என்னைப் போல் ஒருவன்

என்னை யாரோ
பின்தொடருகிறார்கள்
எனக்கு  பகைவரென்று
யாருமில்லை
கடன் வாங்கி
கொடுக்காமல் இருந்ததில்லை
எடுத்தெறிந்து யாரையும்
பேசுவதில்லை
அடுத்தவர் மனைவியை
நிமிர்ந்து  பார்ப்பது கூட இல்லை
தீவிரவாதியோ என
சந்தேகப்படுவார்கள்  என்று
தாடி கூட  வைப்பதில்லை
சர்ச்சைக்குரிய  நாவல் எதையும்
நான் எழுதவில்லை
வெளிநாட்டுக்கு
உளவறிந்து சொன்னதில்லை
என் குழந்தையைத்  தவிர
வேறெந்த குழந்தையையும்
தூக்கி  கொஞ்சுவதில்லை
அருகாமையில் எந்த
குண்டுவெடிப்பும்  நடக்கவில்லை
எந்த ஒரு  சித்தாந்தமும்
என்னை ஈர்த்ததில்லை
என்னைப் போல் ஒருவன்
இருப்பானோ என்று
தோன்றாமல் இல்லை.

Series Navigationகுருபிஞ்சு மனம் சாட்சி