கோணங்கிக்கு வாழ்த்துகள்

Spread the love

konangi 

மீட்சி என்னும் சிற்றிதழில்தான் நான் கோணங்கியின் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். அதில் அவர் எழுதியிருந்த மதனிமார்கள் கதை என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. நான் அதை மிகவும் விருப்பத்துடன் வாசித்தேன். தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் ஒரே வேகம். சொந்த ஊர் ஏக்கமும் சொந்த மனிதர்கள் ஏக்கமும் எனக்குள் எப்போதும் நிறைந்திருக்கும் உணர்வுகள் என்பதால் அந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நான் அப்போது ஹோஸ்பெட் என்னும் ஊரில் வேலை பார்த்துவந்தேன். அந்த ஊரில் வெங்கடேஷ் என்னும் நண்பரிருந்தார். வழக்கறிஞர் பட்டம் முடித்த கையோடு ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராக வேலை பார்த்துவந்தார். இரவு கவிந்ததும் அவருடைய அலுவலகத்துக்குச் சென்று பேசிக்கொண்டிருப்பேன். அவருடைய அலுவலகத்திலிருந்து சிறிது தொலைவில் துங்கபத்திரை நதியின் கால்வாயொன்று ஓடிக்கொண்டிருந்தது.

அன்று இரவு பேசச் சென்றபோது, மீட்சி இதழை எடுத்துச் சென்று கோணங்கியின் கதையைப் படிக்குமாறு சொன்னேன். அவர் அப்போதே அதைப் படித்துவிட்டு என்னைப் பார்த்தார். அவர் கண்களில் அவருடைய பால்யம் சுடர்விட்டு ஒளிர்வதையும் முகம் கனிந்து குழைவதையும் என்னால் உணரமுடிந்தது. “ரொம்ப நல்லா இருக்குது சார்” என்றார். பிறகு, “ஒரே ஒரு மதனியத்தான் அவனால பார்க்கமுடியுது. அதுவும் ரயிலடியில. ஆனா அந்த மதனி அவன பார்க்கலை. மத்த மதனிமாருங்களயெல்லாம் அவன் மனசுக்குள்ள நெனச்சிகிட்டே ஊருக்குப் போறான். ஆனா ஊருக்குள்ள அவுங்க யாருமே இல்ல. அவனத் தெரிஞ்சவங்களே இல்ல. நல்ல காண்ட்ராஸ்ட். அருமையான பின்னல்” என்று மிகவும் உயர்வாகப் பேசினார். பிறகு நாங்கள் இருவருமே மாற்றிமாற்றி அக்கதையைப் பகுதிபகுதியாகப் பிரித்துப்பிரித்து அலசினோம். அந்த உரையாடலின் போக்கில் நான் ஒரு வரியைக் கண்டுபிடித்தேன். அதை அவரிடம் படித்துக் காட்டினேன். “அந்த ரயிலடியில பூ விக்கற மதனிய பத்தி எழுதியிருக்கிற வரியை பாருங்க சார். அவ பூர்வீகத்த பத்தி ரெண்டு வரி, அவ தோற்றத்த பத்தி ரெண்டு வரின்னு தாவித்தாவி போயி அவ கூடையில பூப்பந்து வச்சிருந்தாள்னு சொல்லிட்டு, கடசியா பூ வாடமலிருக்க ஈரத்துணியால சுத்திவச்சிருந்தாள்னு சொல்லி முடிக்கறாரு. அந்த வரியிலதான் கதையுடைய உயிரே இருக்குது” என்று பரவசத்தோடு சொன்னேன். அவர் என்னைப் புரியாமல் பார்த்தார். “பூ வாடமலிருக்க ஈரத்துணியால சுத்தி வச்சிருந்தாள்ங்கறது ஒரு தகவல்தானே, இதுல உயிர் எங்க இருக்குது?” என்று தயக்கத்துடன் கேட்டார். ”இருக்குது சார். பூ வாடாம இருக்க ஈரத்துணி இருக்குது. ஆனா வாழ்க்கையை வாடாம வச்சிக்க என்ன சார் இருக்குது இந்த உலகத்துல? அது இல்லாததாலதான சார், அந்த செம்பகம் ஊர விட்டு ஓடி போறான்? அந்த மதனிமாருங்க எல்லாருமே திசைக்கொருத்தவங்களா காணாம போயிட்டாங்க. வாழ்க்கையை வாடாம வச்சிக்கற ஈரத்துணி இந்த உலகத்துல எங்க சார் கிடைக்கும்?” என்றேன். அவர் சட்டென்று என்னைத் தோளோடு அழுத்தி அணைத்துக்கொண்டார். “அருமை சார். அது உண்மையிலயே கதையுடைய உயிர்தான் சார்” என்று மீண்டும்மீண்டும் சொன்னார். அடுத்த கணமே ”ஈரத்துணியத் தேடித்தானே சார் நான் இந்த ஊருக்கு வந்திருக்கன், நீங்களும் வந்திருக்கிங்க, இல்லையா?” என்று அந்தக் கதையை வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

கோணங்கியின் பெயர் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டதால், அடுத்து அவருடைய படைப்பை எந்த இதழில் பார்த்தாலும் படிக்கத் தொடங்கினேன். வசீகரமான அவருடைய கதைமொழி என்னை மிகவும் கவர்ந்தது. 1987-ல் அவரை முதன்முதலாக சென்னையில் ஒரு இலக்கியக்கூட்டத்தில் பார்த்தேன். வேர்கள் என்னும் அமைப்பின் சார்பாக சிறுகதைகளுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் கோணங்கி பேசினார். அவருடைய பேச்சு சிறப்பாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் அவரிடம் என்னை நானே அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடினேன். ஐந்துபத்து நிமிடங்கள்மட்டுமே பேசியிருப்பேன். அதற்குள் யாரோ அவருடைய ஊர்க்காரர் ஒருவர் வந்து அழைத்துச் சென்றுவிட்டார். அவருடைய நட்பார்ந்த முகமும் அதிரடியான சிரிப்பும் மறக்கமுடியாதவை. அவருக்குள் நூறு ஆட்கள் ஒரே சமயத்தில் குடியிருப்பதுபோல பலவிதமான உடல்மொழியை அவர் வெளிப்படுத்தும் விதம் அவரையே கவனிக்கத் தூண்டும் காந்தசக்தி கொண்டது.

அவருடைய முதல் தொகுதி மதனிமார்கள் கதை என்னும் தலைப்பிலேயே வெளிவந்தது. அதே ஆண்டு ஒரு சில மாதங்கள் கழித்து என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தது. அவருடைய தொகுப்பில் கருப்பு ரயில் என்னும் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அச்சிறுகதையின் வாசிப்பனுபவத்தைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதினேன். கோவை ஞானியை ஆசிரியராகக் கொண்ட நிகழ் என்னும் இதழில் அக்கட்டுரை வெளிவந்தது. அத்தொகுதியை அடுத்து கொல்லனின் ஆறு பெண்மக்கள் என்னும் தொகுதி வெளிவந்தது.

எண்பதுகளில் தமிழிலக்கியம் என்னும் தலைப்பையொட்டி மதுரை பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் கருத்தரங்கம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடைபெற்றது. அங்கே கோணங்கியை மீண்டும் சந்தித்தேன். எல்லோரும் அந்த இடத்திலேயே தங்கியிருந்ததால் நீண்ட நேரம் விரிவாகப் பேசமுடிந்தது. தனிமையில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் படித்த வங்கமொழி நாவல்களைப்பற்றி நெடுநேரம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆரோக்கிய நிகேதனம், வனவாசி, பதேர் பாஞ்சாலி, நீலமோதிரம் ஆகிய நாவல்கள் அவரை வெகுவாகக் கவர்ந்திருந்தன. ”இன்னும் மறுபதிப்பு காணாம எவ்வளவோ நாவல்கள் கெடக்கு. நான் அதயெல்லாம் தேடித்தேடி படிச்சிட்டிருக்கேன். அதுக்காகவே ஊரூரா போறேன். அதெல்லாம்தான் நமக்கு மூலதனம்” என்று உற்சாகமாகச் சொன்னார். ”நீங்களும் இதயெல்லாம் அவசியமா படிக்கணும்” என்றார். அப்போதுதான் அவர் தான் ஏற்கனவே பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. ஆனால் அவர் அதை மகிழ்ச்சியுடன் சொன்னார். “இப்படி சுதந்திரமா இருக்கறதுதான் பிடிச்சிருக்குது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். எதிர்பாராமல் ஒரு கணத்தில் அவரே எழுதியிருந்த பழைய வரி நினைவில் மோதியதில் சில கணங்கள் பேசாமலேயே நின்றிருந்தேன். அவர் “என்ன?” என்றார். நான் ஒன்றும் இல்லை என்பதன் அடையாளமாக தலையை அசைத்துக்கொண்டேன். அவர் என் தோளைத் தட்டிவிட்டுச் சிரித்தார். “வாய்யா, ஒரு டீ சாப்பிடலாம்” என்று எழுந்துகொண்டார். “வாய்யா” என்று ஒரு அழுத்தத்தோடும் வாஞ்சையோடும் அழைத்த குரல் இன்னும் என் செவியில் ஒலித்தபடியே உள்ளது.

கதைகூறுமுறையில் அவர் வேறொரு பாணியை உருவாக்கி, அத்திசையில் அவர் பயணம் செய்யத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த ஆதரவு அவரை மிகவும் உற்சாகப்படுத்தியது. பட்டுப்பூச்சிகள் உறங்கும் இரண்டாவது ஜாமம் அத்தகைய பாணியில் அமைந்த படைப்புகள். என்னால் அந்தப் படைப்புகளோடு நெருக்கமாக உறவுகொள்ள இயலவில்லை என்றாலும் அவற்றை முடிந்தவரையில் தொடர்ந்து படித்துவருகிறேன்..

அதற்கடுத்து ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரை நான் சந்தித்தேன். சந்தித்த இடம், காவ்யா சண்முகசுந்தரம் அவர்களுடைய வீடு. மிகமுக்கியமான சிறுகதை ஆளுமையாக அவர் அப்போது உருவாகிவிட்டிருந்தார். தமிழகம் முழுக்க அவருக்கு வாசகர்கள் இருந்தார்கள். இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எட்டரை மணிக்கு அவரைப் பார்க்கச் சென்றேன். ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பேசினார். அவர் நடத்திய கல்குதிரை அனுபவங்களையெல்லாம் அப்போது சொன்னார். தாஸ்தாவெஸ்கி, மார்க்யூஸ் ஆகிய உலக ஆளுமைகளுக்கு அவர் மிகப்பெரிய தொகைநூல்களைத் தயாரித்து வெளியிட்டுருந்தார். அவையனைத்தும் ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய வேலை. ஆனால் அவர் ஒற்றையாளாக நின்று கடுமையாக உழைத்து அவற்றைத் தயாரித்திருந்தார். பல நண்பர்கள் அந்த ஆளுமைகளைப்பற்றி விரிவான கட்டுரைகளை அத்தொகைநூல்களில் எழுதியிருந்தனர். சிலர் படைப்புகளை மொழிபெயர்த்திருந்தார்கள். அந்தப் பேச்சுக்குப் பிறகு, அவருடைய சில பயணங்களைப்பற்றியும் சொன்னார்.

அவர் கண்டுபிடித்த பாணி, அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. தன் பிற்காலத்துப் படைப்புகள் அனைத்தையும் அந்தப் பாணியை ஒட்டியே எழுதினார். அவருடைய நாவல்கள் அனைத்தும் அவ்வகையிலேயே வெளிவந்தன. அவருடைய அசையாத நம்பிக்கையும் இடைவிடாத உழைப்பும் போற்றுதற்குரியவை.

அவருக்கு விளக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்ததும் முப்பதாண்டு கால வாசிப்பு நினைவுகள் நெஞ்சில் அலைமோதுகின்றன. பேருந்துப் பயணத்தில் மதனிமார்களின் நினைவுகளை அசைபோடும் செம்பகத்தைப்போல, அந்தப் பழைய நினைவுகள் அசைபோடத் தூண்டுகின்றன. துங்கபத்திரை நதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கால்வாயோரம் தேநீர் அருந்தியபடி கோணங்கியின் கதையைப்பற்றி பகிர்ந்துகொண்ட என் பழைய நண்பர் வெங்கடேஷை அன்புடன் நினைத்துக்கொள்கிறேன். இன்று அவர் உயிருடன் இல்லை. அவருக்குப் பிடித்த ஒரு கதையை எழுதிய படைப்பாளிக்கு ஒரு விருது கிடைத்திருப்பதை அறிந்தால் அவர் நிச்சயம் மகிழ்ந்து வாழ்த்தக்கூடும். நானும் வாழ்த்துகிறேன். வாழ்த்துகள் கோணங்கி.

Series Navigationஅழியாச் சித்திரங்கள்சுத்த ஜாதகங்கள்