தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்

Spread the love

 

தை சென்னையில் நடக்கிறது. அதுவும் பஸ்ஸில். ஊரின் “கலாச்சாரப்படி” காலங்காத்தாலேயே கடையைத் திறந்து வச்சு ஊத்திக் கொடுக்கிறவங்ககிட்டே இருந்து வாங்கிப்”போட்டுக்” கொண்டு வந்துவிட்டவான் என்று குடிமகனைப் பற்றி சக பிரயாணியான பெண் சொல்கிறாள், குடிமகனுக்கும்  அந்தப் பெண்மணிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் கதை பின்னப்படுகிறது. சென்னை பாஷையில் தி. ஜா. ரவுண்டு கட்டி அடிக்கிறார். 

கண்டக்டரிடம் பணத்தைக் கொடுத்து டிக்கட் கேட்கிறான் குடிமகன். 

“இது என்னாய்யா ரூவா நோட்டா? வேற குடு. ஆணியில மாட்டி வச்சிருந்தியா? நடுவில் இம்மாம் பெரிசு ஓட்டை !  வேற குடுய்யா”

“என்ன மிஷ்டர் ! நானா ஆணில மாட்டி வச்சிருந்தேன், ஐகோட்டாண்ட டீ குடிச்சேன். அவுருதான் குத்தாரு.”

“நீ டீ குடிச்சா இத்த வாங்கியாந்திருப்பியா வேற எடுய்யா.”

டிக்கட் வாங்கிக் கொண்ட பின் பஸ்ஸில் வரும் ஒரு பெண்மணியின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளும் குடிமகன் தன் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டவனாகத்தான் நடந்து கொள்கிறான். இது பெண்களுக்கான சீட்டு என்று அவள் கூறுகையில் ‘நீ என் தாயாரைப் போல. உன் மேலே என் கிழிசல் துணி கூடப் படாமல் உட்கார்ந்து கொள்கிறேன்’ என்கிறான். .அவனுடைய சொந்தத் தாயார் எப்படிப்பட்டவள்? “மந்தைவெளி மார்க்கெட்டாண்ட பூ வித்துக்கினு குந்தியிருப்பா. காலங்காத்தாலெ அடைஞ்சான் முதலித் தெரு, மாறி செட்டித் தெரு அல்லாம் அப்பதான் படுக்கைய உட்டு ஏந்துக்கினு வாசல்லெ சாணம் தெளிக்கும். அதுக்குள்ளார என் தாயாரு கார்ப்பரேசன்  பம்புலெ குளிச்சு மஞ்சப் பூசிகினு சிந்தூரம் இட்டுகினு அங்காளபரமேச்வரியாட்டம் சேப்பு சேலே சுத்திக்கினு முப்பது மொளம் நாப்பது  மொளம்  அம்பது  மொளம் மல்லியும் மருவுமா தொடுத்துகினு ரெடியா உக்காந்துப்பா. நீ இப்ப கீறே பாரு  அங்காளபரமேச்வரியாட்டம் – இத்தே மாதிரிதான் இருப்பா”  

அவன் தாயார் இறந்து பதினெட்டு வருஷமாகப் போகிறது. ‘எதற்கு இப்போது அவளை நினைத்துப் புலம்புகிறாய்?’ என்று அந்தப் பெண்மணி கேட்கிறாள். அவன் தகப்பன் தினமும் குடித்து விட்டு வந்து அவன் தாயாரைப் போட்டு அடிப்பான். ஒரு நாள் தாங்க முடியாமல் இவன் தந்தையைப் போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறான். அன்றைக்குப் போனதகப்பன் அதற்கப்புறம் வீடு 

திரும்பவில்லை. அவன் தாயார் போய் உன் தகப்பனை இழுத்துக் கொண்டு வாடா என்று புலம்பித தீர்க்கிறாள். அவன் தகப்பன்  புரசவாக்கத்தில் யாரோ ஒரு பெண்ணுடன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு அவன் தாயார் அங்கே போனால் அவள்  புருஷனும் ஆசைநாயகியும் சேர்ந்து அவளை அடித்து அனுப்புகிறார்கள். 

“நீ ஏன் தாயே அங்க போனே?அந்த சோமாறிகிட்டே –  எங்கப்பனா அவன் – யமதர்மராசால்ல அவன்னு என் தாயார் குந்த வச்சு காலப் புச்சு விட்டோம்.  எமதர்மராசாவெ ஒண்ணும் சொல்லாதேடா பாவி. அவன் இல்லாட்டி நாமெல்லாம் எப்பிடி சாவுறதாம் ! ஊர் ஒலகம்லாம் கெளவன் கெளவியா பூடும்டான்னா. அவ்ளோ புத்தி, அவ்ளோ நாயம் எங்க தாயாருக்கு.”

அவன் சொல்வதைக் கேட்டு அந்தப் பெண்மணி சிரிக்கிறாள்.அவனிடம் “என் காதிலே உளுதுய்யா நீ சொல்றது அத்தினியும். ஒன் மூஞ்சியை அப்பாலெ வச்சுக்கினே பேசு” என்கிறாள்.

“ஏன் ! நான் எங்க தாயார் மேல சத்யமாச் சொல்றேன். நான் சாராயம் குடிக்கலே. செய்தி குடிச்சேன். உனக்கு ஒரு சாயா வாங்கியாரச் சொல்லுறேன். டாய் …டாய் …ஒரு டீ போடுறா என் தாயாருக்கு. மிஷ்டர் ஒரு பிகில் கொடு. மிஷ்டர். நான் டீக்குச் சொல்லிக்கினேகீறேன். நீ வண்டியை வுட்டுக்கினே கீறியே.”

இறங்கும் வரையிலும் அவன் பஸ்ஸில் வந்த தாயாருக்கு டீ வாங்கித் தருகிறேன் என்று கத்திக் கொண்டே வருகிறான்.  

கதை முழுவதும் சம்பாஷணைகளில் நடக்கிறது. வருணனைகள் என்று தனியாக எழுதப்படவில்லை. பெண்களின் உருவ வர்ணனை கூட சம்பாஷணை மூலமே வருகிறது. வார்த்தைப் பதங்களின் சேரக்கையில் பாத்திரங்களின் நடமாட்டமும், உணர்வுகளும் சம்பாஷணைகள் மூலமாகவே வெளிப்படுகின்றன. 

குடிமகனின் பேச்சுத் தெளிவைப் பார்க்கும் போது குடித்தே இப்படியிருந்தால், குடிக்காதிருக்கும் போது எவ்வளவு கெட்டிக்காரனாக இருப்பான் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. சக பிரயாணியும், கண்டக்டரும் அவர்களாகவே அவன் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று முடிவு செய்துவிட்டு அவனிடம்  பேசுகிறார்கள் என்பது கதைப் போக்கில் தெளிவாகத் தெரிகிறது..

ஒருவேளை  அவன் குடிக்காமல்தான் பிரயாணம் செய்தவனாக இருந்தானோ?    

Series Navigationசுவேதாஆல்- இன் – வொன் அலமேலு