சோ.சுப்புராஜ் கவிதைகள்

காத்திருப்பு

வெகு நேரமாயிற்று விமானம்
தரை இறங்கி……

விடைபெற்றுப் போயினர்

உடன் பயணித்தவர்கள்
யாவரும்;

வெறிச்சோடிக் கிடக்கிறது
விமான நிலையம்;

அடுத்த விமானத்திற்கு
இன்னும்

அவகாசமிருப்பதால்……

அலைபாயும் கண்களுடன்
காத்திருக்கிறார்

அழைத்துப் போக யாரும் வராத

அவஸ்தைகளை விழிகளில் தேக்கி

 

ஒரு
நிகழ்ச்சியும்  நெகிழ்ச்சியும்

 

மெட்ரிக்குலேசன் பள்ளி மேடையில்

ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்!

ஆங்கிலத்தில்

நாடகங்கள் போட்டார்கள்;

ஹிந்தி
கிளாசிக்குகளைப் பாடினார்கள்;

தமிழில் மட்டும்

குத்துப் பாட்டுக்கு ஆடினார்கள்

எதுவுமே சகிக்கவில்லை…..

ஆனாலும்

ரசிக்க முடிந்தது

வசனம் மறந்தும்

வஸ்திரம் நழுவியும்

அவஸ்தையாய் நெளிந்த

அழகு குழந்தைகளை…..!

 

 

 

சாலையில் சில கடவுள்கள்

அரக்கன் ஒருவனை

காலில் போட்டு மிதித்தபடி

களிநடனம் புரிந்து கொண்டிருந்தாள்

காளி தேவி ஒருநாள்!

 

சஞ்சீவ மலை தூக்கி

பயணப் பட்டுக் கொண்டிருந்தார்

அனுமன் இன்னொருநாள்……!

 

 

வில்லேந்தி போர்புரிய

தயாராக நின்றிருந்தார்

இராமபிரான் பிறிதொருநாள்….!

 

சிவபெருமான் பார்வதி தேவியுடன்

தரிசனம் தந்து கொண்டிருந்தார்

மற்றொரு நாள்…..!

 

வள்ளி தெய்வானையுடன்

வரம் தரும் திருக்கோலத்தில்

முருகன் ஒருநாள்….!

 

சிலுவையில் அறையப்பட்டுஆ

சிரத்தையுடன் இயேசுவும்

இரத்தம் உதிர்த்து நின்றார்

இன்னொருநாள்….!

 

மற்றொரு நாள்

உடம்பெங்கும் அம்மைத் தழும்புகளாய்

சில்லறைக்காசுகள் சிதறிக் கிடக்க

கைதூக்கி ஆசிர்வதித்தபடி

கனிவுடன் நின்றிருந்தார் ஷீரடி பாபா!

 

அதே இடத்தில்

கடவுள்களுக்கு உயிர் கொடுத்த

தெரு ஓவியனும்

இறந்து கிடந்தான் ஒருநாள்

கேட்பாரற்று…..!

 

அலைவுறும் அகதி வாழ்க்கை

 எமக்கு மொரு நாடிருந்தது – அங்கு

அழகான ஓர் வீடுமிருந்தது;

ஊரிருந்தது; உறவிருந்தது;

கனவாய் யாவும் ஒருநாள்

கலைந்து போனது…….

 

செல்லடித்து வாழ்வு

சிதைந்து போனது;

திசைக் கொன்றாய் உறவுகளும்

சிதறிப் போனது……

 

வேறோடு பிடுங்கி ஒருநாள்

வீசி எறியப்பட்டோம்

வீதிகளில்……..

 

போர் தீயதென்று போதித்த

புத்தனின் வாரிசுகள் நடத்திய

யுத்தத்தில்

மொத்தமும் இழந்து போனோம்…..

 

 

 

பதுங்கு குழிகளுக்குள்ளும்

பலநாள் வாழ்ந்திருந்தோம்

பயத்தை மட்டும் புசித்தபடி;

உயிராசையில்

ஓட்த் தொடங்கினோம்

தேசங்களைக் கடந்து……..

 

பிள்ளைகள் ஒரு பக்கம்;

பெண்டுகள் ஒரு பக்கம்;

பேசும் மொழியும் மறந்து

பிச்சைக் காரர்களாய்

அலைவுறத் தொடங்கினோம்

அகதிகளாய்…….

 

Series Navigationஓரிடம்நோக்கி…நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!