கோடுகள்

அந்தக் கவிஞன் கோடுகளை

முக்கியமாக நினக்கிறான்.

அவன் இணைகோடுகள்

என எண்ணிக் கரம் கோர்த்தவை

குறுக்கு வெட்டுக் கோடுகளாய்

மாறியது அவனுக்கு ஒரு சோகம்.

மணமக்களை இணைகோடுகளாய்

என்று வாழ்த்துவது

என்றுமே சேர முடியாதவர்கள்

என்றுதான் பொருள்படும்.

அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று

வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள்.

தண்டவாளங்களும் மேலே தொங்கும் 

மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர்

இணைகோடுகள்

என்று சொல்லித் தந்தார்

இரண்டுமே ஆபத்தானவை.

குறுக்கு வெட்டுக்கோடுகளும்

வாழ்வில் முக்கியமானவை.

அனுபவம் கற்றுத் தருபவை

கண்டிப்புகளும் சங்கடங்களும்

அனுபவம்தானே

இலக்குவன் கிழித்த கோட்டை

சீதை தாண்டிவந்து

துன்பம் கண்டாள்

அதனால்தான் எறும்பு

தாண்டமுடியாக் கோட்டை

இலட்சுமண ரேகை என்கிறார்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது

ஒரு திரைப்படம்தான் என்றாலும்

அது ஒரு முக்கியமான பிரச்சனை

எப்பொழுதும் சில இடங்களை

மட்டும்தான் நிரப்ப முடியும்

எதை எவரை இட்டு வேண்டுமானால்

நிரப்ப நினைக்கிறார்கள்

சில நிரப்ப முடியாதவை

கோடு என்றால் தந்தம்

என்றும் பொருளுண்டு.

‘கோட்டுக்கல் கட்டில்மேல்’

என்று ஆண்டாள் பாடியுள்ளார்.

செங்குத்துக் கோடுகள்

இல்லையென்றால் கொடிகள்

பந்தல்கள் இல்லவே இல்லை

படுக்கைக்கோடுகள் இல்லையெனில்

காலில் விழுதல் இல்லை

செங்குத்துக் கோடா

படுக்கைக்கோடா

எதைத் தீர்மானிக்க வேண்டும்

என்பதில் கவனம் தேவை.

Series Navigationநடைதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு