கண்ணப்ப நாயனார்

This entry is part 10 of 24 in the series 7 ஜூன் 2015

வளவ. துரையன்

nakannap_i”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்ட பின்” என்று மாணிக்க வாசகர் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடுகிறார். மண்ணுலகின் ஆடவர்களில் கண்ணப்பர் மிகச் சிறந்தவர் என்ற பொருளில்,
”கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்” என சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுகிறார். திருஞான சம்பந்தரோ,
”வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன், மலராகு நயனம்
காய் கணையினால் கிடந்[து] ஈசன் அடிகூடு காளத்தி மலையே”
என்று கண்ணப்பரின் வழிபாட்டு முறயைப் போற்றுகிறார். முற்றும் துறந்த பட்டினத்து அடிகளோ,
”நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேன்அல்லேன் நான் இனிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே” என்று பாடுகிறார்.
ஆதி சங்கரரும்,
”மார்க்காவத்தித பாதுகா பசுதேரங் கூஸ்ப கூர்சாயதே
கண்டு ஷாம்பு நிசேஷனப் புரரிபோர் திவ்யாபிஷே காயதே
கிஞ்சித் பக்ஷித மாம்ஸ சேஷ கபளம் நவ்யோப பஹாராயதே
பக்தி, கிம்நகரோத்ய ஹோவசைசரோ பக்தாவதம் ஸாயதே:”
என்று கண்ணப்பர் பற்றிப் பாடுகிறார்.

கண்ணப்பரின் பாதுகை சிவபிரானின் புருவங்களுக்கு இடையே சேர்கிறது. கண்ணப்பர் உமிழ்ந்த நீர் அபிஷேகத் தீர்த்தமாகிறது. அவர் கடித்து உண்ட மாமிசத்தின் மீதி நிவேதனாமிகிறது. எனவே வேடன் உயர்ந்த பக்தனாகிறான் என்பது மேற்கண்ட சுலோகத்தின் பொருளாகும்.

காளத்திப் புராணம் கண்ணப்பர், முற்பிறப்பில் அருச்சுனனாகப் பிறந்தார் என்று கூறுகிறது. பாசுபதம் வேண்டித் தவம் செய்த அருச்சுனன் வேடன் உருவில் வந்த சிவபெருமானுடன் அவர் சிவன் என்று அறியாமல் போர் செய்கிறான். பின்னர் அவனுக்குப் பாசுபதக் கணை தந்து, “நீ என்னை வேடன் என இகழ்ந்ததால் வேடனாகப் பிறப்பாய். இன்று பன்றி காரணமாக நம்மிடையே போர் நடந்தது. அன்றும் நீ பன்றி காரணமாகக் காளத்தி மலையில் என்னிடம் சேர்வாய்.” என்று சிவபிரான் அருள் செய்தார் என இப்புராணம் கூறுகிறது.

இக்கருத்தைப் பதினோரம் திருமுறையில் நக்கீரரும் வலியுறுத்துகிறார். சேக்கிழார் பிரானும், திருநாவுக்கரசநாயனார் புராணத்தில்,
”முன்னமே முனியாகியெனையடையத் தவமுயன்றான்” எனக் குறிப்பால் உணர்த்துகிறார்.

போத்தப்பி நாட்டின் தலைநகராகிய உடுப்பூரில் வேடர்குலத் தலைவனான நாகனுக்கும் அவன் மனைவி தத்தை என்பாளுக்கும் மகனாகக் கண்ணப்பர் அவதரித்தார். பிறந்த குழந்தை திண்ணென்று இருந்ததால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டனர்.

திண்ணனார் நாளொதொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பருவம் அடைந்தார். அவரது தந்தையிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றார். பிறகு தந்தையின் கட்டளைப்படி தன் முதல் வேட்டைக்கு நாணனையும் கண்ணனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். வேட்டையின்போது ஒரு பன்றியை நெடுந்தொலைவு விரட்டிச் சென்ற திண்ணனார் தன் சுரிகை எடுத்துக் குத்திக் கொன்றார். பிறகு நீர் வேட்கையின் காரணமாக பொன்முகலி ஆற்றை நோக்கிச் செல்கிறார்.
உடன் வரும் நாணன் காளத்திமலையைக்காட்டி “இம்மலை மீது உள்ள குடுமித்தேவரைக் கும்பிடலாம்” என்கிறார். இருவரும் மலையை நோக்கி நடந்து சென்றனர். அப்போது “இந்த மலையை நெருங்க நெருங்க என் எலும்பு உருகி உடல் பாரம் குறைவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது” என்று திண்ணன் வியந்து கூறுகிறார்.
இதே போன்ற நிலை ருசியமுக பர்வதத்திலிருந்து இராமபிரானை நோக்கிச் செல்லும் அனுமனுக்கும் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டவனை நோக்கிச் செல்லும் அடியாருக்கும் ஏற்படும் இன்பமான உணர்ச்சி அது அல்லது பரமாத்மாவை நோக்கிச் செல்லும் ஒரு ஜீவாத்மாவிற்கு நிகழும் உன்னதமான உணர்ச்சி அது.
அவ்வாறு செல்லும்போதே இறைவனின் பார்வை திண்ணன் மேல் எய்தியது. அதனால் அவர் முற்பிறவியின் சார்புகள் அகன்று அன்புருவாக மாறி விட்டார். உடலுக்குள் அன்பு குடிபுகுந்திருக்காமல் அவ்வன்பே உடலாக மாறியதை சேக்கிழார்,
“பொங்கிய ஒளியின் நீழல்
பொருவில்அன் புருவம் ஆனார்”
என்று குறிப்பிடுகிறார். மலைமேல் உள்ள சிவலிங்கத்தைக்கண்ட திண்ணனார் அடியனேற்கு இங்கு இவர் அகப்பட்டார் என மகிழ்ந்து போனார். அந்த இறைவனுக்கு நிவேதனம் செய்ய நல்ல உணவு வேண்டுமே என நினைத்தார். உணவு தேடிக்கொண்டு வருவதற்காக மலையை விட்டு இறங்கினார். அவருக்கு இறைச்சி கிடைத்தது. அது நல்ல இறைச்சிதானா, அதாவது சுவை உள்ளதா நம் இறைவருக்கு ஏற்றதா என அறியத் தன் வாயில் போட்டு மென்று தின்று பார்த்தார். நன்றாக இருந்ததால் இறைவருக்கு உணவாகத் தகுந்தது என எண்ணினார். வாயிலிருந்த அதை ஒரு இலையில் எடுத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யத் தண்ணீர் வேண்டுமே எனும் எண்ணம் தோன்றியது. எனவே சிறிதளவு தண்ணீரைத் தன் வாயினுள் அடக்கிக் கொண்டார்.
மீண்டும் மலை மேலேறினார். சிவலிங்கத்தின் முன்சென்றார். அந்த இறைவர் மேல் இருந்த மலர்களைத் தன் கால்களால் அகற்றினார். வாயினுள் இருந்த நீரை உமிழ்ந்து அபிஷேகம் செய்தார். தன் மென்று பார்த்த இறைச்சியை வைத்து நிவேதனம் செய்து தனக்கு அருள வேண்டினார். பின் இறைவருக்கு எத்தீங்கு நேராதவாறு இரவு முழுதும் காவல் காத்தார். பொழுது புலர்ந்ததும் மீண்டும் இறைவருக்கு உணவு கொண்டு வர கீழிறங்கிச் சென்றார்.
மலைமேல் குடிகொண்டுள்ள அந்தச் சிவபெருமானுக்கு வழக்கமாக ஒரு சிவாச்சாரியார் ஆகமவிதிப்படி பூசை செய்து வந்தார். அவர் பெயர் சிவகோசரியார் என்பதாகும். அவர் காலையில் வந்து பார்த்தார். இறைவனுக்கு அருகில் இறைச்சித் துண்டங்களையும், செருப்பின் அடி அடையாளங்களயும் கண்டார். “ஐயோ! யார் இந்த அபச்சாரம் செய்தது?” என்று மனம் கலங்கி மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். பின் தெளிந்து எழுந்து கண்ணீர் விட்டு அழுதார்.
பிறகு ஒருவாறாய் மனம் தெளிந்து அவற்றை எல்லாம் அகற்றினார். குளித்துவிட்டு வந்து மந்திரங்கள் ஓதித் தான் கொண்டு வந்ததை நிவேதனம் புரிந்தார். மலையை விட்டிக் கீழிறங்கிச் சென்றார். மலைக்கு மீண்டுவந்த திண்ணனார் முன்பு தான் செய்தவாறே செய்தார். இவ்வாறு திண்ணனார் தனக்குத் தெரிந்த முறையில் வழிபாடு நடத்துவதும், சிவகோசரியார் வந்து அவற்றை அகற்றித் தனக்குரிய முறையில் பூசை புரிவதுமாக நான்கு நாள்கள் நடந்தன.
ஐந்தாவது நாளில் சிவகோசரியார், இறைவனிடம், “எம்பெருமானே! தங்களுக்கு நிகழும் இத்தீய செயல்களை ஒழித்தருள வேண்டும்” என்று வேண்டினார். இறைவர் அவர் கனவில் தோன்றி,
”அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நம்பக்கல் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும்
அவனுடைய நிலைஇவ்வா றறிநீஎன் றருள்செய்தார்”
என்று கூறியதாக சேக்கிழார் பாடுகிறார்.
ஆறாம் நாள் சற்று முன்னமே வந்த சிவகோசரியார் மறைந்து நின்று கொண்டார். அப்போது வழக்கம்போல் திண்ணன் வந்தார். தன் வாய்நீரை அபிஷேகம் செய்ய வந்த அவர் சிவபெருமானின் வலக்கண்ணில் உதிரம் வருவதைக்கண்டு திடுக்கிட்டு அலறினார். மயங்கி விழுந்தார்; எழுந்தார்; உதிரத்தை நிறுத்த முயன்றார். ஆனால் பயன் இல்லை; உதிரம் வந்துகொண்டே இருந்தது. மூலிகைச் சாறெல்லாம் இட்டுப் பார்த்தும் இரத்தம் நிற்கவில்லை.
அப்போதுதான் திண்ணனுக்கு ஊனுக்கு ஊன்மருந்து என வேடர் சொல்வது நினைவுக்கு வந்தது. உடனே தன் வலக்கண்ணை ஒரு சரத்தினால் பெயர்த்தெடுத்தார். அக்கண்ணைச் சுவாமியின் உதிரம் வரும் திருக்கண்ணில் அப்பினார். இப்போது குருதி நின்றுவிட்டது.
திண்ணனாரின் அன்பைச் சிவகோசரியாருக்கு இன்னும் காட்ட சிவபெருமான் எண்ணம் கொண்டார். எனவே இப்போது தன் இடக்கண்னில் உதிரம் பெருகுமாறு செய்தார். அப்போது திண்ணனார் மனம் வருந்தினாலும் இதற்குத் தன்னிடம் மருந்து உள்ளதே என்று மகிழ்ந்தார். அதாவது தனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறதே என்று திண்ணனார் எண்ணினார். ஆனால் இப்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது. இந்தக் கண்ணையும் எடுத்து விட்டால் இறைவன் திருக்கண் இருக்குமிடம் தெரியாதே என நினைத்தார். எனவே தன் இடக்காலை இறைவரின் குருதி கொட்டும் திருக்கண்ணுக்கு அருகில் அடையாளமாக ஊன்றிக் கொண்டார். பிறகு தன் மற்றொரு கண்ணினையும் பெயர்க்க ஒரு அம்பெடுத்துக் கண்ணருகில் கொண்டு சென்றபோது இறைவர் அங்கு தோன்றித் திண்ணனாரின் கையைத் தன் திருக்கையால் பிடித்து தடுத்துக் கொண்டு ”நில்லு கண்ணப்ப” என மும்முறை திருவாய் மலர்ந்தருளினார். இறைவரின் இத்திருவிளையாடலைச் சிவகோசரியார் கண்ணுற்றார்.
மறைகள் ஒலிக்க வானவர்கள் பூமாரி பெய்தனர். சிவகோசரியாரும் திண்ணனாரின் உண்மையான பக்தியை அறிந்து கொண்டார். தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பியதால் திண்ணன் சிவபெருமானால் கண்ணப்பர் என்றழைக்கப்பட்டார். மேலும் கண்ணப்பரை சிவபெருமான் “எம் வலத்தில் மாறுபாடிலாது நிற்க” என்று அருளிச் செய்தார்.
எவரொருவர் உண்மையான அன்புடன் தனக்குத் தெரிந்த இறைவனைத் தொழுகிறாரோ அவர் பக்தியைக் கடவுள் மெச்சி ஏற்றுக் கொள்வான் என்பதை கன்ணப்பர் வரலாறு விளக்குகிறது. இன்றைக்கும் காளஹஸ்தி சிவன் திருக்கோயிலில் கண்ணப்பருக்கு என தனிச் சன்னதி விளங்கி வருவது அவர் பெருமைக்குச் சான்றாகி நிற்கிறது எனலாம்.

====

Series Navigationவரைமுறைகள்நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *