ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுகொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார் பராக் ஒபாமா. இராக் யுத்தம், க்வாண்டாமானோ சிறை, வாரண்ட் இல்லாமல் ஒட்டுகேட்பது, மனித உரிமைகள் மீறப்படுவது என்பதில் புஷ்ஷை கடுமையாக விமர்சித்தார் ஒபாமா. இது ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மிக பிடித்துபோனதால் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது. காந்திக்கு மறுக்கபட்ட நோபல் பரிசு, மார்ட்டின் லூதர் கிங்குக்கும் மறுக்கபட்ட நோபல் பரிசு, நெல்சன் மண்டேலா மாதிரி சாதனையாளருக்கு வழங்கபட்ட நோபல் பரிசை ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் அடைய என்ன சாதனை செய்தார் ஒபாமா என்பது இன்றுவரை அவருக்கும் தெரியாது, பரிசை கொடுத்தவர்களுக்கும் தெரியாது

அதன்பின் இராக்கில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கினார் ஒபாமா. இராக் அரசு அப்போது சரியாக தன்னை நிலைபடுத்திகொள்ளவில்லை. ஆனால் இராக் போரை முடித்ததாக கணக்கு காட்டவேண்டும் என்பதால் படைகள் அவசர அவசரமாக விலக்கபட்டன. இராக் எல்லையை ஒட்டிய சிரியாவில் உள்நாட்டு போர் வெடிக்கையில் சிரிய நடுத்தர வர்க்கத்துக்கு எந்த உதவியும் செய்ய மறுத்தார் ஒபாமா. காரணம் தலையிடா கொள்கை. அதனால் போராடிய சிரிய மக்களை எளிதில் டாங்கிகளை வைத்து நசுக்கினார் அதிபர் அல்பசார். அடுத்து ஆயுதம் ஏந்தி ஐஸீஸ் அமைப்பு சிரியாவில் உருவானபோது அல்பாசாருக்கு எதிராக கடும் வெறுப்புடன் இருந்த சிரிய மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள். ஐஸிஸி வளர்ந்து இராக்கிலும் நுழைந்தது. அதை எதிர்த்து போரிடும் வலிமை இராக் ராணுவத்துக்கு இல்லை. ஆக இன்று இரு நாடுகளில் ஐஸிஸ் அமைப்பு வளர்ந்து நிற்கிறது.

அதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்து போர் முடியும் முன் 2012ம் ஆண்டு படைகளை விலக்குவதாக 2010ம் ஆண்டு அறிவித்தார் ஒபாமா. அல்கொய்தாவின் தேர்வு இப்போது இரு வருடம் சும்மா இருந்தால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு விலகிவிடும் என்பதே. அதேபோல் அமெரிக்காவும் ஆப்கானிஸிதானில் இருந்து வெளியேறியது. நடுவே ஒசாமாபின்லாடனை போட்டுதள்ளி மிகபெரும் செல்வாக்கை அமெரிக்காவில் அடைந்தார் ஒபாமா. அதுவே அவரது மறுதேர்தல் வெற்றிக்கும் மிகபெரிய அளவில் கைகொடுத்தது.

ஆனால் ஒசாமாவை கொன்றவுடன் முழு அல்கொய்தாவும் அழிக்கபட்டதாக தெரிவித்தார் ஒபாமா. ஆனால் அடுத்த சில மாதங்களில் அல்கொய்தா அமைப்பு லிபியாவில் அமெரிக்க தூதரகத்தை தாக்கி அமெரிக்க தூதரை கொன்றது. இப்பழியை ஒரு யுடியூப் விடியோவின் மேல் போட்டார் ஒபாமா. பின் அது அல்கொய்தா தாக்குதல் என்பதை ஒத்துக்கொண்டார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.

இஸ்ரேல்- பாலஸ்தின சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் சாதனையையும் செய்ய விரும்பினார் ஒபாமா. இஸ்ரேல் 1967 போருக்கு முந்தைய எல்லைகளுக்கு செல்லவேண்டும், ஜெருசலம் இரன்டாக பிரிக்கப்படவேண்டும், இஸ்ரேலுக்கு அரபு நாடுகள் அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்ற ஒபாமாவின் ஐடியா இருதரப்புக்கும் பிடிக்கவில்லை. பாலஸ்தீனர்கள் அமெரிக்காவை இஸ்ரேலின் நண்பனாக பார்த்தார்கள், இஸ்ரேலியர்கள் ஒபாமாவை சீரியசாக எடுக்கவில்லை. அவரது திட்டம் கிரவுண்ட் ரியாலிட்டியை துளியும் பிரதிபலிப்பதாக இஸ்ரேலியர்கள் கருதவில்லை. அதனால் இஸ்ரேலியர்கள் அதை பற்றி கவலைபடவில்லை என்றவுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி இஸ்ரேலிலேயே குடியிருந்து சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்த முயன்றார். ஆனால் அவர் இஸ்ரேலிய அதிபர் பீபி நெதன்யாகு, மற்றும் பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸுடன் பேசி, பேசி ஓய்ந்ததே மிச்சம். எந்த சமாதானமும் ஒத்துவராது என்ற நிலையில் 2014 கோடையில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் துவங்கி சமாதான ஒப்பந்தம் புதைகுழிக்குள் புதைந்துவிட்டது.

ரஷ்யா விவகாரத்தில் ஒபாமா ஏமாந்தது அவரது வெளியுறவு கொள்கையின் மிகபெரும் தோல்வி எனலாம். ஐரோப்பாவில் நிறுத்தி வைத்திருந்த எவுகணைகளை அகற்றி புடினுடன் ஒரு செல்லாகாசான ஆயுத ஒப்பந்தம் போட்டார் ஒபாமா. புடின் அதற்கு நன்றிகடனாக உக்ரெய்ன் மேல் படை எடுத்தார். அதற்கு ஒபாமா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில ரஷ்ய எம்பிக்கள் அமெரிக்கா வர தடை விதித்தார். ஒபாமா ஏதோ செய்வார் என எண்ணிய ஐரோப்பிய/நாட்டோ நாடுகள் ஏமாந்து போயின. ஒபாமா இன்றூவரை உக்ரெய்ன் மேல் ரஷ்யா படை எடுத்தது என்பதையே சொல்ல மறுக்கிறார், அங்கே நடப்பது போர் எனவும் கூற மறுக்கிறார்.

ஒபாமாவின் சாதனை என்பது பொலிடிக்கலி கரெக்ட் வார்த்தைகளை வெளியுறவு கொள்கையில் பயன்படுத்தியதே ஆகும். தீவிரவாதம் எனும் சொல் பொலிட்டிகலி இன்கரெக்ட் ஆனதால் “மனிதனால் உருவாக்காப்ட்ட பேரழிவு” என்ற பதத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். போர்ட் ஹூட் ராணுவ மையத்தில் நடால் ஹசன் எனும் அமெரிக்க ரணுவ வீரன் மற்ற அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றதை “ஒர்க் ப்ளேஸ் வயலன்ஸ்” என வகைபடுத்தினார். இன்று புடின் உக்ரெய்னில் செய்வது என்ன என்பதை வரையறுக்கும் சரியான சொல் இன்னமும் அவருக்கு கிடைக்கவில்லை. அது ஒரு அகிம்சை போராட்டம் என சொல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி.

இன்று ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள்:

ஐஸிஸை அவர் என்ன செய்யபோகிறார்?

இராக், ஆப்கானிஸ்தான் அரசுகள் இன்று உருக்குலைந்து நிற்கின்றன. இராக் எனும் நாடே நாளை இருக்குமா என்பது சந்தேகம். அதற்கு அவர் என்ன செய்யபோகிறார்?

உக்ரெய்ன் முழுவதையும் ரஷ்யா பிடித்து கீவ் நகரினுள் ரஷ்யபடைகள் நுழைந்தால் சோவியத் யூனியன் மறுபடியும் பிறந்தது போல்தான். அடுத்து லாட்வியா, லிதுவேனியா, போலந்தினுள் புடின் நுழைந்தால் மூன்றாம் உலகபோர் மூண்டே தீரும். அதை ஒபாமா எப்படி தடுக்க போகிறார்?

இதற்கான கொள்கைகளை அவர் சரியாக வரையறுப்பது அமெரிக்க நலனுக்கும், உலக நலனுக்கும் மிக அவசியம்..

Series Navigation
author

செல்வன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *