கவிதைகள்

 

ரோகிணி

போகிப்பண்டிகை

____________________
வீடு முழுவதும் சுத்தம்
செய்து தேடி எடுத்த
கிழிந்து போன போர்வைகளும், 
நைந்து போன
புடவைகளும், 
பிய்ந்து  போன
கூடைகளும், 
அந்த அறையின் மூலையில்
அழகாக அடுக்கிக்கொண்டன
நாளைய போகியின்போது
எரியூட்டப்படுவதற்காக… 
 
இன்னொருமூலையில்
நோயுடன் போராடி
நைந்துபோய் தனக்கான
போகி எப்போது? 
 என்ற கேள்வியோடு
என் பாட்டியும்… . 
__________________________
 
ரயில் நிறுத்தம்
___________________
காற்றுக் கிழித்து 
ஓடியது ரயில்.. 
ஜன்னலோரம் அமர்ந்து
காட்சி தேடின கண்கள்
 
என்னுடன் பயணித்த
மரங்களும், மலைகளும்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
காணாமல் போயின
பயணிகளோடு  சேர்ந்து.. 
 
பிறகு, 
வேறு வேறு மரங்களும்
வேறு வேறு மலைகளும்
நான் இறங்கும் போதும்
காணாமல் போயின
திருவிழாக்கூட்டத்தில்
காணாமல் போகும்
குழந்தையைப் போல்…. 
_________________________________
 
வேனிற்காலத்துமழை
___________________________
 
இருட்டுத்திரை விலக்கி
வெளிச்ச மேடையேறி
அன்றைய நாள், 
அரங்கேற்றம் செய்யத்
தொடங்கியது தன்
நாடகத்தை… 
 
ஜன்னல் திறந்தேன், 
முதலில் வெளிச்சம் வந்தது
பின்னோடு  வெயிலும் வந்தது
சூரியன் கரங்கள் நீட்டி
என்னைப் பார்த்துக்
கொக்கரித்தது… 
 
அங்கொரு மரத்தின் இலைகள் காற்றின்  
அனுமதி கிடைக்காததால்
அசைவற்றுக்கிடந்தன. 
மரம் மரமாகவே நின்றது
வெட்கை என்னை
அரவணைக்க  உள்நுழைந்தது
நான் ஓடி சென்று
கிணற்று நீர் வாரி இறைத்து
வெட்கையைப் புறம்
தள்ளினேன்.. 
 
ஜன்னல் மூடினேன்.. 
 மாலை நேரம் வந்தது
மஞ்சள் வெயிலும்
கூட வந்தது… 
ஜன்னல் திறந்தேன்.. 
 
முதலில் காற்று உள்
நுழைந்தது.. 
அனுமதி கிடைத்த 
இலைகள் அசைந்தாடின… 
 
நிலவு லேசாக எட்டிப்பார்த்து
சிரித்து விட்டு மறைந்தது..
நட்சத்திரங்கள் இருட்டில்
வழி தெரியாத குருட்டுப்
பிச்சைக்காரன் போல்
தத்தளித்துக்கொண்டிருந்தன.
 
பகலின் வெட்கைத்
தாங்காத அந்த மரத்தின்
இலைகள் இரவில்
குளித்துக் கொண்டன
மழை நீரில்…. 
Series Navigationபரிதாப மானுடன்கனத்த பாறை