சும்மா ஊதுங்க பாஸ் -1

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 26 in the series 10 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

 

சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு. எல்லாம் அவரவர் செய்த கர்மவினையின் பலன் என்று வேதாந்திகள் சமாதானம் சொல்வார்கள். அதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் ரகுபதி. தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரின் கம்பெனி என்பதால் எந்த ஒரு திறமையும் இல்லாமலே அசிஸ்டென்ட் மேனேஜர் பதவியில் அமர்ந்துவிட்ட அதிர்ஷ்டசாலி.

கிண்டி தொழிற்பேட்டையில் மருந்து தயாரிப்புக்குத் தேவையான பலவகை இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக உருவான கம்பெனி அது. கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தரமான தயாரிப்புகளால் இயந்திர தயாரிப்பாளர்களிடையே நல்ல பெயர் எடுத்துவிட்டிருந்தது. மொத்தமாக நாற்பத்தி ஐந்து பேர் அங்கு வேலை செய்கிறார்கள். திறமையான தொழிலாளர்கள், நல்ல சூழ்நிலை என்பதால் அமைதியான முறையில் அன்றாட வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது.

மெயின் ரோட்டிலிருந்து பிரியும் இன்னொரு சாலையில் சென்றால் அதன் கடைசி திருப்பத்தில் கம்பெனியின் மெயின்கேட் தெரியும். அதில் உள்ளே நுழைந்தால் வலது புறம் பார்க்கிங், அதைத் தாண்டி இடப்பக்கம் ஆபீஸ் கட்டிடம். அதன் பின்னால் தொழிற்கூடம். அதற்கு ஆபீஸ் வழியாக ஒரு வாசலும், வாட்சுமேன் ஷெட்டில் இருந்து நேராக தெற்கே சென்றால் கிழக்குப்புறமாக நுழைய ஒரு வாசலும் உண்டு. கிழக்கே உள்ள பெரிய வாசல் வழியாகத் தான் தயாரான மெஷின்கள் வெளியே கொண்டு வரப்படும்.

பெரும்பாலும் மருந்து தயாரிப்புக்குத் தேவையான கலவை எந்திரங்கள்தான் அங்கு தயார் ஆகும். மருந்து தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்களை இடுவதற்கான ஒரு கொள்கலத்தை உருவாக்கி அதை இரண்டு புறமும் கால்கள் உள்ள ஒரு ஸ்டாண்டில் பொருத்தி, கொள்கலத்தை சுற்றுவதற்கு வேண்டிய மோட்டார் மற்றும் கியர்பாக்ஸ்களை இணைத்து விட்டால் மெஷின் ரெடியாகி விடும். கூம்பு வடிவமாகவோ அல்லது பலமுகப்பு கொண்டதாகவோ அந்த கொள்கலங்கள் இருக்கும்.

ரகுபதிக்கு அங்கே மிக முக்கியமான அலுவல் என்று எதுவும் கிடையாது. ஆனால் தன்னைப் போன்ற ஒரு திறமைசாலி இல்லை என்று பலரிடமும் நிருபிக்க முயற்சி செய்வார். தன்னுடைய தகுதியின்மை வெளிப்படாமல் இருப்பதற்காக மற்றவர்களைப் பற்றி மேலிடத்தில் கோள் சொல்லி திசை திருப்பி, தன்னுடைய வேலையையும் முக்கியத்துவத்தையும் காப்பாற்றிக் கொள்வார். திறமையுள்ளவர்கள் பலரும் இதனால் பாதிக்கப் படுவதுண்டு.

அப்படிப் பாதிக்கப் பட்டவர்களில் வாசுவும் ஒருவன். திறமையான தொழிலாளியான அவன் யாரையும் காக்காய் பிடிப்பதில்லை. ரகுபதி தொழிற்கூடத்துக்குள் நுழைந்தால் மற்றவர்களைப் போல் அவருக்கு வணக்கம் சொல்லாமல் தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருப்பான். அதனால் ரகுபதிக்கு அவனைப் பிடிப்பதில்லை. நாலு மாதத்திற்கு முன்பே வரவேண்டிய அவனுடைய ஊதிய உயர்வைத் தாமதப் படுத்தும் வகையில் காய் நகர்த்தி விட்டார்.

ரகுபதி, இதுபோல அந்த கம்பெனியில் எல்லோருடைய வேலையிலும் தலையிடுவார். ஏதாவது குறை கண்டுபிடிப்பார். குறை சொல்ல எதுவும் இல்லை என்று சம்பந்தப் பட்டவர் நிருபித்து விட்டால், அவரிடம் ரகுபதி பேசும் விதமே வேறு. கொஞ்சம் முன்னால் பேசிய ரகுபதிதானா இது என்று மலைக்கும் அளவுக்கு மாறி விடும் அவரது நடவடிக்கை.

முன்பு நடந்த ஏதோ ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு, அதை எப்படி சமாளித்தார் என்பதை நகைச்சுவையாக எடுத்துச் சொல்லி மற்றவருடைய பாராட்டை பெற்று விட முயற்சிப்பார். உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொன்னால் அவருடைய குணம் நன்கு விளங்கும். ஒரு நிகழ்ச்சியை அவர் இப்படி விவரித்தார்.

இரவு பத்து மணிக்கு அவருடைய வீட்டுக்கு ஒருவன் போன் பண்ணினானாம். யார் பேசறது என்று கேட்டதற்கு சொல்ல நாக்கூசும் வார்த்தைகளை பேசிக்கொண்டே இருந்தானாம். அவன் குடிபோதையில் பேசுகிறான் என்பதைத் தெரிந்து கொண்ட ரகுபதி, “டேய், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கிட்டேயே இப்படிப் பேசுகிறாயா. நீ எங்கிருந்து பேசுறேன்னு கண்டுபிடிச்சுட்டேன்டா. மவனே, அங்கேயே இரு. இதோ ஜீப்ல வந்துக்கிட்டே இருக்கேன்’ என்றாராம். பயந்துபோன அவன் உடனே போனை வைத்து விட்டாராம். இப்படிச் சொல்லிவிட்டு யார் சிரித்தாலும் சிரிக்கா விட்டாலும், அவரே சிரித்துக் கொள்வார்.

இப்படி எல்லாரையும் டாமினேட் செய்வார். அதனால் பலருக்கும் அவரைப் பார்த்தால் உள்ளுக்குள் வெறுப்பும் லேசான பயமும் ஏற்படும். அவருடைய நடவடிக்கைகள் கோமாளித்தனமாகத் தெரிந்தாலும் அவரிடம் பொல்லாப்பு வேண்டாமே என்பதால் அவரிடம் மரியாதையாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் அவரை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. அப்படி அவரை பொருட்படுத்தாத நபர்களை தக்க சமயத்தில் போட்டுக் கொடுத்து சிக்கலில் மாட்டி விடுவார்.

பெரும்பாலும் அவருடைய நடவடிக்கைகளை மானேஜர் சங்கரன் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சங்கரன் மனிதாபிமானம் மிக்கவர். அதுமட்டுமல்ல; நேர்மையானவராகவும், திறமையானவராகவும் இருப்பதால் எந்த விஷயமாக இருந்தாலும் சரியான முடிவு எடுத்து தகுந்த நடவடிக்கை எடுப்பார். அதனால் ரகுபதி யாரைப் பற்றியாவது அவரிடம் கோள் சொல்லும்போது, செவிடன் காதில் ஊதிய சங்கு போல எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய் விடும். ஆனாலும் ரகுபதி ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டேதான் இருப்பார்.

காரியம் ஆவதற்காகவோ பிற வசதிகளுக்காகவோ, ஒரு சிலர் ரகுபதியை காக்காய் பிடிப்பதும் உண்டு. ஆபீஸில் உதவியாளனாக இருக்கும் பட்டாபி அப்படிப்பட்ட ஒருவன். வேலை செய்யும் இடத்தில் யார் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு வந்து ரகுபதிக்குச் சொல்லும் ஒற்றன். சில சமயம் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதற்காக கம்பெனிக்கு வெளியில்கூட ரகுபதி கூடவே இருப்பான் பட்டாபி. ரகுபதிக்கு ஒத்து ஊதுபவன் என்று அவனைப் பற்றி கம்பெனிக்குள் பேச்சு உண்டு.

ரகுபதிக்கு இன்னுமொரு வேலை அந்தக் கம்பெனியில் உண்டு. விசில் ஊதுவது. பதினோரு மணிக்கு தேநீர் வேளையின் போதும், மதியம் உணவு இடைவேளையின் போதும், ஆபீஸிலிருந்து தொழிற்கூடத்துக்கு நுழையும் வாசலில் நின்று கொண்டு விசிலை ஊதுவார். அதைக் கேட்டு தொழிலாளர்கள், செய்யும் வேலையை நிறுத்தி விட்டு, நேநீர் இடைவேளைக்கோ, உணவு இடைவேளைக்கோ செல்வார்கள்.

ஆரம்பத்தில் வாட்சுமேன் ஒரு இரும்பு மணியை சுத்தியால் அடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் அவன் சரியான நேரத்துக்கு மணி அடிப்பதில்லை என்று அடிக்கடி புகார் வந்ததால், மானேஜர் சங்கரன் ஒரு மின்சார மணியை வாங்கிப் பொருத்தினார். ஆனால் அதை யார் அடிப்பது என்பதில் ஒரு உடன்பாடு வராததால் தானே விசில் ஊதுகிறேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டார் ரகுபதி. அவர் வராத ஒரு சில நாட்களில் மட்டும் மின்சார மணியை வாட்சுமேன் அடிப்பான்.

தினமும் காலை ஒருமுறையும், மதியம் சாப்பாட்டுக்குப் பின்பும், மாலை ஒரு முறையும் ஆக ஒரு நாளைக்கு மூன்று முறை கம்பெனிக்குள் நடக்கும் வேலைகளை பார்வை இடுவது ரகுபதியின் வழக்கம். யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை உன்னிப்பாக நோட்டம் விடுவார். சிலர் அவர் வந்து விட்டுப் போகும் சமயம் பின்னாலிருந்து வேடிக்கையாக சைகை செய்து அவரைக் கிண்டலடிப்பதும் உண்டு. அவருக்குத் தெரியாமல் மற்றவர்கள் சிரிப்பார்கள்.

ஒருநாள் அப்படி அவர் வரும் போது, வேலை செய்து கொண்டிருந்த வாசு, “சும்மா ஊதுங்க பாஸ்” என்றான். சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்தார் ரகுபதி. ஆனால் அவரைக் கவனிக்காமல் வாசு மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். இரும்பு பிளேட்டை காஸ் கொண்டு வெட்டிக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்துத்தான் வாசு அப்படிச் சொன்னான். இதேபோல் இரண்டு மூன்று முறை நடந்த போது, ரகுபதியால் பொறுக்க முடியவில்லை. வாசு தன்னைக் கிண்டல் செய்வதாக நினைத்தார். அதனால் நேரே மானேஜர் சங்கரனிடம் சென்று புகார் செய்தார்.

“ரகுபதி, இதைப் பெரிது படுத்தாதீர்கள். அவன் வேலையின் காரணமாக அப்படிச் சொல்லி இருப்பான்” என்றார் சங்கரன்.

“இல்லை சார், ஒரு தடவை என்றால் சரி. ஆனால் நான் உள்ளே போகும் போது நான்கு முறை அதே வார்த்தைகளைச் சொல்லி விட்டான். நான் விசில் ஊதுவதைக் கிண்டல் செய்கிறான். நான் கோள் சொல்கிறேன் என்ற அர்த்தத்திலும் அப்படிச் சொல்கிறான். நிச்சயமாக என்னைத்தான் கிண்டல் செய்கிறான்” என்றார் ரகுபதி.

“சரி, இருங்கள். அவனிடமே விசாரிக்கிறேன்” என்று சொல்லி விட்டு, பட்டாபியைக் கூப்பிட்டு வாசுவை அழைத்து வரச் சொன்னார்.

வாசு வந்தான். அவனிடம் ரகுபதியைக் காட்டி,

“என்ன வாசு, நீ இவரைக் கிண்டல் செய்வதாக புகார் சொல்கிறாரே” என்று கேட்டார் சங்கரன்.

“நான் எதுக்கு சார் அவரைக் கிண்டல் செய்யப் போகிறேன்” என்றான் வாசு.

“அவர் உள்ளே வரும்போதெல்லாம் ஊதுங்க பாஸ், ஊதுங்க பாஸ், என்று சொல்லி கிண்டல் செய்கிறாயாமே” என்றார்.

“சார், நான் அவரை சொல்லல சார், காஸ் கட்டிங் பண்ற கந்தன்கிட்டதான் சொன்னேன். உங்களுக்கே தெரியும், நாங்க கேஸ் கட்டிங் பண்ணுறத எங்க பாஷையிலே ஊதுறதுன்னுதான் சொல்வோம். வேலை பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஏதாவது சந்தேகம் வந்தால், அப்படியே நிறுத்தி விடுவான் கந்தன். அவன் செய்து கொண்டிருப்பது சரிதான் என்று உணர்த்துவதற்காக நான் அப்படிச் சொல்வேன். அவனும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து வேலை செய்வான். டிரைவர் பஸ்ஸை ரிவர்ஸ் எடுக்கும்போது, கண்டக்டர் விசில் ஊதிக்கிட்டே இருப்பார் இல்லையா, அதுபோலத்தான் இதுவும்” என்றான்.

“அவ்வளவுதானா, இது சாதாரண விஷயம்தானே, என்ன சொல்றீங்க ரகுபதி” என்றார் ரகுபதியைப் பார்த்து. ரகுபதிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

வாசுவே தொடர்ந்து, “அதுமட்டுமில்லை சார், அது ஒன்றும் சொல்லக்கூடாத வார்த்தையல்ல. பகவானுக்கே அவருடைய கடமையைச் செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட வார்த்தை அது” என்றான்.

“பகவானுக்கே சொல்லப்பட்ட வார்த்தையா” என்று ஆச்சரியமாக கேட்டார் சங்கரன்.

“ஆமாம் சார், ஒரு புராணக் கதை இருக்கிறது” என்று ஆரம்பித்தான் வாசு.

“முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்ததால் மக்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அதனால் கடவுளுக்கு செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்களை எல்லாம் மறந்து விட்டார்கள். அவர்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்துவதற்காக விஷ்ணு பகவான் சங்கை ஊதுவதையே நிறுத்தி விட்டார்” என்று நிறுத்தினான் வாசு.

“அதனால் என்ன ஆச்சு” என்று கேட்டார் சங்கரன்.

“பகவான் சங்கை ஊதவில்லை என்றால் மழை பெய்யாதல்லவா. அதனால் அந்த ஊரில் பல வருடங்களுக்கு மழை பெய்யவில்லை. விவசாயம் செய்ய முடியவில்லை. பசியும் பஞ்சமும் மக்களை வாட்டியது. அவர்கள் நிலையை தெரிந்து கொள்ள விஷ்ணு பகவான் அந்த ஊருக்குப் போனார். அங்கு ஒரு வயதான மனிதர் காட்டில் உழவு வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அவருக்கு ஆச்சரியம். மழை பெய்யவில்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது. பின் எதற்கு இவர் உழுது கொண்டிருக்கிறார் என்று வியப்படைந்த விஷ்ணு பகவான், அவரிடம் சென்று காரணத்தைக் கேட்டார்” என்றான் வாசு.

“என்ன காரணமாம்” என்று ஆவலுடன் கேட்டார் சங்கரன். ரகுபதியும் ஆர்வத்துடன் வாசு முகத்தையே பார்த்தார்.

“விஷ்ணு பகவானைப் பார்த்த அந்தப் பெரியவர் சொன்னாராம், “பகவானே, பல வருடங்களாக நீங்கள் சங்கை ஊதாததால் மழை பெய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கருணை மிக்கவர். மக்கள் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் எப்படியும் சங்கை ஊதி மழையை வரவழைத்து விடுவீர்கள். அதுவரை நான் சும்மா இருந்து விட்டால் பிறகு மழை பெய்யும் போது எப்படி உழுவது என்பதே எனக்கு மறந்து போய் விடும். அதனால்தான் என் கடமையைத் தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன்’ என்றாராம்.

பக்தர்களைச் சோதிப்பதற்காகவும் அவர்களுக்கு கருணை காட்டுவதற்காகவும், எல்லாம் அறிந்தவரும் உலகையே ரட்சிப்பவருமான விஷ்ணு பகவான் சில சமயங்களில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் நடந்து கொள்வது உண்டு. இது வழக்கமான ஒன்றுதான்.

அதனால் பெரியவர் சொன்னதைக் கேட்ட விஷ்ணு பகவான் ஒன்றும் தெரியாதவர் போல ‘அப்படியானால் பல நாட்களுக்கு சங்கை ஊதாமல் இருந்து விட்டால் எனக்கும் அது மறந்து போய் விடுமா’ என்று கேட்டாராம். உடனே அந்தப் பெரியவர், ‘அது உண்மைதான் பகவானே, நீங்கள் ரொம்ப நாட்களாக சங்கை ஊதவில்லை என்பதால் உங்களுக்கு அது மறந்து போய் விடும்’ என்றாராம். அதைக்கேட்ட பகவான் புன்னகையுடன் சங்கை எடுத்து ஊதினாராம். பெரியவர் மகிழ்ச்சியில், ‘அப்படித்தான்; சும்மா ஊதுங்க பாஸ்’ என்று கத்தினாராம். உடனே மழை பெய்ய ஆரம்பித்து விட்டதாம். அதனால் ஊதுங்க என்பது தப்பான வார்த்தையல்ல” என்று ரகுபதியைப் பார்த்துக் கொண்டே சொன்னான் வாசு.

கதையைக் கேட்ட சங்கரன், “அந்தப்பெரியவர் பகவானைப் பார்த்து, ஊதுங்க பாஸ் என்றாரா” என்று கேட்டு சிரித்து விட்டார். ரகுபதியும் லேசாக சிரித்து வைத்தார். சிரிப்புக்கிடையே சங்கரன் சொன்னார்,

“இது புராணக்கதையோ இல்லையோ, ஆனால் வேடிக்கையாக நீ சொன்னது நன்றாக இருக்கிறது”

வாசு சொன்ன விளக்கத்தைக் கேட்ட ரகுபதிக்கு அது விஷயமாக அவனை எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் அன்றிலிருந்து அவருக்கு வாசுவை மட்டுமல்ல, அந்த வார்த்தையும் பிடிக்காமல் போய் விட்டது. யாராவது அந்த வார்த்தையைச் சொன்னாலே அலர்ஜி என்றாகி விட்டது. சொன்னவனை முறைப்பார்.

தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் ரகுபதியின் புகாரை ஒன்றுமில்லாமல் செய்து விட்ட வாசு இன்னொரு முறை அவரைக் கிண்டல் செய்த போது ரகுபதியால் தாங்கவே முடியவில்லை.

(தொடரும்)

Series Navigationயாமினி கிருஷ்ணமூர்த்தி – 9மழையென்பது யாதென (2)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *