கனவு இலக்கிய வட்டம்

குமரன் சாலை, அரோமா உணவு விடுதி ஹெடிட்டேஜ் அரங்கத்தில் திருப்பூர் மருத்துவர் சு. முத்துச்சாமியின் ” என் வாழ்க்கைப் பயணம் “ என்ற சுயவரலாற்று நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று மாலை நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமை தாங்கினார். நூலை எழுத்தாளரும், தமிழ் தேசிய இயக்கத் தலைவருமான தியாகு வெளியிட்டுப் பேசினார்.

முதல் நூலின் பிரதிகளை ( சேவ் ) ஆ.அலோசியஸ், கவிஞர் சிவதாசன், ( முயற்சி ) சிதம்பரம், உலக திருக்குறள் பேரவை நாகேசுவரன்,காங்கயம் தமிழ்ச்சங்கத்தலைவர் கனகராசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஏற்றுமதியாளர் அகில் இரத்தினசாமி, திருப்பூர் தமிழ்ச்சங்கம் தலைவர் அ. முருகநாதன், திருமுருக மடம் பூண்டி சுந்தரராச அடிகள், ஆர். ஈஸ்வரன், ( முற்போக்கு எழுத்தாளர் சங்கம்),மலர்கள் ராஜீ ( கலை இலக்கியப் பெருமன்றம் ) மருத்துவர் நசீம் ( இந்திய மருத்துவச்சங்கம் ), சு.மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு ), சிவகாமி, சாந்தா மாணிக்கம் உட்பட பலர் பேசினர்

.சிலரின் உரைகள்:

அகில் இரத்தினசாமி: இவ்வாண்டில் நொய்யலை சுத்தம் செய்யும் பணி துரிதமாகத் துவங்கும். சென்ற தலைமுறையில் நொய்யல் எப்படி ஓடிக் கொண்டிருந்ததோ அது போல் நொய்யல் பழைய இடம் பெறும். இதை செய்வது திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் முக்கிய கடமையாக இன்று உள்ளது.

சுப்ரபாரதிமணியன்; சுயவரலாற்று நூல் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பகுதியாக சிறப்பான இடம் பெற்றுள்ளது. எல்லா மனிதர்களின் வாழக்கைக்குள்ளும் பல கதைகள் உள்ளன.சொந்த வாழ்க்கை அனுபவங்கள் உள்ளன. அதை வரலாறு, கலாச்சாரம், மொழி சார்ந்த அனுபவங்களாக மாற்றுவதில்தான் அதன் சிறப்பிடம் இருக்கிறது. சாமான்ய மக்களின் சுய வரலாறுகள் இன்றைய உலக இலக்கியத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

தியாகு: உண்மையில்தான் அழகு இருக்கிறது எந்த வகையான நுகர்வு சூழலாக இருந்தாலும் நிலையாமை உண்மையானது என்பதை உணர்த்தும் படைப்புகள் எப்போதும் வெற்றி பெறும். சமூகத்தின் அங்கமாக விளங்குபவனே , சமூகத்தின் அங்கமாக உணர்பவனே வெற்றி பெறுவான்.ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் அங்கமே.சமூக விளை பொருளே அவன் படைப்புகளும்..மானுட விழுமியங்களுக்கு எதிரான விசயங்களே இன்று நம்மை ஆள்கின்றன. கல்வி என்பது அறிவியலைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. வாழக்கையின் அறவியலைக் கற்றுக் கொடுப்பதும், கடை பிடிக்கச் செய்வதுவுமாகும். பகுத்தறிவு சார்ந்த , தாய்மொழி சார்ந்த கல்வியே ஒரு மனிதனை சமூக அக்கறை கொண்டவனாக்கும். அதற்கு இலக்கியப் படைப்புகளும், இது போன்ற சுயவரலாற்று அனுபவ நூல்களும் பயன்படும்.

கனவு இலக்கிய வட்டம், தாய்த்தமிழ் கல்விப் பணிக்குழு சார்பாக இந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கு.ந.தங்கராசு நன்றி கூறினார்.

செய்தி கா.ஜோதி

Series Navigationதூ…துதிருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட