குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!

author
2 minutes, 48 seconds Read
This entry is part 14 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020


க.அசோகன்

1.

     நான் நகரத்தில் ஒரு சிறியதொரு ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெரிய மாதா கோயில் இருந்தது.  அது அந்தப் பள்ளியில் உள்ளதென்றால் யாரும் நம்பமாட்டார்கள்.  அவ்வளவு பெரியது.  மாதா கோயிலின் அருகே ஒரு பகுதியில் பள்ளிக்கூடம் நடைபெற்று வந்தது.  எனக்கு அப்போது வயது 6.  நான் ஐ ‘யு’ வகுப்பில் படித்தக்கொண்டிருந்தேன்.  எங்கள் பள்ளி சனிக்கிழமையிலும் கூட அரைநாள் வகுப்பு நடைபெறும்.  வகுப்பு முடிந்த பின் பிரார்த்தனை நடைபெறும். நாங்களும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.  அப்பொழுது நாங்கள் வராண்டாவில் வந்து நண்பர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொள்வோம்.

     அதேபோல் ஒரு சனிக்கிழமை நாங்கள் வராணடாவில் உட்கார வைக்கப்பட்டோம், பெரிய டீச்சர் (தலைமையாசிரியர்) அங்கு வந்து “எல்லோரும் முகப்பு வாயிலின் முன் இரண்டு இரண்டு பேராக கைகோர்த்து நிற்கவும்”, என்று அறிவித்தார்.  நாங்கள் அங்கு செல்லும் வழி மிகவும் குறுகலானது அப்போது யாரும் அங்கு இருக்கமாட்டார்கள்.  ஆசிரியர்கள் இப்போது முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றிருப்பார்கள்.  அன்று நாங்கள் எங்கள் பாதையில் சென்று கொண்டிருந்தோம்.  திடீரென நண்பன் முருகன் என் கையை பிடித்து இழுத்தவாறு, “வா! நாம் சென்றுவிடலாம்”, என்றான்.  நான் “வேண்டாம்! யாராவது பார்த்தால் மாட்டிக்கொள்வோம்” என்றேன்.  அவன் “நமக்கு எதுக்கு பிரார்த்தனை அதெல்லாம் நமக்கு வேணாம் வா! நாம் போகலாம்” என்றான்.  அந்தப் பிரார்த்தனையில் எல்லாம் எங்களுக்கு நாட்டமில்லை.  ஏனெனில் அது மிகவும் சலிப்பூட்டக்கூடியதாய் இருந்தது.  அங்கு பாடப்படும் பாடல்கள் எனக்குப் புரியாத வகையில் இருந்தன.  மேலும் அங்கு யாரும் பேசக்கூடாது என்ற சட்டம் ஒரு இறுக்கமான மனநிலையைத் தந்தது.  ஆனால் அங்கு சில நகைச்சுவைகளும் அரங்கேறும்.  ஷாமிலி போன்றவர்கள் அங்கு வந்தும் தூங்கிவிழுவார்கள்.  அவள் ஒரு மலையாளி.  அவள் கொஞ்சம் பணக்காரிதான்.  ஆனால் பாhக்க அப்படி இருக்கமாட்டாள்.  பரட்டை முடி.  சற்று குறைவான முடி.  அவள் ஆண்களைப் போல “கிராப்” வெட்டியிருப்பாள்.  பெரியவயிறு, சம்பந்தமில்லாத கால்கள் என ஏதோ புத்திகெட்டுப்போனவள் போலவே இருப்பாள்.  அவள் பள்ளிக்கூடம் வருவதே தூங்குவதற்குத்தான் என்று தோன்றும்.   எப்போதும் எப்படியும் அவள்; தூங்கிக்கொண்டேயிருப்பாள். 

     முருகன் சொன்னான், “நாம் இந்த மரக்குகை போன்ற அமைப்பு கொண்ட பெட்டியினுள் உட்கார்ந்து கொள்ளலாம்.  எல்லோரும் சென்ற பின் நாம் பின்பக்க கதவு வழியாக வெளியே சென்றுவிடலாம்”, என்றான்.  நானும் சம்மதித்தேன்.  நாங்கள் வரிசையில் இருந்து கலைந்து யாருக்கும் தெரியாமல் அங்கு போய் ஒளிந்து கொண்டோம்.  யாரும் எங்களை கண்டுபிடிக்கவில்லை.  நாங்கள் பின்பக்க கதவை அடைந்தபோது ஏமாந்து போனோம்.  ஏனெனில் அது வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது நான் முருகனை முறைத்துப் பார்த்தேன்.  “இப்போது உள்ளேயும் செல்லமுடியாது வெளியேயும் போகமுடியாது என்ன செய்வது?” என அவனைப் பார்த்து முறைத்தபடி கேட்டேன்.  “சரி! நாம் இப்போது மீண்டும் ஒளிந்து கொள்ளலாம்.  பின் பிரார்த்தனை முடியும்போது வெளியேறிவிடலாம்” என்றான்.  நாங்கள் அங்கேயே உட்கார்ந்திருந்தோம்.  அங்கிருந்து வாயிலின் அருகில் சென்று நின்றோம்.  பின்னர் எல்லா பிள்ளைகளோடும் சேர்ந்து வெளியேறினோம்.  இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஆனால் இது எனக்கு மிகப்பெரிய தவறு என்றும் தோன்றியது.  அதைப் பற்றி கவலைப்படத்தோன்றவில்லை.  பின் ஒவ்வொரு வாரமும் நாங்கள் இவ்வாறு ஒளிந்து பிரார்த்தனையில் இருந்து தப்பித்தோம்.

     அந்த சனிக்கிழமை நாங்கள் வழக்கம்போல தப்பிப்பதற்காக பெட்டியினுள் ஒளிந்து கொண்டோம்.  சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ வருவது போல சப்தம் கேட்டதும் அதிர்ந்து போனோம்.  யாரோ ஒருவர் எங்களை பிடிப்பதறகாக வருகிறாரோ?  என எண்ணி பயந்து கொண்டிருந்தோம்.  அந்த உருவம் நேராக எங்கள் முன்னாலிருந்த அலுவலக அறையினுள் நுழைந்தது.  அது யாரென்று இப்போது நாங்கள் கண்டுகொண்டோம்.  அது மாமிடீச்சர்தான் என நன்றாகத் தெரிந்தது.  அவர் ஐஐஐ ‘டீ’ டீச்சர்.  எங்கள் பள்ளியில் உள்ள ஒரே மாமிடீச்சர் அவர்.  அவர் ரொம்பவும் குண்டாக இருப்பார்.  அவரின் அடையாளமே அவர் அணிந்திருக்கும் மிகப்பெரிய “தோடுகள்” தான்.  அந்தத் தோடுகள் அவரின் காதுகளை மறைக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தன.  அவரின் குரல் ஒரு வித்தியாசமான சப்தம் கொண்டது.  அதை நம்மால் கேட்க சகிக்காது.  அவர் மிகப்பெரிய பணக்காரியென மற்ற ஆசிரியைகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.  அவர்தான் உள்ளே போனது.  “இப்போது என்னடா செய்றது?” என முருகனிடம் கேட்டேன்.  அவன் “பேசாம இரு” என்றான்.  அதற்குள்ளாக அவர் வெளியே வந்துவிட்டார்.  நேரிடையாக எங்கள் பெட்டி முன்பு வந்து, “யாரடா! படவாக்களே வாங்;;கடா வெளியே,” என்றார் அதட்டலாக.  எப்படி அவர் கண்டுபிடித்தார் என தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டே எழுந்தோம், அவர் முன்பாக.

     “ராஸ்கல்ஸ்”, என எங்கள் காதைப் பிடித்துத் திருகியவாறே கூட்டிச் சென்றார்.  அவர் கையை அப்போதுதான் பார்த்தேன்.  நான்கு விரல்களிலும் மோதிரம் அணிந்திருந்தார்.  மற்ற டீச்சர்கள் சொன்னது சரிதான்.  அவர் பணக்காரிதான் நேராக எங்களை முகப்பு வாயிலின் வழியாக அழைத்துச் சென்று ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு தலைமையாசிரியரிடம் போய் சொன்னார்.   தலைமையாசிரியர் இப்போது எங்களைப் பார்த்தாh.;  அவர் மட்டுமல்ல இப்போது எல்லோருடைய கவனமும் எங்கள் மீது விழுந்தது.  நான் பயந்தமாதிரியே என் வகுப்பு டீச்சர் பெல்சியும் என்னை பார்த்துவிட்டார்கள்.  அவரின் மூக்குக்கண்ணாடி என்னைத் தெளிவாக காட்டவில்லை, அதை தூக்கிப் பார்த்துதான் அடையாளம் கண்டு கொண்டார்.  பக்கத்தில் நின்ற முருகனின் நிலைமை இன்னும் மோசம்.  ஏனெனில் அவனின் டீச்சர் பிலோமினா கையில் பிரம்பை வைத்துக்கொண்டு பார்;த்தார்.  எங்களிருவரையும் அவர்கள் கேட்கப்போகும் கேள்வி என்னவென்று தெரியும்.  “ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா அடுத்த கிளாஸ் பையனோட சேர்ந்து இந்த காரியம் பண்ணியிருப்பே,” அவர்களைப் பெறுத்தவரை நாங்கள் செய்த தவறைவிட இருவரும் சேர்ந்ததே பெரிய குற்றம்.  ஏனெனில் அவர்கள் (டீச்சர்) இடையே அப்படி ஒரு பொருத்தம்.  அவர்களின் போட்டி சில சுவாரசியமான நிகழ்வுகளை உண்டாக்கும்.  குறிப்பாக இன்ஸ்பெக்ஷன் (inளிநஉவழைn) நடைபெறும் சமயத்தில் அது உச்சத்தைக் கொண்டிருக்கும்.  என்னைப் பார்த்ததும் பெல்சி டீச்சர் இப்போது பிலோமினா டீச்சரிடமிருந்து அந்த பிரம்பை வாங்கிக்கொண்டார்.

     நான் நினைத்துக்கொண்டேன்.  சே! இந்த பிலோமினா டீச்சர் என்ன இப்படி இருக்காங்களே, தன்னுடைய எதிரி குச்சிய கேட்டதும் கொடுத்துட்டாங்களே! அவர் பிரம்பை வாங்கி என்னைப் பார்த்து ஆட்டிக் காட்டினார்.  இப்போது முருகன் கொஞ்சம் தேறியவனாய்த் தோன்றினான்.  எல்லா டீச்சர்களும் எங்களைப் பார்த்துவிட்டார்கள்.  பிரார்த்தனை முடியும் தருணம் அது.  பிள்ளைகளின் கண்களும் எங்களைப் பார்க்கத் தூண்டியது போல ஒவ்வொருவரும் எங்களைப் பார்த்துச் சிரித்தனர்.  இப்போது தலைமையாசிரியரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது.  அவர் எவ்வளவு கோபக்காரரென போன வருடம் நடந்த தலைவெள்ளி பூசை அன்றுதான் தெரிந்;தது.  எங்கள் பள்ளியின் 25ம் ஆண்டு விழா நெருங்கியதாலும், தலைவெள்ளிக்கிழமை ஆனதாலும் அந்தப் பூசை சிறப்பாக நடத்தப்பட்டது.  அந்தப் பூசையின்போது பேசிக்கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டுபேரை அவர் அடித்த விதம் இன்றும் நினைவில் நிற்கிறது.  இப்போது அவர் எங்களை நெருங்கி “நீங்கள் இருவரும் என்னை அறையில் வந்து பாருங்கள்”, என்று சொன்னார்.  எங்களுக்கு பயம் இன்னும் அதிகரித்தது.

     நாங்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக நகர்;ந்து கொண்டிருந்தோம்.  அலுவலக அறை அருகில் நாங்கள் வந்துவிட்டோம்.  இப்போது நாங்கள் சாந்தி அக்காவை பார்த்துவிட்டோம்.  பெயருக்கேற்ப குணமுடையவர்.  இந்தப் பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் அவர்தான் முதல் டீச்சர்.  ஏனெனில் “பேபி கிளாஸ்”, என அழைக்கப்படும் செக்ஷனுக்கு அவர்தான் டீச்சர்.  ஆகையால் எல்லா மாணவர்களையும் அவருக்குத் தெரியும்.  குழந்தைகளிடம் அன்பாகப் பேசும் ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.  எல்லாக் குழந்தைகளும் அவரிடம் பிரியமாக இருப்பார்கள்.  சில குழந்தைகள் எந்நேரமும் அவரின் சேலையைப் பிடித்துக்கொண்டே திரிவார்கள்.  அதே சமயம் எங்கள் பள்ளியின் அலுவலக வேலை முழுவதும் அவர்தான் செய்வார்.  அவரின் உடல்வாகும் அதற்கேற்றவாறு எப்போதும் சுழன்று கொண்டேயிருக்கும்.  சராசரி உயரம், மிக மிக மெல்லிய உடம்பு, சின்ன மூக்குத்தி என அவர் எளிமையாக இருப்பார்கள்.  இப்போது நாங்கள் அவரைத்தான் பார்க்கச் செல்கிறோம்.  சாந்தி அக்கா எங்களைப் பார்த்து, “என்னடா! பண்ணியிருக்கீங்க பெரிய டீச்சர் ரொம்பக் கோபமாயிருக்காங்க”.  நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.  “சரி! உள்ள போங்க,” என்றார்.  நான் முருகனின் கையை இறுகப் பற்றிக்கொண்டேன்.  எனக்கு அதிகமாக மூச்சு வாங்கியது.  தலைமையாசிரியரின் அறையைத் திறந்தோம்.  எப்படிப்பட்ட முகம் அவருடையது? கருணையும், அன்பும் கொண்ட முகம் அது.  ஆனால் சென்ற வருடம் அந்த மாணவர்களை அவர் அடிக்கும்போது ஏன் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார் என்பது ஆச்சரியமாக இருந்தது.  இன்றும் அந்தக் காட்சி மனதை விட்டு அகலவில்லை.  அவரின் பொட்டுதான் அவருக்கு அழகு.  என்றுமே மஞ்சள் பூசிய முகத்துடன் லட்சணமாய் இருப்பார்.  அவரின் பெயர் பிரேமலதா. இந்தப் பெயரை மாமிடீச்சர்தான் போன முறை ஆண்டு விழாவில் சொல்லக்கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  கதவைத் திறந்ததும் அவர் எங்களைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டினார்.  நாங்கள் அவரின் அருகில் பயத்துடன் போய் நின்றோம்.

     அவர் எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தவர் மூடிவிட்டு என்னை ஒரு டேபிள் மீது அதை வைக்கச்சொன்னார்.  பிறகு எங்களிருவரையும் அழைத்து பக்கத்திலிருந்த சேர்களைக் காட்டி அதில் உட்காரச் சொன்னார்.  எங்களுக்கு ஆச்சரியமாகவும் கூச்சமாகவும் இருந்தது. அதெல்லாம் பெரியவர்கள் அமரும் சேர்.  எங்கள் வீட்டில்கூட அதுபோல ஒன்று இருந்தது.  அதில் அப்பாதான் உட்காருவார் வேறு யாரும்; உட்காருவதில்லை.  நான் அப்பா இல்லாத நேரத்தில் அதில் அமர்ந்து பார்த்திருக்கறேன்.  அதில் உள்ள சிறுதுளைகள் வழியாக விரலை விட்டு ஆட்டி விளையாடுவேன்.  அம்மா பார்த்துவிட்டால் அடி பின்னிவிடுவாள்.  சத்தம் போடாமல் நான் செய்யும் விளையாட்டு இது.  இப்போது இந்த சேரில் நான் சுதந்திரமாக உட்கார்ந்திருக்கிறேன்.  என்னையாரும் கட்டிப்போட முடியாது என்ற உணர்வுடன் நான் என் கால்களை ஆட்டிக்கொண்டிருந்தேன்.  அந்த இக்கட்டான நிலையிலும் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.  இப்போது தலைமையாசிரியர் தன் கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு எங்களை பார்ததுக் கேட்டார், “நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டீர்கள்?” நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  இப்போது அவரே பதில் சொன்னார்.  “உங்களுக்குப் பிரார்த்தனைக்கு வர பிடிக்கவில்லை.  அப்படித்தானே!” நான் கொஞ்சம் தயங்கித் தயங்கி தலையை ஆட்டினேன்.  அவர் உடனே எங்களைப் பார்த்து “ஏன்?” என்றார்.  எனக்கு இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது.  “அந்தப் பிரார்த்தனைமுறை எங்களுக்குப் புரியவில்லை” என்றேன்.

     “கடவுளின் ஆசீர் உங்களுக்கு எப்படி கிடைக்கும்?” என்றார்.  உடனே முருகன் சொன்னான், “கடவுள் எல்லோருக்குமே ஆசீர் அளிக்கமாட்டாரா? அவர் குழந்தைகளை என்றுமே கைவிடுவதில்லை என நீங்கள் தானே பொது பிரார்த்தனையின் போது சொன்னீர்கள்.  அது பொய்யா டீச்சர்?” இப்போது டீச்சர் எங்களை உற்றுப்பார்த்தார்.  முருகன் ஏதோ விபரீதமாய்ப் பேசிவிட்டதாக நான் உணர்ந்தேன்.  இப்போது டீச்சர் பேசத் தொடங்கினார்.  “இல்லை! நான் பேசியது யாவும் உண்மைதான்,” என்றார்.  பிறகு எங்களைப் பார்த்து அவர் கொஞ்சம் சிரிப்போடு “ஆமாம்! நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள் என உங்களுக்குத் தெரியுமா?” எங்களுக்குப் புரியாத கேள்வி ஒன்றை அவர்கள் எங்களிடம் கேட்டுவிட்டதாய் உணர்ந்தோம்.  அவர் கொஞ்சம் சிரிப்போடு “அது கடவுள் பிறந்த இடம்” என்றார்.  நாங்கள் வியப்போடு கேட்டோம்.  “என்ன கடவுள் அந்தப் பெட்டிக்குள் பிறந்தாரா?”  எங்களால் அந்த ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை.  “டீச்சர்! அது கடவுள் பிறந்த இடம்தானா?” என நான் கேட்டேன்.  அவர் “ஆமாம்” என சிரித்தபடியே தலையை ஆட்டினார்.  அது கடவுள் பிறந்த இடம் அதனால் தான் அவ்வளவு பெரிதாக இருந்ததா? என நான் கேட்டேன்.  அவர் இப்போது பலமாக சிரித்தபடி “ஆம்” என்றார்.  இப்போது அவர் எங்களுக்கு அதை விவரித்தார்.  “நீங்கள் அமர்ந்திருந்த பெட்டியானது வருஷா வருஷம் நம்ம கோயில்ல கிறிஸ்துமஸ் விழாவின் போது இயேசு பிறந்த குடிலை அமைக்க அதைப் பயன்படுத்துவோம்.  அதில் ஆடு, மாடு பொம்மைகள், மரியாளின் பொம்மை, சூசையப்பரின் பொம்மை, குழந்தை இயேசு பொம்மையெல்லாம் கொண்டு ஜேடனை செய்வோம்.  இப்போது சொல்லுங்கள் நீங்கள் கடவுள் பிறந்த இடத்தில் தானே இருந்தீர்கள்.”

     உடனே நான் சொன்னேன்.  “நல்லவேளை டீச்சர் நாங்க அங்க இருந்ததால்தான் சாமி எங்களை ஒன்னும் செய்யலை.”  “இல்லைன்னா? என்ன செய்யும்?” என்றார் தலைமையாசிரியர்.  “சாமி கனவிலே வந்து கண்ணைக் குத்திடுமே!” என்றான் முருகன்.  தலைமையாசிரியர் பலமாக சிரித்தார்.  “சரி சரி இனிமே நீங்கள் கண்டிப்பாக பிரார்த்தனையில் கலந்துக்கணும்” என்று சொன்னாங்க, நாங்கள் சரி என்று தலையை ஆட்டினோம்.  நாங்கள் போகும்போது ஒரு சின்ன அட்டை ஒன்றை எங்களிடம் கொடுத்தார்கள்.  அதன் முன்பக்கம் ஒரு சின்ன சிலுவையும் பின்பக்கம் சில வரிகளும்  அதில் அச்சிடப்பட்டிருந்தன.  அது என்னவென்று அப்போது எனக்குப் புரியவில்லை.

     பின்னர் நாங்கள் எங்கள் வகுப்பறையை நோக்கி சென்றோம்.  என்னுடைய வகுப்பு மாடியில் இருந்தது.  முருகனுடைய வகுப்பு கீழே இருந்தது. முருகன்தான் முதலில் சென்றான் நான் என்ன நடக்கிறது என எட்டிப்பார்த்தேன்.  பிலோமி டீச்சர் அவன் காதைப் பிடித்து திருகிக்கொண்டிருந்தார்கள்.  “உனக்கு கடவுள் மேல் பற்று இல்லை அதனால் அவர் உனக்கு எதுவும் தந்தருளமாட்டார்” என திட்டிக்கொண்டிருந்தார்.  நான் குழம்பிக் கொண்டே சென்றேன்.  ஏனெனில் பிலோமி டீச்சர் ஒரு முறை பிரார்த்தனையின் போது சொன்னார், “கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காதவர், நாம்தான் அவருடைய அன்பை எதிர்பார்த்து நிற்கிறோம்.” என்று சொன்னார்.  ஆனால் இன்று ஏன் இவர் இப்படி பேசுகிறார்? நாங்கள் கோவிலுக்கு வராததால் கடவுள் எங்களை நேசிக்கமாட்டாரா? குழப்பத்துடன் நகர்ந்தேன்.  என்னுடைய வகுப்பிற்கு மாடியில் ஏறியவுடன் முதல் அறை ஐஐ-டீ அங்கு ஜெஸின் டீச்சர் இருந்தார்.  அவர் மிக நன்றாக பாடுவார்.  அவருடைய குரல் கேட்போரை மயக்கக்கூடியது.  வயதில் மிகவும் மூத்தவர் ஆதலால் பிற டீச்சர்கள் அனைவரும் அவரை ஜெஸி அக்கா என்று அழைப்பார்கள்.  அடுத்து வருவது ஐஐ-யு அறை ஆல்பிரட் கீதா டீச்சர்.  மிகவும் கண்டிப்பானவர்.  இவரின் அடிகளை நினைத்தாலே வலிக்கும்.  அடுத்த வருடம் நான் இவரின் வகுப்பில்தான் படித்தாக வேண்டும்.  அடுத்ததாக ஐஏ-யு ஜெயந்தி டீச்சர் வகுப்பு.  இவர் மிகவும் அமைதியானவர் இவர் பேசுவது பக்கத்திலிருப்பவருக்குக் கூட கேட்காது.  புதிதாக வந்திருக்கும் டீச்சர் இவர்.  இவருடைய தோழி புனிதா டீச்சர்.  ஐஏ-டீ வகுப்பு ஆசிரியர்.  இவருடைய குரல் கொஞ்சம் அதட்டலாக இருக்கும்.  இவரின் குரலே எங்களை அடக்கிவிடும் அந்த அளவு குரல் வளம் கொண்டவர்.  எனக்குத் தெரிந்து ‘யு’, ‘டீ’ என்ற பாகுபாடு இல்லாமல் இருக்கும் ஆசிரியைகளில் இவர்கள் இரண்டுபேருக்கும்தான் முதலிடம்.  அடுத்ததாக ஏ-யு இது கொஞ்சம் பெரிய வகுப்பறை.  அங்கு ஜாஸ்மீன் டீச்சர் இருந்தார்.  எனக்கு அவரைப்பற்றி அன்று எதுவும் தெரியாது.  புதிதாக வந்த சில தினங்களிலேயே அந்த வகுப்பு மாணவர்களின் பிடித்தமான ஆசிரியை ஆனார்.  பின்னர் அவர்தான் என்னுடைய பிரியமான ஆசிரியை ஆகவும் ஆனார்.  இந்த வகுப்புகளையடுத்து மரப்பலகை தடுப்பு கொண்டிருந்தது எங்கள் வகுப்பு.  இப்போது நான் என் வகுப்பை நோக்கிச் சென்றேன்.  டீச்சர் இப்போது  என்னை உள்ளே அழைத்தார்.  “என்னைப் பார்த்து எவ்வளவு தைரியம் இருந்தா அங்க போய் ஒளிஞ்சிருப்ப!”  நான் முழித்துக் கொண்டே நின்றேன்.  அவரின் கோபம் பற்றி தெரியும்.  இரு கண்களும் சுருங்கிவிடும்.   உதடு மேலும் கீழுமாக மாறி, பின் உதட்டைக் கடித்து அவர் காதைப் பிடித்துத் திருகுவார்.  மற்றொரு கையில் பிரம்பினால் கால்களில் அடிப்பார்.  என்னுடைய நல்ல நேரம் அவர்கையில் அன்று பிரம்பு இல்லை.  அது ஐஐஐ-யுக்குச் சென்றிருந்தது.  காது மட்டும் புண்ணானது.  சண்முகம் உடனே எழுந்து “டீச்சர் நான் போய் பிரம்ப வாங்கிட்டு வரட்டுமா?” என்றான்.  டீச்சர் “வேணான்டா! அப்புறம் பாத்துக்கலாம்” என்றார்.  நான் அவனை முறைத்துப் பார்த்தேன்.  அவனும், சிலரும் என்னைப் பார்த்து ஏதோ சொல்லி சிரித்தனர்.  டீச்சர் “போ! போய் முட்டிப் போடு” என்றார்.  நான் போய் முட்டிப்போட்டேன்.  அப்போது ஏதோ சொல்லிக்கொண்டிருந்த டீச்சர், “இதோ! இவனை மாதிரி சாமிகும்பிடாம இருந்தா இப்படித்தான்” என்றார்.  உடனே என்னைப்பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.  ஆனால்; ஷாமிலிக்கு மட்டும் என்றுமே தண்டனை கொடுத்ததில்லை.  ஏறத்தாழ நாங்கள் ஒரே தவறுதான் செய்திருக்கிறோம்.  அவள் அங்கு பூசைக்கு வந்து வழிபடாமல் தூங்குவாள்.  நான் அங்கு வரவில்லை.  ஆனால் கடவுள் ஏன் எனக்கு மட்டும் தண்டனை தருகிறார். இன்னொன்று மிகப்பெரிய புதிராக உள்ளது தலைமையாசிரியரே எங்களிடம் கோபம் கொள்ளவில்லை.  இவர்கள் ஏன் எங்களிடம் கோபம் கொள்ளவேண்டும்.  அவர் ஏன் எங்களை ஒன்றும் செய்யவில்லை.  இவர்கள் ஏன் எங்களிடம் கடுமை காட்டுகிறார்கள்.  எனக்கு இது புரியவில்லை.  நாங்கள் கடவுள் பிறந்த இடத்தில் ஒளிந்தது தப்பா? என ஆசிரியரிடம் கேட்க நினைத்தேன்.  ஆனால் அவர் என்மேல் கோபமாக இருந்ததினால் நான் எதையும் கேட்கவில்லை.  என்னுடைய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை தலைமையாசிரியர் கொடுத்த அந்த சின்ன அட்டையில் உள்ள வார்த்தைகள் புரியாதது போல எனக்கு இந்த கேள்விக்கு விடையும் கிடைக்காது என நினைத்தேன்.

2.

     இன்று காலை நான் நடக்க ஆரம்பிக்கிறேன்.  எவ்வளவு தூரம் என தெரியாமல் நான் நடக்க வேண்டும் போலிருந்தது.  இந்த நடைப்பயணம் முடிவற்றதாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.  குளிர்ந்த காலை நேரம். நடப்பதற்கு இதமாக இருந்தது.  இது ஒரு மேடான பகுதி என்று சொல்லலாம்.  இது தரையில்; இருந்து சற்று உயர்ந்திருந்தது.  நான் வழக்கமாக செல்லும் பேருந்தை விடுத்து நடந்து செல்கிறேன்.  இந்தப் பாதையின் அழகை இன்று அருகில் இருந்து ரசிக்கிறேன்.  நடைப்பயணம் இயற்கையோடு என்னை இணைத்து உள்ளது.  அதனைத் தாண்டிச் செல்லும் போது ஒரு வாசனை என்னை கடந்து சென்றதாக உணர்ந்தேன்.  அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நான் இப்போது சாலைக்கு வந்துவிட்டேன்.  நான் ரொம்ப தூரம் என் வீட்டை விட்டு நடந்து வந்துவிட்டேன்.  நான் நினைத்ததைப் போல் இந்த நடைப்பயணம் முடிவுறப் போவதில்லை என்றே எண்ணினேன்.  என்னை ஆசுவாசப்படுத்த நான் அங்குள்ள சிமென்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்தேன்.  என்னுள் ஏதோ ஒன்று துரத்திக் கொண்டேயிருக்கிறது.

     தனிமை துயருறும் மனிதர்களுக்கு  மிகச் சிறந்த மருந்து நான் என்னை அதில் ஆற்றுப்படுத்திக்கொண்டேன்.  சில சமயங்களில், அந்தத் தனிமை என்னுள் சில விபரீதமான கேள்விகளைக் கேட்கும்.  அவற்றை ஏன் என்னால் எழுதமுடியவில்லை? என்ற கேள்வி பெரியது.  அதற்கு என்னால் என்றுமே பதிலளிக்க முடிந்ததில்லை.  நான் தனியாக இருந்தபோது கண்டுபிடித்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

     அதாவது நீங்கள் தனிமையில் ஏதாவதொரு இசையைக் கேட்டால் அது உங்களுக்குப் பிடித்த பாடலின் இசையாகவோ அல்லது மனதிற்கு இதமானதாகவோ இருக்கும்.  நீங்கள் அப்போது இறைச்சலை கேட்டால் கூட உங்களுக்கு பிடிக்கும்.  நான் அறையில் தனிமையில் கேட்கும் ஒலியானது எனது மின்விசிறியின் சப்தம் தான்.  ஆனால் சில சமயங்களில் எனக்குப் பிடித்த இசை அந்த மின்விசிறியில் இருந்து வருவதாகவே எண்ணிக்கொள்வேன்.  இப்போது என் அருகே ஒரு சலசலப்பு.  அங்கு சின்னதாய் என் காலின் பாதி உயரம் கூட இல்லாத ஒரு சிறுமி வந்து நின்றாள்.  அவள் மிக சிரமப்பட்டு சாலையில் இருந்த சிமென்ட் பெஞ்ச்சில் அமர முயன்றாள்.

     அது அவளைவிட உயரமானதாக இருந்தது.  அவள் என்னை ஒரு பொருட்டாக மதியாமல் நடந்து கொண்டாள்.  அவள் ஒருகணம் கூட என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை.  ஆனால் என் கவனம் முழுவதும் அவள் மேல் பதிந்திருந்தது.  அந்த சாலையில் நாங்கள் இருவரும் அந்த சிமென்ட் பெஞ்ச்சில் அமர்த்திருந்தோம்.  இருபுறமும் எந்த அரவமோ ஆட்களின் நடமாட்டமோ இல்லை.  தனித்து இருந்த நேரத்தில் நான் அவளை உற்றுப் பார்த்தேன்.  அவள் ஒரு பள்ளிக்கூட சிறுமி.  பள்ளிச் சீருடை அணிந்திருந்தாள்.  வெட்டப்பட்ட தலைமுடி, குண்டு முகம்.  சின்னதான கண்கள் என அவள் அப்படியே தேவாவின் தங்கை நந்தினி போலவே இருந்தாள்.  தேவா என்னோடு படித்தவன்.  அவன் எப்போதும் சாப்பிட்ட பின் நந்தினியை அழைத்துவருவான்.  அவள் ஒரு நீண்ட கவுன் அணிந்திருப்பாள்.  அதைவிட அவளின் கொஞ்சிப்பேசும் மொழி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.  அவளுக்கு நாங்கள் ‘பொம்மை’ எனப் பெயர் வைத்திருந்தோம்.  அந்தக் குரலைக் கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.  குரலைக் கேட்பதற்காகவே நான் அவளிடம் பேசவேண்டும் போலிருந்தது.  இவளும் எனக்கு ஒரு பொம்மையாகவே தோன்றினாள்.  நான் அவளிடம் கேட்டேன்.  “நீ ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?”  அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள்.  என்னுடைய திடீர்க் கேள்வி அவளை ஆச்சிரியப்படுத்தியிருக்க வேண்டும்.  அவள் என்னை “என்ன?” என்பதுபோல் உற்று நோக்கினாள்.  அப்போது காதைக் கிழிக்கும் சப்தத்தோடு ஒரு லாரி எங்களை கடந்து சென்றது.  அந்த சப்தத்தைக் கேட்டு அவள் ஆர்வம் கொண்டாள். ஆனால் அது லாரி எனத் தெரிந்ததும் அவள் ஏமாற்றமடைந்தாள்.  ஏனெனில் இவை அனைத்தையும் நான் அவள் கண்களில் பாhக்கமுடிந்தது.  ஹாரன் சப்தத்தைக் கேட்டு அவள் புருவங்கள் உயர்ந்தன.  அவள் லாரியைப் பார்த்ததும் அவளுடைய சிறிய கண்கள் மேலும் சுருங்கியதைப் போலத் தெரிந்தது.  அவள் இப்போது என்னைப் பார்த்தாள் என்னுடைய கேள்விக்கு விடை சொல்ல அவள் ஆயத்தமாகிவிட்டாள்.  “நான் பஸ்ஸ_க்காக காத்திருக்கிறேன்” என்றாள்.  தயக்கத்துடன் என்னைப் பார்த்து “நான் ஊருக்கு போகிறேன்” என்றாள்.  “நீ மட்டும் தனியாகவா போகிறாய்” என்றேன்.  அவள் மௌனமாக என்னைப் பார்த்தாள் நான் “ஏன் நீ மட்டும் வெளியூர் செல்லவேண்டும்?” என்றேன்.  ஏனெனில் “நான் என் தம்பி சீனுவைக் கண்டுபிடித்தாகவேண்டும்” என்றாள்.

     “நீ ஏன் உன் தம்பியைத் தேட வேண்டும்?”  என்றேன்.  ஏனெனில் அவன் வீட்டை விட்டுப் ஓடிவிட்டான்.  “உன் பெற்றோர்கள் அவனைத் தேடவில்லையா?” என்றேன் “ம்ஹ_ம்” என்றாள்.  சற்று வியப்புடன் “ஏன்?” என்றேன்.  அவர்கள் அவன் சென்றதைப் பற்றி கவலைப்பட்டார்கள்.  ஆனால் அவனைத் தேட முயற்சி செய்யவில்லை என்றாள்.  “உன் தம்பிக்கு என்ன வயது இருக்கும்”.  “அவனுக்கு மூன்று வயது” என்றாள்.  இதை என்னால் நம்பமுடியவில்லை.  இவள் உளறுகிறாள் என எண்ணினேன்.  அவள் இப்போது என்னுடைய நிலையைப் பார்த்து என்னிடம் யாவற்றையும் தெரிவிக்கவேண்டுமென நினைத்திருப்பாள்.  நான் என்னுடைய அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவளின் தலைமுடி அவள் கண்களை மறைத்தது.  எனவே அதைச் சரிசெய்து கொண்டே அவளைப் பற்றி கூறத்தொடங்கினாள்.  “என்பேரு மீனா நான் ஐஐஐ-யு  வகுப்பில் படிக்கிறேன் எங்க ஸ்கூல் ரொம்ப பெரியது.  எங்கப்பா ஒரு என்ஜீனியர்.  எனக்கு அம்மாவதான் ரொம்ப்ப பிடிக்கும்.  ஏன்னா அவங்கதான் எப்பவும் என்கூடவே இருப்பாங்க.  எங்க ஸ்கூல்ல நிறைய பேர் படிக்கிறாங்க.  லீமா டீச்சர்தான் என்னுடைய வகுப்பு ஆசிரியை.  எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்.  அவங்க தப்பு செஞ்சாலும் அடிக்காம அன்பா சொல்லுவாங்க.  அவங்க எங்களுக்கு நிறைய பரிசெல்லாம் தருவாங்க.  எங்களுக்குப் பிடிச்ச சாக்லேட், புக்ஸ்-னு நிறைய கொடுப்பாங்க.  எங்களுக்கு நிறைய கதை சொல்லுவாங்க.  எனக்கு நாய்களைப் பற்றி கதையெல்லாம் சொன்னாங்க.  அன்னிலேருந்து நான் அப்பாவை தொந்தரவு பண்ணிக்கிட்டேயிருந்தேன்.  என்னுடைய பேச்சு எப்பவுமே நாயைப்பற்றியே இருந்தது.  நான் அப்பாவிடம் எனக்கு ஒரு நாய் வேண்டுமென்று கெஞ்சினேன்.  அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறினேன்.  என் 8-வது பிறந்த நாளன்னிக்கு எனக்கு அப்பா ஒரு நாய்க்குட்டியை வாங்கிக்கொடுத்ததார்.  அது ரோமங்களே இல்லாமெ பிரவுன் கலர்லெ இருந்தது.  அது என்னைப் பார்த்து நடுங்கியது.  ரொம்பவும் குட்டியாக என் கைகளால் தூக்கிக்கொள்ள கூடியவாறு சின்னதாக இருந்துச்சு.  அதோட கண்கள் ஏதோ பயந்து இருப்பது மாதிரி இருந்தது.  அதன் கண்கள் பச்சைநிறத்தில் ஒளிவீசிக் கொண்டிருந்தது.  அப்பா அதற்கு ஒரு பெயர் வைக்கவேண்டுமென்று கேட்டபோது நான் அதற்கு சீனு என்ற பெயரைச் சொன்னேன்.  அதன் பிறகு சீனுவுடன்தான் என்னுடைய பொழுதுகளை அதிகம் கழித்தேன்.

     நான் சீனுவை என் சொந்தத் தம்பி போலவே நடத்தினேன்.  தினமும் மாலையில் அவனைக் குளிப்பாட்டினேன்.  அவன் ரோமங்கள் வளரவேண்டுமென்று தினமும் வேண்டினேன்.  என்னுடைய எல்லா விளையாட்டிலும் அவன் பங்கெடுத்துக்கொள்வான்.  நாங்கள் ஒளிந்து விளையாடும் விளையாட்டுதான் ரொம்ப நல்லாயிருக்கும்.  நான் தோட்டத்தில் எங்கே போய் ஒளிஞ்சுகிட்டாலும் அவன் என்னை எப்படியாவது கண்டுபிடித்துவிடுவான்.  நான் அவன் தூங்குவதை மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.  அவன் தன் காதுகளை குறுக்கிக்கொண்டு  அவனுடைய கண்களை மூடி படுத்திருப்பான்.  அவனுடைய உடல் அசைவற்று இருக்கும்.  நான் அதைப் பார்த்து ஆச்சரியப்படுவேன். நானும் அது போல தூங்க முயற்சி செய்தேன்.  ஆனால் என்னால் முடியவில்லை.  அந்த குட்டி நாய் சீனு இதைச் சாதாரணமாக செய்தான்.

     நான் சீனுவின் வயதை அறிய ஆசைப்பட்டேன்.  அதற்காக அப்பாவிடம் யோசனை கேட்டேன்.  அவர் என்னிடம் சொன்னர்.  நீ சீனுவின் தலையில் உள்ள முடியை எண்ணிப்பார் அதுவே அவன் வயது என்றார்.  நான் எண்ணினேன்.  அங்கு மூன்று முடிகள் இருந்தன.  எனவே தான் சீனுவின் வயது மூன்று என்று கூறினேன்.  நாளுக்கு நாள் சீனு வளர்ந்து வந்தான்.  ஒரு காலத்தில் நிச்சயம் அவன் என்னைவிட உயரமானவனாய் வளர்ந்;துவிடுவான் என்று தோன்றியது.  நான் சீனுவிற்கு கடவுளை எப்படி கும்பிடவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தேன்.  அவன் அதை மிக உன்னிப்பாய் கவனித்துக்கொண்டான்.  சீனுவை ஒருநாள்  நான் பள்ளிக்கூடத்துக்கு கூட்டிச் சென்றேன்.  ஆனால் அவனை வகுப்பிற்குள் அனுமதிக்கவில்லை.  லீமா டீச்சர், “உன் தம்பி ரொம்ப அழகு”, என்று சொல்லி சிரித்தார்.  “நானும் அவனும் மிக நன்றாக நடனமாடுவோம்.  அந்த நடனம் கச்சிதமாகவோ அல்லது நேர்த்தியாகவோ இருப்பதில்லை என்றாலும் நான் அதை ரசிப்பேன்” என சொல்லிவிட்டு அவள் மௌனமானாள்.  நான் அவளிடம் கேட்டேன்.  “பிறகு ஏன் உன் தம்பி வீட்டை விட்டு ஓடிப்போனான்?” என்று கேட்டேன்.  அவள் நிமிர்ந்து என் கண்களை பார்த்தாள் எதுவும் சொல்லவில்லை.

     சாலையை வெறித்துப்பாhத்தாள்.  நான் அவளை நெருங்கினேன்.  அவள் கண்கள் கலங்கி இருந்தன.  அவள் சொன்னாள், “நான் தான் அவன் வீட்டைவிட்டு ஓடக் காரணம்”, எனக் கூறி அழ ஆரம்பித்தாள்.  என் கண்கள் மேலும் ஆர்வத்தடன் அவளை கவனிக்க ஆரம்பித்தது.  என்னுடைய பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியினால்தான் என அழுதாள்.  அவள் எதையுமே பேச விரும்பாதவள் போலிருந்தாள்.  அவளை துக்கம் வாட்டுவதைப் போல தேம்பினாள்.  என்னை இப்போது புதிதாய் பார்ப்பவள் போல பார்த்தாள்.  நான் அதைச் சமாளிக்கும் விதமாக முதுகில் தட்டிக்கொடுத்தேன்.  அவள் கொஞ்சம் ஆறுதல் அடைந்ததும் பேச ஆரம்பித்தாள்.

     எங்கள் பள்ளியில் ஒரு ஓவியப்போட்டி வைத்தார்கள்.  எனக்கு ஓவியம் ரொம்பவே பிடிக்கும். ஏனெனில் ஓவிய ஆசிரியர் ராஜன் சார் மிகவும் நல்லவர்.  அவர் கற்பனை ஓவியங்களை மிகவும் ஊக்குவிப்பார்.  நான் வரைந்த கொக்கு படத்தைக் காட்டி அனைவரின் பாராட்டையும் எனக்கு பெற்றுக் கொடுத்தார்.  எனவே நான் தீவிரமாக ஓவியம் வரைய ஆரம்பித்தேன்.  என்னுடைய கற்;பனையில் உலகமே நீலநிற வடிவம் கொண்டிருந்தது.  அங்கு இரவு, பகல் என்று எதுவுமில்லை, என் வீடு ஒரு காட்டுக்குள் இருப்பது போல வரைந்திருந்தேன்.  நான், அப்பா, அம்மா, சீனு எல்லோரும் அங்கு இருக்கிறோம்.  பக்கத்தில் விதவிதமான செடிகள், வண்ண வண்ண பூக்கள், பட்டாம்பூச்சிகள் நிறைந்து இருந்தன.  இவ்வாறு ஓவியத்தை வரைந்திருந்தேன்.  என் ஓவியம் ரொம்ப அழகாயிருக்கிறது என எல்லோரும் என்னைப்; பாராட்டினார்கள்.  ஆனால் நான் அதை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை.  அதில் சில வண்ணங்கள் தீட்டவேண்டிய வேலை இருந்தது.  நானும் சீனுவும் அதை செய்து கொண்டிருந்தாம்.  நான் எல்லா வண்ணத்தையும் கலக்கி வைத்திருந்தேன்.  அப்பொழுது அம்மா என்னைக் கூப்பிட்டார்.  நான் அந்த வண்ணக் கலவைகைளை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன்.  நான் திரும்பி வந்தபோது சீனு அந்த வண்ணங்களையெல்லாம் என்னுடைய ஓவியத்தின்மீது கொட்டியிருந்தான்.  எனக்கு எல்லைமீறிய கோபம் வந்துவிட்டது.

     நான் சீனுவின் மீது எதைஎதையோ வீசி எறிந்தேன்.  நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.  அம்மா அங்கே வந்து என்னை சமாதானப்படுத்த முற்பட்டார்.  நான் சீனுவின்மேல் அளவு கடந்த ஆத்திரம் கொண்டிருந்தேன்.  அடுத்த நாள் நான் சீனுவை பார்க்க விரும்பவில்லை.  அவன் எனக்காக வாசலில் காத்திருந்தான்.  நான் அவனைக் கவனிக்காதவாறு சென்றுவிட்டேன்.  அவன் ஏமாந்துபோனது பார்வையில் நன்கு தெரிந்தது.  அவன் விழிகள் ஒரு தொய்வினால் ஏற்பட்ட குழப்பமான மனநிலையை எனக்குக் காட்டியது. நான் மாலையில் வீட்டிற்கு வந்த பின்னும் அவனுடன் பேசவில்லை, விளையாடவும் இல்லை.  அவன் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தபோது கூட நான் அவனை லட்சியம் செய்யவில்லை.  ஆனால் நான் ஏன் அவனை கோபிக்கவேண்டும்? என்ற கேள்வி என்னை தூங்கவிடாமல் செய்தது.

     நான் அவனை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.  அவன் என்னை எவ்வளவு பாதித்திருக்கிறான்.  நான் என்னுடைய உயிரற்ற ஓவியத்திற்காக என்னுடைய உயிருள்ள சகோதரனைப் போல இருந்த என்னுடைய சீனுவை திட்டிவிட்டேன்.  நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.  நாளைக்கு முதல் காரியமாய் நான் சீனுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைத்துக்கொணடே தூங்கிப்போனேன்.  காலையில் நான் எழுந்ததும், சீனுவை தேடினேன்.  ஆனால் அவன் வீட்டில் இல்லை.  நான் அதிர்ச்சியடைந்தேன்.

     அம்மா, “அவன் எங்காவது வெளியே சென்றிருப்பான்.  நீ பள்ளிக்குச் செல்” என்றார்.  நான் அரைமனதோடு சரி என்று பள்ளிக்குச் சென்றேன்.  எனக்கு பள்ளியில் இருப்புக் கொள்ளவில்லை.  அன்று பள்ளி ரொம்ப நேரம் நடைபெறுவதாக எனக்குத் தோன்றியது.  பள்ளிவிட்டதும் வீட்டிற்கு ஓடினேன்.  ஆனால் சீனுவை அங்கு காணவில்லை.  நான் எல்லா இடங்களிலும் தேடினேன்.  அவனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.  நான் வீட்டிற்கு வந்து அழ ஆரம்பித்துவிட்டேன்.  அம்மா, “சீனு வருவான் நீ அழாதே” என என்னை சமாதானம்செய்து பார்த்தாள்.  ஆனால் அவன் தொலைந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன.  “எனவே அவனைத்தேடித்தான் நான் செல்கிறேன்,” எனக்கூறி அவள் என்னை உற்றுப்பார்த்தாள்.  பின் நீண்ட பெருமூச்சுவிட்டவாறு மீண்டும் உட்கார்ந்து இருந்தாள்.  என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்தபோது எனக்கு ஓர் அழகிய இரஷ்ய கதை ஞாபகத்திற்கு வந்துவிட்டது.  நான் அவளிடம் என்ன பேசவேண்டும் என்ற நினைப்பில்லாமல் அவளைப் பார்த்துகொண்டேயிருந்தேன்.  திடீரென நினைவு வந்தவனாக “நீ வீட்டிற்குப் போகலையா?” என்றேன்.  அவள் என்னை வித்தியாசமாக பார்;த்தாள்.  அவளின் கதையை அறியாதவன் போல விழித்தேன்.  அவள் என்னைக் கண்டு ஏமாந்து போயிருப்பாள்.  “உன் அம்மா அப்பா உன்னை தேடுவார்களே” என்றேன்.  அவள் முகம் இறுக்கத்துடன் சொன்னாள் “இல்லை அவர்கள் சீனுவைத் தேடாதது போல் என்னையும் தேடமாட்டார்கள்,” என்றாள்.  நான் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று சிந்தித்தேன்.  எனவே அவளை ஏமாற்ற விரும்பினேன்.  “ஒருவேளை நீ இங்கு வந்திருக்கும்போது சீனு உன் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் இல்லையா? எனவே நீ உன் வீட்டிற்குப் போய்ப் பார்” என்றேன். அவள் என்னைப் பார்த்து சற்று யோசித்து, “நிச்சயமாக சீனு வந்திருப்பானா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.  நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டு “ம்” என்றேன்.  அப்படின்னா நான் என் வீட்டிற்கு போகிறேன் எனக்கூறி வேகமாக எழுந்து கீழே இறங்க ஆயத்தமானாள்.  நான் அவள் போவதை விரும்பவில்லை.  ஆனால் அவள் போய்த்தான் ஆக வேண்டும் என ஏதோ ஒன்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது.  அவள் சாலையில் இறங்கியவுடன் “நீ பத்திரமாக உன் வீட்டிற்குப் போ.  அங்கு உனக்காக சீனு காத்திருப்பான்” என்று சொன்னேன்.  அவள் அதை ஏற்று தலையசைத்தாள்.  பின் அவளின் முகம் மெல்ல சந்தேகம் கொண்டதுபோல் என்னைப் பாhத்து, “அங்கிள், அப்படி சீனுவை நீங்கள் எங்காவது பார்த்தால் என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” என சொல்லி தன் இரண்டு சிறிய கண்களால் என்னை பார்த்து சிமிட்டிவிட்டு அவள் சென்றாள்.  வெகுநேரம் ஆகிவிட்டது.  என்னவோ தோன்றியது போல அவள் சென்ற பாதையைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தேன்.  பிறகு மெல்ல நடந்து கொண்டே யோசிக்கையில் நான் படித்த கதைகள், நாவல்கள் யாவும் பொய்யெனத் தோன்றியது.  அவைகள் எனக்கு ஞாபகத்தக்கு வரவில்லை. நான் அவற்றின் மீதான ரசனையைத் தொலைத்தவிட்டேன். இது அவளின் சந்திப்பால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.  நான் படித்த கதாபாத்திரங்கள் யாவும் இன்று அந்த குழந்தையின் சந்திப்பிற்குப் பின் வெறுமையடைந்துவிட்டன என எண்ணத்தோன்றியது.

     இவ்வளவு படிப்பு இருந்தும் ஏன் என்னால் என்னுடைய தலைமையாசிரியர் கொடுத்த அந்த சின்ன அட்டையின் வாhத்தைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற காரணம் விளங்கியது.  சில விஷயங்களை நாம் எப்போது சுவாசிக்கிறமோ? அல்லது அதுவாகவே மாறுகிறமோ அப்பொழுதுதான் நம்மால் சிலவற்றைப் புரிந்து கொள்ள்முடியும்.  அந்த அட்டையின் வரிகளைப் பார்த்து சிரித்தவாறு அதனை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன்.  அதில் உணரமட்டுமே முடிந்த உண்மை ஒன்று பொதிந்து இருந்தது.  அந்த வார்த்தையை உணர்ந்தால் மட்டுமே அந்த உண்மையை புரிந்துகொள்ள முடியும்.  அந்த அட்டையின் வரிகள் மகத்துவம் வாய்ந்தவை.  வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு அல்ல.  சுவாசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் அந்த அட்டையின் வரிகள் புரியும்.

“குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்! ஏனெனில்

விண்ணகத்தின் அரசு அவர்களிடத்தே உள்ளது”.

Series Navigationஅந்தநாள் நினைவில் இல்லை…..பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *