எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்

விமர்சனம் ஒரு கலை. விமர்சனம் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் – விமர்சனத்துக்காக அதிகமும் கண்டனக் கல்லடி பட்ட திரு.க.நா.சு அவர்களும் திரு. வெங்கட்சாமிநாதன் அவர்களும் தான். ஆரோக்கியமான அனுசரணை மிக்க விமர்சனங்கள் என்றால் நினைவில் நிற்பவர்கள் திரு.வல்லிக்கண்ணன் அவர்களும் திரு.திக.சி அவர்களும். கறாரன, தாட்சண்யம் கருதாத விமர்சனம், முன்னவர் இருவருடையதும். ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்ற பண்பு கொண்டவர்கள் மற்ற இருவரும். இளம் படைப்பாளிகள் தங்கள் விமர்சனத்தால் முளையிலேயே கருகி விடக்கூடாது என்கிற தாய் உள்ளத்துடன், பாராட்டுக்குரியவற்றை மட்டும் எடுத்துக் காட்டி உற்சாகப்படுத்தி எழுதியதால் அவர்கள் ஏச்சு, கண்டனக் கல்லடிக்கு ஆட்படாதவர்கள்.
எனக்கும் விமர்சனம் செய்வதில் அப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு. கணையாழி, புதிய பார்வை இதழ்களில் வந்த எனது விமர்சனங்களால் மு.முருகேஷ், சூர்யகாந்தன, விழி.பா.இதயவேந்தன் போன்றோரது பாராட்டும், நட்பும் கிடைத்தன. அதே சமயம் ஏச்சும், கண்டனமும், நட்பு இழப்பும் கூட ஏற்பட்டன.
அரசுப் பணியில் உயர்ந்த பதவியில் உள்ள ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு முறை விமர்சனம் எழுத நேர்ந்தது. அந்த நூலை வெளியிட்ட பதிப்பாளர் தன் உரையில், ‘நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது கதைகளில் கவித்துவம் தெரிகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். கதைகளின் வருணனைகளில் வாசிப்புக்குத் தடையாக அதீத சொல் அலங்காரமும், எதுகை மோனைகளு மாய் பொறுமையைச் சோதிப்பதாக இருந்ததால் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. நான் எனது விமர்சனத்தில், ‘அதுதான் பிரச்சினையே! பொதுவாக கவிஞர்கள் கதை எழுதினால் ஒரு மயக்கமும், வாசிப்பைத் தடை செய்யும் பின்னலும் இருக்கும். கண்ணதாசன் முதல் மு.மேத்தா, வைரமுத்து வரை இந்தக் குறை இருக்கும். அவ்வாறே இவரது கதைகளும் இவரது கவிதைகளைப் போலவே குழப்பமாகவும் தொடர்ந்து படிக்க முடியாமல் காலைப் பிடித்து இழுப்பதான நடை கொண்டதாகவும் உள்ளன’ என்று எழுதினேன்.
இந்த விமர்சனம் சம்மந்தப்பட்ட எழுத்தாளரைக் கோபமூட்டியதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட, அவரது தாட்சண்யம் தேவைப்பட்ட ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோபம் வந்து விட்டது. அவரைத் திருப்திப் படுத்த வேண்டி, நேரடியாக என் விமர்சனத்தை அடிக்க முடியாமல், எனது வேறொரு விமர்சனத்தைச் சாக்கிட்டு அவர்களது இயக்கப் பத்திரிகையில் ‘எல்லாம் தெரிந்த எழுத்தாளர்’ என்று தலைப்பிட்டு, சாடி இருந்தார்கள். அந்த மாதம் வெளியாகி இருந்த ஹைஐகூ கவிஞர் மு.முருகேஷ் தொகுத்து அளித்திருந்த ‘ஒரு கோப்பை நிறைய கவிதை’ என்ற நூலுக்கு எழுதிய  எனதுவிமர்சனத்தில், ‘இந்த வகையில் இதுதான் முதல் முயற்சி எனலாம்’ என்று எழுதி இருந்தேன். ‘பலரது ஹைகூக்களைத் தொகுத்திருக்கிற முதல் முயற்சி’ என்று நான்குறிப்பிட்டதை ‘ஹைகூத்தொகுப்பே இதுதான் முதல்’ என்று நான் குறிப்பிட்டதாக -தெரியாமல் (அல்லது) தெரிந்தே கற்பித்துக் கொண்டு, ‘எல்லாம் தெரிந்த இந்தவிமர்சகருக்கு இதற்கு முன் மித்ரா, அறிவுமதி போன்றவர்களின் ஹைகூத்தொகுப்புகள் வந்திருப்பது தெரியாது போலும்!’ என்று இடித்திருந்தார்கள்.
அதோடு அப்போது நான் கணையாழியில் எழுதி இருந்த ‘மீட்பு’ என்ற குறுநாவலைக் குறிப்பிட்டும் எழுதி இருந்தார்கள். அந்தக் கதையிலு ஒரு புரோகிதரை உதவி செய்வது போல் ஏமாற்றி, ஒரு முஸ்லிம் அவருடைய டி.வி.எஸ் 50 வண்டியை அடித்துக் கொண்டு போனதைச் சித்தரித்திருந்தேன். உண்மையில் எங்கள் புரோகிதருக்கு நேர்ந்த அனுபவம் அது! வழியில் நின்றுபோய் பரதவித்த புரோகிதருக்கு உதவுதாய் அந்த வழியே போன ஒரு முஸ்லிம் சொல்லி, வண்டியை எடுத்துப் போனவன் திரும்பவே இல்லை என்ற அவரது வாய்மொழியை அப்படியே கதையில் எழுதி இருந்தேன். வர்க்கப் பார்வை கொண்ட அந்தப் பத்திரிகை, ஏமாற்றியவன் முஸ்லிம் ஆகத்தான் இருக்க வேண்டுமா என்று அதற்கு மதச்சாயம் அடித்து என்னைக் கண்டித்திருந்தார்கள். என் விமர்சனம் இப்படிக் கற்பிதங்களைத் தேடி எழுத வைத்திருந்தது!
விமர்சனத்தால் நட்பை இழந்ததும் உண்டு. ஒரு இலக்கிய நண்பர். அருமையான சிறுகதை எழுத்தாளர். நானும் அவரும் தீபம், கணையாழி இதழ்களில் ஒரே கால கட்டத்தில் எழுதியபோது நட்பு ஏற்பட்டது. தரமான அவரது சிறுகதைகளை நான் அவ்வப்போது வெகுவாக மனந்திறந்து பாராட்டி எழுதுவேன். நண்பர் என்னைப் போல ஊதாரி அல்லர். கதைகளில் கையாள வேண்டிய சொல் சிக்கனத்தை அவரது விமர்சனத்திலும் கைக் கொள்பவர். என் கதைகள் பிரசுரம் ஆகும் போது, ‘ உங்கள் கதையைப் படித்தேன்,  பார்த்தேன்’ என்ற வகையில் எழுதுவார். ஆனால் எனக்கு அதில் வருத்தம் ஏற்பட்டதில்லை. ஆனால் ஒரே ஒரு தடவை அவரது பரிசு பெற்ற நாவலின் தொடக்கம் பற்றி சற்று அதிருப்தியாக விமர்சித்து அவருக்கு நான் எழுதிய போது அவர் வெகுண்டு எழுந்தார்.
ஒரு பழம் பெரும் இலக்கியப் பத்திரிகையில் ஆண்டு தோறும் நடக்கும் நாவல் போட்டியில் ஒரு முறையேனும் பரிசு பெற வேண்டும் என்ற அவரது நீண்டநாளைய லட்சியம் பல தோல்விகளுக்குப் பின் ஒரு தடவை நிறைவேறிற்று. அவர் முதல் பரிசு பெற்ற செய்தியை பத்திரிகையில் பார்த்ததும், உடனே தந்தி அடித்துப பாராட்டுத் தெரிவித்தேன். வழக்கம் போல அது அவரை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த நாவல் பத்திரிகையில் வந்த போது முதல் அத்தியாயத்தைப் படித்து விட்டு நான் எழுதிய அபிப்பிராயம் அவருக்குக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. மெகா பரிசு பெற்ற ஒரு நாவல் முதல் அத்தியாயத்திலேயே அதன் பரிசுக்கான தகுதியை வாசகர்க்குத் திருப்தி ஏற்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். கவி ஷெல்லி, ‘ஒரு கவிதை தன் தொடக்க வரியிலேயே ஒரு பந்தயக் குதிரை வேடிச்சத்தம் கேட்டதும் பாய்ந்தோடுகிறமாதிரி வாசிப்பவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். முதல் பாய்ச்சலில் தொய்வு இருந்தால் வெற்றியை அது பாதிக்கும்’ என்பார். நான் அதைக் குறிப்பிட்டு, நண்பரின் நாவலின் முதல் அத்தியாயம் வேகமாக இல்லை, நாவலின் தலைப்பைப் போலவே மந்த கதியில் நடக்கிறது என்று எழுதினேன். மறு தபாலில் சீறிக்கொண்டு வந்தது நண்பரின் கடிதம். ‘நீங்கள் எதைக் குறை என்று குறிப்பிட்டிருக்கிறீர்களோ அதையே நாவலின் சிறப்பு என்று பலர் எழுதியுள்ளார்கள். நாவல் மந்தமாக நடக்கிறது என்று எழுதியுள்ளீர்கள். இனியும் அபடித்தான் இருக்கும்’ என்று கோபப்பட்டிருந்தார். நான் பதில் எழுதினேன்: ‘ஒரு வாசகனாக நான் உண்மையில் உணர்ந்த என் அபிப்பிராயத்தை எழுதினேன். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. இனியும் இப்படித்தான் இருக்கும் என்று பயமுறுத்தி இருக்கிறீர்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை.’
பதினைந்து ஆண்டுகளாய் பாராட்டியே எழுதி வந்ததை விரும்பி ஏற்றவர் ஒரு சின்ன வாசக அபிப்பிராயத்தை ஏற்காமல் அவரது அத்தனை ஆண்டு நட்பையும் துறந்து விட்டார். பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று.              0

Series Navigationஆன்மாவின் உடைகள்..:_பழமொழிகளில் ஆசை