ஐந்து கவிதைகள்

(1)

கனவின் மேல் கல் விழாமல்

வெயிலையும்

வெட்டவெளியையும்

சுருட்டிக் கொண்டு

ஒரு மூலையில்

படுத்துக் கிடக்கும் நாய்

உறங்கித் தீர்க்கும்

தன்

பிற்பகல் தனிமையை.

நாயின் கனவைச்

சுடாமல்

எப்படி மெல்லச்

சூரியன்

சாய்ந்து கொண்டிருக்கிறான்!

உன் கனவு போலத் தான்

நாயின் கனவும்

தனித்தது.

முடிந்தால்

கனவின் மேல்

கல் விழாமல்

நாய் மேல் கல்லெறிந்து பார்

மனிதா!

(2)

இந்தப் பொழுதைப் பறித்து

வேலியை மீறி

வெளியே சிரிக்கும்

பூவைப்

பறிக்கவும் மனமில்லை.

பிரியவும் மனமில்லை.

பரிந்து பூவைப்

பார்த்துக் கொண்டே இருக்கும்

இந்தப் பொழுதினைக்

கொஞ்சம்

பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

(3)

இறுமாப்பு

இருளின்

மறைவில்

அடையும்

பறவைகள்.

’என்

இலைகளின் மறைவில்’ என்று

இருளில்

இறுமாந்திருக்கும் மரத்தை

என்ன சொல்ல?

(4)

(க)விதை

காத்திருக்கும் பூமரம் காதலில்

காலத்தில் பூத்துக் குலுங்க.

காத்திருக்கும் பறவைகள் இருள் தின்று

காலை சிவக்கும் சூரியனைப் பாட.

காத்திருக்கும் மரக்கூட்ட நிழலும் வெயிலும்

காட்டில் வாழ்க்கையின் கோலம் போட.

காத்திருக்கும் வெளி நிலங்கீறி வரும்

முதல்நாற்றின் புது உலகைக் கொண்டாட.

கவிதை

விதை.

கவிதைக்குத் தெரியும்

எது வரை உள் காத்திருக்க.

(5)

நிம்மதியாய்

சலிக்கும் முன்

போதுமென்றிருக்கலாம்

ஓயும் முன்

நின்றிருக்கலாம்.

’கட்டியழும்’ முன்

விட்டிருக்கலாம்.

புத்தனாகி விடலாம்

என்றல்ல.

நிம்மதியாய்ச்

சாகலாம்.

அவ்வளவு

தான்.

Series Navigationஒற்றைச் சுவடுதீராத சாபங்கள்