தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு

This entry is part 10 of 40 in the series 1 ஏப்ரல் 2012

சுப்ரபாரதிமணியனின் பதினைந்தாவது சிறுகதைத் தொகுப்பு இது.

15 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் தென்படுவது பெரும்பாலும் பிடிமானமற்ற, வேர்களற்ற கதாபாத்திரங்கள். தனிமை, ஏக்கம், மனச்சிக்கல்களைக் கொண்ட மனிதர்கள். லாட்ஜ் கதைகள் என்று பெரும்பான்மையானவற்றை வகைப்படுத்தலாம். பின் அட்டைக்குறிப்பு இப்படிச் சொல்கிறது: தொழில் நகரம் காட்டும் உழைக்கும் விளிம்பு நிலை மனிதர்களிப்பற்றி பேசுகிறார். உலகமயமாக்கல் ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்து வருவதை சொல்லியிருக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மனித உரிமை பிரச்சினைகளும் அவற்றில் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்கிறார். இதை திரும்பத்திரும்ப நானும் யோசித்து ஆமோதிக்கிறேன். பெரும்பாலும் சுரண்டப்படும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளான,வன்முறையில் பலியான பெண்கள் இதில் வருகிறார்கள். பெண் மனம் சார்ந்து இவர் கவலை கொள்வது தெரிகிறது.

முதல் கதையில் தென்படும் வேலை தேடி வரும் பெண்ணின் முடிவெடுக்க வேண்டிய சிக்கல் அபாயகரமானது. இது போன்ற நிறையப் பெண்கள் இக்கதைகளில்… கடைசிக்கதையில் லாட்ஜில் ஆணுடன் தங்கும் பெண் தனக்காக ஒரு கவுரவமான வாடகை வீடு கிடைக்காதா என்று ஏங்குகிறாள். எல்லாக் கதைகளிலும் தென்படும் குரூர அங்கதம் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. கூட்டம் கதையில் அதிகாரி ஒருவரின் புத்தக வெளியீட்டு கூட்ட அனுபவங்கள் இலக்கியப் பிரச்சினையாகவும், பாலியல் விசயமாகவும் அங்கதத்துடன் அமைகிறது.பாலியல் சார்ந்த அனுபவங்களும் வேட்கையும் இக்கதைகளின் கதாபாத்திரங்களின் அலைகழிச்சலுக்கும், தனிமைக்கும் இட்டுச்செல்கிறது. பிடிமானமற்ற மனிதர்களின் தனிமை உலகமாக இக்கதைகளின் முகம் வெளிப்பட்டிருக்கிறது.

=தமிழ்மகன்

(ரூ 90, உயிர்மை பதிப்பகம் , சென்னை )

Series Navigationவிமோசனம்ஒரு மலர் உதிர்ந்த கதை
author

தமிழ்மகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *