காந்தி சிலை

எங்கோ பறந்து வந்து
இளைப்பாறி எச்சமிட்டபோதும்
அதே புன்னகையுடன்
இருக்கிறார் காந்தி
தடி இருந்தும்

அந்த பேருந்தில்
பத்து பதினைந்து
காந்தி சிலையாவது
பயணித்து இருக்க வேண்டும்
நிறுத்தம் வந்ததும்
‘காந்தி சிலை இறங்கு’ என
இரு முறை கூவும் நடத்துனர்

உச்சி வெயிலிலும்
தன் கைத்தடி நிழலில்
அரைமணி நேரமாய்
ஏதோ படித்து கொண்டிருக்கிறான்
இளைஞன் ஒருவன்
மெதுவாய் அவன்மேல்
காந்தியின் பார்வை பட
ஏதோ செய்தி வர
அவசர அவசரமாய்
புறப்பட்டான்
அவன் காதலி வரசொன்ன
இடம் வேறொரு காந்தி சிலையாம்

மாலை அணிவித்து
பெரிய கும்பிடு போட்டு
செல்கிறார் மந்திரி
காந்தி பூங்கா நிறுவ
கையூட்டாய் பெற்ற பணம்
எண்ணுவதற்கு

சிறைவாசமும் தடியடியும்
போதாதென இப்போது
உச்சி வெயிலும்
ஆடை மழையும்
தாங்கிக்கொள்கிறார்
காக்கை எச்சமுடன்
கறைபடிந்த கரங்களின்
மாலையும் சேர்த்து

நன்றி,
ப.பார்த்தசாரதி.

Series Navigationஇரவின் முடிவில்.அகஸ்தியர்-எனது பதிவுகள்