ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்

Spread the love

ஒரு நூற்றாண்டு
தன் கடனை கழித்து விட்டிருந்தது
காலச் சக்கரத்தில் ஒரு பல்
புதியதாய் முளைத்திருந்தது
நூற்றாண்டுச் சாயமாய்
அநேக தேசியச் சின்னங்கள் தோறும்
சிகப்புத் திட்டுக்கள் தெறித்திருந்தன
ஜன ரஞ்சகத்தின் நிகராய்
கடவுள்களும் பெருத்திருந்தார்கள்
கழிந்த யுகத்தின் சில காவியுடைகள்
கண்ணாடிப் பெட்டகங்களில் பத்திரமாயின
எப்படி நேசிப்பதென்றும்
எங்ஙனம் சுவாசிப்பதென்றும்
கட்டணமேற்றுக் கற்பித்தன
கலாசாலைகள்
இன்னமும் இவ்வுயிர் தாங்கி நிற்கும்
இப்பூத உடலிற்கான வாழ்வாதாரங்கள்
அமெரிக்க ஏகாபத்தியங்களென்றும்
சுவாச நாளங்களுக்கான கருப் பொருட்கள்
யூரோவும் டாலருமென
பாடப்பபுத்தகங்களில் பிரசுரமாயின
விரல் நீளா பொடிசுகளிடமெல்லாம்
ஆயுதங்கள் நீண்டிருந்தன
ஊரோரத்திய பள்ளிகள் முடக்கப்பட்டு
ஆயுதத் தளவாடங்கள் முடுக்கப்பட்டன
பச்சையங்கள் மிளிர்ந்து நிறைந்த
வனாந்திரக் காடுகளிலெல்லாம்
கரியமில எந்திரக் குழாய்கள்
இரைச்சலுற்று வெளிநீட்டிக் கிடந்தன
இன்னமும் தங்களைச் சீண்டிராத
மனிதத்துவ மாண்புகளையெண்ணி
நிம்மதிப் பெருமூச்சிட்டுக் கொண்டன
சூரியனும் நட்சத்திரங்களும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7நிழல் வலி