“சமரசம் உலாவும்……..”

இந்துக்கள் தேசத்தில்
சமரசம்
ஒரு கெட்ட வார்த்தை
ஆகிப்போனதன்
வரலாறு என்ன?

நான்கு வேதங்களும்
நான்கு ரகசிய மொழிகளாய்
(நான் மறை(ப்பு)களாய்)
இருந்தது
வெளிச்சத்துக்கு வந்ததன்
காரணமே
இந்த வரலாறு.

இப்போது
அதன் உட்பொருளை
உற்றுப்பார்க்கத் துவங்கிவிட்டனர்.
அதுவும்
ஆங்கிலச்சன்னல் மூலம் தான்.
இந்து மதம்
உண்மையில்
சிந்து மதம்.
சிந்து என்ற தமிழ்ச்சொல்லில்
பிறந்த ஆற்றுப்படுகையின்
நகர்களில் இருந்து
தோன்றியது தான்.
ந‌க‌ர் எனும் தொழில் ஆகுபெய‌ரே
இங்கு ந‌க‌ர் ஆயிற்று
அதுவே
தேவ நாகரியும் ஆயிற்று.

வேத‌ங்க‌ளும் உப‌நிஷத‌ங்க‌ளும்
“க‌ட‌வுள்” என்ற‌ சொல்லின்
க‌ என்ற‌ எழுத்தையே
இன்னும் தொட்டு முடிக்க‌வில்லை.
அத‌ற்குள் அதை க‌ல்லுக்குள்
சிறைசெய்து
சாதிவ‌ர்ண‌மெட்டுக‌ளில்
சாத்திர‌ங்க‌ள் செய்து
ஆத்திர‌ங்க‌ள் மூட்டும்
செய‌ல்க‌ளே
இந்த‌ தேச‌த்தில்
த‌லைவிரித்து ஆடுகின்ற‌ன‌.
ச‌ம‌ர‌ச‌ம் என்றால்
மானிட‌நேய‌ம் ம‌ல‌ர்ச்சியுறுவதே ஆகும்

ரிக்வேதம்
ஆவேச கீதங்களால்
ஆக்கப்பட்டிருந்ததை
சமன் எனும் சாம கானங்களால்
அமைதிப்படுத்த வந்ததே
சாமவேதம்.
இதற்கு தந்தை போன்றவர்
கோதமன் எனும் கௌதமன்.

சந்தியா வந்தனங்களால் ஆன‌து
சாமவேதம்.
சந்தியா வந்தனங்களை யெல்லாம்
“ஐந்து காலத் தொழுகைகளாக”
அன்போடு
மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்.
அப்பொது
ராமரும் பாபரும்
பந்து மித்திரர்கள்
ஆகிவிடுவார்கள்.

ஒரு ப‌க்க‌
வேத‌த்திற்கோ
இன்னொரு ப‌க்க‌
மற்ற மொழி வேதங்களுக்கோ
இதைசொல்ல‌வில்லை.
எல்லாப்ப‌க்க‌ங்க‌ளிலும்
நிறைந்திருக்கும்
ம‌னித‌ம் ம‌லர்வ‌த‌ற்கே
இந்த‌ ச‌ம‌ர‌ச‌ம்.

“சோம”க்கள்ளின்
ஊறலில்
“தாக்கு
பழிக்குப்பழி வாங்கு”
என்ற‌ போர்ப்ப‌றைக‌ளுக்கு
எதிர்ப்ப‌றை முழ‌க்கிய‌தே
சாம‌வேத‌ம்.

“சமன்செய்து சீர்தூக்கும்
கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கணி”

ஏன்
“சமன்””கானங்களால்”
(கானுறை ஒலிப்பாட்டுகள்
எனும்
சிந்து வெளி காலத்து
முல்லைப்பாட்டுகளே”)
அந்த சாமவேதம் எனும்
“சமண”ப்பாட்டுகள்
ஆகியிருக்கலாம் அல்லவா?

நான்கு வேதங்களும்
“மறைக்கப்பட்ட ஒலிகளாக”
நமக்கு கேட்கப்படுவது
சிந்துவெளி காலத்து
முதல் தமிழ் வடிவத்தின்
முதுகில்
அப்புறம் வந்த‌
ஐரோப்பிய மொழிகள்
சவாரி செய்ததின் வரலாறே ஆகும்.

தமிழே
உள்மூச்சாகிப்போன‌
திராவிட மொழிகள்
என்று சொல்லப்படும்
வடமொழிக்கலவையே
வேத மறை மொழிகள்.

அதனை உள்ளுணர்ந்த‌
தூய தமிழ்ப்புலவன்
கபிலருக்கும்
அதைப்போலவே
தமிழை
ஓலைச்சுவடிகளில்
ஒற்றி உணர்ந்த‌
இன்னோரு தூய தமிழன்
உ.வே.சா ஐயர்
அவர்களுக்கும்
தமிழ் அரசு
விருது கொடுத்து
பாராட்டியதை
எவ்வ‌ள‌வு
பாராட்டினாலும் த‌கும்.

ஆரிய திராவிட உராய்வுகள்
ஆறிப்போனவையாகவே
இருக்கட்டும்.

எம்மதமும் சம்மதம் தான்
என்பதும் ஒரு மதம் தான்.
எம்மதமும் சம்மதம் இல்லை
என்பதும் ஒரு மதம் தான்.
இதுவே இப்போது
நமக்கு வேண்டிய
ஜனநாயக மதம்.

இந்த‌ புதிய‌
மனித அன்பு மதமே
சம்மதம் என்பதன்
சாரம் தான் “சமரச”மதம்.
இதை போலி என்று சொல்வது
ஒரு சண்டைக்கு கூப்பிடுவது
போன்றது தான்.
அந்த “சாம”வேதத்தையே
போலி வேதம் என்று
சொல்வது போலத்தான்.

வேண்டாம் மதச்சண்டை.
அன்போடு கைகோர்க்கும்
மனித நேயப்பூச்செண்டே போதும்.

Series Navigationபழமொழிகளில் கிழவனும் கிழவியும்எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை