திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்

வளவ.துரையன்
பெருமாள் குடிகொண்ட கோயில்களில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இருக்கும் தலங்களைத் திவ்ய தேசங்கள் என்று வழங்குவர். அவை மொத்தம் 108 ஆகும். அவற்றில் பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்கள் என்று 18 திருக்கோயில்களைக் கூறுவர். அங்கு ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள 9 கோயில்களை நவதிருப்பதிகள் என்று வழங்குவர்.
அவற்றுள் திருக்கோளூர் எனும் பெயர் பெற்ற திவ்யதேசம் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஆழ்வார் திருநகரிக்குத் தென்கிழக்கே சுமார் இரண்டு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதிருக்கோயிலில் பெருமாள் அளக்கும் கருவியான ஒரு மரக்காலைத் தலைக்கு வைத்துச் சயனகோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் நவ நிதிகளையும் தன்பக்கத்தில் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டிருப்பதால் இப்பெருமாளுக்கு ‘வைத்தமாநிதிப் பெருமாள்’ எனும் திரு நாமம் வழங்குகிறது. இவர் கிழக்கு நோக்கிய கோலத்தில் இங்கு எழுந்தருளி உள்ளார். இங்கு எழுந்தருளி உள்ள தாயாரின் திருநாமம் குமுதவல்லி என்பதாகும்.
ஒருவர் தான் இழந்த பொருளை மீண்டும் பெற இப்பெருமாளை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று கூறுவர்.
ஸ்ரீவைஷ்ணவத்தை ஒல்லும் வகையெல்லாம் பிறருக்கு உபதேசித்த ஸ்ரீமத் இராமானுஜர் ஒருமுறை இந்த்த் திருக்கோளூருக்கு விஜயம் புரிந்தார். அவர் இந்த திவ்ய தேசத்தில் நுழையும் போது ஸ்ரீ வைஷ்ணவ இலச்சினையுடன் ஒரு பெண்பிள்ளை வந்து அவரைத் தண்டனிட்டாள். ஸ்ரீமத் இராமானுஜர் அப்பெண்பிள்ளையை நோக்கி,
”பெண்மணியே! நீ எங்கிருந்து புறப்பட்டாய்?
என்று வினவினார். அதற்கு அவர், ”ஸ்வாமி, நான் திருக்கோளூரிலிருந்து விடை கொண்டு புறப்பட்டேன்” என்று பதில் கூறினாள்.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ”எவ்வளவு பெருமை பெற்ற திவ்ய தேசம் இது? இதை விட்டும் ஒருவர் போவாரோ” என எண்ணினார்.
உடன் அவளை நோக்கிய எம்பெருமானார்,
”ஒருவா கூறையெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு மான் புகுமூர் திருக்கோளூரே” என்றன்றோ இத்திவ்யதேசத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அப்படி எல்லாருக்கும் புகுமூரான இது உனக்கு மட்டும் புறப்படும் ஊராயிற்றா? என்று கேட்டார்.
அதற்கு விடை கூறுமுகத்தான் அப்பெண்பிள்ளை, பல பாகவதர்களின் அருஞ்செயல்களையெல்லாம் எடுத்துக்கூறி,
”அந்த அடியார்களைப் போல நான் ஏதேனும் அருஞ்செயல் செய்தேனா?” என்று கேட்டதோடு 81 வாக்கியங்களைப் பிரமாணமாக உடையவரிடத்தில் விண்ணப்பம் செய்தார்..
அந்த விண்ணப்பங்கள் யாவும் ”திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்” எனும் பெயரால் தொன்று தொட்டு வழங்கப்படுகின்றன. இவ்வரலாற்றை திருவாய்மொழிப்பிள்ளையால் அருளிச்செய்யப் பெற்றதாக ஸ்ரீமத் பெரிய வானமாமலை அருளிச் செய்தார்.
அதில் முதல் வாக்கியம்’
”அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போல”
என்பதாகும். இதன் பொருளை ஈண்டு காண்போம்.
பூதேவியின் வேண்டுகோளின்படி இப்பூவுலகில் பூபாரம் தீர்க்க எண்ணிய திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கத் திருவுளம் கொண்டார். அதனால் கண்ணனாக தேவகியின் வயிற்றில் வந்துதித்தார். அவர் அவதரித்த இடம் சிறைச்சாலையாகும். கொடூர மனம் கொண்ட கம்சனிடமிருந்து தன் குழந்தையைக் காக்க அக்குழந்தையின் எண்ணப்படியே, அவதரித்த அந்த இரவிலேயே வசுதேவர் கண்ணன் எம்பெருமானை ஆயர்பாடிக்குக் கொண்டு சென்றார்., அங்கு யசோதைப் பிராட்டியால் அக்குழந்தை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
இவ்வாறு ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக வளரும் கண்ணபிரானை மாய்க்கப், பூதகி, பகாசூரன் சகடாசூரன், வத்ஸாசூரன் போன்றோரை கம்சன் அனுப்பினான். எல்லோரும் கண்ணனாகிய குழந்தையால் வதம் செய்யப் பட்டனர். அதுமட்டுமா? கண்ணன் ஆயர்பாடியில் காளிங்க நர்த்தனம் ஆடினார். குன்று குடையாய் எடுத்துக் குளிர்மழை காத்தார்.
கம்சனோ தன் உயிர் குடிக்க வந்துள்ள கண்ணனை எப்படியும் முடித்துவிட எண்ணினான். அதன் பொருட்டு வில்விழா ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்தான். அவ்விழாவிற்குக் கண்ணனை அழைத்து அங்கே கண்ணனை எப்படியும் மாய்த்து விடலாம் என்று மனப்பால் குடித்தான். எனவே வில் விழாவைக் காணக் கண்ணனையும் பலராமனையும் அழைத்து வருமாறு அக்ரூரர் என்பவரை அனுப்பினான்.
அந்த அக்ரூரர் கம்சனின் தந்தைக்கு அமைச்சராக இருந்தவர். கம்சன் அவரிடம்,
”என்னைக் கொல்வதற்காக தேவகியின் எட்டாவது கர்பத்தில் பிறந்த கண்ணன் தற்போது ஆயர்பாடியில் நந்தகோபர் இல்லத்தில் வளர்ந்து வருகிறான். நான் அவனை எப்படியும் மாய்க்க வேண்டும். எனவே நீங்கள் ஆயர்பாடி சென்று இங்கு நடக்கும் வில்விழாவான தனுர் யாகம் காணவும் இந்த மதுரா நகரின் அழகைப் பார்க்கவும் வர வேண்டும் என்று கூறிக் கண்ணனையும் பலராமனையும் அழைத்து வர வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டான்.
அவனின் இச்சொற்களைக் கேட்ட அக்ரூரர் உள்ளம் நடுங்கியது. மனம் வருந்தியது.
“கண்ணனைக் கொல்வதற்காக அழைத்துவாருங்கள் என்று என்னிடமே இப்பாதகன் கூறுகிறானே? என்ன செய்வது? நான் போக மாட்டேன் என்று கூறி மறுத்தால் இவன் என்னைக் கொல்லத் தயங்க மாட்டான்” என்று யோசித்தார்.
பலவாறு சிந்தனை செய்து அவர் ஒருவாறு மனம் தேறுதல் அடைந்தார்.
“கண்ணபிரான் யாரென்று இவன் எண்ணவில்லை. அவன் இவ்வுலகுக்கே நாதனான பரம்பொருள். அவனே ஸ்ரீமந்நாராயணன். அவனே சர்வசக்தன். அத்தகைய திருமாலே ஆயர் பாடியில் வளர்கிறான் என்று தெரிந்திருந்தும் இது நாள் வரை அவரைச் சேவிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாமல் இருந்தது. இந்தக் கம்சனிடம் அகப்பட்டுக் கொண்டு இத்தனை நாள் நான் இருளில் மூழ்கிக் கிடந்தேன். இன்றுதான் எனக்கு விடிவுகாலம் வந்துள்ளது. இந்த நாள்தான் எனக்கு நல்ல நாள்” என்று அவர் எண்ணினார்.
திருப்பாவை முதல் பாசுரமாகிய ”மார்கழித் திங்கள்” என்று தொடங்கும் பாசுரத்தில் வரும் ‘மதி நிறைந்த நன்னாள்’ என்னும் சொற்றொடரில் ’நன்னாள்’ என்பதற்கு வியாக்கியானம் கூறும் போது,
”இன்றே எனக்கு நன்னாள்; என் ஜன்மம் இன்று சாபல்யம் அடைந்தது. இன்றுதான் எனக்குப் பொழுது நன்றாக விடிந்தது.’
என்று அக்ரூரர் புறப்பட்ட நாள் போல என்று கூறுவார்கள்.
இதை எடுத்துக்காட்டிய திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,
”கம்சன் அனுப்பிய காரணத்தினாலாவது அக்ரூரருக்குப் பகவானைச் சேவிக்கும் பாக்கியம் ஏற்பட்டது. ஆனால் நான் எந்தக் காரணத்தினாலாவது ஸர்வேஸ்வரனைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டு, நான் அதனை ஏற்றுக் கொண்டேனா?” எனும் பொருளில்,
“அக்ரூரரைப் போல அழைத்து வருகிறேன் என்றேனோ” என்று கூறுகிறார்.
———————————————————————————————————————————-

Series Navigation