சின்னப்பயல் கவிதைகள்

ஆள்காட்டி மழை

ஜன்னல் கம்பிகளில்
தொற்றிக்கொண்டிருந்த
மழை நீரை
ஆள்காட்டி விரல் கொண்டு
ஒரு முனையிலிருந்து
மறுமுனை வரை
அழுத்தி வடித்து விட்டேன்.
மறு நாள் மழை
வரவில்லை.
ஆள்காட்டி விரல்
காரணமாயிருக்குமோ ?

அஞ்சறைப்பெட்டி

அஞ்சறைப்பெட்டியில்
அம்மா போட்டு வைத்த
மீதக்காசில்
சீரகத்தின் மணமும்
கடுகின் வாசமும்
வெந்தயத்தின் நெடியும்
மஞ்சள்பொடியின் கமறலும்
மிளகின் காரமுமாக
அடித்த வாசம்
இன்னும் என் மனதினுள்
வட்டமடிக்கிறது
அந்தக்காசில்
வாங்கித்தின்ற
மிட்டாயின் மணம்
ஏனோ நினைவில் இல்லை.

சின்னப்பயல்
– chinnappayal@gmail.com

Series Navigationஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமிகாகித முரண்