ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை

ப.கண்ணன்சேகர்

நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம்
நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்!
வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை,
வலயம் கடலுக்கு வண்ணப்பேரென விளங்கிடும்!
பாரினை வளமாக்கி பல்லுயிர் பெருகிட
படர்ந்திடும் முகிலென பருவமழை தந்திடும்!
மாரிவளம் பொழிந்திட மகிழ்ந்திடும் உயிரெலாம்
மாசினை செய்திட மாகடல் பொங்கிடும்!

அலைகடல் தந்திடும் அத்தனை செல்வமும்
அகிலத்தில் அனைவரின் அடிப்படை உரிமையே!
வலைவீசி வாழ்வோரின் வடிக்கின்ற கண்ணீரும்
வாடிக்கை யென்றானால் வையத்தில் மடமையே!
கொலைகார கூட்டமது கோடிட்டு கடலிலே
குற்றமில்லா விலங்கிடும் கொடியதொரு பகமையே!
தலைபோகும் நிலையென தமிழனம் தத்தளிக்க
தத்துவம் பேசுவது தாங்கிடுமா பொறுமையே!

மானிடரின் தவறுகளால் மடிகின்ற கடல்வளம்
மாறாது ஒலிக்கிறது மரணத்தின் அலங்கோலம்!
கூனிடும் சூழலாய் கொட்டிடும் கழிவுகளே
கொடுமையாய் குவியுது கொலையென தினந்தோறும்!
மேனியில் ரணமாக மேலுமே தொடர்ந்தாலே
மேதினியில் பொழிந்திட மேகங்கள் தோன்றாது!
ஏனிந்த சூழலென எல்லோரின் விழிப்புணர்வு
இல்லாமல் போயிடின் இந்நாடு தாங்காது!

-ப.கண்ணன்சேகர், திமிரி. பேச : 9894976159.

Series Navigationதொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடுபிரபஞ்சத்தின் மகத்தான நூறு மர்மங்கள் : வால்மீன்கள் முறிவது எப்படி, இணைவது எப்படி ?