கவிதைகள்

 

 

(1)

காத்திருக்கும் காடு

 

செல்லுமிடமெல்லாம் எம்மோடுகூட வரும்

செழித்த பெருங் காடு.

 

ஒரு பெரிய ஓவியச் சீலையின் மூலையில் ஏதோ வரைவது போல்

ஒரு கலைமான் காட்டில் எங்கேயோ திரிவது தெரியும்.

 

எம்மருகில் தெரியும் பெயர் தெரியா மரமும் காட்டில்

எங்கேயோ இருக்கும் மரம்.

 

மேல் உறைந்து பனி அடியில் நதி மெல்ல நகருமென

மெய்யுள் மூச்சோடும்.

 

புலி

எங்கே?

 

புலி வந்து போகும் சிறு பிள்ளையாய் விளையாடிச் செல்லும் சிற்றோடையருகே காத்திருப்போம்.

 

வந்த பாடில்லை.

வந்து போனது இப்போது தானென்று துப்பு கிடைக்கும்.

 

துப்பு கிடைத்த காட்டுச் சரிவில் சென்று காலத்தைக் கைப்பிடித்து

காத்திருப்போம்.

 

உறங்கி வழியும் காடு சட்டென்று உலுக்கிக் குலுங்கவோர்

அலறல் கேட்கும்.

 

கலைமான் அலறல் அங்கு புலி திரியும் அறிகுறியென்று காத்திருப்போம் அங்கேயே.

 

விட்டு விட்டு கர்ஜனை கேட்கும் தடம் வழியே ஓடி மனம் திரும்பிப்

பறந்து வந்து பரபரப்பாய்க் கூடடையும்.

 

புலி தானா?

புலி வந்த பாடில்லை.

 

நேற்று அந்த அந்நியன் காமிரா ‘கிளிக்கில்’ பிடித்து வைத்திருக்கும் புலியைக் காட்டில் விட்டு விடவில்லையா?

 

புலி

எங்கே?

 

எம்மோடுயாம் காத்திருக்கும் இடத்தில் எங்கோ

புலியிருக்கும் காடும் காத்திருக்கும் புலிக்கு.

 

 

 

(2)

சக மனிதன்

 

முடியுயர்ந்த தேவாலயம் தேடும் வானில் நட்சத்திரங்கள்

முள் தோரணம் கட்டியிருக்கும்.

 

வருத்தும் குளிரிரவில் சிதறும் தேவாலய வெளிச்சம் தேவன் சிந்திய இரத்தமாய்த் தெறித்துக் கிடக்கும்.

 

மருங்கு மரங்களிடை மெளனமாய்ப் பறவைகள் குளிரிரவைக் கொத்தி

அடைந்திருக்கும்.

 

பறக்க விடப்பட்ட பலூன்கள் மரத்தில் அடையாத பறவைகளாய்ப்

பறக்கும் தேவாலய வெளியில்.

 

பறக்கும் பலூன்கள் சில பறந்து கொண்டே இருக்க முடியாமல்

வெடித்துச் சாக சிதிலங்கள் எங்கும்.

 

தேவாலயத்துக்குள் ஜெபம் எதிரொலிக்கும் சுவர்களில் மோதித்

திக்குகளைத் துளைக்க.

 

சிலுவையில் அன்று அறையப்பட்ட சோகத்திற்கு

சக மனிதனாய் இன்றும் இரங்கி சதா வாசலில் காத்துக் கிடப்பான்

 

பிச்சைக்கு மட்டுமல்ல

ஒரு மனிதன்.

 

(3)

என்று நிராகரித்தது பறவையை மரம்?

 

 

திரிந்து கொண்டே இருந்தால் துயர் தீர்ந்து விடுமென்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

 

ஆகாயத்தில் விரிந்து பந்தல் போட்டிருக்கும் மரம் அழைக்கிறதே

தெரியவில்லையா உனக்கு?

 

ஏன்

வெயிலில் அந்நியனாய்த் தயங்குகிறாய்?

 

மரத்தின் வேராகியிருந்தால் கூட வாழ்வில் பிடிப்பிருந்திருக்குமென்று

நினைக்கிறாயா?

 

எங்கிருந்தோ ஒரு சின்னஞ் சிட்டு மரத்தை நோக்கிப் பறந்து வருவதைப் பார்.

 

அழைக்கும்

மரத்தடி நிழலில் போய் அமர்.

 

இப்படித் தானே என் ஒரே சின்ன மகளோடு இந்த மரத்தடி நிழலில்

எத்தனையோ முறை அமர்ந்திருந்தேனென்று அழுகிறாயா உள்ளே?

 

சின்னஞ் சிட்டின் குரல் உன் சின்ன மகள் குரல்

போலில்லையா?

 

அழைக்கிறதே மரம் மறுபடியும் அத்தனை கைகளையும் கூப்பி உன்னை.

 

தெரியவில்லையா

உனக்கு?

 

என்று நிராகரித்தது நிழல் மரம் எந்தப் பறவையையும்

எப்படித் துயருழந்து சேரினும்?

                                                                                                    

 

 

கு.அழகர்சாமி

 

Series Navigation