சோஷலிஸ தமிழகம்

1989ல் பெர்லின் சுவர் வீழ்ந்து சோஷலிசம் உலகெங்கும் சரிந்து வீழ்ந்தது. 90களில் உலகமயம், தனியார்மயம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. சர்வாதிகார அரசுகள் பல உலகெங்கும் வீழ்ந்தன. தொழில்நுட்ப புரட்சி உலகை ஆட்டி படைத்தது. இதன் தாக்கம் எப்படி இருந்தது எனில் எகிப்தில் புரட்சி நடக்கையில் எகிப்திய அரசு முதல்வேலையாக பேஸ்புக்கையும், ட்விட்டரையும் தடை செய்யும் அளவுக்கு சென்றது. சோஷியல் மீடியாவை ஆற்றலுடன் பயன்படுத்தி அமெரிக்காவில் ஒபாமாவும், இந்தியாவில் நரேந்திர மோடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்படி உலகை குலுக்கிய இத்தகைய ட்ரெண்டுகள் அனைத்தும் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தபட்டன. தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளே நம் சேஞ்ச் ஏஜெண்டுகள். இவர்கள் மூலமாகவே நாம் உலகை தரிசித்து வந்துள்ளோம். வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுவது. உலகை குலுக்கிய இந்த டிரென்டுகளை, அரசுகளை, நாடுகளை மாற்றிய இந்த டிரெண்டுகளை ஆளும் திராவிட கட்சிகள் அனாசயமாக எப்படி சமாளித்தன, உள்வாங்கின என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சோஷலிசமும், தேசியமாக்கலும் தோற்றன எனும் செய்தி தமிழக மக்களை எட்டியதா என்பதே கேள்விக்குரியது. தமிழக அரசு பேருந்து, சிமெண்டு, ஓட்டல் என இருக்கும் கம்பனிகளை தனியார் மயமாக்காதது மட்டுமல்ல புதிதாக உணவகம், மதுக்கடைகள், மருந்துகடைகள், பாட்டில் குடிநீர் வணிகம், கேபிள் டிவி என மேலும் பல துறைகளில் புகுந்து வணிகம் செய்து வருகிறது. மக்களும் இதை எல்லாம் வரவேற்பதாக தான் தெரிகிறது. ஆக சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி உலகுக்கு கற்றுகொடுத்த மிகப்பெரும் பாடம் தமிழ்நாட்டுக்கு சொல்லிகொடுக்கபடவில்லை. இதற்கு ஒரு காரணமாக தமிழகத்தில் கட்சிகள் பலவகையானவையாக இருந்தாலும் பொருளாதார கொள்கை என வருகையில் அவற்றுக்கு இடையே எந்த பெரிய அளவிலான முரண்பாடுகளும் இல்லை. திமுக, அதிமுக, மதிமுக, மூன்றும் இனையும் புள்ளியாக சோஷலிசத்தையும், பெரிய வலுவான அரசின் மேல் உள்ள நம்பிக்கை என்பதையும் சொல்லலாம். தேமுதிகவின் பொருளாதார கொள்கை என்ன என்பது யாருக்கும் தெரியாது.

Eliteshop_0312_01இதனால் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சிக்கு வந்திருந்தாலும் மதுக்கடைகள் அரசுமயம் ஆனது, பன்னாட்டு கம்பனிகள் சில்லறைவணிகத்தில் நுழைய எதிர்ப்பு, இலவசங்கள், கவர்ச்சி திட்டங்கள் முதலிய சோஷலிச மாடல் திட்டங்கள் மாறாமல் தொடர்கின்றன. சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குபேரர்களாக்கிய தாராளமயமாக்கல் இங்கே மேல்மட்டத்துடன் தடுத்து நிறுத்தபட்டது. செல்வாக்கும், பணமும் உள்ளவர்கள் மேலே உயர்ந்தார்கள். திறமை உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். அடித்தட்டு வர்க்கம் தாராளமயமாக்கலின் நன்மைகளை அனுபவிக்காமல் அதன் தீமைகளை மட்டும் அனுபவித்தது. உதாரணமாக பன்னாட்டு கம்பனிகள் தடையற்ற மின்சாரம் எனும் உறுதிமொழியின் பேரில் இங்கே அழைத்து வரபட்டன. அவர்கள் செய்த முதலீட்டில் கிடைத்த வரிப்பணம் எல்லாம் இலவச திட்டங்களுக்கும், கவர்ச்சி திட்டங்களுக்கும் செலவாகின. மின்சாரம் முதலிய அடிப்படை கட்டமைப்புகளில் முதலீடுகள் செய்யபடவில்லை. விளைவாக நாளுக்கு 10 முதல் 12 மணிநேரம் மின்வெட்டு. இது அடித்தட்டுமக்களை தான் முதலில் பாதிக்கிறது.
 
தாராளமயமாக்கலின் மிகபெரும் நன்மை வேலைவாய்ப்பு. ஆனால் தாராளமயமாக்கல் குடிபெயர்வையும் சாத்தியமாக்கியது. ஏராளமான அளவில் வடமாநில தொழிலாளர் தமிழகத்துக்கு குடிபெயர்ந்தனர். ஆக அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அரசின் செலவுகள் அதிகரித்ததாலும் தாராளமயமாக்கலின் விளைவாக பணபுழக்கம் அதிகரித்ததாலும் விலைவாசி, பணவீக்கம் ஆகியவை அதிகரித்தன. ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது. இன்று எத்தனை சம்பாதித்தாலும் நகர்புறங்களில் இடம் வாங்கி வீடுகட்டுவது இயலாத காரியமாக மாறிவிட்டது.

ammawater_1ஆக சோஷலிசமும், தாராளமயமும்  தமிழகத்தில் ஒரே சமயத்தில் எவ்வித முரண்பாடும் இன்றி பின்பற்றபடுகின்றன. இந்த இருமுறைகளின் நன்மைகளும் மேல்தட்டு மக்களுக்கும், இதன் தீமைகள் முழுக்க அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேர்ந்தன. ஆனால் வயிற்றுபசிக்கு உணவிருக்கும்வரை மக்கள் புரட்சியில் இறங்க மாட்டார்கள் எனும் மாபெரும் உண்மையை உணர்ந்த நம் ஆட்சியாளர்கள் 1 ரூபாய் அரிசி, 10 ரூபாய் குடிநீர், உணவகங்கள் மூலம் மக்கள் புரட்சியில் இறங்குவதற்கான காரணங்களை அகற்றிவிட்டார்கள். ஆனாலும் மக்கள் விடாமல் கடந்த 30 ஆண்டுகளாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆளும்கட்சியை தேர்தலில் கவிழ்த்து தம் எதிர்ப்புணர்வை காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள்.

மக்களின் குரலை முறையாக பதிவு செய்திருக்க வேண்டிய ஊடகங்கள் முழுக்க ஆளும்கட்சிகள் கைவசம் ஆகின. தமிழக அரசியல்கட்சிகள் போட்டிபோட்டுகொண்டு டிவி சானல் துவக்கின. பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கின. வாங்கமுடியாத பத்திரிக்கைகளுக்கு வேறுவித பொருளாதார ஆதாயங்களை உருவாக்கின. உதாரணமாக தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிக்கை தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தொலைகாட்சியில் தொலைகாட்சிதொடர் தயாரிக்கிறது. இதனால் அதன் நடுநிலைமை பாதிக்கபடும் என கருத இடம் இல்லை. ஆனால்  நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தகூடிய சக்தி வாய்ந்த ஒருவரை எதிர்க்கையில் நாம் கவனமாக இருப்போம் அல்லவா?

மேலே சொன்னவை எல்லாம் தமிழகத்துக்கு மட்டும் பொருந்த கூடியவை அல்ல. ஒரு விதத்தில் இது இந்தியமாநிலங்கள் அனைத்தின் கதையும் கூட. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுகொள்வதில் நாம் என்றுமே வீக் ஆனவரகள் தான்!

 

 

Series Navigationதொடுவானம்     23. அப்பாவுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு.வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம்       10