கனா தேசத்துக்காரி


கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள்
என்றுமே தனித்திருந்தாள்
அம் மாய உலகில் தனக்கெனவோர்
அரியாசனம் அமைத்தவள்
பிரஜைகளையும் உருவாக்கினாள்

அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர்
அதில் அனைவரும்
பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள்
அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள்
வெளிர் நிறங்கள் தாங்கிய
போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை

மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில்

வாரி இறைத்தபடியிருந்தன
தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன
ஒவ்வொரு நிறமும்

கோரமாய்  குணம் கொண்ட
வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில்
நனைந்த கோழிக் குஞ்சொன்றாய்
தப்பும் எண்ணம் ஏதுமற்றுப்
பலியானது மௌனமாய்…
கனாக் காண்பதேயில்லை இப்போதெல்லாம் அவள் ..
ஷம்மி முத்துவேல்
Series Navigationமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சிகுங்குமச்சிமிழ்