தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

 

 

ஜிஜே.  தமிழ்ச்செல்வி

 

 

 

விடியற் கால பொழுது சில நேரம் சோர்வாக அமைந்து விடுவது உண்டு. அது என் மனநிலை பொறுத்தது என்ற போதிலும் அந்த மனநிலையை மாற்ற பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படிப்பட்ட நாள்தான் அந்த நாள் ! (14.07.2014) எனது துக்க நாள் !

 

பல நேரங்களில் நான் சோர்வை உணரும் போது எந்த காரியங்களிலும் ஈடுபடுவ தில்லை. கால்கள் நடக்க சக்தி அற்றது போல் பாசாங்கு செய்யும், கைகள் தட்டச்சு செய்யாது. விழிகள் இன்னும் உறங்க அவகாசம் கொடு என்று கெஞ்சும்.  இப்படி சரீரத்தின் எல்லா லீலைகளையும் ஒதுக்கி அலுவலகத்திற்குப் புறப்பட்டுவிட்டேன்.

 

அன்று திருவண்ணாமலைக்கு போக வேண்டும் என்பது திட்டம்.

 

ஏனோ மனம் பயணத்தில் லயிக்கவில்லை. அதை ஒரு பொருட்டாக நான் எண்ணாமலேயே தேவனுக்கு போன் செய்தேன்.

 

“சொல்லுக்கா.”

 

“இன்று திருவண்ணாமலை போகனும்டா.”

 

“நான் கிருஷ்ணகிரியில இருக்கேன் அக்கா, ஒரு மேரேஜ்க்கு வந்திருக்கேன், முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல.”

 

“சரிடா,” என்று சொல்லிவிட்டு சைக்கிளிலேயே அலுவலகம் சென்றேன்.

 

சோர்ந்த மனதைக் காயப்படுத்தவெனவே வரிசையில் நின்றார்கள் பொதுமக்கள்.

 

“ஒட்டு கார்டு குடுத்து எவ்ளோ நாளாச்சு இன்னும் குடுக்கவே மாட்டேங்குற ?”

 

கேட்ட பாட்டிக்கு பதில் சொல்லாமல் மாறுதல் ஆகி வேறிடத்திற்கு போன அதிகாரியைத் திட்டிக்கொண்டேன் மனதிற்குள்ளாக.

 

பிரிண்டர் இல்லை இந்த அலுவலகத்தில், பேப்பர் இல்லை, எதுவுமில்லை. வட்டாட்சியர் முன் போய் நின்று, “சார் பிரிண்டர் இல்லை, எல்லா வேலையும் நிலுவையில்,”என்றேன்.

 

“என்ன செய்யலாம் ?”

 

“நம்ம பிரிண்டர் சரி செய்ய முடியாதுன்னு சொல்றாங்க சார்.”

 

“ஏன் எல்லாரும் இப்படியே இருக்கீங்க, நெறய பேர் இப்படி தான் இருக்காங்க” என்றார்.

 

அவர் சொன்னதின் பொருள் உணர்ந்த மூளை டக்கென்று பதிலை மாற்றியது.

கேனன் பிரிண்டர் 6900 ரூபாய், எச்பி, சாம்சங் கம்பெனியும் இருக்கிறது. ஆனால் அதன் விலை தெரியவில்லை” என்றேன்.

 

“இதைத்தான் கேட்டேன்” என்றார்.

 

அவர் அதிகாரி, அவர் சொன்னவிதம் நெருடலாக இருந்த போதிலும், அவர் சொன்ன கூற்று நிஜம்.

 

பெருவாரியானவர்கள் எது தேவையோ அதை சிந்திக்காமல், எது முடியாதோ அதை பற்றியோ சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

 

பாட்டியிடம் இப்போ திருவண்ணாமலை போறேன். நாளைக்கு வந்து வாங்கிக்கங்க!

என்று சொல்லிவிட்டு அலெக்சிற்கு போன் செய்தேன்.

 

“திருவண்ணாமலை வரைக்கும் போகனும்டா”

 

“சரிக்கா.”

 

“ஆபீஸ் உள்ளவே வந்துரு, கொஞ்சம் பைல்ஸ் கொண்டு போகனும். என்னால தூக்க முடியாது.”

 

“சரிக்கா வரேன்”

 

நான் முகம் கழுவி வருவதற்குள் காத்திருக்காமல் அலுவலகம் வந்தவன் மீண்டும் ஆட்டோ ஸ்டேண்ட் போயிருந்தான்.

 

“போன் அடிச்சுட்டே இருந்ததம்மா” என்று மொபைலை கொண்டு வந்தாள் அலுவலக உதவியாளரான தெய்வாணை.

 

ஆட்டோகாரராக இருக்கும் அம்மா. இந்த பைலையும், பையையும் கொண்டு வந்துவிடுங்கள் நான் வெளியில் போகிறேன் என்று வெளியில் வந்தால் ஆட்டோவைக்காணவில்லை.

 

சிம்மில் பணமும் இல்லை!

 

பக்கத்தில் நின்றிருந்த உடன் பணியாளரிடம் போன் வாங்கி ஆட்டோவிற்கு திரும்பவும் போன் செய்தேன்.

 

சில நொடி காத்திருப்பில் ஆட்டோ வந்துவிட்டது. அதற்கு முன்பாகவே நான் வெளியில் வந்து அசோக ஸ்தூபிக்காக கட்டப்பட்டிருக்கும் சுற்றுச் சுவரில் அமர்ந்தேன். ஸ்தூபியின் உள் சுவரில் மதுபானக் காலி குப்பி ஒரு பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் தண்ணீர் பாட்டில் ஒன்றும் இருந்தது.

 

நல்லதொரு குடிமகனின் வேலை. என்னை முகம் சுளிக்கச் செய்தது. நம் சந்ததிகளின் ஒழுக்கக் குறைவை கண்டும் காணாமல் போய்விட வேண்டும். இல்லை யென்றால் பொங்கும் கோபத்தை தனக்குள் அடக்கி தனக்கே தீங்காக்கிக் கொள்ள வேண்டும்.

 

கோபப்படுவதால் சாதிக்க போவது ஒன்றுமில்லை. ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பார்ட்டி ஐட்டமாக ஒரு கிங்க் பிஷர் சிக்னெச்சர் என்று பிராண்ட் சொல்லி பேசும் அளவிற்கு பள்ளி மாணவிகள் அறிவு வளர்ந்திருப்பதை செவிமடுத்தேன் ஒரு முறை. அது அவர்களுக்குள்ளாக நகைச்சுவைக்காக பேசிக் கொண்டது என்ற போதிலும் வருங்கா சமுதாயப் பங்காளர்களின் போக்கு என்னை வருத்தமடையவே செய்தது.

 

“என்னக்கா யோசனை என்றான் ?” அலெக்ஸ்

 

“ஒன்றுமில்லைடா,” என்று ஆட்டோவில் ஏற முயற்சி செய்த வேளையில் தான் அம்மாவும், அக்கா மகன் சீயோனும் வந்தார்கள்.

 

“சீயோனின் மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டது. அதற்கு வட்டாட்சியரிடம் இருந்து ஒரு சான்று வாங்க வேண்டும்.”

 

“நான் வெளியே போகிறேன்.”

 

“திருவண்ணாமலைக்கா,” என்றாள் அம்மா

 

“ஆமாம் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும்.”

 

“சரி போய்ட்டு வா என்று அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்கள் அம்மாவும், அக்கா மகனும்.

 

அப்படியே விட்டு செல்ல மனம் இல்லை. ஆட்டோ டிரைவரிடம் பணம் கொடுத்து

 

“அலெக்ஸ் ! என் நம்பர்க்கு கொஞ்சம் ஈசி பண்ணிவிடுடா.” என்றேன்.

 

அவன் ஈசி பண்ணிவிட தெய்வாணைக்கு போன் செய்து “தலைமையிடத்து துணைவட்டாட்சியர் இருக்கிறார்களா ?” என்று கேட்டேன்

 

“இல்லைம்மா திருவண்ணாமலை போயிருக்காங்க.”

 

“உள்ள அம்மா வந்திருக்காங்கம்மா அப்ளிகேஷல்ல எண்டாஸ்மெண்ட் போட்டு அனுப்புங்க.”

 

“இல்லம்மா அவங்க திரும்ப வெளிய வந்துட்டாங்க.”

 

தெய்வாணையின் இணைப்பை துண்டித்து மீண்டும் அம்மாவிற்கு போன் செய்தேன்.

 

“இராஜேஸ்வரி மேடம் திருவண்ணாமலை போய்ட்டாங்க நீங்களும் வந்தா உங்களை வீட்ல விட்டுட்டு போறேன். முட்டி வலின்னு சொன்னீங்க. எதுக்கு இவ்ளோ தூரம் நடந்து போகனும்.”

 

“அம்மா வரும் வரை காத்திருந்து அவளையும் அழைத்துக் கொண்டு அவளை என் இளைய தம்பி அன்புவின் பழச்சாறகம் வாயிலில் விட்ட போது, சீயோன் “பிரிசிலா ஆன்டி நானும் திருவண்ணாமலை வருகிறேன்,” என்றான்.

 

“சரி வாடா சீயோன்,” என்றேன்

 

அன்புத் தம்பி, “பிரிசிலா [தமிழ்ச்செல்வி] ஜூஸ் குடிச்சுட்டு போ,” என்றான்.

 

இது என் வாழ்வில் புது உணர்வு. இந்த உபசரணை, மரியாதை கலந்த அழைப்பு இதுவெல்லாம்.

 

கடையில் இருந்து இளையவனின் மனைவி மற்றும் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போய் அவர்களை வீட்டில் விட்டு விட்டு. ஆட்டோ டிரைவர் போடாத காக்கிச் சட்டைக்காக ஆட்டோ ஸ்டேண்ட் வரை போய், அங்கும் காக்கிச் சட்டையில்லாமல், ஆட்டோ டிரைவர் வீடு வரை சென்று காக்கிச் சட்டை அணிந்த பிறகு ஆட்டோ திருவண்ணாமலை நோக்கி வேகம் எடுத்தது.

 

எந்த வித்தியாசமும் இல்லாத அதே புறக் காட்சிகள். தூரத்தில் தெரியும் மலையும் மேகமும். வரண்ட விளை நிலமும். மஞ்சள் பூக்களும். தரை படர்ந்த தான்தோன்றி புற்களும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு மாடுகளும் ஆடுகளும் கண்களுக்குத் திகட்டாத காட்சிகள்.

 

உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. காலையில் இருந்து உண்ணாததால் உடல் களைப்பு ஒருவித மனச்சோர்வை உண்டு செய்திருந்தது.

அலெக்ஸ் வருவாய் கோட்ட அலுவலகம் செல்ல வேண்டும்டா என்றேன்

வழி தெரியாதுக்கா.

 

இரு விஜய்க்கு கால் பண்ணி கேக்குறேன் என்று என்னை போலவே திருவண்ணாமலையில் பணிபுரியும் எபிக் ஆபரேட்டர் விஜய்க்கு கால் செய்தேன்.

 

“விஜய் ! வருவாய் கோட்ட அலுவலகம் எங்க இருக்கப்பா ?”

 

“திருவண்ணாமலை தாலுக்கா ஆபிஸ்க்கு ஆபோசிட்ல மேடம், ஏன் நீங்க வர்றீங்களா?”

 

“ஆமாம் பா.”

 

“ஏன் மேடம் நீங்க வர்றீங்க உங்க அசிஸ்டெண்ட் கிட்ட கொடுத்து விட வேண்டியதுதானே அப்ளிக்கேஷன்ஸ.”

 

“திருவண்ணாமலை வர்ற வேலை இருந்ததால நான் கொண்டு வந்தேன் பா.”

 

“சரி மேடம் பார்த்து பத்திரமா வாங்க,” – என்று இணைப்பை துண்டித்தான்.

வருவாய் கோட்ட அலுவலகம் வந்த போது மணி பகல் 3.45 பி.எம்.

 

A4 இருக்கையை கண்டுபிடித்து அந்த அலுவலகம் உள் நுழைய வாயில் அருகிலேயே அந்த மனிதர் அமர்ந்திருந்தார்.

 

“யாரும்மா ?”

 

“சார் A4 பாக்கனும்.”

 

“ஏன் ?”

 

“செங்கம் எலெக்ஷன்ல இருந்து அப்ளிக்கேஷன் கொண்டு வந்திருக்கேன்.”

 

“அசிஸ்டெண்ட் என்ன ஆனார் நீ கொண்டு வர்ற ?”

 

“திருவண்ணாமலை வந்ததால கொண்டு வந்தேன் சார்.”

 

“சரி நீ போ நான் செங்கத்துல இருந்து யாராச்சும் வந்தா கொடுத்து விடறேன். இது செங்கம் தாசில்தார் கையெழுத்தா வேற இல்ல.”

 

“அவர் கையெழுத்துதான் சார், சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ங்கறதால இங்லீஷ்ல போட்டிருப்பார்,” என்றார் அருகில் இருந்தவர்.

 

“கையெழுத்தை எல்லாம் மாத்தக் கூடாது,” என்றார்

 

ஒரு விடயம் சொல்ல மறந்தேன். ஆர்டிஓ அலுவலகத்தில் சாய்தளம் அமைத்திருந் தார்கள். அது இலகுவாய் இருந்தது எனக்கு அதே சமயம் பிடிமானத்திற்காக கட்டப் பட்டிருந்த சில்வர் கம்பம் ஆடியது. அதை பிடித்தவுடன் கீழ் விழப்போகும் உணர்வை தந்ததால் அதை பிடித்து இறங்குவதை தவிர்த்து என் ஊன்று கோலையே பிடிமானமாக பயன்படுத்தினேன்.

 

ஆர்டிஓ அலுவலகத்திற்கு எதிரில் தான் திருவண்ணாமலை தாலுக் ஆபிஸ் அங்கு தான் விஜய் இருக்கிறான். இவ்வளவு தூரம் வந்து அவனை பார்க்காமல் போவது சரியல்ல என்று தோன்றியது.

 

“அலெக்ஸ் ! என் பிரண்ட் பார்த்துட்டு போயிரலாமா ?”

 

“சரிக்கா,” என்றான்

 

சியோன் கலெக்டர் ஆபிஸ் போனதும், “இந்த கார்ட் டைப்பண்ணிட்டு இரு நான் அதுக்குள்ள டிஸ்எபிள்டு ஆபிஸ் போய்ட்டு வந்துடறேன்.”

 

“சரி பிரிசில்லா ஆன்டி.”

 

ஆட்டோ ஒரு யு டேர்ன் அடித்து தாலுக் ஆபிஸ் உள்நுழைந்தது.

 

விஜய் வரும் வரை காத்திருந்து அதற்கு முன் சீயோன் கொடுத்த சாக்லெட்டை வயிற்றுக்கு இரையாக்கி விஜயிடம் பேச :

 

“என்ன மேடம் இவ்ளோதூரம், வேலை எல்லாம் எப்படி போகுது,” என்ற அவனின் கேள்விக்கு, “வேலை நல்லா போகுது, இவ்ளோ தூரம் வந்து உன்னை பார்க்காம போகனுமான்னுதான்,” என்று பதில் சொல்லி, “நீங்க வராதீங்க மேடம் யார்க்கிட்ட யாச்சும் அப்ளிக்கேஷன் கொடுத்து விடுங்க நான் உங்களுக்கு கார்டு போட்டு மெயில் பண்றேன்,” என்ற அவனின் அன்பை ஏற்று அவனிடம் இருந்து விடை பெற்றேன்.

 

கலெக்டர் அலுவலகம் போகும் வழியிலேயே தியாகு ப்ரோகிராமர்க்கு போன் செய்து அலுவலகத்தில் அவர் இருப்பதை உறுதி செய்து கொண்ட போது ஆட்டோ, கலெக்டர் அலுகலகம் அருகில் சென்று நுழைவு வாயில் கட்டிக்கொண்டிருந்ததால் வழி இன்றி அடுத்த வழி கண்டுபிடிக்க சற்று இளைபாறி மீண்டும் தன் பயணத்தை துவங்கி கலெக்டர் அலுவலகப் படிக்கட்டின் முன் நின்றது.

 

சீயோனை அங்கு இறக்கிவிட்டு,  ஊனமுற்றோர் அலுவலகத்தை அடைந்த போது அலுவலகம் வெறிச் சோடியிருந்தது.

 

வெளி வராந்தாவில் இரு செவித்திறன் குன்றியவர்கள் சப்தமிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

ஊனமுற்றோருக்கான அலுவலர் இருக்கையில் இருந்தது கூடுதலான் ஆறுதல் எனக்கு. மூன்று சக்கர மோட்டார் வாகன லிஸ்டில் என் பெயர் இருக்கிறதா என்று விசாரிக்க, அதிகாரியின் உதவியாளப் பெண் தான் பதில் சொன்னாள்.

 

“படிப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை”

 

நான் படிக்கும் போதிருந்துதான் அதற்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன் இது 13 ஆவது முறை கஜினியின் படையெடுப்பைப் போல!

 

விழித்தாள் அவள்

 
“நாங்க என்ன செய்ய முடியும் மேடம் ?  அலாட்மண்ட் வந்தா தரப்போறோம் என்றவள் அடுத்த அஸ்திரத்தை பயன்படுத்தினாள்

 

“உங்கள்” அடையாள அட்டை கொண்டு வந்திருக்கீங்களா ?”

 

“இல்ல மேடம் என்றேன்.”

 

“பிறகு எப்படி மேடம் நான் பார்த்து சொல்ல முடியும் ?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் குரல் உணர்வு.

 

“ஆஹா” என்றது என் புரிந்துணர் மனம் என் பதில் அதை வெளிப்படுத்தவும் செய்தது.

 

என்னைப் போலவே மக்களைச் சமாளிக்கும் திறன். பொதுவாய் அரசு அலுவலகங்களில் இருப்பவர்களுக்கு பேச்சுத் திறனும் மேம்பட்டு விடுகிறது.

அங்கிருந்து வந்த போது சீயோன் மரத்தடியில் பிஸ்கெட் தின்றபடி மீண்டும் அலுவலகப் பக்கமாக நடந்துக்கொண்டிருந்தான்.

 

“சீயோன்! சீயோன்!”

 

என்னுடைய இரண்டாவது அழைப்புக்கு திரும்பியவன் “போலாமா பிரிசில்லா ஆன்டி ஒரு கார்ட் மட்டும் போடல,” என்றபடி வந்தான்.

 

“ஆலோகிராம் கொடுத்தாங்களா ?”

 

“இல்லையே”

 

நான் மீண்டும் தியாகுக்கு போன் செய்ய!

 

“எங்க அவர் கீழ வந்துட்டாரா மேல அனுப்பி விடுங்க என்றார்.”

 

மேலே போன சீயோன் அரைமணி நேரமாக ஆளைக் காணவில்லை.

 

அதற்கு பதிலாக முன்பு எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய ஓஏ ஆனந்த் வந்தான்.

 

“சார் எச் எஸ்சை பார்க்க போயிருக்கார். மேடம் வந்ததும் வாங்கிட்டு வந்து தரேன்

நல்லா இருக்கீங்களா மேடம் ?”

 

“நல்லா இருக்கேன் பா”

 

“எதாச்சும் சாப்பிடறீங்களா ?”

 

“வேண்டாம்பா இப்பதான் சாப்பிட்டோம்,” என்று சம்பிரதாயத்துக்காக சொன்ன போதும் பசித்தது.

 

ஆனந்த் தற்காலிக விடைப்பெற்ற பிறகு “அலெக்ஸ் ரொம்ப பசிக்குடா எதாச்சும் இருக்கா பாரேன்” என்றேன்

 

அவன் இரண்டு கேழ்வரகு அடை, ஒரு சுக்கு டீயோடு திரும்பி வந்தான்.

 

ஒரு விழுங்கு டீ வயிற்றுக்குள் போகும் முன் மீண்டும் வந்து சேர்ந்தான் ஆனந்த்

 

“மேடம் இதையெல்லாம் ஒரு பேப்பர்ல என்ட்ரி போட்டுட்டு வரச்சொன்னார் மேடம்.”

 

எல்லா சலான் எண்களையும் வெள்ளை காகிதத்தில் பதிந்து கட்டணத் தொகையை எழுதி கீழே கையெழுத்து இட்டு தந்தேன்.

 

ஆனந்த் மீண்டும் அலுவலகம் நோக்கி சென்றுவிட தேர்தல் வட்டாட்சியர் திருவண்ணாமலையிடமிருந்து போன் :

 

“இவ்ளோ பணத்தை என்னம்மா பண்ணின ?”

 

“பேங்க்ல கட்டிட்டேன் சார்.”

 

நான் அதை கேக்கலம்மா இவ்ளோ பணத்தை என்ன பண்ணின ?”

 

“அவர் கேட்டது கொஞ்சம் லேட்டாக புரிந்த போதும், பேங்க்ல கட்டிட்டேன் சார்“ என்று சுரத்தில்லாமல் கூறினேன்.

 

1102 வாக்காளர் அட்டைக்குக் கட்டண 25 ரூபாய் வீதம், நான் கட்டிய பணத்தை இரு மடங்காய் பொதுமக்களிடம் ஏமாற்றி வசூலித்திருப்பேன் என்பது அவர் தப்புக்கணக்கு.

 

“அடச்சே போங்கடா நீங்களும் உங்க கணக்கும்.” என்றது என்மனம்.

 

“19 மாதங்களில் வசூலித்த பணம் அது. மனம் வலித்தது. இங்கே நேர்மையாய் இருந்து இதுவரை வேலை செய்ததில் என்ன பலன ?”  என்ன மனிதர் இவரெல்லாம் ?

 

இந்த வேலையை தூக்கி எறிந்துவிடத் துணிந்தது மனம்.

 

சீயோனும் ஆனந்த்தும் ஆலோகிராமோடு வந்தார்கள். “பௌச் ஆனந்த்

பௌச் உங்களயே வாங்கிக்க சொன்னார் மேடம்.”

 

1102 பௌச்சிற்கு நான் எங்கே போக ஒரு பௌச்சின் விலை 1 ரூபாய்.

 

அங்கிருந்து வரும் வழியில் என் அக்காவின் அலுவலகம் அவளையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவளுக்கும் எனக்குமாக ஒரு சின்ன கருத்து வேறுபாடு.

 

அதன் பிறகு  அவள் வரவே இல்லை வீட்டுக்கு என்னை பார்க்க.

 

இளையவள் நானே வணங்கிப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டேன் மனதிற்குள்ளாக.

 

எந்த சொந்தமென்றாலும் இந்த ஜென்மம் வரையில் தான் அடுத்த ஜென்மம் குறித்து எந்த நம்பிக்கையும் இல்லை எனக்கு.

 

ஆட்டோவிற்கு கொடுக்க ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சொன்னால்

அக்கவுண்டில் பணமே இல்லை என்று அக்காவே 1000 ரூபாயை நீட்டினாள்.

 

“திரும்ப தந்துரனும்டி என் பிள்ளைக்கு காலெஜ் பீஸ் கட்டனும்.”

 

இதற்காகவாவது பேசினாளே என்று எண்ணிக்கொண்டேன்.

 

என் கைப்பையில் பணம் கொஞ்சம் கொறைச்சலாய் இருந்த போதும், நாளை தருகிறேன் என்று சொன்னால் ஆட்டோ டிரைவர் மறுக்கப் போவதில்லை என்ற போதிலும் அக்கா கொடுத்ததை வாங்கிக்கொண்டேன்.

 

பிறகு “ஒன்லி காஃபி” கடையில் அக்கா வாங்கி தந்த உளுந்து போண்டா மற்றும் காபியோடு அன்றைய விரதத் தொடர்ச்சியை முழுமையாய் நிறைவு செய்த போதும்,அந்த தேர்தல் மேலதிகாரி கேட்ட “அவ்ளோ பணத்தை என்னமா செஞ்ச” என்ற கேள்வி மட்டும் அந்த இரவு முழுவதும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது.

 

[தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *