ஏழை

கடல்புத்திரன்

(குறிப்பு :

நான்  எழுதிய முதல்ச் சிறுகதை  இது ! .நேர்த்திக்கடன் வைத்து கோவிலில் நிறைவேற்றுவது போல ,இதை எழுதுற போது, “என் தங்கச்சிக்கு  எவ்வளவு  தூரம்  அதிருஸ்டமிருக்கிறது பார்ப்போம் ? …..”.என்று   தாயகம் பத்திரிக்கைக்கு எழுதி, அனுப்பியது, அதுவரையில், இலங்கையில்  இருக்கிற  போதும்  எழுதி  அனுப்பி  இருக்கிறேன் ஒன்றுமே அச்சிலே வந்திருக்கவில்லை. வருவதாய்   இருக்கவில்லை, , என் அதிருஸ்டம் அவ்வளவு தான் என மாய்ந்திருக்கிறேன். அது தான் தங்கச்சி அதிருஸ்டக்காரியா? என சோதித்தது ? . அதிருஸ்டக்காரி ! , தான். இந்தப்புலம் நாட்டில்.,  அச்சிலே, வெளியாகி விட்டது .

என்னை ஊக்கப்படுத்துவதற்காக அவள் , நான்  எழுதியதை  சிலவேளை எடுத்து வாசிக்கிறவள். இப்படி என்னை ஊக்கப்படுத்துறவர்கள் அவளும், ,அண்ணரும் தான் . முதல்க்கதை வந்தால் தெரியும் தானே,  ஐந்துப்பத்திரிகைகள் வாங்கி  விட்டிருந்தேன். அச்சமயம்  அவள்  இலங்கைக்குச்  சென்றிருந்தவள், அனுப்பினேன் .அவளின்  சினேகிதியின் அப்பா, பிரஜைகள்க்குழுத்  தலைவராக   இருந்தவர் அவரிடம் கொடுத்திருந்தாள் . ” நல்லாய்  இருக்கிறது.  இதைப் போல  அந்த  நாட்டையும் வைத்து எழுதச்சொல்லு ” என்று தங்கச்சியிடம் கூறினார் . பிறகு , ஒரு கொப்பியை , இலங்கையில்  இருக்கிற ஒரு   நண்பருக்கும் …அனுப்பினேன். நண்பர்,  அராலியில், இருக்கிற  மதிப்புக்குரிய பிரபலமான  அண்ணரிடம் வாசிக்கக் கொடுக்க , அவரும் வாசித்து விட்டு பாராட்டினார்.

இந்தக் கதை  , கொழும்பிலுள்ள  பாமன்கடைப்பகுதியில்  நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைக் ….கொண்டது . இதைத்  தொடர்ந்து என் எழுத்துப் பயணம் தொடர்கிறது.  புத்தகமாக்கிய போது அதிலும் இடம் பெற்றிருக்கிறது. பதிவுகள்  தளத்திற்கோ, சிறுகதைகள்  தளத்திற்கோ  அனுப்ப  தவறி விட்டிருக்கிறேன் போல இருக்கிறது. அவற்றில்  இதுவரையில் வரவில்லை. இதுவும்  குறிப்பிடக் கூடிய   ஒரு  கதை  என்பதால்  உங்கள்  தளத்திற்கு அனுப்புகிறேன்.)

திலகம் ஐந்து பிள்ளைகளையுடைய ஏழைத்தாய். இளவயதினள். அவள் “பொண்ணு” பெரிசாய் வந்து பிள்ளை பெற்றுக்கிற போதும், அவள் ஒருவேளை பிள்ளைப் பெற்றுக்கலாம். 16 வயசிலே அவளுக்கு கல்யாணம் நடந்திருந்தது. இப்ப அவளுக்கு வயசு இருபத்தெட்டு.இது பொதுவான சேரி நிலைமை. மூத்த பையன் பிரதீப்புக்கு எட்டு வயசு, அடுத்த ராணிக்கு ஆறு. ரூபினாவுக்கு நான்கு வயது. நோனாவுக்கு வயது மூன்று. ராஜாவுக்கு இரண்டு. இப்ப வயிற்றிலே ஒன்று. ஆணா பெண்ணா என்பது அவள் கையிலும் இல்லை. மூத்த இரண்டும் பள்ளிக்கூடம் போய்வருகிறார்கள். ஆனால்  அவர்கள்  படிக்கிறதாகத்தான் தெரியவில்லை.அவள் அன்றாடம் தேயிலை ஸ்டோரில் பக்கிங் வேலை பார்க்கும் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அம்மா, சகோதரங்கள், அவளுமே அங்கேயே வேலை பார்க்கிறார்கள். தேயிலை ஸ்டோர்கள் கொழும்பில் எல்லாப் பகுதியிலுமே இருந்தன. அவள் புருசன் காபரிலே கூலியாளாக வேலை செய்பவன். அவனும் அப்படியான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் தான்.

கொழும்புச் சேரிப் பகுதியில் கசிப்புக்கும் கஞ்சாவுக்கும் ஆட்படாத இளைஞர்களே இல்லை என்றே பொதுவாகச்  சொல்லலாம். அவனுக்கும் அந்த பலவீனம் இருக்கிறது. கொஞ்ச நாளாய் “வேலைக்குப் போகக் கூடாது. நீ வீட்டிலே இருந்து குழந்தைகளைப் பார்” என்று அவள் கர்ப்பிணிவயிற்றைப் பார்த்துச் சொல்லியிருந்தான். அவன் பேச்சைக் கேட்டு அவளும் வேலைக்குப் போகாது விட்டிருந்தாள். ஆனால், அவன் பேச்சில் உள்ள வீராப்பு  செயலில்  இல்லாத போது அவள் வெடித்துக் கொண்டிருந்தாள்.. ஏசினாள் , அழுதாள் .அம்மணமாக ராஜாவும் நோனாவும் அழுது கொண்டிருந்தனர். பசியால் சிறிசுகள் அழுகிற போது கர்ப்பிணியான அவளுக்கு பொறுக்க முடியாது. படுக்கிறதில மட்டும் சமத்துக் காட்டுற புருசன்.  “ என்புத்தியைச்  செருப்பால் அடிக்க வேணும் “ என்று  அழுகை கூடியது.

கிறிஸ்மஸ்போனசாக  நானூறு ரூபாய்  அவனுக்கு வேலைத்தலத்தில் கொடுத்திருந்தார்கள். மனிசன் கடன், கிடன் என்று எல்லாவற்றையும் கொடுத்து விட்டு கசிப்பையும், கஞ்சாவையும் வாங்கி வந்து எதுவுமே கவனியாமல் இருந்தது தான், அவளுக்கு  நெருப்பிலே எண்ணெய் வார்த்தது போல் இருந்தது. கல்லுளிமங்கனாக  எப்படி  அவனால்  இருக்க முடிகிறது ? அழுதாள், அரற்றினாள் .

அவளின்  வற்றிப் போன மார்பு, காய்ந்த தேகம், இதன் மத்தியிலே வயிற்றில் பிள்ளை வேறு! அவள் அழகி இல்லை. ஏழை. தன்மேல் கவிந்த விதியை நினைத்து, நினைத்து அழுதாள். அவன் வக்கிரம் பிடித்தவனா? இல்லையா?  என்பதை அவளால்  இப்பவும்  அறிய முடியவில்லை. மரியம் மர்மமானவனாகவே இருந்தான்.’யேசுவே! என்ர புருசனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து பிள்ளைகளை நல்லபடி வாழ வைக்க மாட்டாயா? அவள் யேசுவையே வேண்டுகிறாள். “பசியிலே பிள்ளைகளைப்  போட்டு அந்தரிக்க விடுகிறாயே நீயும் ஒரு மனிசனா?” திலகத்தின் சூடான பேச்சு அவள் வயிற்றெரிவில் இருந்து கிளம்பியது. இவனை நோவதிலும் அர்த்தம் இல்லையா ? அவன் சமயங்களில் சொல்வது அவளுக்கு தெரியும். “இதோ பார் கஞ்சாப்புகைக்குப் பலியாகி விட்டேன். இப்ப இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.” அவளுக்கு அப்பத்தைய மரியம் ஞாபகத்துக்கு வந்தான். கட்டான கரியமேனி, தினமும் வாசிகசாலை வளவில் உடற்பயிற்சி  செய்கிற  ஒரு நாட்டுப்புற  இளைஞன் .

மற்றய சேரிப்பெடியள்களை  விட வித்தியாசமாகவே இருந்தான் . ஏதோ களவு விசயமாக அவனை பெத்தவங்களே, மக்கோனா பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அது ஆச்சரிமம் போல் ஒரு அமைப்பு. கொழும்பிலே மக்கோனாப்பெடியள் என்றால் சனம் திருந்தியவனாக இருந்தாலும்…. சந்தேகமாகவேப் பார்க்கும்.  அங்கே அவனை அனுப்பியது வெகுவாகப் பாதித்த்திருக்கிறது. அங்கே,  அவன் அம்மா, சகோதர உறவுகளின் அன்பை விரும்பி ஏங்குகிற ஒரு பிறவியாக மாற்றப்பட்டிருந்தான். ஆனால் ,திரும்பி வந்த பிறகும் பெத்தவர்கள் அவனை  ஏறெடுத்துப் பார்க்கவில்லை . கவனிக்கவில்லை.ஒரு அன்னியப்பட்டவனாக, அனாதையாகவே வாழ்ந்து , சீரழிந்து கொண்டிருந்தான். திலகம், மரியத்தின் பக்கத்து வீட்டுக்காரி. அவன்  திரும்பி வந்தபோது அழகியாகப் பருத்திருந்தாள். சாது, தேயிலை ஸ்டோருக்கு சகோதரங்களுடன் வேலைக்குப் போகும் வழியில் மரியம் வந்து நின்று அவளையே முளித்து, முளித்துப் பார்த்துச் சிரிப்பான். அவன் வேலையில்லாமல் றோட்டு வழிய சீரழிந்த காலத்தில் அவளைக் காதலிக்கிற முயற்சிகளில் இறங்கியிருந்தான்.

திலகம் வீட்டுக்காரருக்கு  அவன் அனாதையாக விடப்பட்டு  நின்றது  பரிதாபமாகவே இருந்தது. “எங்கேயும் இப்படி இருப்பார்களா? பெத்ததை எப்படி உதறி எறிய முடிகிறது? றோட்டு வழியே அங்கேயும் இங்கேயுமாய் படுத்து சீரழிந்த போது அவனைக்  கஞ்சாப்பழக்கமும்  கசிப்புப்பழக்கமும்  தொத்திக்  கொண்டு விட்டது. அதைச் சொல்லி  மரியம் இப்பவும் கவலைப்படுவான். அந்த வாழ்வில், அவனுக்கு நண்பர்களும்,  எதிரிகளும் கூட இருந்தனர். அரசியல் போஸ்டர் ஒட்டுற வேலை செய்கிற, அடிதடிக் கூட்டத்திதிலும் அவனும் ஒருத்தன். அந்த மாதிரியான  நீச்சலடிப்பின்  மூலமே ஒரு அரசியல்க் கட்சியின் உபகாரத்தால் , இன்று , அவன் காபரில் கூலியாளாய்  வேலையில் இருக்கிறான்.அந்த வேலை கல்யாணமாகிய பிறகு தான் கிடைத்தது.” எல்லாம் உன் அதிருஸ்டம் தான் எனக்கு வேலை கிடைக்கிறது”என்று  அவளை அணைத்துக் கொள்வான்.அதை நினைத்து அவளும் பூரித்துப் போவாள்.

ஆனால், சீர்திருத்தப்பள்ளியில் இருந்து  திரும்பி வந்த போது அவன் நிலை மோசமாகவே இருந்தது. அவனைப் பார்த்துப்  பரிதாபப்பட்ட  திலகத்தின்  அம்மா, அவனுக்கு தங்கள் மாட்டை மேய்த்துக் கட்டுற வேலையைக்  கொடுத்தாள். வீட்டிற்கு முன்னால் கட்டிய சிறிய விருந்தினர் கொட்டிலில் படுக்கிறதுக்கும் இடம் விட்டாள். காலையில்  காம்பில்  இருந்து  மாட்டை விரட்டிக் கொண்டு  போய் குளத்தங்கரைப்  பக்கத்தில் கட்டி விட்டு வருவான். மத்தியானம் தண்ணி எடுத்து வைக்கணும். இடம் மாற்றிக்  கட்டணும். பிறகு மாலையில் அவிட்டுக் கொண்டு வரணும். இதுதான் அவன் வேலைகள்.

காம்பில் ,இருந்து விரட்டிக்கொண்டு போகையில் சந்தோசமாய் அவன்  போவதைப் பார்த்திருக்கிறாள். காம்ச் சதுப்புப்பாதையில் அவன் அப்படிப் போறதைப் பார்க்க திலகத்துக்கு வேடிக்கையாய்யும் இருக்கும்.அது, ஒரு காலத்தில் ஆமி காம்பாக    இருந்த   ஒதுக்குப்புறமான   பள்ளப்பகுதி. அதிலே , அச்சமயம் சிங்கள  கிளர்ச்சி  இளைஞர்கள் பலரைப் பிடித்து வைத்திருந்தார்கள்., எத்தனையோ சித்திரவதைகள், கொலைகள், அங்கே நடைப்பெற்றதாகச் சொல்லுகிறார்கள். ரயில்வேப் பகுதியில் மரக்குடில்களில் இருந்தவர்கள் ஆமிக்காம்பை எடுத்தவுடனே அங்கே வந்து  குடியேறத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கமே பிறகு அவர்களுக்கு அந்தப்பகுதியைக்  கொடுத்து விட்டது. அவளின்  அம்மா கொஞ்சம் கெட்டிக்காரி. தான் குடியேறிய சமயம் மகளுக்கு என குடிசை ஒன்றும் போட்டிருந்தாள். இப்ப திலகத்திட பேரிலே  ஒரு தனி வீடே அங்கே  இருக்கிறது.

தொடக்கத்தில் எல்லாருக்குமே  பயம். வெட்டிய பகுதி யில் எல்லாம் மண்டை ஒடு, எலும்புகள் வந்து கொண்டிருந்தன. ம் ! . இப்ப அந்தப் பகுதியில் காணிக்கு விலைகள்  அதிகம். இப்ப, பாம்புகள் மட்டுமே தொல்லை கொடுக்கின்றன. அடைமழை பெய்தால் அந்தப்பகுதியே வெள்ளக்காடாகப் போய் விடுவதும், அந்த நேரங்களில் நகரப் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக இருந்து விட்டு மீள வருவதும் அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது. திலகம், அவன்  மேல  இரக்கப்பட்டாள். கஞ்சி வந்து கொடுக்கும் போது  எல்லாம் அவளையே முளித்துப் பார்த்து கதைக்கும் போது அவன்  மேல் ஏற்பட்ட பரிவு, காதலாக மாறியது. அவனைத் திருத்தணும் என்று முடிவு  செய்த போது அவளுடைய அப்பா “ சந்னியாசம் பெறுகிறேன் “ என்று எங்கேயோ ஒடிப் போய் விட்டார். எங்கே என்று தேடிய போது , அவர்  இன்னொரு  பொம்பிளையைச் சேர்த்துக் கொண்ட சேதி  தெரிந்தது. பணக்கஷ்டம், மனக்கஷ்டம் மத்தியிலும் அம்மா , வேற வளர்ந்து விட்ட அவளுக்கு மாப்பிள்ளை’ ஒருத்தனைத்  தேடிக்  கொண்டிருந்தாள். அப்ப , திலகம்,  மரியத்தின்  அம்மாவிடமே  நேரில,  போய் “என்னை  உங்க  மருமகளாக  ஏத்துப்பீங்களா?”என்று கேட்டாள்.

அவருக்கு  அவள்  மேல்  நல்ல  அபிமானம்  இருந்தது. “என்  மூத்தவன்  தான் உதவாமல் போய் விட்டான்.   நீ  என்ர  இரண்டாவது  மகனைக்கட்டன்” என்று பரிவுடன்  கேட்டார். “இல்லை மாமி, எனக்கு மரியத்தை திருத்த முடியும்  என்ற நம்பிக்கை  இருக்கு அவரோட சந்தோசமாக வாழ்ந்து காட்டுகிறேன்” என்று  கூறி சம்மதம் பெற்றாள். மரியத்துக்கு அவள்  மதிப்பானவளாக  உயர்ந்தாள். தன்னைக் கட்டுகிறேன் என்று கட்டியது  அவன்  நெஞ்சில்  வசந்தங்களைத்   துாவியது. அவனுக்கு அவள் மேல் ஆழமான அன்பை , காதலை ஏற்படுத்தியது. அவளது வாழ்க்கை சந்தோசமாகவே   ஒடியது. அவள்  ஒவ்வொரு பிள்ளையை பெத்துக்கிற போதும் அவன் எவ்வளவு  ஆதரவாக  பொறுப்புடன்  இருந்தான்.ராஜா பிறந்த பிறகே, அந்த விபத்து   நடந்தது. காபரில் வேலை செய்கிற போது திடீரெனப் பாரம்  இறங்கியதில் அவன்  வலது  கையில்  மோசமாகப் பாதிக்கப்பட்டது. விரல் நுனி  ஒன்று  நசிந்து  சிதைந்தது. வலியால் துடித்த அவனை அவள் கண்ணை  இமை காப்பது  போல் பார்க்க வேண்டியிருந்தது. கவனித்தாள். அவன் சதா அழுதான், அரற்றிக் கொண்டேயிருந்தான்.

அதற்குப் பிறகு கஞ்சாப்புகைக்கும்  பழக்கமும் சற்றுக்  கூடுதலானது .

“ விபத்து நடக்க முதல் இருந்த மரியம் திரும்ப வர மாட்டானா? “ என்று அவள் ஏங்குவாள். அவன், அவள் நெஞ்சைக்  கவர்ந்தவன்.  இரவுகளில் அவன் பக்கத்தில் தூங்கும் போது இதைச் சொல்லியே கவலைப்படுவாள். விபத்து நடக்க முதல் நெஞ்சை நிமிர்த்திய அவனை அவளால் மறக்க முடியாது . இப்ப இருக்கிற மரியம் குடும்பத்துக்கு ஒத்து வராத சன்னியாசி. அந்தக் காலத்தில் ,காம்ப் பகுதியில் “மரியம் நெஞ்சை  நிமிர்த்தி  நின்ற அந்தக்கோலத்தை அவள் வாழ் நாளில் தான் மறக்க முடியுமா ? ,“ எத்தனை உயர்வாக என்ர மரியம் நின்றார் “. இவ்வளவு பிரச்சனைகள் மத்தியிலும் அவள் அவனை  விட்டுப் போகாததற்கு அந்த சம்பவமே பெரிதும் காரணம். இப்ப வயிற்றில் ஒன்றைத் தாங்குவதற்கும் கூட …..அவளால் , அவனை  என்றுமே அவமானப்படுத்தி, ஒதுக்கித் தள்ளவும்  முடியாது.

அன்று , அவள் தங்கச்சி விமலா,  ஒரு முஸ்லிம்  பெடியனுடன்  ஒடி   விட்டிருந்தாள். அவனது பகுதி ஆட்களும் அவனை  ஒதுக்க , வேறு வழியில்லாமல் அவர்கள் அங்கேயே திரும்பி வர வேண்டியிருந்தது.   சம்சுதீனும் தேயிலை ஸ்டோரிலே  வேலை செய்கிற சாதாரண தொழிலாளி  தான். முஸ்லிம் என்பது பேரில் மட்டுமே இருந்தது. இவன்  கடின உழைப்பாளி. அவர்கள்  வீடு இல்லாது தவித்த போது அவள்  தன்  வீட்டிலே  தங்க வைத்து ஆதரித்தாள். சம்சுதீன் , தம்பி போலப் பழகினான். அவள் அன்புள்ளம் கொண்டவள். கள்ளம் கபடமற்று பழகிற ஆட்களைக் கண்டால் யார் பேச்சையும் கேளாமல் பழகுவாள். உதவுவாள். உரிமை கொண்டாடுவாள். அதே சமயம்,  நெருப்பு  மனமும் கொண்டவள்.அவளின்  நேரடிப்  பேச்சுகளால்  கசப்புற்ற  அயலவர்கள்  சிலர் மெல்ல  மெல்ல  கதைக்கட்டி விடத் தொடங்கினார்கள். அது  அவள்  காதுக்கு  எட்டுவதற்கு  நாள் எடுத்தது. எட்டியதும் அவள் துடித்துப் போனாள். ‘ சம்சுதீனையும் அவளையும் ‘ சேர்த்து…. ஊருக்கு விவஸ்தையேயில்லை. அவள் அழுதாள்.

ஒரு நாள்   பெரிய சண்டையாகி அவள் அம்மா உட்பட உறவுகள்  மத்தியில் ‘அவள் ‘ குற்றவாளியாக  நிறுத்தப்பட்டிருந்தாள். “அவனைத் தொட்டுக் கதைக்கிறதுக்கு என்னடி அர்த்தம்?” அவள்  என்ன  செய்வாள்? விமலா , வீட்டை எதிர்த்து  ஒடியவள். தங்கச்சியின்  புருசன் என்பதால். அன்பாகப்  பழகியதை, தம்பி போல நினைத்துப்  பழகியதை  எப்படி  விளங்க  வைப்பாள்?  சாதாரணமாகவே  பெண்ணின்  குரலுக்கு  வீட்டில்  மதிப்பில்லை.  வெளியில்..? சம்சுதீனும் எப்படியானவனோ?  ஒரு வேளை  பிளேட்டை  மாத்தி  அவனே  கதைத்து   விட்டால் ?  ஐயோ  , என்ர   மரியமும் சந்தேகப்பட்டால் ,  அவளுக்கு மனசு  வெறுத்துப் போய்  விட்டது. அம்மா ஆறு பெண்  பிள்ளைகளோடு  தனித்து  நின்று போராடுறவள். அவள்  புருசன்  இன்னொருத்தியிடம்  போன போதும் , அவளுக்கு இருந்த  மன உறுதி  இருக்கிறதே . உறவுகள்  திட்டுற  போது அவர்களிடம் கணிசமாக  தங்கியிருந்ததால்  மகளுக்காகப்  பேச முன் வரவில்லை. திலகத்துக்கு அது தெரியும்.

கடைசியில்,  விரக்தியில் வீழ்ந்திருந்தாள். இனி புருசன்  என்பவன்  வந்து திட்டுறதோ  அல்லது அப்பனைப்  போல  ஒடிப் போறதோ  நடக்கலாம். இருக்கிற மூன்று பிள்ளைகளுடன் அவள்  தனிய வாழ்வாள். வேலையால் வந்த மரியம் “இங்கே  என்ன கூட்டம்” என்று  அயலில்  விசாரித்த  போது,  சம்சுதீன்  அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தான். பொன்னுக்கிழவர் , அவனைத் தனியேக்  கூட்டிக்  கொண்டு  போய் “தம்பி,  உன்ரை  மனிசி  இந்தப்  பேச்சுக்களால்  பிரச்சனைப் படுகிறாள் ” என்று  விளங்கப்படுத்தினார். விமலா, வெளிறிப் போன முகத்துடன் நின்றிருந்தாள். மரியம்   ஒன்றும் பேசாமல் வெளியே போனான். சம்சுதீனைக்  கூட்டிக் கொண்டு வந்தான். திலகத்தின் சின்னம்மா “தம்பி உனக்கென்ன விசரே?” என்று கேட்டாள். அப்ப,  மரியம்  சொன்ன  வார்த்தைகள்   இருக்கிறதே  , அவள் இப்போதும் மெய்சிலிர்ப்பாள். “என்ர  மனிசியைப் பற்றி  எனக்குத்  தெரியும்.  நீங்க  ஒன்றும் சொல்ல வேண்டாம். அதே  போல , சம்சுதீனையும் எனக்குத்  தெரியும். அப்ப  நீங்க போறிங்களா?” அந்தப்  பேச்சின்   காரணமாகவே , அவளும் எந்தப்  பிரச்சனையிலும். புருசன்  சன்னியாசக்  கோலத்தில்  பொறுப்பற்று  நடக்கிற  போதும் , ஏழ்மையில் வாடி வதங்கிற போதும் பிரியாமல் இருக்கிறாள்.  மரியத்துக்கும் அது தெரியும் ! .ஆனால் , நெடுக …. இப்படியும் , பேச்சு,  ஏச்சு  வாங்க   என்னவோ   மர்மமாகவே   நடந்து   கொள்கிறான்.   அதுக்கு  பிறகு அவன்  ,  அவளோடு கதைத்தது  ஒரு தோழி ஆதரவாகக்  கதைத்தது  போல் எவ்வளவு மெத்தென்றிருந்தது.“ திலகம்,  உனக்கு  இங்க  இருக்கிறது , அந்தரமாக  இருக்கும் ! , ‘ இந்த வீட்டில், சம்சுதீனையும்  விமலாவையும் விட்டிட்டு  நாம  வெளியில்  ஒரு  வீடு பார்த்திட்டுப்  போகலாம். அரசாங்கத்தாலே , ஒரு  குவாட்டர்ஸ்  வீடு  கிடைக்கும் போலிருக்கு “  பிறகு ,காம்பை  விட்டு  விலகி  வந்தது ,  மகிழ்ச்சியாக காலம் ஒடியது , விபத்து  நிகழ்ந்தது , மரியத்தின்  திடீர் பற்றற்ற  போக்கு  நீள்வது  ?…. அவள்  நினைத்து  நினைத்து  அழுதாள்.

Series Navigationதிருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே