களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

kalandhai peer mohammed

ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.

 

சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள், உள்ளீடற்ற வெறுமை ஆகியவை மற்ற மதத்தவரிடமிருந்து எந்த விதத்திலும் வேறானதல்ல என்ற ஜன்னலே இந்தக் கதையில் திறக்கிறது.

 

இஸ்லாமியர் அனைவரும் பிற கலாச்சாரங்களை வெறுப்பவர் போன்ற ஒரு பிம்பத்தைப் பல வலது அமைப்புக்கள் கட்டமைக்க முயல்வதை நாம் காண்கிறோம். இதன் நம்பகத்தன்மையை ஆய்ந்து அறியும் தேடலுடன் அனேகமாக யாருமே போவதில்லை.  இஸ்லாத்தில் நண்பர்கள் இருப்பவருக்கு மட்டுமே தெரியும் அவை கட்டுக்கதைகள் என்பது. இந்தக் கதையில் பல இடங்களில் நாம் சர்வசாதாரணமாக பிற கலாச்சார பேச்சு வழக்குப் புகுந்து விடுவதைப் பார்க்கிறோம். இந்த சம்பாஷணை ஒரு உதாரணம்:

 

—————–

“இல்லப்பா . பழைய பள்ளி புதுப்பள்ளின்னுல்லாம் எங்கிட்டே சொல்லாதப்பா. நான் அங்கேயே போறேன்” என்றபடி மீரான் தந்த ரூபாயையும் அத்தர் பாட்டிலையும் எடுத்து அவனிடம் நீட்டினான் காதர்.

 

 

 

“இல்லேயில்ல காக்கா. நீங்க அதை ஏன் தாரீங்கோ. நல்ல நேரமா அதுவும் வாங்கின சீதேவிய அப்படித் திருப்பிக் கொடுக்காதீங்கோ. நான் உங்கள வற்புறுத்தல. சும்மா சொன்னேன்” என்று பதறியவனாக காதரின் கையை அப்படியே மடக்கி அவன் சட்டைப்பையில் பணம் விழும்படிச் செய்தான்.

 

——————

கதை ஒரு எடுபிடியாகக் கடையில் வேலை செய்யும் காதர் தன் அம்மா மீது வைத்திருக்கும் அபரிமிதமான பாசம். சற்றே அதிகப்படியாகத் தோன்றுமளவு ஒரு குழந்தைத்தனாமான வயதுக்குப் பொருந்தாத பிடிப்பு. கதையின் முடிவில் அம்மாவின் ‘நற்றாளை’ அவன் பணியக் குனியும் போது அப்படியே சரிந்து விடுகிறான். தாயின் காலில் மட்டுமல்ல யார் காலிலும் யாரும் விழுவது இஸ்லாமிய வழிமுறைக்கு முற்றிலும் முரணானது. தடை செய்யப் பட்டது. ஆனால் சுற்றியுள்ள கலாச்சாரத்தின் தாக்கத்தால் மட்டுமே காதர் இப்படி செய்திருக்க வேண்டும்.

 

வெளிநாட்டுவாசிகள் அமெரிக்காவின் அய்யரோ அல்லது கத்தாரின் மீரானோ உறவுகளுக்குத் தருவதெல்லாம் வெறும் சாக்லேட்டுகள் மட்டுமே. ஆனால் கட்டாயம் கொண்டு வந்து திணிப்பார்கள். இப்படி வருமான வர்க்க அடிப்படையிலான சமூக அடுக்குகளை இஸ்லாமியப் பின்னணியில் சித்தரிக்கும் கதை இது.

 

இலக்கியம் நமது பன்முகமான பண்பாட்டு அடையாளங்களைக் காட்டி நம் மனத்தை விரியச் செய்வது. களந்தையின் கதை அந்த அடிப்படையில் என்னைக் கவர்ந்தது.

 

Series Navigationகாப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்அறிவோம் ஐங்குறு நூறு