“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”

Spread the love

கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே ஸ்னானா”. இச்சடங்கில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின்மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தம்மேல் படும்போது சுப்பிரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைத்து தோல்வியாதிகளும் மற்ற பரிகாரபலன்களும் கிடைக்குமென்பதே அந்த நம்பிக்கை. இது காலம்காலமாக தொடரும் உற்சவம். இது போக, இன்னும் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் ‘கழிவுத்துணிகளை’ தலித்துகள் மட்டுமே சேகரித்து துவைத்து கொடுக்கும் பழக்கமும் தொன்று தொட்டு வருகிறது. நல்லவேளை இதை எவரும் யூ ட்யுபிலோ இந்துவிலோ போடவில்லை. மடே ஸ்னானா என்று சடங்கு மட்டுமே 01.12.2011 வெளியில் தெரிய வந்துவிட்டது.
மடே ஸ்னானா நம்மை வியப்புக்குள்ளாக்கவில்லை. பலரும் பல சடங்குகளை, நல்லதோ கெட்டதோ நடாத்திக் கொண்டுதானிருப்பார்கள். கெட்ட்தென்றால், அதாவது சமூகத்துக்குத் தீங்கிழைப்பதென்றால், அதை மக்களுக்கு எவராவது எடுத்துச் சொல்ல வருகிறார்களா எனபதே நாம் பார்க்க வேண்டியது. இந்து நாளிதழ் 01.12.2011 தேதி இச்செய்தியை வெளியிட்டது. காணொளி யூ.ட்யுபிலும் வெளியாகி இருக்கிறது. ஹெட்லைன்ஸ் டுடே என்ற இந்திய தொலைக்காட்சியிலும் தொடர்ந்து ஓர்நாள் முழுவதும் காட்டிக்கொண்டேயிருந்தார்கள்.
தி ஹிந்துவில் இதற்கு வந்த பின்னூட்டங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இந்து இணைய நாளிதழில் அவைகள் போடப்பட்டும் வருகின்றன. இதில் நிறையப் பின்னூட்டக் கருத்துக்கள் பிராமணர் ஜாதியில் பிறந்தவர்களிடமே வருகிறது. அவை இருவகை.
1. தான் இச்சாதியில் பிறந்ததற்காக வெட்கப்படுவதாகவும் இப்படிப்பட்ட சாதீய சடங்குகள் ஒழிக்கப்படவேண்டுமென்பதாகவும்;
2. இச்சடங்கு ஒழிக்கப்படக்கூடாது. இவை நம் பாரம்பரியத்தைப் போற்றுகின்றன. பிராமணர்களும் இச்சடங்கில் பங்கு பெறுகிறார்கள் எனபதைக் கவனிக்கவும். இதில் கலந்து கொள்ள எவரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. வருணங்கள் நம் மதத்தில் அனாதி. இசுலாமியரும் கிருத்துவரும் நம்மிடையே சிண்டு முனைய இச்சடங்கை விமர்சனம் பண்ணுகிறார்கள்.
பின்னூட்டக் கருத்திட்டோரில் இருவரே இசுலாமியர்கள் நான் படித்த வரை. கிருத்துவர்களில்லை. அப்படி யாதேனுமொருவர் எழுதியிருந்தால், வெளிநாட்டுப் பணத்தைப் பெற்று எம்மதத்திற்கு எதிராகப் விஷமப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள் என்ற எதிர்கருத்தைப் வைத்து இச்சடங்கிற்கு நியாயம் கற்பிப்பார்கள்.
இச்சடங்கை எதிர்த்த கருநாடக பி.சி.ஜாதி அமைப்பின் தலைவர் தாக்கப்பட்டிருக்கிறார். அப்படத்தையும் இந்து வெளியிட்டிருக்கிறது.. (நீங்கள் மேலே காண்பது) அவரைத் தாக்கியவர்கள் அச்சடங்கில் பங்கு பெற்ற பி.சிக்களும் தலித்துகளுமே எனறவுண்மை பேரதிர்ச்சி. இதிலிருந்து என்ன தெரிகிறது? இப்படிப்பட்ட வருணக்கொள்கை வழியாக வந்த ‘பிராமணர் என்போர்’ பிறப்பாலே புனிதமானவர்கள் என்று நம்ப்பட்டும் அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் தம்மைப் புனிதப்படுத்துகின்றன என பிற ஜாதி மக்களை நம்ப வைத்தும் பின்னர், அதை என்று தோன்றியதென்றே தெரியாத தொன்மையான மதச்சடங்கு என்றும் புனிதமென்றும் விஷமப் பிரச்சாரம் பண்ணப்படுகிறது. மதச்சடங்குகளை கேட்பதற்கு மற்றவர்கள் யார்? “எம் பாரம்பரியத்தை கேள்வி எவரும் கேட்கமுடியாது! என்றும் பின்னூட்டக்கருத்துகளை வைக்கிறார்கள். கருநாடக உட்துறை அமைச்சர் ஆச்சாரியா (பிராமணர்) ‘இச்சடங்கை நிறுத்துக்கூடாது. இது நம் பாரம்பரியம்’ இதைச் சட்டம் போட்டு நிறுத்தினால் இந்துக்கள் மனங்கள் புண்படும் என்கிறார்கள்.
ஏன் தமிழ்நாட்டில் இச்சடங்கு நடைபெறவில்லை? காரணம் பெரியார். அவர் பார்ப்பனத் துவேசத்துக்குக் காரணமில்லை. பார்ப்பனர்களே காரணம் என்பது இதுபோன்ற சடங்குகள் நடப்பதினாலும் இதற்கு வரும் ஆதரவுகளினாலும் தெளிவாகிறது.. இவை போன்ற பலச்சடங்குகள் மதத்தின் பெயரால் நடந்தேறின. இப்போதே இப்படியென்றால், அப்போது? மக்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார்கள். இதுவே பார்ப்பனத் துவேசத்தின் கரணிகளாகும். உள்ளுக்குள்ளே குமைந்து கொண்டிருந்த இத்துவேசத்துக்குக் குரலாக வெளியில் ஒலித்தவரே பெரியார் ஈவேரா. பிராமணரல்லாதோரும், பிராமணர் ஜாதியில் பிறந்தாலும் மக்களைனைவரும் சமம் என்ற நினைப்புள்ளோரும் பெரியாருக்கு நன்றி சொல்வார்கள். ஐயமில்லை.
வருணக்கொள்கையில் தவறில்லை; அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென வைதீகப் பிராமணர்களும் அவர்களுக்கு அணுக்கலிருக்கும் மேற்சாதியினரும் பலவழிகளில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் எவருமே இக்கொள்கையால் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளை கேட்பதில்லை. எக்கொள்கையும் இரு பரிமாணங்களைக் கொண்டது. அவை:
1. கொள்கையென்னும் தியரி
2. கடைபிடிக்கப்படும்போது ஏற்படும்/ஏற்பட்ட விளைவுகள்.
இன்று FDI எதிர்க்கப்படுகிறது ஏன்? எதிரான விளைவுகள் ஏற்படுமென்ற அச்சத்தாலே. மனிதர்களே இப்படியென்றால் கிருஸ்ணபரமாத்மா அப்படி எதிர்னோக்கவில்லையென்று சொல்லமுடியுமா வருணக்கொள்கையை கீதையில் பிராமணன் என் தலையிலிருந்து பிறந்தான்; சூத்திரன் காலிலிருந்து, தலித்து என்னிடம் பிறக்கவேயில்லை என்றெல்லாம் சொல்லும்போது? அல்லது, இன்னின்ன ஆளுக்கு இன்னின்ன குணம் அடைப்படையில் அமையும் என்று சொல்லுமிடத்து?
முக்காலமும் தெரிந்ததுதானே தெய்வம்? அத்தெய்வத்துக்குத் தெரியாததா எவையும் நிரந்தரமல்ல; இக்கொள்கையும் ஒரு நாள் ஒவ்வாமல் போகுமென்று? இருந்தும் ஏன் தெய்வத்தின் மேல் போட்டார்கள்? தெய்வத்தின் பெயரால் ஏற்ற தாழ்வுகளை எழுப்பினால் தாழ்வுற்ற மக்கள் மருண்டுவிடுவார்கள் என்பதனாலேயே.!!
இக்கொள்கை சாதிகளுக்கும் சாதிச்சடங்குகளுக்கும் (மட ஸ்னானா போன்று) ஒருவர் எந்த தொழிலுக்கு இலாயக்கு என்று அவர் பிறப்பிலே இருக்கிறது என்று புனைந்து, தலித்துகளின்மேல் தீண்டாமையைத் திணிப்பதற்கும்தானே வழிகோலின? அதன் துர்ப்பலனை இன்றும் அனுபவிக்கிறார்களே தலித்துகள்? எதிர்க்குரல்களை எழுப்பக்கூட தமக்குத் தகுதியில்லையெனவும், எழுப்பினால் “சாமிக்குத்தம்” எனவும் தலித்துகள் நம்பினார்கள். மட சேனாவை தாமே விரும்பி பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் புரண்டு சுப்பிரமணிய சுவாமியின் அருளைப் பெறுகிறார்கள் என்கிறார்கள். ‘தாமே விரும்பி’ பெண்கள் உடன்கட்டையேறினார்கள் என்றும் சொன்னார்கள்!

*******

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 23கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘