சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு

முனைவர் என்.பத்ரி

           ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவன் வாக்கு.விவசாயிகளை போற்றும் வகையில் வள்ளுவன் உழவுக்கென்றே ஒரு அதிகாரத்தை ஒதுக்கி குறள்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் எண்ணற்ற தொழில்களை மக்கள் செய்து வந்தாலும்,மனித இனம் உயிர் வாழ உணவைத்தரும் விவசாயத்தொழிலே மிக முக்கியமானதாகும்.ஒவ்வொரு தைத்திங்கள் முதல் நாளன்றும் விவசாயிகள் தமது விவசாயம் செழிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்  விதத்தில் சூரியனுக்கும்,கால்நடைகளுக்கும் சிறப்பு வழிபாடுசெய்வது தமிழர் பண்பாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

விவசாயிகளின் சமூகப்பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘விவசாயிகள் தினம்’ ஆண்டுதோறும் முன்னாள் இந்திய பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளன்று விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த முன்னாள் பிரதமா் சரண் சிங் 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 1980-ம் ஆண்டு ஜனவரி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தார். சரண் சிங் `ஜமீன்தாரி ஒழிப்புமுறை’ சட்டத்தைக் கொண்டு வந்தார். வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தி,விவசாயிகளின் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்தார்.

               எவர் ஒருவர் ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ, அவரே விவசாயி எனப்படுவார். அவர் தான் முழுமையாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமானத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார். ஆனால், அவர்களின் எண்ணிக்கையும்  தற்போது பெருமளவில் சுருங்கி, விவசாயிகள் தங்களது அடையாளத்தை பெரிதும் இழந்துள்ளனர்.

                விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, விவசாயத்தில் மொத்த முதலீட்டை 2011-12 ஆண்டில் 8.5 சதவீதமாகவும்,2013-14ஆம் ஆண்டுகளில் 8.6 சதவீதமாக உயர்த்தியது. அதன்பின் 2015ஆம் ஆண்டிலிருந்து எந்த வளர்ச்சியும் இல்லாமல் 6 -7 சதவீதமாக உள்ளது.மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன. 2019ம் ஆண்டு முதல் விவசாயிகளின் வங்கிக்  கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 6,000 வழங்கி வருகிறது.

               தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில், 51 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. தமிழக மக்களில் சுமார் 55 சதவிகிதம் பேர் (3 கோடிப்பேருக்கு மேல்) விவசாயம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இன்றைய காலகட்டத்தில், விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைப்பிரிவுகளாக மாறி வருவதால், விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பு கணிசமாக குறைந்துள்ளது. விவசாயத்தில் இயந்திரங்களை பயன்படுத்துவதன் காரணமாகவும், விவசாயத்தில் கணிசமான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.

                  தமிழ்நாட்டில் முதல்முறையாக  2021-22ஆம்நிதியாண்டில் வேளாண்மை மற்றும் சார்புத் துறைகளுக்கென்று    ரூ. 34,220.65  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத் துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் ஆகிய துறைகள் அடங்கும்.

             நவீனகால விவசாயத்தில்    ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் விவசாயிகள் பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது.எனினும் நம் வளமான மண் மலடாகி விட்டது. நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்களை நாம் அனுபவிக்க இம்மண்ணிலிருந்து நமக்கு கிடைக்கும் உணவுகளே காரணங்களாக அமைகின்றன. அரசு வழங்கும் விவசாயக் கடன் தொகையின் அளவு பெருமளவுக்கு அதிகரித்திருந்தாலும், இந்தக் கடன் தொகையெல்லாம் சிறிய விவசாயிகளை சென்றடைவதில்லை. விவசாயிகள், அவர்களுக்குத் தேவையான விவசாயக்கடன் தொகை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை இன்றும் நிலவுகிறது. மின் கட்டணம், உர விலை, தண்ணீர், இடுபொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளன.இவற்றின் காரணமாக இன்று விவசாயி சாகுபடிக்கு செய்யும் செலவுத் தொகை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் கணக்கெடுப்பின்படி, மூன்று வருடங்களில் விவசாயிகளின் சராசரி கடன் தொகை இரட்டிப்பாகியுள்ளதாக தெரிகிறது. விளைச்சலுக்கு செய்த செலவு கூட திருப்பி கிடைக்காத நிலையில் வாங்கியக் கடனை திருப்பி செலுத்திட இவர்களால் முடியாமல் போகிறது. ஆனால், வாங்கியக் கடனோ வட்டியோடு கூடி பயமுறுத்த,.உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொள்கின்றனர். அனைத்து சம்பவங்களிலும் விவசாயிகளின் கடன் சுமையே,அவர்களின் தற்கொலைக்கு காரணமாகச் கூறப்படுகிறது.மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின்  அறிக்கை ஒன்றின்படி,2018 தொடங்கி 3 ஆண்டுகளில் மொத்தம் 17299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதில் நாடு முழுவதும் கடந்த 2018ஆம் ஆண்டு 5763 விவசாயிகளும் 2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 5957 விவசாயிகளும், கரோனா பெருந்தொற்று காலமான கடந்த 2020ஆம் ஆண்டில் 5579 விவசாயிகளும் அடங்குவர்.

                தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தலா 6 விவசாயிகளும், 2020ஆம் ஆண்டில் 79 விவசாயிகளும் தமிழகத்தில் தற்கொலையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  திடீரென ஏற்படும் புயல்கள், பருவமழை பொய்த்து போவது, வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பால் கொட்டித்தீர்க்கும் மழை ஆகியவை ஏற்படுத்தும் இழப்புகள் விவசாயிகளை அதிகம் பாதிக்கின்றன.

           நாட்டில் வேளாண்மையில் இளைஞர்கள் ஈடுபட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தினால்,விவசாயத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.காந்தியின் கனவான கிராமப்புறங்கள் அப்போதுதான் முன்னேறும். இந்திய விவசாயிகளின் வாழ்வு சிறந்தால்தான், நாம் அனைவரும் நல்ல உடல்நலத்துடனும், மனநலத்துடனும் வாழமுடியும் என்பதுதான் நிதர்சன உண்மை.                                       தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில்தெரு,செங்குந்தர்பேட்டை, மதுராந்தகம்-603 306.கைப்பேசி 9443718043 nbadhri@gmail.com

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கைகுவிகம் சிறுகதைப்போட்டி பரிசளிப்பு  15/01/2023