கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்

குரு அரவிந்தன்
 
நத்தார் என்று சொல்லப்படுகின்ற, கிறிஸ்மஸ் கிறித்தவர்களின் முக்கியமான திருநாளாகும். டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி புதுவருடமாகவும் பல நாட்டு மக்களாலும் கொண்டாடப் படுகின்றது. இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவே கிறிஸ்மஸ் ஆகும். இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாகக் கணிக்கப்படா விட்டாலும், அதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவாக டிசெம்பர் 25 ஆம் திகதியையே இயேசு பிறந்தநாளாக அதிகமானவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் ஜனவரி 7 ஆம் திகதியிலும் கொண்டாடுகிறார்கள்.
 
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது திருப்பலி கொடுப்பது, தேவாலயங்களுக்குச் சென்று விசேடமாக வழிபடுவது, வீடுகளிலே கிறிஸ்மஸ் மரம் வைத்து அதற்கு மின்விளக்குகளால் அழகூட்டுவது, கரோல் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இயேசுநாதரைப் பற்றிப் பாடல்கள் பாடுவது, உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து மடல் அனுப்புவது, கிறிஸ்மஸ் தாத்தா பிள்ளைகளுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுப்பது, குழுக்களிடையே போட்டிகள் நடத்திப் பரிசுகள் கொடுப்பது, கிறிஸ்மஸ் விருந்து மூலம் உறவுகள், நண்பர்கள் ஒன்றுகூடுவது, விடுமுறையை மகிழ்வாகக் கொண்டாடுவது போன்ற பல நிகழ்வுகள் பொதுவாக இந்த விடுமுறை நாட்களில் நடைபெறும். பல நாடுகள் கிறிஸ்மஸ் தினத்தையும், ஜனவரி முதலாம் திகதி புதுவருடத்தையும் அரச விடுமுறையாக விடுவதால், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இத்தினங்களை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவர்.
 
கிறிஸ்மஸ் விடுமுறையின்போது வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தேன். அமெரிக்காவின் எல்லா மாகாணங்களில் இருந்தும் மற்றும் பிரதேசங்களில் இருந்தும் ஒவ்வொரு கிறிஸ்மஸ் மரங்கள் கொண்டுவந்து நிரையாக நட்டு வண்ணவிளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள். மாலை அந்திசாயும் நேரம் அந்தக் காட்சி மிக அழகாக இருந்தது. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். மாளிகையின் உள்ளேயும் விருந்தினர் வரவேற்பறை மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது பற்றி அங்கு பணிபுரிந்த பெண்மணியிடம் வினாவியபோது ஜாக்குலின் கென்னடி முதல் பெண்மணியாக இருந்த காலத்தில்தான் வரவேற்பறை மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டதாகவும், அந்த வழக்கத்தை இப்பொழுதும் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையின் வடகிழக்குப் பக்கத்தில் உள்ள சுமார் 25 – 30 அடி உயரமான எவகிறீன் மரம்தான் நீண்டகாலமாக, அதாவது 1923 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் காலத்தில் இருந்து தேசிய கிறிஸ்மஸ் மரமாக அலங்கரிக்கப்படுகின்றது. பழைய மரம் பட்டுப் போகவே 1972 ஆண்டு புதியமரம் பென்சில்பேனியாவில் இருந்து புதிய கொண்டு வரப்பட்டது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு புதிதாக நியூஜேர்சியில் இருந்து கொண்டுவரப்பட்டு நடப்பட்ட மரம்தான் இப்பொழுதும் இருக்கின்றது. 2 ஆம் உலக யுத்த காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக விளக்குகளால் அலங்கரிக்கப்படவில்லை. வருடாவருடம் மிச்சிக்கன் மாகாணம்தான் அமெரிக்காவுக்குத் தேவையான 60 சதவீதமான, 60 மில்லியன் டொலர் பெறுமதியான 13 வகையான கிறிஸ்மஸ் மரங்களை வழங்குகிறது. பொஸ்ரன் நகருக்கு கனடாவின் நோவாஸ்கோஸியாவில் இருந்துதான் கிறிஸ்மஸ் மரம் அனுப்பப்படுகின்றது. உலகிலேயே டென்மார்க்தான் அதிக கிறிஸ்மஸ் மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கின்றது.
 
கனடாவில் 51 சதவீதமானவர்கள் கிறிஸ்மஸ் விடுமுறையைக் கொண்டாடினாலும், சுமார் 35 சதவீதமானவர்கள்தான்; சமய நிகழ்வாகக் கொண்டாடுகின்றனர். 1500 களின் தொடக்த்தில் இருந்து நாடுபிடிப்பதில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டதால், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டதால், உலகெங்கும் கிறிஸ்தவ மதம் பரவலாயிற்று. இலங்கையிலும் 1505 ஆம் ஆண்டு போத்துக்கேயர் வரவைத் தொடர்ந்து, ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் மதம் பரப்பப்பட்டது. அதனால் இன்று உலகிலே அதிக மக்களைக் கொண்ட மதமாக கிறிஸ்தவ மதம் இருக்கின்றது. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் மாற்றுக் கருத்துடையவர்களால் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் சில வருடங்கள் தடைப்பட்டாலும், 1843 ஆம் ஆண்டு சாள்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட ‘கிறிஸ்மஸ் கரோல்,’ மற்றும் 1886 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங்கின் ‘ஓல்ட் கிறிஸ்மஸ்’ போன்ற நூல்களால் வாசகர்கள் மீண்டும் ஈர்க்கப்பட்டனர். கிறிஸ்மஸ்சைக் கருப்பொருளாக வைத்து ஆண்டுதோறும் பல திரைப்படங்களும், சின்னத்திரைப் படங்களும் பல மொழிகளிலும் வெளிவருகின்றன. ‘கிறிஸ்மஸ் இன் கனடா’ என்று ஆங்கிலத்தில் சின்னத்திரை தொடர் ஒன்றும் ஒளிபரப்பானது.
 
கிறிஸ்மஸ் பண்டிகைக்காக கிறிஸ்மஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510 ஆம் ஆண்டு தொடங்கியதாகத் தெரிகின்றது. அலபாமா மாகாணத்தில் 1836 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் ஆரம்பித்தது. பிரான்ஸ் நாட்டில் 1847 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் கரோல் சேவீஸ் ஆரம்பிக்கப்பட்ட போது, ‘ஓ ஹோலி நைட்’ என்ற கிறிஸ்மஸ் பாடல் பாடப்பட்டதாகப் பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது. இன்டியானாவில் உள்ள சன்ராக்ளாஸ் நகரம்தான் வருடம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றது. சுமார் 2500 மக்கள் வாழும் இந்த நகரத்தின் சிறிய கிராமத்திற்கு கிறிஸ்மஸ் லேக் விலேஜ்ச் என்றும், வீதிகளுக்கு சில்வபெல், ரெயின்டியர், கன்டிகேன் என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கின்றன.
 
கோவிட்-19 பேரிடர் காரணமாக இந்த வருடமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. சுகாதாரப் பிரிவின் வேண்டுகோளை ஏற்றுப் பேதிய பாதுகாப்புடன் செயற்பட்டால், சமூகத்திற்கும், நாட்டிற்கும் சிறந்ததாக இருக்கும்.
Series Navigationஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….இரண்டு நரிகள்