திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்

Spread the love

mustang_poster

” அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலும் கணவன்மார்கள் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை .ஏன் ” என்ற கேள்வியை  நண்பர் ஒருவர் திருப்பூர் திரைப்படவிழாவின் ( முதல்நாளில் திரையிடப்பட்டப் படங்கள் அனைத்தும் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை )  படங்களைப் பார்த்து விட்டுக் கேட்டார்.. அவருக்கான பதிலை நானும் சில திரைப்படங்களிலிருந்தே சொன்னேன்.

“ முஸ்டாங்  “ என்ற துருக்கியப் படம்  ஒரு குடும்பத்தைச் சார்ந்த அடக்கப்பட்ட சகோதரிகள்  ஒவ்வொருவகையிலும்  குடும்பத்தை விட்டு வெளியேறுவதைச் சொல்கிறது. பெற்றோரை இழந்து மாமனாலும் பாட்டியாலும் வளர்க்கப்பட்ட  பள்ளி மாணவிகள் அய்வர் அவர்கள். மாமன் அதில் சிலரை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திய நாசகாரன்.பையன்களுடன் ஒட்டிக்கொண்டுப் பேசுவதைக்கண்டித்து பாட்டி வீட்டுக்குள் அடைத்து வைக்கிற உச்சமான கொடுமையும்  நடக்கிறது. ஒரு பெண் காதலனைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடிக்க இன்னொரு அவ்வீட்டுப் பெண் அந்த மண மேடையிலிலேயே கட்டாயமாக்கப்பட்டு திடீர் மணமகளாகிறாள்.  மூன்றாவது பெண் மாமனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவள். ஒருத்தி மன அழுத்தத்தின் காரணமாக  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். நான்காவது பெண்ணின் மீதும் மாமன் பாலியல் தொல்லை தந்து  வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய  திருமணநாளில் இரு பெண்கள் வீட்டை விட்டு தப்பித்து தூர நகரத்தில் இருக்கும் தங்களின் பழைய ஆசிரியையிடம்  அடைக்கலமாகிறார்கள். அவர்கள் தப்பிக்க ஓர் ஆண் உதவுகிறார். அவர் தகப்பன அல்ல .கணவனும் அல்ல.. அவன் ஓர் லாரி ஓட்டுனர்.  பெண்ணியம் தெரிந்தவனல்ல. சாதாரண மனிதாபிமானி

 

.” சாய்நாத் “ மராத்தியப்படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒருவன் உயர்சாதிபெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஊர் விட்டுப் போய் பல சிரமங்களை வென்று குழந்தை பெற்று வாழும் போது உயர்சாதிக் குடும்பத்து உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்படுவதை சித்தரித்தது. ஆணாதிக்கச்சமூகம் பற்றிய பல விமர்சன்ங்களை உயர்சாதியை முன்வைத்து இப்படம் சொன்னது.தீபன் என்ற பிரான்ஸ் தேசத்துப்படம் இலங்கையிலிருந்து  அகதியாகசெல்லும் ஒரு பெண் ( யாழினி )  தன்னோடு குடும்பம் என்று காட்டி ஒரு ஆணையும் ஒரு குழந்தைsairat-movie-reviewயும் கூட்டிச் சென்று  பிரான்சிற்குச் சென்று அவலப்படுவதைச் சொன்னது.  இலங்கையின்  போர்ச்சூழலை விட்டு விலக ஆசைப்பட்டிருந்தாலும் பிரான்ஸில் காணப்படும் போதைப்பொருள் கடத்துகிறவர்களின் மத்தியலான யாழினியின் வாழ்க்கை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறின  சிவதாசனின்  ( எழுத்தாளர் ஷோபாசக்தி இப்பாத்திரத்தில்)   மனச்சிரமங்களோடு சொல்லியது. மூன்று பேரும் குடும்பமில்லை . ஆனால் ஒரே குடும்பமாக காட்டிக் கொள்ளும் சூழலில் இரு பெண்களின் நிலை இதில். தமிழ் வசனங்கள், பல தமிழ்ப்பாடல் வரிகள் பெரும்பான்மையாக இடம்பெற்று இத்திரைப்படவிழாவில் தமிழ்ப்படம் இல்லாதக் குறையைப் போக்கியது எனலாம்.இலங்கையிலோ பிரான்ஸிலோ அந்நியப்பட்டுப்போன  மனிதர்களை காட்டியது.                                                                    மசான்( மயானம் )இந்திப்படத்தில் ஆண் நண்பனோடு விடுதி அறை எடுத்துத்தங்கும் இளம் பெண்  காவல்துறையால் பிடிபட்டு அதிலிருந்து விடுபட அவள் தந்தை  பெரும் தொகையைத்தர வேண்டிய சூழலில் ஆண் சமூகத்தால் கேவலமாகப் பார்க்கப்படுவதைக் காட்டியது. இணையாக வாரணாசியில் சடலங்களை எரிக்கும் டாம் என்ற தாழ்த்தப்பட்டவனின் காதலை ஏற்றுக்கொண்டு  கனவுலகில் மிதக்கும் கல்லூரி மாணவி விபத்தொன்றில் இறந்து போவதையும் சொன்னது.இரு பெண்களின் நிலையிலேயே கதை நகர்கிறது. பெண்களின் இளகிய காதல் மனதும் பலியாவதும் தொடர்வதில் சாதிய, தொழில்  அடையாளங்களும் இருப்பது வெளிச்சமாகியது. மூத்த ஆளுமை என்ற அளவில் மிருணாள்சென்னின் இரு படங்கள் ஏகதேசம் பெண்களையே மையமாக்க் கொண்டிருந்தன எனலாம். ஏக்தின்பிரதின் படத்தில் சீனு வேலைக்குப் போகும் பெண் . குடும்பப் பொருளாதார ஆதாரமே அவள்தான். ஆனால் அவளின் நியாயமான ஆசைகள் குறித்த அக்கறை வீட்டில் யாருக்குமில்லை. அவள்  வேலைக்குப் போன ஒருநாள் இரவில் வெகு நேரம் கழித்தே வீட்டிற்குத்திரும்புகிறாள். வீடும், பக்கத்திலிருப்பவர்களும் அவளைச் சார்ந்தவர்களும் கொள்ளும் மனநிலைப் போராட்டங்கள்  படம் முழுக்க. பெண்கள் குறித்து உறவுகளும் சகமனிதர்களும் கொள்ளும் எதிர்வினைகளை இப்படம் கொண்டிருந்த்து.  பெண் பார்க்கப்படும் கோணம் பற்றிய விசாரிப்பு அடங்கியிருந்தது. மிருணாள்சென்னின் படாதிக் படம் ஒரு அரசியல் போராளி தனியாக வாழும் ஒரு பெண்ணின் வீட்டில் அடைக்கலமாகிறான்  அவளின் முறிந்த திருமண வாழ்க்கையையும்  சொன்னது.

 

எழுத்தாளர்களை மையமாகக் கொண்ட சில படங்களும் இடம் பெற்றிருந்தன அதிலொன்று கோர்ட் ..மராத்தியத் திரைப்படம்  படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது. ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டப் படம். அமைதி ..அமைதி .. கோர்ட் நடக்கிறது என்பார்கள்.ஆனால் அமைதியை கேள்விக்குறியாகியே அது நடக்கிறது.

( கோர்ட் பற்றி தனி இணைப்பில விரிவாய் )

” கோர்ட் “  ஒரு இந்திய எழுத்தாளர் அவரின் எழுச்சிப்பாடல்கள் ஒருவர் தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக கைது செய்யப்படுகிறார் ,கவிஞரின் அவலம் இப்படியிருக்கிறார் என்றால் அமெரிக்க திரையுலகில் கோலாச்சிய எழுத்தாளர்  டால்டம் டிரம்போவின் அனுபவங்கள் வேறு வகையானவை. டிரம்போ என்ற ஜேய் ரோஷ் இயக்கத்திலான படம் அது பற்றி.. பொதுவுடமைக்கருத்துக்கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்தால் டிரம்போ  உட்பட பத்து திரைக்கதை எழுத்தாளர்கள்  குற்றம் சாட்டப்பட்டு  ஆஷ்லாந்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையிலிருந்து ஒரு ஆண்டிற்குப்பின் வெளிவந்தபின்  நேரடியாக திரைப்பட தொழிலில் ஈடுபடமுடியாமல் முட்டுக்கட்டைகள்… வெவ்வேறு பெயரில் திரைக்கதைகள் எழுதுகிறார். ஆஸ்கார் உள்ளிட்ட பல பரிசுகள் அவருக்குக் கிடைத்தாலும் அவர் அதைப்பெற முடியவதில்லை நேரடியாக. .மனைவி, குழந்தைகள் அவருக்கு ஒத்துழைக்கிறார்கள்.ஆனால் நிறைய குடும்பச்சிக்கல்கள்.  எதிர்ப்பை மீறி இரண்டு இயக்குனர்கள்   டிரம்போவின் பெயரிலேயே திரைக்கதையைப் படங்களாக்கி வெற்றி பெறுகிறார்கள்.  ஸ்பார்டகஸ், எக்ஸோடஸ்  என்ற அந்த இரு படங்களை  அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் எப்.கென்னடி ஆதரவு தர  கறுப்புப் பட்டியல்  உடைகிறது. கறுப்புப் பட்டியல் டிரம்போ போன்ற திரைக்கதை எழுத்தாளர்களை பாதித்ததை ஆழமாக சொன்னபடம் இது.டு கில் எ மாக்கிங் பேரு என்ற அமெரிக்கப்படம் ஒரு முக்கிய நாவலிலிருந்து உருவான முக்கியப்படம். அமெரிக்கவின் அலபாமா மாநிலத்தில் முப்பதுகளில் கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளை இனவாத வெறியால்  ஒரு சாதாரண கறுப்பிளைஞன் பாதிக்கப்படுவதைச் சொன்னது.நீதியை விட இனவேற்றுமை கோலோச்சியதைச் சொன்னது.

 

முக்கிய ஆளுமைகள் பற்றிய பல ஆவண்ப்படங்களும் இடம் பெற்றிருந்தன.பூனாவில் பழையத்திரைப்படங்களைச் சேகரித்து ஆவணக் காப்பகம் உருவாக்கியதில்  முக்கிய பங்கு வகித்த  பிகேநாயர் பற்றி ஏறத்தாழ மூன்று மணி நேர  “ செல்லுலாய்டு மேன் “ என்ற படம் முக்கியமானது.ஓலைச்சுவடிகளை பாதுகாத்த உவேசாவின் பயணம் போன்றதே நாயரின் முயற்சிகள். அவர் சென்ற ஆண்டில் மறைந்தார். அப்போது டிஜிட்டல் என்பது நிலைபெற்று விட்டாலும் காலம் முழுவது செல்லுலாயிடில் பணிபுரிந்த அவரின்  வாழ்க்கை செல்லுலாயிட் பிலிமில் திட்டமிட்டு  உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  அவரைப்பற்றி திரைப்பட உலகைச் சார்ந்த  பல முக்கிய ஆளுமைகள் இப்படத்தில் பேசுவதிலிருந்து அவரின் உழைப்பும் பயணமும் தெரிகிறது. திரைப்படம் சார்ந்த ஓர் இயக்கமாக அவர் செயல்பட்டிருப்பது சாதாரணத் திரைப்பட பார்வையாளனுக்கும் இதன் மூலம் தெரியவருகிறது. போலந்து நாட்டில் சாதாரண எலக்ரீசியனாக இருந்து சுதந்திரமான தொழிற்ச அமைப்பின் மூலம் தொழிலாளர்களைப் பல்வேறு போராட்டங்களுக்கு ஒருங்கிணைத்த  வாலேசா பற்றி ஆந்தர்ஜ் வஜேடா எடுத்தபடம் அவரின் பேட்டி ஒன்றை முன்வைத்து  மேலும் நகர்ந்து அவரின் வாழ்க்கையை நிரந்தரப்பதிவாக்கியிருந்தது .ஒரு சாதாரண மனிதன் எப்படி தலைவன் ஆனான் என்பதன் மையம்.வாலேசா மேன் ஆப் ஹோப் என்ற படம். மைக்கேல் மூர் என்ற அமெரிக்க இருக்குனர் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் பல்வேறு தளங்களில் முக்கிய ஆவணப்படங்களை எடுத்தவர்.  வேரி டு இன்வேடு நெக்ஸ்ட் என்ற சமீபத்திய ஆவணப்படத்தில் அவர் பலநாடுகளுக்குச் சென்று கல்வி, சுகாதாரம், சுதந்திரம் போன்றவை அந்நாடுகளில் நிலவி வரும் போக்கை எடுத்துரைத்திருக்கிறார். அதிலிருந்து தன் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் விசயம் என்ன என்பதை தெளிவாக்கியிருக்கிறார்.. ஸ்வீடன் நாட்டில் வேலை நேரம் அதிகமாக்கியிருப்பது. மதிய சாப்பாட்டு இடைவேளை அதிக நேரமாக  இருப்பதால் வேலை செய்யும் திறன் கூடும் இத்தாலி, இலவசங்களால் நிறைந்த பின்லாந்து, அய்ஸ்லாந்து சமூக வாழ்க்கையில் பெண்களின் முக்கியப் பங்கு   என்று பலதும் அவருக்கு ஆதர்சமாகிறது. இதிலிருந்து பெறுவதைத்  தத்துவஞானம் என்கிறார் மைக்கேல் மூர். மைக்கேல் மூர் இந்தியா வந்தால் எதைக் கொண்டு செல்வார் என்று ஒரு நண்பர் நகைச்சுவையுடன் கேட்டார். உங்கள் கற்பனைக்கு சிலதும் கிடைக்கலாம்.

அடுத்த ஆண்டு சோவியத் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி புரட்சி பற்றிய பல்வேறு படங்கள் இந்தத் திரைப்படவிழாவின் ஒரு பகுதியாக முன் வைக்கப்பட்டன. இந்த்த் திரைப்பட விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்ததால்  இந்த அம்சத்தை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.இங்கிலாந்தைச் சார்ந்த புகழ்பெற்ற இடதுசாரி இயக்குனர் கென் லோச்சின்  ஜிம்மிஸ் ஹால் என்ற படம்  மதவாதம், கிறிஸ்துவத்தின் அதிகார மேலாண்மை சாதாரண மக்களைக் கட்டுப்படுத்துவதினை ஒரு விமர்சனமாக்கியிருந்தது. இங்கிலாந்தின் உழைக்கும் மக்களைப்பற்றி தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் கென்லோச்சின் வயது 82.அய்சன்ஸ்டினின் அக்டோபர்-மவுனப் படம் புரட்சிகர காலத்தில் நடந்த நிகழ்வுகளை 90 ஆண்டுகளுக்கு முன் திரைப்படத்தில் பதிவு செய்திருந்தது.உலகைக்குலுக்கியப் பத்து நாட்கள் அவை.  1965ல் இந்தோனிசியாவில் நடந்த அரசியல் மாற்றங்களின் போது பொதுவுடமை ஆதரவாளர்கள் 3.5 லட்சம் பேர் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டும், எரிக்கப்பட்டும் சாகடிக்கப்பட்டார்கள். அந்தக் கொலைகளைச் செய்த சிலர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களுடனான நேர்காணலில் அவர்கள் அது பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது புதிய தலைமுறையினருக்கு அதிர்ச்சியையும் மன்னிப்பு கோரலையும் பதிவு செய்திருந்தது.  பெண்களின் மார்பை அறுத்தவர்கள், தொண்டையை அறுத்து ரத்தத்தை டம்ளில் சேகரித்துக் குடித்தவர்கள், வெட்டியத்தலையை பலர் பார்க்க தெருவில் நடந்தவர்கள், ரசித்துக் கொலைசெய்தவர்கள் என்று பலரும் தங்கள் பழைய அனுவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ( லுக் ஆப் சைலன்ஸ் ) தற்கொலையையும்  சாவையும் முன் வைத்து எழுப்பப்படும் தத்துவார்த்தமான கேள்விகள், யதார்த்தமான வாழ்க்கையை ஏற்றும் கொள்ளும் போக்கிலான தத்துவ அம்சங்களை  உளவியல் பார்வையில் வலியுறுத்தியது   டேஸ்ட் ஆப் செர்ரி என்ற ஈரான் படம்.   இயக்குனர் அப்பாஸ்கியரஸ்டமி. குழந்தைகளின் உலகம் பற்றிய கில்லா மராத்தியப்படம்,மற்றும்  மனிதர்களின் கோபம், காதல், காமம் பற்றிய விபரீத எண்ணங்களைக் கொண்ட வைல்டு டேல்ஸ் என்ற அர்ஜண்டைனா படம் போன்றவையும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்தன. இந்தப்படங்களையெல்லாம் உள் வாங்கிய தமிழ்ப்படம் எதுவும் இத்திரைப்படவிழாவில் இடம்பெறவில்லை.சமூக யதார்தத்திற்கு மாறாக கலைப்படைப்புகள்  எழுப்பும்  தார்மீகக் கேள்விகளை இத்திரைப்பட விழாவும்  எழுப்பியது.. வரலாற்றுக் கலாச்சாரத்தோடு இணைந்த சர்வதேச மனிதனாக மாற்றும் முயற்சியில் இப்படங்கள் அமைந்திருந்தன.

 

Series Navigationகொதிக்கிறது மக்கள் வெள்ளம்ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்