தங்கம் 5- விநோதங்கள்

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்?
தோடு, வளையல், அட்டிகை, ஒட்டியாணம், மோதிரம், வங்கி, காப்பு இவையெல்லாம் தான் நாம் அறிந்தவை. ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை பல்வேறு விதமாக பயன்படுத்த முயல்கிறார்கள். அவை பெரும்பாலும் விளம்பரத்திற்கென்றாலும், செய்திருக்கும் பொருட்கள் விசித்திரமானவை.
சென்ற ஆண்டு 2011 முடிவில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஜப்பானைச் சேர்ந்த தனாகா என்பவர், ஒரு தங்க கிறிஸ்துமஸ் மரத்தையே உருவாக்கியிருந்தார். அவர் டோக்கியோவின் முக்கிய வணிகச் சந்தையான கின்சாவில் சிறந்த நகைக்கடையை வைத்திருப்பவர். 12 கிலோ எடையில், 2.4 உயரம் கொண்ட இந்த மரம் பலரையும் கவர்ந்தது. இது 20 இலட்ச அமெரிக்க டாலர்கள், 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருந்தது.  தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், இத்தகைய தங்க மரத்தை உருவாக்கியிருப்பது மிகவும் விசேடமானது.
மரமே தங்கம் என்றால் கேட்கவும் வேண்டுமா?  அதுவும் எந்தக் உலோகத்தையும் கலக்காமல் சொக்கத் தங்கத்தில் ஆன மரமென்றால் எப்படி இருக்கும். அதில் 60 இதயச் சின்னங்களும், தங்க ரிப்பன்களும் அமைக்கப்பட்டிருந்தன. தானாகா லேசுப்பட்ட ஆள் அல்ல. அவர் 2006ஆம் வருடம் கிட்டத்தட்ட 9 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள தங்க மரத்தை உருவாக்கியவர்.  அதற்கு முன்னர், ஜப்பானிய இளவரசர் பிறந்த போது தங்க குதிரையைச் செய்து கொடுத்தவரும் கூட.
2011இன்றின் தங்க உருவமைப்பின் விசித்திரத்தைப் பற்றிப் பேசும் போது 2010இன் 110 இலட்ச டாலர்கள் மதிப்புக் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. ஆம்.. துபாய் நகரில் இருக்கும் எமரைட்ஸ் பேலஸ் ஹோட்டல் எனும் ஏழு நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு இத்தகைய மரத்தை உருவாக்கி சுற்றுலா பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர் இந்த விடுதி அமைப்பாளர்கள்.
மற்ற எல்லா கிறிஸ்துமஸ் மரங்களைப் போன்றே இம்மரமும் 13 மீட்டர் உயரத்துடன் அமைக்கப்பட்டது. மரம் மட்டுமே 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதை அலங்கரிக்கக் கூடிய பொருள்கள் அனைத்தும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், முத்து, மரகதம் என்று விலையுயர்ந்த பொருட்களாக இருந்தன. சிறு சிறு வெள்ளை நிற விளக்குகளுடன் அட்டிகை, தோடுகள், மாலைகள் என்று அந்த மரத்தின் மதிப்பை உயர்த்திய ஆபரணங்கள் மரத்தில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருந்தன.
தங்க முலாம் பூசிய 14000 ஜன்னல்கள் கொண்ட கட்டடம் கனடா நாட்டின் டொரான்டோ நகரில் உள்ளது.  ராயல் பேன்க் பிளாசா என்ற இந்தக் கட்டடத்தில் சுற்றுப்புற சூழலை நன்கு வைத்துக் கொள்ள வேண்டி, சூரியக் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க இதன் ஜன்னல்களை 70 கிலோ தங்கத்தால் மூலாம் பூசப்பட்டுள்ளது.
உள்பக்கம் குளிர் காலங்களில் கதகதப்பாகவும், வெயில் காலங்களில் இதமாகவும் இருக்க தங்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  தங்கத்திற்கு கதிர் வீச்சினை தடுக்கும் ஆற்றல் இருப்பதன் காரணமே இக்கட்டடம் இப்படி உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் இனிப்பு வகைகள் மிகவும் பிரபலம். சில இனிப்பு வகைகள் தங்கத் தகடுகளாலும் வெள்ளித் தகடுகளாலும் சுற்றப்பட்டு விற்கப்படுகின்றன. அவை உண்மையில் தங்கம் வெள்ளியாக இருக்குமா என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழும். உண்மையிலேயே தங்க வெள்ளித் தகடுகளைக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளும் இந்தியாவில் விற்கப்பட்டே வருகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, பெங்களுர் நகரில் ஒரு விடுதியாளர், தாங்கள் செய்யும் தோசையை தங்கத் தகடு வைத்து விற்க ஆரம்பித்துள்ளனர். கேட்பதற்கு விசித்திரமாகத் தானே இருக்கிறது. 1 மில்லி கிராம் தங்கத் தகடு கொண்ட தோசை மல்லேஸ்வரத்தில் இருக்கும் ராஜ் போக் விடுதியில் 1011 ரூபாய்க்கும் வெள்ளித் தகடு கொண்ட தோசை 151 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.
நம் நாட்டில் தங்க பஸ்பம் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்த பலரின் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. சிறிய அளவில் உட்கொள்ளப்படும் தங்கத்தால் முதலில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பது பலரின் கூற்று. இத்தகைய தங்க தோசையைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்க முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
——–
Series Navigationகுறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்பில்லா 2 இசை விமர்சனம்