கனவு திறவோன் கவிதைகள்

-கனவு திறவோன்

(1) நீ இல்லை

நான் எழுதிய
ஒவ்வொரு கவிதையிலும்
நீ இருக்கிறாய்.
ஆனால், நீ என்னிடம் இல்லை!
இனி
எழுதுவதற்கு
என்னிடம் கவிதையும்
இல்லை…

(2) ஏன் இந்த வித்தியாசம்?

பரிட்சையில் பதில்
எழுதாவிட்டால்
பெயிலாம்…
என் எந்தக் கேள்விக்கும்
பதில் சொல்லாமல் நீ
பாஸ் ஆகிக் கொண்டிருக்கிறாய்

சாலையில் விதிகளைப்
பின்பற்றாவிட்டால்
விபத்து நடக்குமாம்
உன் பாதையில்
அடிதொற்றி நடக்கிறேன்
பிறகு ஏன் வீழ்த்தப்பட்டேன்?

அற்புத விளக்கை உரசினால்
உடனே பூதம் வருமாம்…
நீ அற்புத விளக்கல்ல
உன்னை உரசினேன்
தாமதமாய் ஒரு தேவதையையல்லவா
தந்தாய்!

3. மீண்டும் முறைப்பாயா?

மீண்டும் முறைப்பாயா
சிரிப்பாயா
என்பது தெரியாமல்
இருக்கிறேன்

அம்மாவின் முத்தம்
அப்பாவின் அதட்டல்
மாமாவின் தோழமை
அத்தையின் சிநேகிதம்
முறைப்பெண்ணின் கண் சிமிட்டல்
அண்ணனின் அடக்குமுறை
தம்பியின் கெஞ்சல்கள்
சித்தியின் பொறாமை
சித்தப்பாவின் அலட்சியம்
எல்லாம் நீர்த்துப் போனதே
உன் முறைப்பில்!

என்றாலும்
மீண்டும் முறைப்பாயா
சிரிப்பாயா
என்பது தெரியாமல்
காத்திருக்கிறேன்

4. சகப் பிணைப்பு

நேற்று உன்னைக் கண்டேன்
இன்று உன்னோடு பேசுகிறேன்
நாளை உன்னோடு உலாவுவேன்…
என்கிறேன்…
உலகமென்னை
பரிகாசிக்கிறது.

நீ என்னில் இறந்தும்
மீண்டும் மீண்டும் உயிர்க்கிறாய்…
நான் உன்னில் இருந்தும்..
மீண்டும் மீண்டும் மரிக்கிறேன்…

வார்த்தைகள் போல
நீயிருக்கிறாய்
நான் வாக்கியங்களாக
மாற நினைக்கிறேன்…

வெவ்வேறு தனிமங்களாக
நீயும் நானும்
எத்தனை நாளைக்குத் தனித்திருப்பது?
வா, சகப் பிணைப்புடனாவது
சேர்மமாவோம்!

Series Navigationகணையாழியும் நானும்நாய் இல்லாத பங்களா