எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3

0

மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான தேகத்துடன் ஒரு வயதான பெண்மணி நின்றிருப்பார். மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை ஒரு கைரேகை சோசியரைப் பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் கிளி சோசியம் தான். சோசியர்கள் தொகுதி பிரித்துக் கொண்டு செயல்பட்ட காலம் அது.

வயதான பெண்மணியின் பெயர் லட்சுமி. கைரேகை சாஸ்திரம் அறிந்தவர். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். நெற்றி நிறைய சிவப்பு குங்குமப் பொட்டு அணிந்து, கண்ணாடி போட்டிருப்பார். எப்போதும் வெள்ளையில் கட்டம் போட்ட புடவைதான் கட்டுவார். சன்னமான குரலில் பேசுவார். ஒல்லி உடம்புடன் இரவு பத்து மணி வரை நின்று கொண்டே இருப்பார்.

அவர் வெள்ளைப் புடவை கட்டுவதில் ஒரு புத்திசாலித்தனம் தெரிந்தது எனக்கு! மரங்கள் சூழந்த பகுதி அது. தெரு விளக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். அவைகளின் சொற்ப வெளிச்சத்தையும் மரக்கிளைகள் மறைத்துவிடும். வாகனங்களின் முன் விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சம் அவ்வப்போது ஒளி கூடும். சொற்ப வெளிச்சத்தில் வெள்ளை உடை கண்ணில் பட வாய்ப்புகள் அதிகம். அதோடு வயதானவள் என்றாலும் வண்ண உடை சிலருக்கு வேகத்தைக் கொடுக்கலாம். வெள்ளை உடை பாதுகாப்புடன் தொழில் தந்திரமும் கூட.

கல்லூரி நாட்களில் நான்கைந்து பேராக அவரைக் கடந்து போகும்போது “ கைரேகை மன்னி” ( மன்னனுக்கு எதிர்பதம்) என்று கூப்பிடுவோம். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் கடந்து விடுவோம்.

ஒரு நாள் இரவு ஏழு மணிக்கு அவளருகில் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். பெரிய பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு ஒருவரது கையை சோதித்துக் கொண்டிருந்தார். ஒட்டுக் கேட்டதில் கிடைத்த விவரம் இது!

“ தோ பாருங்க.. இருக்கறதை இருக்கறபடி சொல்லிடுவேன்.. அதுதான் ஒங்களுக்கும் நல்லது.. ஆக்சுவலி ஒங்க ஃபேட் லைன் கட்டாயிருக்கு.. தொழில்ல கொஞ்சம் இழுபறிதான். வேலைக்கு போறிங்கன்னா அடிக்கடி வேலையை விட வேண்டியிருக்கும்.. லைன்ஸ் ஆர் வெரி கிளியர்!”

ஆங்கிலமும் தமிழுமாக பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் அவர். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படி அற்புதமாக மொழியை கட்டியாளும் அவர் ஏன் தெருவில் நிற்க வேண்டும். நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் கூட இதை விட கௌரவமாக பிழைத்துக் கொள்ளலாமே?

ஒரு நாள் யாருமில்லாத பின் மாலைப் பொழுதில் அவரை பேட்டியெடுக்க முடிவு செய்தேன். ரேகை தவிர ஏதும் பேசுவாரா? நான் அவரை ஏளனம் செய்வதாக கோபம் கொள்வாரா? ஏதாவது திட்டிவிட்டால் நாற்சந்தியில் என் மானம் போகுமே! ஏகத்துக்கு தயக்கம்.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை நெருங்கினேன்.

“ சின்னப் பையனா இருக்கே? ஒனக்கு எதுக்கு ரேகை பாக்கணும். நாட் நெஸஸ்ஸரி”

“ இல்லே.. ஒங்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும்”

“ ஒய்! நான் என்ன பிரபலமா.. ஐ வாஸ் நெவர் ஃபேமஸ்.. நாட் ஈவன் பாப்புலர்.. மெபி நொட்டோரியஸ்”

மெல்ல அவரை மசிய வைத்து நான் மீட்டெடுத்த அவரது சரிதை இதுதான்!

அவருடைய கதை சுவாரஸ்யமானது. சோசியர்கள் பேச்சைக் கேட்டு அழிந்த குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் அவர். வளமாக வாழ்ந்த குடும்பம். பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் நேரத்தில் சோசியர்கள் சொன்னதைக் கேட்டு மொத்தத்தையும் தொலைத்த அவரது தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

பதினாறு வயதில் பல வீடுகளில் வேலை செய்து பிழைத்த அவர், கிடைத்த நேரங்களில் கைரேகை சாத்திரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறார். தந்தையுடன் சிறு வயது முதலே பல சோதிடர்களை சந்தித்த அனுபவம் அவருக்கு துணையாக, கைரேகை சாத்திரம் அவருக்கு அத்துப்படியாகிவிட்டது. சோதிடம் கேட்க வருபவர்கள் இளம் பெண்ணான அவரிடம் வேறு எதையோ எதிர்பார்ப்பது புரிந்த கணத்தில், அவர் ரேகை பார்ப்பதை நிறுத்திக் கொண்டார்.அப்புறம் அவருக்கும் எல்லோரையும் போல கல்யாணம், பிள்ளைகள் என்றாகிப் போனது. அவர்களையும் நல்ல முறையில் வளர்த்ததில் இப்போது வசதிக்கு ஒரு குறைவும் இல்லை.

ஆனாலும் மண்டைக்குள் இருக்கும் ரேகை சாத்திரம் அவரை விட்டபாடில்லை. எந்தக் கையைப் பார்த்தாலும் அதன் கணிப்புகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன.

இப்போது வயதாகி விட்டது. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தத்தம் கால்களில் நிற்கிறார்கள். இனி பயமில்லை என்றானபின், தனக்குப் பிடித்த ரேகை சாத்திரம் சொல்ல வருவதாகச் சொன்னார் லட்சுமி

“ ஏன் இப்படி இருட்டிலே நிக்கறீங்க? வீட்லயே பாக்கலாமே?”

“ வீட்ல ரேகையை பாத்தாலே எங்கப்பா ஞாபகம் தான் வருது. அவரது அழிவு என்னைக் அலைக்கழிக்குது. ஹி வாஸ் சச் அ கவார்ட். ஆனால் இதுல உண்மை இருக்கு தம்பி. சாஸ்திரம் பொய்யில்லே”

இன்னமும் சோதடத்தையும் சோதிடர்களையும் நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு வயதுக்கப்புறம் எல்லா தாத்தாக்களும் சோதிடர்களாகி விடுகிறார்கள்.. கவிஞர் விக்கிரமாதித்யன் போல.

நாதமுனி தெருவில் இருக்கும் ஶ்ரீதர் போலியோவால் பாதிக்கப்பட்டு நடமாடும் சக்தி இழந்தவர். இன்னமும் பணம் வாங்காமல் பலருக்கு சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கீறார். அவரைப் போல பலர் இந்த சாத்திரத்தை ஒரு மனித நேயப்பணியாக செய்து கொண்டிருக்கீறார்கள்.

கோட்டூர்புரத்தில் இருந்த ஆவி உலகம் அமுதா சட்டென்று ஒரு டிரான்ஸில் போய் சுத்த சங்கத் தமிழில் பேச ஆரம்பித்து விடுவார். பாதிரி லாரன்ஸ் என் கல்லூரி நண்பன். நம் சிரசின் மேல் கை வைத்து கிரேக்க பாஷையில் ஏதோ சொல்லி விளக்கமும் சொல்வான். வெள்ளைப் பேப்பரில் எழுத்துக்கள் தோன்ற நாடி சோசியம் பார்க்கும் குமார் குருஜி சில இடர்களை எனக்கு நீக்கி இருக்கிறார்.

எனக்கு சோதிடம் தெரியாது. ஆனாலும் என் சம்பந்தப்பட்ட விசயம் ஒன்று இதில் இருக்கீறது. ப்ளஸ் டூ பரிட்சை விடுமுறையில் என் தந்தையின் பழைய ஸீரோ கைரேகை புத்தகத்தை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான் என் மகன்!

0

Series Navigationதிண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடுபுத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .