குற்றம்

ஜாசின் ஏ.தேவராஜன்

செக்கன்டரி ஸ்கூலுக்குப் போய்ட்டாலே நாங்க கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்ட்டோம்னு பண்றதெல்லாம் பண்ணிட்டு ஆளாளுக்கு எங்களைப் புடிச்சி நொங்குறாங்க. உண்மைதான் கெட்டுத்தான் போறோம். நாங்க சின்னப் பசங்கதான். ஆனா, மூக்குக்குக்கீழ அரும்பு மீசை கறுங்கோடு கிழிச்ச மாரி மொளைக்குதே. அங்க மட்டுமா மொளைக்குதுங்கிறீங்க ?அது மொளைச்சா என்னன்னா பண்ணும்… யேன் பண்ணுது… எதுக்குப் பண்ணுது தெரியுங்களா? இதெத் தெரியாம சும்மா பேசக்கூடாது. இது மொத குத்தம். தொண்டைக்குழிக்குப் பக்கத்தில் முண்டுபோல் கண்டம் முட்டிக்கிட்டு நிக்கிது. நாங்களே கண்ணாடியில பார்த்திருக்கோம். அது ரெண்டாவது குத்தம். யேன்? திடுதிப்புன்னு ஒரு நாளு தொண்டை கரகரத்துக் காய்ச்ச,இருமல் போல கொஞ்ச நாளக்கி நீடிச்சி குரல் என்னடான்னா பெரிய மனுஷன் கத்துற மாரி கேக்குது. இது மூனாவது குத்தமா? ‘கியா கியா ’ ன்னு கோழிக் குஞ்சு போல கத்தினவன் திடீர்னு ஒரு நாளு ‘ வணக்கம் சார் ! என்ன சார் கூப்பிட்றென்ல… தெரியாத மாரில்லெ போறீங்க?!’ ன்னு பின்னாலிருந்து சின்ன வாக்கியத்தை இழுத்துக் கூற, அதை வாத்தியாரு ஏதேச்சையாய்ப் பார்த்து இலேசா மெரண்டு போற மாதிரி பாக்குறாரு. இது நான்காவது குத்தமா? பிறகு வாத்தியாரு யோசிக்கிறாரு இப்படி, எப்படி ? பசங்க மின்ன மாரி யில்ல. தோள்பட்டை அகண்டு பெருத்துத் தென்ன மரம் போல வளந்துட்டானுவளா… இவனுங்கள முன்ன மாரி அடிச்சி நிமித்திறது இலேசுப்பட்டதல்ல. அது நமக்கு மரியாதையும் இல்ல. சீலாப்பா கைய கிய்ய வச்சுட்டா பயலுவ இருக்கிற வெறியில வெளுத்தாலும் வெளுத்துடுவானுவ. அதனால, பேச்ச பேச்சாவெ இருந்து பெரச்சனைய முடிச்சுக்குவோம். வாத்தியாருக்கும் எங்களுக்கும் உள்ள இந்த நெனப்பு எத்தினியாவது குத்தம்? அஞ்சாவது குத்தம். அப்புறம் மீசெ. பார்க்கப் போனா மீசையவிட சைபன் வச்சிக்கத்தான் எங்களுக்கு ஆசெ. மூக்குக்குக் கீழ என்னடா நமநமன்னு அரிக்குதுன்னு சொறிஞ்சா அப்பத்தான் தெரியுது என்னமோ மொளைக்குதுன்னு. எங்களுக்கு மீசெ முளைச்சி அதைச் சவரம் செஞ்சி மறுபடியும் முளைக்க, மறுபடியும் சவரம் செய்ய அது என்னடான்னா  அடர்த்தியா பொதர் மாதிரி முளைக்க, இன்னொரு பக்கம் மீசெ முளைக்காத மத்தக் கைங்க என்ன மாரி மீசெ முளைச்சவனுங்கள ஏகமானத் தலைவனாகத் தேர்ந்தெடுக்க, அப்படியே இன்னொருத்தனுக்கும் காடு மாதிரி முளைச்சிருந்தா அவனையும் தலைவனாத் தேர்ந்தெடுக்க, என்னங்கடா ‘மயிர்’ பிரச்சனையா இருக்குன்னு தலையால அடிச்சிக்க ,பிரச்சனை இத்தோட முடியும்னு நெனைக்கிறீங்களா ? அதான் யில்ல ! இது ஆறாவது குத்தம். இந்த ட்டைம்லதான் எங்களுக்கு வீரம் வரும். மறத்தமிழன்டான்னு சொல்லிக்கிட்டுத் திரியிற அளவுக்கு எல்லாரும் நம்மள ஒரு மாரியா பார்ப்பாங்க. நாங்க வாயெ தொறந்தாலே பெரச்சனதான். என்னதான் பெரச்சனங்கிறத தெரிஞ்சிக்காம அனுகெரஹ் செமெர்லாங் வாங்குற மாரி மறுநாள் காலைல பெர்ஹிம்புனான்ல சொரண இல்லாம் நிப்போம்.தம்மாத்தூண்டு பெரச்சனைக்கூட கேங் சண்டையா ஆயிறுது. இதுல நாட்டுக்காரப் பையன்களும் சடைப் பையன்களும் தலையிடுறது சாதாரண விசயம்.

அடுத்து ஏழாவது குத்தம்னு ஒன்னு இருக்கு. இஷ்டம்னா வா, கஷ்டம்னா போங்குற மாரி எங்கள மாப்பிள்ளையாக்கிற ரேஞ்சுக்குக் கொண்டு போகக்கூடிய வாழ்க்கைப் பெரச்சன. கொஞ்சம் அசந்தம்னா தமிலு வாத்தியார ஐயராக்கி,  இங்கிலீஷ் டீச்சர சமைக்கச் சொல்லி , பசங்கள உறுமி மேளம் அடிக்கச் சொல்லி காட்டுக்குள்ள இருக்குற காளி கோயில்லியோ டத்தோ கோயில்லியோ தாலிய கட்டிடுவம்ல ?!

ஆரம்பத்துல மீசை முளைச்ச கட்டத்துல சிலிப்பிக்கிட்டுத் தோள தூக்கிக்கிட்டு நடப்போம். அப்பிடித்தான் மனசுக்குள்ளார தோனுச்சி. எழவு அது எப்படித் தோனுச்சின்னு தெரியிலே. விஜய், சூர்யா படத்தைப் பார்க்கறப்பல்லாம் அவங்க மாரி சிம்ப்பிளா உடுத்திக்கிட்டு நடக்கணும் போல தோனுச்சி. அதுக்குத் தோதா எங்க தலைமுடி,சைபன் எல்லாம் இருந்ததனால அப்படி மாறிக்க ரொம்ப நேரம் புடிக்கலே. திடுதிப்புன்னு ஒரு நாளு ரொம்பவும் சுத்தபத்தமா, சட்டை சிலுவாரெல்லாம் மடிப்புக் கலையாம போட்டுக்கிட்டு, நெத்தியில கடவுள் பக்திங்கிறத அழகாகக் காட்டுறதுக்கு மெலிசா துண்ணூறு வச்சிருக்கிற கட்டம் ஒன்னு வரும் பாருங்க. என்ன மாயமோ மந்திரமோ தெரியல… காலைல வச்ச துண்ணூறு மத்தியானம் ரெண்டு மணி வரைக்கும் அப்படியெ அழியாம இருக்கும்! அதுக்காகவே க்கிளாஸ பொந்தேங் அடிச்சிட்டு தாண்டாஸ்க்குப் போயி பேப்பர்ல மடிச்சி வச்ச துண்ணூற எடுத்துப் பூசிக்குவம். முன்னயும் தாண்டாஸ்க்குப் போயிருக்கோம். எதுக்கு? பாத்ரூமுக்குள்ள பென்சிலால படம் வரைஞ்சிருப்பானுவ, அதெ பார்க்கிறதுக்கே கிர்ருன்னு இருக்கும். எப்படித்தான் இப்படி வரையிறானுவளோ தெரியல. அப்படியே அங்க ஒரு அஞ்சு பத்து நிமிசமாயிடும். சமயத்துல சிகரெட்டு கொண்டு வருவானுவ. நாலு இலுப்பு இலுப்பு உள்ள இழுத்து விட்டாக்கா ஸ்டீம்மா இருக்கும். அதெல்லாம் அப்பெ. இப்பெல்லாம் அப்படியிருக்கப் பிடிக்கலெ. துண்ணூறும் கையுமாதான் இருக்கத் தோனுது.கடசி கடசீயா பரீட்ச நேரத்துல வச்சது. கடவுள சட்டைப் பைக்குள்ள வச்சிருக்கிற மாரி. அப்படித்தான் இருப்போம். துண்ணூறு வச்சிக்கிட்டுத்தான் வகுப்புக்குள்ள நொழைவோம். மத்தவனுங்க மாரி அப்பிக்கிட்டு வரமாட்டோம்.மத்த வாத்தியாருங்க கொறை சொல்லாத அளவுக்குச் சின்னதா கச்சிதமா வச்சிக்குவோம். சத்தம் கித்தமெல்லாம் போடுறது கெடையாது. அதே நேரத்துல எவனாவது சத்தம் போட்டா மண்டைக்கு மேல ஏறிடுது. ஒன்னு சொல்றோம், வாத்தியாருங்களாலெயே அடக்க முடியாத கேஸ்ங்கள நாங்க செட்டல் பண்ணியிருக்கோம். வேணும்னா நோர்மலா டீச்சர கேட்டுப் பாருங்களேன். நாங்க வகுப்புல பெட்டிப் பாம்பா அடங்கி அதுலயும் பெரும்பாலும் மேச மேலயே தலைய வச்சி மானத்தையே புதுசா பார்க்குற மாரி பார்ப்போம். மானம், மேகம், அங்க பறக்குற குருவி இப்படி வீட்டுல தெரியாததெல்லாம் புதுசு புதுசா அழகா தெரியும். வகுப்புக்கு வெளியே சவுக்கு மரம் இருக்கு. மழை பெஞ்சோன பார்த்தாக்கா இலை நுனியில துளித் துளியா மணிய கோத்து வச்ச மாரி ரொம்ப அழகா இருக்கும். ரிங்டோன்லகூட சென்டிமென்டா பாட்டு வச்சுக்கவோம். இதுக்கு முன்னாடி தெரியாம இப்ப யேன் அப்படித் தெரியுது ? குத்தமா இல்லையா ? கூடமாட இருக்கிறவனுங்க வேற கடுப்ப களப்புறதுன்னுக்கே சங்கு ஊதிக்கிட்டிருப்பானுவ. எப்பப் பார்த்தாலும் குசுகுசுன்னு பேசியே தொலைப்பானுவ. இடையிடையே  நக்கலான சிரிப்பு வேறயா.. இந்த நக்கல் சிரிப்புதான் எல்லாத்தையும் காட்டிக் கொடுத்துடும். யாருக்கிட்ட ? வாத்தியாருக்கிட்ட. பாம்பு வேல, பூரான் வேல செய்யுறுதுக்குன்னு அதுலயும் ஒருத்தன் எங்க கூட்டத்துல இல்லாமலா இருப்பான்? அவனுக்குச் சொல்லாட்டினா மண்டையே வெடிச்சிப்போன மாரி ‘டென்ஷனாவே’ ஒலாத்திக்கிட்டிருப்பான். வாத்தியாரு என்னா பண்ணுவாரு தெரியுங்களா … அப்படியே தெரியாத மாரி தோளு மேல கையப் போட்டு,  சமயத்துல கன்டீன்ல நாசி லீமா தண்ணின்னு வாங்கிக் கொடுத்து, ஒற்றன்கள அதான் spy-கள ரெடி பண்ணுவாரு. இந்த ஒற்றனுங்களுக்கு எல்லாச் சமாச்சாரமும் தெரியும், கூடவெ இருந்து சுதிய ஏத்தி விட்றவனுங்களே இவனுங்கதானெ! தோளு மேல கைய போட்டுக் கொஞ்சம் இறங்கிப் பேசுனாக்கா நாய் மாரி கக்கிடுவானுவ. அதென்ன நாய் மாரி கக்குறது ? வேறொன்னுமில்ல, நாய்களுக்கு வயிறு உப்புசமா இருந்தா என்னமோ ஒரு புல்லைத் தேடி காலாற நடக்குறத பார்த்திருக்கீங்களா ? அதுங்கனால சும்மா அடங்கி ஒடுங்கி இருக்க முடியாது. புல்ல தின்னவுடனே தொண்டையில நமைச்சல் வந்து, அடுத்த சில நிமிஷத்துல அடி வயித்திலிருந்து எல்லாக் கசடுகளையும் கக்கி எடுத்துடும். அப்புறம் வால தூக்கி வச்சிக்கிட்டு என்னைப் பாரு யென் அழகைப் பாருங்கிற மிடுக்குல ஊரு பூரா ரவுண்டு வரும். அந்த ஒற்றன்களும் இதே மாரிதான் !

வாத்தியாருங்களுக்கு மட்டும் என்னவாம். மலாய்ல ஒரு பழமொழி இருக்கு. வாத்தியாரு நின்னுக்கிட்டு ஒன்னுக்கடிச்சாருன்னா பசங்க ஓடிக்கிட்டு அடிப்பானுவலாம். ஒரு வகையில வாத்தியாருங்களுக்கு இது மாதிரி விஷயங்கள்ல தலையிடுருதுன்னா அல்வா சாப்பிட்ற மாதிரிதான்னு வச்சுக்குவமே. எப்பப் பாத்தாலும் எங்க பாத்தாலும் இதையே குத்திக்காட்டிப் பேசுவாங்க. தேவைப்பட்டா எங்களோட படத்தெ வச்சிக்கிட்டு காலம் பூரா மெரட்டுறது,நோண்டி நோண்டி ஒன்னுக்கு ரெண்டா கேட்கிறது… அதுல சொய இன்பம் அடையுற சைக்கோ மாரி. அதோட, இந்த மாரி பிரச்சனகள அவங்களும் தாண்டி வந்தவங்கதானெங்கிறது அவங்களுக்கும் தெரியும். நாங்க யாருக்கிட்டத்தான் சொல்ல முடியும்? இப்படி விசாரிக்கிறதும் பேசுறதும் பள்ளி நிர்வாகத்துக்கு என்னமோ ஒசாமவ தேடுற மாரி… வாத்தியாரு கட்டொழுங்கு விஷயத்துல ரொம்பவும் கண்டிப்பா இருக்கிற மாரி தோனும். ஆனா, அதுல கொஞ்சந்தான் உண்மெ இருக்கு. பசங்கள விசாரிச்சி அனுப்பிட்டோன எல்லா வாத்தியாருங்களும் சேர்ந்து ட்டீச்சர்ஸ் ரூம்புல அடிக்கிற லூட்டியும் கிண்டலும் கேலியும் பார்க்கணுமே…! அவங்களோட ‘டென்ஷனயும்’ ‘ப்ளட் பிரஷரயும்’ கணிசமா கொறைச்சிடுங்கிறதுதான் உண்மெ ! இந்த ஒற்றன்களுக்கு இந்தச் ஊத்தாண்டி வேலயெல்லாம் தெரியாது. இவனுங்கதான் நாளக்கி எங்கையாவது கச்சியில தலைவனுங்களா தொண்டனுங்களா இருப்பானுவ… பாருங்களேன்.அநேகமா அவனுங்க தமிழ்ப்படங்கள இன்னும் சரிவரப் பார்க்கலென்னு தோனுது. சும்மா குத்துப் பாட்டுகள மட்டுந்தான் கேட்கிறானுங்க போல!

ஒற்றன்களுக்கும் வாத்தியாருக்கும் இடையிலெ ஒருவகை ஒப்பந்தம் மாரி காதும் காதும் வச்ச மாரி நடந்துக்கிட்டிருக்கிற நேரத்துல வாத்தியாரு தனக்கு எல்லாம் தெரியுங்கிறத காமிச்சிக்கிற மாரி சைலன்ட்டா செட்டப் செய்வாரு. எப்ப ? தமிழ் மொழிப் பாட நேரத்துல. இப்படி வச்சுக்குவமே. அன்றைக்கு ஒழுகத்தப் பத்தி ரெண்டு பாடம். இன்னொரு பாடம் டைம் டேபிளுக்கு வெளிய… நாங்க படிக்க மாட்டம்… பொந்தேங் அடிச்சிருவொம். ஸ்கூலு நேரத்துல அதுவும் பத்து நிமிசந்தான் படிப்போம். அப்புறம் வாத்தியாரு பட்டும் படாமலும் லேசா அவுத்துவிடுவாரு. எதெ? எங்க வண்டவாளத்தெ. பசங்க, அதான்   மாட்டி வுட்டானுங்களெ அவனுங்க ஒரு பக்கம் பேயறைஞ்ச மாரி முழிப்பானுவ. எவன்டா சாருக்கிட்ட சொன்னான் !? சொன்னவன வெளுக்கிறதே சரின்னு ஒருத்தன் சொல்ல, ஒற்றன்களுக்கு அடி வயித்துல கட முடா கட முடான்னு பெருஞ்சத்தம் கேட்கும். ஆனா அத ரொம்ப சமத்தா வெளிய காட்டிக்காம காத்துக்கூட நொலைய முடியாத அளவுக்கு இன்னும் நெருக்கமா எங்ககூட ஒக்காந்திருப்பானுவ. நல்ல காலத்துலேயே நாங்க பின்னாடிதான் ஒக்காந்திருப்போம். வாத்தியாருங்க வந்தா எங்கள முன்னுக்கு வந்து ஒக்காரச் சொல்லி கூப்பிட்டுப் பார்ப்பாங்க. கேட்டாத்தானே … நாங்க முழிக்கிற முழிய பார்த்து படிக்கிற புள்ளைகளுக்கு மட்டும் பாடம் சொல்லிட்டுக் கெளம்பிடுவாங்க. மாசப் பரீட்ச எழுதச் சொல்லுவாங்க. ஆனா… எஸ்.பி.எம் பரீட்சையில எப்படியாவது தமில் பாடத்தெ எடுக்க வேணான்னு சொல்லுவாங்க. சீன பொம்பள புள்ளைங்க உருப்படியா படிக்குங்க. எங்களுக்கு எதுவும் ஏறாது. அப்புறம் எங்க இராஜங்கந்தான் !

நாங்க பின்னாடி இடம் புடிச்சி ஒக்கார்றது பாக்கப்போனா எட்டாவது குத்தமில்லையா ?! இதுல ஏகப்பட்ட அனுகூலம் இருக்கு. நாங்க பின்னாடி ஒக்காந்தா, முன்னாடி பொம்பள புள்ளைங்கதான் ஒக்கார வேண்டி வரும். இந்தப் பொம்பள புள்ளைங்க மட்டும் என்னவாம் ? அதுங்களும் வசதியாத்தான் இடம் புடிச்சி ஒக்காருங்க. இந்த ரெண்டு கூட்டத்துக்கும் இடையிலதான் மலாய்க்கார, சீனப் புள்ளைங்க ஒக்காந்திருக்குங்க. அவங்களுக்கும் இது மாதிரியென்னா, இதெவிட பெரிசால்லாம் இருக்கு.

ஒம்பதாவது குத்தம்னு ஒன்னு இருக்கு. பொம்பள புள்ளைங்க! நாங்க எல்லாம் தமிழ் ஸ்கூல்ல ஒன்னாதான் படிச்சோம். இப்ப என்னடான்னா ரொம்ப அலகா அசின் மாரி அம்சமா இருக்குதுங்க. அதுங்க பார்வையே ஒரு தினுசா இருக்கு. அப்பப்ப கீல குனிஞ்சிக்குதுங்க. சமயத்துல வெடச்சி பேசுதுங்க. கூடவெ அதுங்களுக்கும் நாலஞ்சி தோழிங்க. நம்பலையே கவனிக்கிற மாரி ஒரு பார்வெ. நம்மகிட்ட என்னத்தையோ கண்டுபிடிச்சாப்பில பாக்குங்க. நாமலும் தாண்டாஸ்ல போயி கண்ணாடியில மூஞ்சியப் பார்த்தோனதான் லேசா தெரியும். அப்புறம் லெட்டரு வரும் பாருங்க, எப்படி… ‘ நீங்க சிம்பு மாரி இருக்கீங்க. ஆனா, சப்பாத்த தோச்சி போட்டுட்டு சுத்தபத்தமா வந்தீங்கன்னா சூர்யா மாரி இன்னும் ஹென்சமா இருப்பீங்க. நான் ஒங்க கூட்டாளின்னா, பதில் போடவும். சொல்ல மறந்துட்டேன்… இந்த விசயத்த யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க.’ அப்புறம் ஒரு கையெலுத்து, அது பக்கத்துல ஒரு ரோஜாப்பூ, சின்னதா சூர்யாவோட படம். அதுக்கப்புறம் நம்பனால தூங்க முடியுமா சொல்லுங்க ? நமக்குத்தான் ஆயிரத்தெட்டுப் பெரச்சன ! மறுநாளு க்கிளாஸ்ல பாத்தம்னா மூஞ்சிய தொங்கப் போட்டுட்டு கவலையா ஒக்காந்திருக்குங்க. கூட இருக்குற புள்ளைங்களுக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும். நாங்கதான் மனச கெடுத்துட்டோங்கிற மாரி மொறச்சி பாக்குங்க. ரெண்டு நாளக்கி அப்புறந்தான் தெரியும், நாங்க பதில் லெட்டர் போடாததனாலதான் அம்மிணிக்குக் கோவமாம்! எங்களுக்கு ஒலுங்கா எலுதத் தெரிஞ்சிருந்தா லெட்டரு என்னா கவிதையே எலுதிருப்போம்ல.மூனாம் வகுப்பிலிருந்து பின்னால ஒக்கார ஆரம்பிச்சிட்டோம். பாப்போம்… அதான் மன்னன்,தென்றல்,வானம்பாடின்னு பாட்டு எல்லாம் வருதெ. அதுல கொஞ்சம் எடுத்து மாத்திப் போட்டு அனுப்புனா போது! இதுக்குப் போயி…?

தமாசா… கிண்டலா பேசுனது தப்பா ? வீட்டுல மனசு விட்டு யாருக்கிட்டத்தான் பேசுறது? தமில் ஸ்கூல்ல எல்லாம் ஏ,வா,போன்னு பழகினதெ மறக்க முடியுமா? அந்தப் புள்ளைங்க மனசுல காதல வளர்த்துக்கிட்டதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் ? எங்களுக்கு காலேஜு, யூனிவசிட்டியெல்லாம் கனவுலகூட வர்றதில்லெ. இந்த ஸ்கூலுதான் எல்லாம்! சந்தோஷமா இருக்கணும்னுதான் ஸ்கூலுக்கே வர்றோம். அந்தப் பழைய ஞாபகத்துலதான் கூட்டாளி மாரி பழகினோம்.எங்களுக்குத்தான் படிப்பு ஏறல. அதுங்கலாவது படிச்சிருக்கலாம்ல ? இப்போ என்ன நடக்குமோ ஏது நடக்குமோன்னு தெரியல. விசயம் அந்தப் புள்ள வீடு வரைக்கும் தெஞ்சிடுச்சாம். என்னா ஏதுன்னு ஜென்டில்மேனா பேசி தீர்த்துக்கலாம்னா அப்பா அம்மாவுக்குத் தெரிய மாட்டேங்குது.

யாரோ அந்தப் புள்ளையோட மாமங்காரனுங்க மத்தியானம் ரெண்டு மணிக்கு ஹெல்மெட்டு, கத்தி கம்புங்களோட ஸ்கூலு கேட்டுக்குப் பக்கத்துலெ நிக்கப் போறானுவங்களாம். அவங்களும் இந்த ஸ்கூல்ல படிச்சவங்கதான். ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புனா, தாமான்லருந்து எனக்கும் பத்துப் பேரு வராமலா போயிருவாங்க? நாங்க சொன்னாலும் அவனுங்க கேக்கப் போறதில்ல. குடுக்குறதெ வாங்கிட்டுப் போக வேண்டியதுதான். என்ன பண்றது? குடும்பம், வாத்தியாருங்க, சமுதாயம் வந்து ஒதவி செய்யும்னு பேசுறதுக்கு வேணும்னா ஒனக்கையா இருக்கும்! எங்க மாரி பசங்களுக்கு ‘இவனுங்க தேராத கேஸ்னு’ ஒரு பெரிய ‘குத்தம்’ ரொம்ப நாளா இருக்கு. அது சாகற வரைக்குமோ அடுத்த தலமொற வரைக்குமோ தெரியிலெ. அதனாலெ… இது எத்தினியாவது குத்தம்னு பேப்பர்லயும் டிவியிலயும்…. ச்சும்மா பேசுறது முக்கியம்லெ. ஆனா, யாரோட குத்தம்னு எங்களுக்கும் தெரியும் ஆனா…தெரி…ய..லங்……………..க…

       முற்றும்

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -18தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை