுத்து எழுதியிருக்கிறார் நாடகக்கலைஞரான முருகபூபதி. ஓம்முத்துமாரி பெரிய பாடகர். மேடை நடிகர். கூத்துக்கலைஞர். பதினேழு நாடகங்களை எழுதிய படைப்பாளி. வயிற்றுப்பாட்டுக்காக பலவிதமான வேலைகளைச் செய்தாலும் தன் கலை ஈடுபாட்டைக் கைவிடாதவர். இடதுசாரி இயக்கத்துக்கும் கலைஞர்கள் சங்கத்துக்கும் பொதுச்சேவைக்கும் அர்ப்பணிப்புணர்வோடு உழைத்தவர். ஒரு விவசாயியின் குரலாக அவர் பாடிய பாடலை ஒருமுறை கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க விழைவார்கள். ஒருபோதும் நெஞ்சைவிட்டு நீங்காத வரிகளைக் கொண்டது அந்தப் பாடல்.

‘வறுமை நமக்கு மாமன்முறை

சிறுமை நமக்கு தம்பிமுறை

பொறுமை நமக்கு அண்ணன்முறை

பசியும் பிணியும் பிள்ளைகள் முறை

எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்குது பார்த்தீகளா

ஏரைப் பிடிச்சு உழும் தங்கக் கம்பிகளா’

ஒருவித சுயகிண்டலோடு தொடங்கும் அந்தப் பாடல் ஒரு நாட்டுப்புறப் பாடலைப்போல மக்கள் வாய்வழக்கில் இன்றும் வழங்கிவருகிறது.

மாயவரத்துக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் ஓடிய ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்று மக்களால் பெயர் சூட்டப்படுகிற அளவுக்கு கும்பகோணம் பாலாமணி பிரபலமான நாடகக்கலைஞராக இருந்தார். பக்தி நாடகங்களே அதிக அளவில் நடத்தப்பட்டு வந்த காலத்தில் சமூக உணர்வு கொண்ட நாடகங்களை முதலில் அரங்கேற்றியவர் அவர். ஆண்களே கொடிகட்டிப் பறந்த நாடக உலகில் முற்றிலும் பெண்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து நாடகங்களை அரங்கேற்றியவர் அவர். பல சிறந்த நடிகைகளை உருவாக்கி, தம் சொந்த செலவில் அவர்களுக்குத் திருமணமும் செய்துவைத்து வாழவைத்தவர். ஆனால் அவருடைய இறுதிக்காலம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. செல்வம் அனைத்தையும் இழந்து, நோய்வாய்ப்பட்டு கவனிக்க யாருமின்றி மதுரைக்குப் பக்கத்தில் ஒரு குடிசையில் இறக்கநேர்ந்தது.

கூத்துக்கலைஞர்களில் முக்கியமானவர் அம்மாப்பேட்டை கணேசன். நவீன எழுத்தாளரான ஹரிகிருஷ்ணன் களரி அமைப்பின் சார்பாக அம்மாப்பேட்டை கணேசனைப் பற்றி ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார். கணேசனுடைய அர்ப்பணிப்புணர்வையும் பங்களிப்பையும் முன்வைத்துப் பேசுகிறது அந்தப் படம். கூத்து என்பது வெறும் பாட்டோ, நடனமோ, உரையாடலோ மட்டுமல்ல. அது ஓர் ஆழ்ந்த கலைச்செயல்பாடு. கூத்துக்கு மேலோட்டமான ஒரு வடிவ அமைப்பு உண்டென்றாலும் அந்தந்தக் கதையின் தன்மைகளுக்கு ஏற்ப சம்பவங்களைக் கூட்டிக் குறைத்துச் சுவையுடன் வடிவமைக்க ஆழ்ந்த ஞானம் தேவைப்படுகிறது. கதை சார்ந்த விமர்சனப்பார்வையை பொதுமக்களின் குரலாக உரையாடல்களின் ஊடே அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பாடல்களும் உரையாடல்களும் கூத்துக்கலையின் உயிர்நாடி. இவ்விரண்டிலும் இளமைமுதல் தேர்ச்சி பெற்றவராக விளங்கியவர் கணேசன்.

காளிக்கவுண்டனூர் லட்சுமி அம்மாள் மற்றொரு முக்கியமான தெருக்கூத்துக்கலைஞர். பொதுவாக ஆண்களே பெண்பாத்திரமேற்று நடிப்பது கூத்துமரபாக இருந்த நிலையில், அதை மாற்றி லட்சுமி அம்மாள் ஆண் பாத்திரமேற்று நடித்துப் புகழ்பெற்றார். ஆனால் அந்தப் புகழைக் கடந்து மிக இயற்கையாக வாழ்ந்து வருகிறார் லட்சுமி அம்மாள். தந்தை மூலமாகவும் கணவன் மூலமாகவும் கேட்ட, பார்த்த, கற்ற பாடங்களை மனதில் இருத்தி தன் திறமையை வளர்த்துக்கொண்டவர் அவர். விரிந்த ஆழமான புராணக்கதைகளின் நுட்பங்களை அறிந்து அவற்றைச் சுவையுடன் மக்கள் முன் படைத்ததுடன் அதற்கான அடவுகள், தாளலயங்கள் என எண்ணற்ற கூறுகளை வளர்த்துக்கொண்டு கூத்துக்கலையைச் செழுமையுறச் செய்தார். தன் பங்களிப்பைப்பற்றி பெரிதாக நினைக்காமல் “திருத்தமா செஞ்சேன், பேரு வந்தது. பிரியமா இருந்திச்சி. பார்க்கிற சனம் நல்லாயிருக்குங்கிறதுக்காக உசிர கொடுத்து ஆடினேன்” என்று மனநிறைவோடு சொல்ல உண்மையிலேயே ஒரு பெரிய பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் லட்சுமி அம்மாளிடம் இருக்கிறது.

ஆர்மோனியக்கலைஞர் கமலவேணி தம் பாடல்களுக்காகவும் இசைக்காகவும் பெயர் பெற்றவர். விஸ்வநாததாஸ், தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் நடத்திய இசைநாடகங்களில் ஆர்மோனியம் வாசித்தும் பின்பாட்டு பாடியும் புகழ்பெற்றார். இசைநாடகங்கள் இல்லாதபோது, சுதந்திரப் போராட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தி விடுதலை உணர்வைத் தூண்டினார். பாஸ்கரதாஸ் எழுதிய சுதந்திர வேட்கைப் பாடல்களை வைத்திருந்த காரணத்துக்காக, இவருடைய வீடு சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத காலம் சிறைத்தண்டனை கிடைத்தது. விசாரணையின்போது இவர் பெண் என்னும் காரணத்துக்காக, இவரை விசாரித்த அதிகாரி ‘மதுவை உட்கொண்டு பாடிய காரணத்தால் மேடையில் தவறுதலாக சுதந்திர வேட்கைப் பாடல்களைப் பாடிவிட்டதாகக் கூறினால் விடுதலை செய்துவிடலாம்’ என்று சொன்ன ஆலோசனையை உறுதியாக மறுத்துவிட்டார் கமலவேணி. இதன் காரணமாக தன் ஒரு வயது குழந்தையுடன் ஒன்பது மாத காலம் சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு சுதந்திரம் அடையும் வரை, தேசியப்பாடல்களைத் தவிர வேறெந்தப் பாடல்களையும் பாடமாட்டேன் என்று சபதம் பூண்டு, அதை வைராக்கியத்துடன் செயல்படுத்தியவர் கமலவேணி.

சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவரான மாரியப்ப சுவாமிகள் மிகமுக்கியமான கலைஞர்.  இசைப்பாடல்களை எழுதிப் பாடி பிரபலமானவர். முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மேடையில் பாடி பிரபலப்படுத்தி தமிழிசையை வளர்க்கப் பாடுபட்டவர். கச்சேரிகளில் ராக ஆலாபனை செய்வதற்குப் பதிலாக திருவருட்பா, தாயுமான்வர் பாடல், கந்தர் அலங்காரம் என விருத்தங்களைப் பாடி ராகங்களை விரிவாக்கம் செய்யும் முறையை மேற்கொண்டார். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, மதுரை சோமு போன்றவர்கள் இவருடைய ராகம் பாடும் முறையால் ஈர்க்கப்பட்டவர்கள். ஒருமுறை ராகம் பாடுவதில் வல்லவரான விளாத்திகுளம் சுவாமிகள் ராகம் பாடவும் அதே ராகத்தில் மாரியப்ப சுவாமிகள் தமிழ்ப்பாடல் பாடவும் அப்பாடலுக்கு ராஜபாளையம் குழந்தைவேலு கற்பனை சுரமும் பாடி ஏறத்தாழ நான்கு மணி நேரம் ஒரே நிகழ்ச்சியை ஒரே ராகத்தைக் கொண்டு நிகழ்த்தியிருக்கிறார். தமிழிசை நிகழ்வு என்பது அரிதாகிவிட்ட சூழலில் மாரியப்ப சுவாமிகளின் தமிழ்சைப் பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

பாகவதமேளா நடனக்கலைஞர் கோபியின் பங்களிப்பு மகத்தானது. தஞ்சாவூரை அடுத்த மெலட்டூரில் பாகவதமேளா பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. விஜயநகரத்திலிருந்து இடம்பெயர்ந்த தெலுங்கு குச்சிப்புடிக் கலைஞர்கள், மெலட்டூரின் பூர்வீக சதிர் கலைஞர்கள், மராட்டியர் ஆட்சியில் காஞ்சிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த வைணவக்கலைஞர்கள் ஆகியோர்ன் சங்கமத்தால் உருவாகி நடனம், பக்தி ஆகியவற்றின் கூறுகளால் வடிவம் பெற்ற கலை பாகவத மேளா. தெலுங்கு கலைஞர்களும் கல்விமான்களும் பெரும் எண்ணிக்கையில் அங்கு நிலைபெற்றிருந்ததால் அலாரிப்பு, தில்லானா போன்ற நடன நிலைகள் அவர்களுடைய பாணியிலேயே வடிவமைக்கப்பட்டு தமிழ்ச்சமூகத்துக்கு கொடையாக வழங்கப்பட்டது. இன்றும் பாகவதமேளா பெரும்பாலும் தமிழ்க்கலைஞர்களால் தெலுங்கிலேயே நிகழ்த்தப்பட்டு வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் உருப்பெற்ற இவ்வடிவம், நடுவில் நலிவுற்று 1930களுக்குப் பிறகு புத்துயிர் பெற்று ஆண்டுதோறும் கோடையில் ஒரு வாரம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. நரசிம்ம ஜயந்தி அன்று பிரகலாத சரித்திரம் நாடகத்தில் நிறைவு பெறும் இவ்விழாவில் கம்சவதம், சத்யஹரிச்சந்திரா, உஷா பரிணயம், ருக்மிணி கல்யாணம் ஆகிய நாடகங்கள் இடம்பெறுகின்றன. சிறு வயதிலிருந்தே பாகவதமேளா நிகழ்வுகளைப் பார்த்து உத்வேகம் கொண்டு தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட கலைஞர் கோபி. கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டார். ஹிரண்யகசிபு பாத்திரத்தை ஏற்று அவர் வெளிப்படுத்திய திறமையைக் கண்டு வியந்த பேராசிரியர் ராமானுஜம் கைசிக நாடகத்தில் பிரும்மராட்சச வேடத்தை அவருக்கு வழங்கினார். மரபுக்கலைஞராக இருந்தாலும் நவீன நாடகத்துக்கான கூறுகளையும் உள்வாங்கி நடிக்கும் அபூர்வமான கலைஞராக அவர் விளங்கினார். நடனத்துக்கும் நாடகத்துக்குமான வேறுபாடுகளை நுட்பமாக அறிந்து வெளிப்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது.

தஞ்சை ராஜமாணிக்கம் முக்கியமான நவீன நாடகக்கலைஞர். முருகன் எலெக்ட்ரிகல்ஸ் என்னும் பெயரில் மின்சாரப்பொருட்களை விற்பனை செய்கிற கடையொன்றை நடத்தி வந்த ராஜமாணிக்கம் தன் அளவற்ற ஆர்வத்தின் காரணமாக நாடகக்கலைஞராக மாறினார். முதலில் மேடை நாடகக்குழுக்களில் நடித்து அனுபவம் பெற்று, நவீன நாடகங்களிலும் நல்ல நடிகராக மிளிர்ந்தார். தமிழின் முக்கிய நவீன நாடகப்படைப்பாளிகளான பேராசிரியர் ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன் ஆகியோர் இயக்கிய பல நாடகங்களில் பங்கேற்கும் வாய்ப்புகளை அவர் பெற்றார். நாடகம் சார்ந்து ஒரு சரளமான பன்முகத்தன்மையை உருவாக்கிக்கொள்ள இவ்வாய்ப்புகள் அவருக்கு உதவின. ராஜமாணிக்கத்தின் நாடகப்பயணம் அவருக்கு நாடகம் சார்ந்த பல கலைக்குழுக்களையும் அரங்க நிர்வாகத்தையும் ஒழுங்கு செய்யும் பல பொறுப்புகளை உருவாக்கித் தந்தது. தில்லி, மும்பை, பூனா போன்ற பல நகரங்களுக்கு பல குழுக்களை வழிநடத்திச் சென்று நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கைசிக நாடகக் கலைஞர்களையும் மேடை நிர்வாகத்தையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பையேற்று திறம்பட கையாண்டு வருகிறார்.

இப்படி இருபது கலைஞர்களின் ஆழ்ந்த ஞானத்தையும் கலைத்துறைக்கு அவர்களுடைய பங்களிப்பையும் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார் ரங்கராஜன். மறுமுனையில் சமூகம் பெரிய அளவில் எதையும் அவர்களுக்குத் திருப்பியளிக்கவில்லை என்றே சொல்லவேண்டும். கெளரவம்  என்பது ஒரு சால்வை, ஒரு மாலை, ஒரு விருது ஆகியவை மட்டுமல்ல.   சமூகத்தின் ஆழ்மனத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்படியான ஆவணங்களை இச்சமூகம் உருவாக்கவேண்டும். ஒரு தனிமனிதனாக ஹரிகிருஷ்ணன் என்னும் எழுத்தாளரால் செய்யமுடிந்த ஒரு செயலை இச்சமூகம் செய்யத் தயங்குவது ஏன் என்பது முக்கியமான கேள்வி.  பாடுபட்டு பணத்தைச் சேகரித்து ஒரு கலைஞரைப்பற்றிய ஆவணத்தைமட்டுமே ஹரிகிருஷ்ணனால் உருவாக்கமுடிந்தது. இச்சமூகம் அக்கறையோடு செயல்பட்டால், பல கலைஞர்களைப்பற்றிய ஆவணங்களை உருவாக்கமுடியும். அந்த அளவுக்கு வெளிச்சம் படாத கலைஞர்களின் பட்டியல் நீண்டது.

ஆவணப்படுத்தல் என்பது ஒரு முக்கியமான செயல்பாடு. அது ஒரு கலைஞனின் வாழ்வை எதிர்காலச் சந்ததியினர் அறிய வழிவகுத்துக் கொடுக்கும் என்பது உண்மை. கலையையும் கலைஞர்களையும் கெளரவிப்பது என்பது, அந்தக் கலைக்கு நிரந்தரமான பார்வையாளர்களை உருவாக்குதாகும்.  அது தரமான ரசனையை மக்களிடையே வளர்த்தெடுத்தல் வழியாகவே சாத்தியமாகும். இதுவே இன்று தமிழ்ச்சமூகத்தில் நிகழவேண்டிய முதல் பணி.

 

(வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள். கட்டுரைகள். வெளி ரங்கராஜன். அடையாளம் வெளியீடு. 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி. விலை. ரூ.100)

Series Navigationகூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்