தாயுமாகியவள்

லதா அருணாச்சலம்
——————-
ஆச்சி போய்ச் சேர்ந்து

பதினோரு நாளாச்சு.
காரியம் முடித்து
உறவும் பங்காளிகளும்
ஊர் திரும்பி விட்டார்கள்.
சாவு வீட்டின் சாயங்கள்
சற்றேறக்குறைய
கரைந்தோடிக் கொண்டிருந்தன..
பின் கட்டில் அமர்ந்து
‘ஊர்ல ஒரு பேச்சுக்கும்
இடங் கொடுக்காம
அவரைப்  பெத்தவங்க
ரெண்டு பேரையும்
நல்லபடியா அனுப்பிட்டேனென்று’
சித்தியிடம் பெருமையோடு
சளசளத்துக் கொண்டிருந்தாள்
அம்மா….
முன்னறையில்
அத்தனை நாள் மூடியிருந்த
தொலைக்காட்சிப் பெட்டியை
திறந்து ஆவலுடன்
டிஸ்கவரி பார்த்துக்
கொண்டிருந்தார்கள்
அண்ணனும் ,தம்பியும்
கொஞ்சம் வெளிச்சம்
குறைந்து விழும்
ஆச்சியின் சின்ன அறையின்
ஜன்னலோர மூலையில்
பாவனைகளற்ற முகமும்
இலக்கற்ற பார்வையுமோடு
கைகள் இரண்டையும்
கோர்த்துப் பிடித்து
பின்னந் தலையில்
முட்டுக் கொடுத்தவாறு
ஈஸிசேரில்
மௌனமாய் சாய்ந்தாடிக்
கொண்டிருந்தார் அப்பா..
யாதொரு
கோரிக்கைகளும்
நிபந்தனைகளுமின்றி
ஓடிச் சென்று
அந்த சுபயோக
சுப வேளையில்
மானசீகமாகத்
தத்தெடுத்துக் கொண்டேன்
அப்பாவை
என் மூத்த பிள்ளையாக…
Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 9சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.