கவிதையும் ரசனையும் – 26

author
0 minutes, 2 seconds Read
This entry is part 14 of 15 in the series 6 பெப்ருவரி 2022

 

 

 

அழகியசிங்கர் 

 

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன்.  ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக.  இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம்.  இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன்.

அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல், கவிதைகள் வாசித்தல் என்றும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறேன். 

 

வேறு விதமாகக் கவிதைகளைப் புரிந்து கொண்டவர்களை என் பாணியில் வேறுவிதமான கவிதைகளை வாசிக்கக் கொண்டு வருகிறேன். 

 

இதற்கென்று ஒரு வாட்ஸ்ஸப் குழு வைத்திருக்கிறேன். அவர்களிடம் வேறு விதமா கவிதை எழுதுபவர்களைப் புகுத்துகிறேன். 

 

எப்போதும்  20 பேர்கள்தான் இதில் கலந்து கொள்கிறார்கள்.  

 

இந்த முறை கவிதைக் கூட்டத்தில் இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டு அலசுவது என்று தீர்மானித்தோம்.

 

ஒன்று ‘வியாதி அறிக்கை’ என்ற பிரமிள் கவிதை.  இன்னொன்று தேவதச்சனின் ‘பொற்கணம்’ என்ற கவிதை.

 

ஏற்கனவே இந்தக் கவிதைகளைக் குழுவிற்கு அனுப்பி விட்டேன்.  முன்னதாகப் படிக்கட்டுமென்றுதான்.

அன்று கலந்து கொண்டவர்கள் எல்லோரும் முதலில் பிரமிள் கவிதையும், அதன்பின் தேவதச்சன் கவிதையும். தாங்கள் என்ன நினைக்கிறோம் என்று சொன்னார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சொன்னார்கள்.  



பிரமிள் கவிதையை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பவர் கால சுப்பிரமணியம்.  எல்லோர் சொல்வதையும் கேட்டுவிட்டு இறுதியில் அவர் தன் அபிப்பிராயத்தைக் கூறினார். 

அதேபோல் தேவதச்சன் கவிதையைப் பற்றிச் சொல்கிற அபிப்பிராயங்களைக் கேட்டு இறுதியில் கா.வை. பழனிச்சாமி தன் கருத்துக்களை வழங்கினார்.

 

இந்தக் கூட்டம் சிறப்பாக முடிந்தது.  ஒரு கவிதையைப் படித்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.  கவிதையைப் பற்றி அவர்களாகவே தனித்தனி கருத்துக்களை உருவாக்கி உள்ளார்கள்.

 

பிரமிளின் ‘வியாதி அறிக்கை’ என்ற கவிதையைப் பற்றி முத்தாய்ப்பாகக் கால சுப்பிரமணியம் கூறிய கருத்துக்களை முதலில் நான் மறுக்கிறேன்.

 

பிரமிள் சுந்தர ராமசாமியை மனதில் வைத்துத்தான் அந்தக் கவிதையை சுந்தர ராமசாமி சொல்வதுபோல் அமைத்துள்ளார் என்றார்.

 

அவர் சொன்னதை ஏனோ ஏற்க முடியவில்லை. வியாதி அறிக்கை என்ற பிரமிளின் கவிதையைப் பார்ப்போம்.

 

 

 

வியாதி அறிக்கை

 

 

எனக்கொன்றும் இல்லை,

வெறும்

லிவர் ட்ரபின் தான்,

டாஸ்டாயல்ஸ்கிக்கு?

 

தண்ணி மட்டும்

போடாதே

வெந்நீரில் குளிக்கலாம்

என்றார் டாக்டர்

எழுத்தில் நான்

தண்ணிபோட

முடியாமல்

நடமாடும் பாலையின்

வெக்கை உண்டு

வரட்சி  என்றீ ர்:

அதுதான் இது.

வெள்ளெலும்பு தெரிய

விரைத்துக் கிடக்கும்

பழம்பெரும்

பிணங்களும் உண்டே ;

விமர்சரைக் கேளும்.

(மனுஷ்யன்,

என்னமாய்

குடிக்கிறான்?)

 

வேறொன்றும் இல்லை:

எனக்கு லிவர் ட்ரபிள்;

பிரான்ஸ் காப்காவுக்கு?

க்ஷயமா ? |

புதுமைப்பித்தனுக்கும்!

பித்தனுக்கு முந்தி

பாரதிக்கு என்ன?

 

பாரதத்து கவிகளுக்கு

வாழையடி வாழையென

வந்த பரம்பரை நோய்

பசி!

ஏனோ அது என்னை

எட்டியும் பார்த்ததில்லை.

எங்களுக்குத் தெரியும்.

எழுத்துத் தொழில் அழகு.

எனவே நாங்கள்

 எப்பவும் கொஞ்சம்

மெட்டீரியலிஸ்டுகள்.

அந்த இழுப்பில் போய்

கம்யூனிஸக் குட்டையிலே

அடியற்று விழுந்து

கிடந்து

உழன்றது ஒரு காலம்.

இருந்தும் அது ஒரு

ஸ்பெஷல் ரெப்புடேஷன்.

புரட்டிப் பாரும்

என் புத்தகத்தை அல்ல.

என்னை .

ஒரு பக்கம் பட்டை

மறுபக்கம் நாமம்;

புத்தகத்திலும் உண்டு

இந்த

டபுள்  வேலை

என்கின்றீர்! |

 

அடிப்படையில்

மெட்டீரியலிஸமே

அதுதான் என்கிறேன்.

எல்லாம் ஒவ்வொரு

சீசனுக்குத் தான்

என்றாலும்

சீசன்களுக்கிடையே

எப்போதுமே உண்டு

தத்துவப் பிணைப்பு.

இதுவே அதுவாகி

அதுவே இதுவானால்

அபேதம்.

உதாரணம் கேளும் :

 

நமது தாத்தாவின்

சமஸ்தான சேவுகத்தில்

சக்கரம் என்றால்

திருவிதாங்கூரின்

அந்தர்யாம் ராஜா

திருமாலின் சக்கரம்

அல்ல – காசு!

 

இருந்தும்

தண்ணி போட

முடியாமல்

எனக்கு இந்த

லிவர் ட்ரபிள்

டாஸ்டாயவ்ஸ்கிக்கோ

 காக்காய் வலிப்பு.

 

பிரமிள் இந்தக் கவிதை எழுதும்போது அவருக்கு வயிறு உபாதையில் அவதிப்பட்டார்.  அந்தத் தருணத்தில்தான் இந்தக் கவிதை எழுதியிருக்கிறார். இதை மறுக்கிறார் சுப்பிரமணியம்.

இந்தக் கவிதை வேறு விதத்தில் சிறப்பான கவிதை.  தன் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றுகிறார் பிரமிள்.  

 

வியாதி அறிக்கை என்கிறபோது தன்னுடைய வியாதி அறிக்கையைத்தான் அவர் முதலில் வெளிப்படுத்துகிறார். எனக்கொன்றும் இல்லை வெறும் லிவர் ட்ரபிள்தான் என்கிறார்

 

 அடுத்த வரிதான் முக்கியமான வரி.  டாஸ்டாயவ்ஸ்கிக்கு? என்கிறார்.  தன்னைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல் டாஸ்டாய்வ்ஸ்கிக்கு என்கிறார்.  



டாக்டர், தண்ணி மட்டும் போடாதே வெந்நீரில் குளிக்கலாம் என்கிறார். திரும்பவும் எனக்கு லிவர் ட்ரபிள் பிரான்ஸ் காப்காவுக்கு என்கிறார். 

 

 புதுமைப்பித்தனுக்கு அவருக்கு முந்தி பாரதிக்கு என்று அடுக்கிக் கொண்டு போகிறார்.

 

  பாரதத்துக் கவிகளுக்கு வாழையடி வாழையென வந்த பரம்பரை நோய் பசி என்கிறார்.  இந்தக் கவிதையை எப்படியெல்லாம் கொண்டு போகிறார் என்பதைப் பார்க்கலாம்.’கம்யூனிச குட்டையிலே அடியற்று விழுந்து கிடந்து உழன்றது ஒரு காலம் என்கிற போதுதான் சுப்பிரமணியம் சொல்வதுகூட சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. 

 

          மேலும் சில வரிகளை வாசிக்கும்போது அவர் சொல்வதை நம்பும்படியாக  தோன்றுகிறது.  இது ஒருவர் அனுபவம் மட்டும் அல்ல.  இன்னும் பலருடைய அனுபவங்களையும் சேர்த்து ஒரு கலவையான கவிதையாக இருக்குமோ என்று படுகிறது.

 

          ஆனால் கவிதையை முடிக்கும் போது 

 

          இருந்தும்

          தண்ணி போட

          முடியாமல் 

          எனக்கு இந்த

          லிவர் ட்ரபிள்

          டால்ஸ்டாயவ்ஸ்கிக்கோ

          காக்காய் வலிப்பு 

 

என்று முடிக்கிறார்.  இக் கவிதை ஒருவருடைய அனுபவம் மட்டும் அல்லாமல் பலருடைய அனுபவங்களை மட்டும் கூட தான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்துச் சொல்கிறார்.  ஒரு இடத்தில் சுந்தர ராமசாமி, இன்னொரு இடத்தில் வெங்கட் சாமிநாதன்.  மற்றொரு இடத்தில் பிரமிளும் வெளிப்படுகிறார் என்று தோன்றுகிறது.  

 

இந்தக் கவிதை எனக்குப் பிடித்த கவிதை.

 

 

Series Navigationசிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா  பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !  ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *