தீக்காய்வார்  போல …      

author
0 minutes, 5 seconds Read
This entry is part 7 of 15 in the series 17 அக்டோபர் 2021

 

                                                                                                                     

சோம. அழகு

               அவ்வழகிய புலரியில் இனிய கனவுகள் கலைத்துச் சோம்பல் முறித்து இமை திறந்து பார்த்தால்… அறையெங்கும் கால் வைக்க இயலாத அளவிற்குச் சிதறிக் கிடந்தன… மூக்குகள் ! நீளமான மூக்கு, அகலமான மூக்கு, கூர்மையான மூக்கு, மழுங்கிய மூக்கு, சிவப்பான மூக்கு, கறுப்பான மூக்கு, மாநிறமான மூக்கு… எத்தனை எத்தனை விதம்? மனிதர்களைப் போலவே !  ஒவ்வொன்றும் சுருங்கியும் விரிந்தும் மிகுந்த ஆவேசத்துடன் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டிருந்தன. அப்படித்தான் நம்ப முற்பட்டேன். ஆனாலும் இதில் ஏதோ ஒரு வித்தியாசம்… ஒரு நெருடலான வித்தியாசம். அப்போதுதான் உன்னிப்பாகக் கவனித்ததில் அவை சுவாசிப்பதல்லாமல் மோப்பம் பிடிப்பதை உணர்ந்தேன். ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்தும் இன்ன பிற கோள்களிலிருந்தும் இவை வந்து விழுந்ததைப் போல், இவ்வளவு உயர்வு நவிற்சிக்கோ தற்குறிப்பேற்றத்திற்கோ தகுதியற்ற மூக்குகள்தாம். இவ்வளவு சொன்ன பிறகும் யாரோடதாக இருக்கும்  என்றெல்லாம் யோசிக்காமல் டக் என்று கண்டு பிடித்திருப்பீர்களே? அவர்களேதான்… சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள் – அதாவது நமது தெரிவு செய்யும் உரிமையைப் பறித்துக் கொண்டு நம் தலையில் வந்து சேர்ந்தவை… அப்பா இன்னும் கூட தெளிவாகக் கூறுவார்கள் ‘சில உறவுகள் நம் தலையில் தூக்கி வைக்கப்பட்ட சுமை மட்டுமல்ல. நம் காலைச் சுற்றும் பாம்புகள்’ என்று.

 

            என் திருமண சமயத்தின் போது… அப்பப்ப்ப்பா! எத்தனை எத்தனை ‘ஆ. கோ’ கள் (ஆர்வக் கோளாறுகளின் சுருக்கம்; ஆ, கோ – சத்தியமாக இது தற்செயலாகத்தான் அமைந்தது) மண்ணைப் பிளந்து கொண்டு வரும் புழுக்களாய் வெளிப்பட்டன? ‘எத்தன சவரன் நகை போடுறீங்க?’, “வெள்ளிச் சாமான் என்னல்லாம் குடுக்கப் போறீங்க?”, “சீர் வரிசை எல்லாம் வாங்கியாச்சா?,  ‘மண்டபம் எவ்ளோ ஆச்சு?”, “சாப்பாட்டுக்கு எவ்ளோ ஆச்சு?”, “சேலை எவ்ளோ ரூபாய்?”, “பிளவுஸ் என்ன டிசைன்? அதுக்கு எவ்ளோ?” – மேலே கீழே இடம் வலம் என எல்லா பக்கங்களிலும் இருந்து நெளிந்து குடைந்து புலனாய்வு செய்து கொண்டிருந்து ஒரு கூட்டம். முதலில் அவர்களுக்குள்ளேயே பேசிப் பேசி பின்னர் மண்டை வெடிக்கும் நிலை நெருங்கவும் அப்பாவிடம் வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டார்கள். ‘இதெல்லாம் அடுத்த வீட்டு காரியம். அவங்க பொண்ணுக்கு அவங்க செய்யுறாங்க… இதுல நமக்கென்ன போச்சு’ என்றெல்லாம் யோசிக்கும் அறிவு இருந்தால்தான் இந்தியா எப்போதோ வல்லரசு ஆகியிருக்குமே? ‘அடுத்தவர் பிள்ளையின் மதிப்பெண்களைக் கேட்பது கூட அநாகரிகம்’ என்று நினைக்கும் பெற்றோருக்குப் பிறந்தவளுக்கு இந்த விசாரணைக் கூட்டத்தின் மேல் வரும் கடுப்பு இயல்பானதுதானே?

 

            திருமணம் வேண்டாம் என்று நான் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் தொ.ப அவர்கள் ஒருமுறை என்னை அழைத்துக் காரணம் கேட்டார்கள். “கல்யாணம் பண்ணித்தான் வாழணும்னு என்ன இருக்கு? புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை” என்றதற்கு “இங்க பாரு… கல்யாணம்ங்கிறது முட்டாள்தனமான விஷயம்… ஆனா கல்யாணம் செஞ்சுக்காம இருக்குறது அத விட முட்டாள்தனம்… அதுக்காகவாது கல்யாணம் செஞ்சுக்கோ” என்றார்கள். ஆனாலும் உறவுகளில் சில சகிக்க இயலாததாய் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

 

            திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் கருமாந்திரம் பிடித்த கட்டுகள்…. ச்சைக்! யாரோ பொழப்பத்தவர்கள் ஆரம்பிச்ச வேலையாத்தான் இருக்கும். நம் சௌகரியத்திற்குத் தகுந்தாற் போல் வளைத்துக் கொள்வதில்தான் என்ன தவறு? அர்த்தமில்லா சடங்குகள் சம்பிரதாயங்கள் சாம்பிராணிகள் எதற்கு? இன்னமும் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பானேன்? அதிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ‘எல்லா கட்டும் நல்லா தெரிஞ்சவங்க’ என்ற ஒரு (ஓட்டை உடைசலான) பாத்திரம் இருக்கும். ‘இதத்தான் செய்யணும்; இப்படித்தான் செய்யணும்’ என்று எல்லாம் தெரிந்த அதிமேதாவி. மற்ற குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பாத்திரத்திடம் எல்லாம் கேட்டு அதற்குத் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்து ஏற்றி விடுவார்கள். திருமணம் முடிந்த முதல் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ‘சுருள்’ வைத்த போது “என்ன? ஏற்கெனவே குடுத்துத் தொலைச்சது பத்தாதுன்னு எனக்கு maintainance குடுக்குறீங்களா?” என்று கிட்டத்தட்ட சண்டையே போட்டேன் அப்பாவுடன். “என்னது இது ஒவ்வொரு மாசமும்? ரொம்ப எக்கச்சக்கமா இருக்கு எனக்கு… மாமாகிட்ட இதெல்லாம் வேண்டாம்னு சொல்லேன்” என்ற என்னவனின் அணுகுமுறை மட்டுமே எனக்கான ஆறுதலாய் அமைந்தது. திருமணப் பேச்சு துவங்கியதிலிருந்து முக்கால்வாசி நாட்கள் எனக்கும் அப்பாவுக்குமான வாக்குவாதம் விண்ணை முட்டியது. அதிலும் மூன்று நாள் மேளம் கொட்டும் கேடு கெட்ட இனக்குழுவில் பிறந்து தொலைத்துவிட்டேன். திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கும் சர்க்கஸ் திருமணத்தின் மறுநாள் மதியம் சொதி சாப்பாடு தின்று ஏப்பம் விட்டால்தான் முடிவுறும். அம்மூன்று நாட்களும் வேலை வெட்டியில்லாதவர்கள் போல் அனைவரும் அங்குதான் உருண்டு புரண்டு கொண்டிருப்பார்கள். இவ்வளவிற்கும் அப்பாவிற்கும் ஆடம்பரங்களில் விருப்பம் கிடையாது. ஒவ்வொரு முறையும் “தண்டச் செலவு” என்று நான் கூறும் போதெல்லாம் “பொண்ண பெத்தவன்டா நான்” என்று ஒருவித சுய பச்சாதபத்துடன் (apologetic tone) அப்பா கூறிய போது விர்ர்ர்ரென்று ஏறியது எனக்கு. தோழர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “என் பொண்ணு” என்று பெருமிதம் பொங்கும் மகிழ்ச்சியைப் பூசிக் கொள்ளும் அப்பாவின் இந்த முகம் காணச் சகிக்கவில்லை எனக்கு. எரிச்சலுடன் தோழர் பொன்னுராஜ் அங்கிளுக்கு தொலைபேசி “ரொம்ப எரிச்சல் வருது அங்கிள். என்ன இது? இன்னும் பழைய காலம் மாதிரி? அப்போ agrarian society. அதனால 10 நாள் கல்யாணம். இப்போவுமா? அப்புறம் என்ன இது? கட்டு, குட்டு, மண்ணாங்கட்டினு…” என்று கொட்டித் தீர்த்தால் அங்கிளோ “சமூகத்தோட சராசரி மனநிலை இதுதான். நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ இந்த சமூகத்துல தான் வாழணும். வேற வழியில்லை. இந்த சமூகத்திடம் இருந்து இவ்வளவுதான் எதிர்பார்க்கலாம்; எதிர்பார்க்கவும் முடியும்” என்று எதார்த்தம் பேசினார்கள். இதுக்கு அப்பாவே பரவாயில்லை போலும். “அப்போ என்னையும் சராசரியாவே வளத்துருக்க வேண்டியதுதானே? எதுக்கு பெரியாரையும் மார்க்ஸையும் சொல்லிக் குடுத்தீங்க?”- இதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்த பொன்னுராஜ் அங்கிளிடம் அதீத பாசத்தோடும் உரிமையோடும் ஒரு வித பொய்க் கோபத்தோடும் சொல்லிக் கொள்கிறேன்…. Hate you Uncle!     

 

            எனக்கு ஒன்று புரியவே இல்லை. எல்லோருக்கும் அவரவர் உறவினர்கள் மீது வண்டி வண்டியாய்ப் புகார்கள் இருக்கின்றன. பின்னர் ஏன் எந்த விசேஷமானாலும் அவர்களைக் கொண்டு கூட்டத்தைக் கூட்டிப் பெரிதாக்கி தமக்கான அங்கீகாரத்தை அவர்களிடமே எதிர்பார்க்கிறார்கள்? ஏன் சிறிதாக எளிதாக ஒரு விசேஷத்தை நடத்தினால் பிறவிப் பலனை அடையாமல் போய்விடுவார்களா? இன்னும் பசுமையாகக் கேட்பதானால் இதெல்லாம் ridiculously disgusting and vulgar display of wealthஆக தெரியவில்லையா? (கோபத்தில் தமிழ் வராதோ?)

 

            சுற்றம் சூழ தாம் தூம் என்று விசேஷங்கள் நடத்துவதற்கு, “நாள பின்ன நல்லது கெட்டதுக்கு உறவுங்க தானே வந்து நிக்கணும்? சமூகம்னு ஒண்ணு இருக்குல்ல. நாலு பேர் நாலு விதமா…. (அதே புளித்துப் போன வசனம்! பகட்டாக நடந்து கொள்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் அந்த நாலு பேர் பின்னால் ஒளிந்து கொள்வதாக உத்தேசம்?)” என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டி ஏதேனும் நியாயம் கற்பிக்க முயன்றால் நான் திருப்பிக் கேட்கிறேன்… நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்களிடம் ஒப்பித்து அவர்களைச் சகித்துக் கொண்டு போனால்தான் நமக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள் எனில் அப்படிப்பட்ட உறவுகள்தான் எதற்கு? அவசரத்திற்கு உதவவும் தாங்கிப் பிடிக்கத்தான் உறவுகள். தேவையேற்படும் சமயத்தில் மனதிருந்தால் வந்து உதவட்டுமே.

 

            நமக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்த பின் நாகரிகமாக விலகிச் செல்லும் உறவுகளின் மீதான எனது மரியாதையை இங்கு பதிவு செய்கிறேன். நான் சாட வந்தது, நமக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிந்த பிறகும் வலுக்கட்டாயமாகத் திரும்பத் திரும்ப நம் வெளியினுள் (space) வந்து நின்று தொலைப்பவர்களை. அவர்களின் வெட்கங்கெட்டத்தனத்திற்கும் மானங்கெட்டத்தனத்திற்குமாய் அவர்களை வெறும் ‘ஆர்வக்கோளாறுகள்’ என்று முத்திரை குத்தி கடிதோச்சி மெல்லெறிய விரும்பவில்லை. இந்த அவசியமில்லாத ஆர்வம் அவர்களுக்கே அருவருக்கத்தக்கதாகத் தெரியவில்லை என்பதே  அவர்களின் கேடு கெட்ட தரத்தைக் காட்டுகிறது. ஆர்வம் என்பதையும் தாண்டி தம்முடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது என்னும் ‘இவ்வுயரிய’ செயலை ‘க்ஞ்ச்ப்த்ட்ற்’ போன்ற வல்லினங்கள் மிகும் சுத்தத் தமிழ்ச் சொற்களாலான தூஷணத்தைக் (கோபத்தில் கெட்ட வார்த்தைக்கு வடமொழிதான் வரும் போல!)  கொண்டே பாராட்ட விழைகிறேன். இப்படிப்பட்ட ஆர்வக்கிறுக்குகள், ஒப்பிட்டுண்ணிகள் ஆகியவற்றை விலக்கி வைக்கவே விரும்புகிறேன். சரி ! வேண்டாம் ! விலகி இருக்கவே விரும்புகிறேன். இருக்க விடுகிறார்களா என்னை ? ஓடினேன் ஓடினேன்… மூலை முடுக்கெல்லாம் ஓடினேன்… அங்கும் அவர்களின் மூக்குகள் ‘வெ’னா, ‘மா’னா, ‘சூ’னா, ‘சு’னா எல்லவற்றையும் அடகு கடையில் வைத்து விட்டு எனக்கு முன்னரே வந்து அமர்ந்து தமது மோப்ப சக்தியின் பெருமையைப் பறை சாற்றுகின்றன, ஆதலால் திரும்பி வந்து விட்டேன். இம்மூக்குகள் நுழைய இயலா இடம், ஊர், நாடு, கோள், அண்டம் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துங்கள் மக்களே ! திரும்பி வரவே மாட்டேன்.

 

            என்னவன், எங்களின் உடன் பிறந்தோர், எங்கள் பெற்றோர், ஆச்சி – தாத்தா… இவர்களே என் வட்டம். இவர்களுக்கு மட்டுமே எங்களது (என்னவன், குழந்தை, நான்) வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கிய நகர்தல் குறித்த திட்டம் பற்றிக் கேட்கவும் எங்கள் வாழ்வில் அசையும் ஒவ்வொரு அணுவையும் பற்றித் தெரிந்து கொள்ளவும் உரிமை உண்டு. அதிலும் அப்பா ஒரு படி மேலே சென்று, “இனி இது உங்கள் வாழ்க்கை; உங்கள் முடிவுகள்; நீங்கள் ஏதேனும் யோசனை கேட்டால் சொல்லவும் நீங்களாக எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்கவும் மட்டுமே எங்களுக்கு உரிமை உண்டு. அதற்கு மேல் நாங்களே உள்ளே வரக் கூடாது; அது நாகரிகம் இல்லை” என்பார்கள் என்னிடமும் என்னவனிடமும். எல்லோரிடமும் இன்முகத்துடன் இன்சொற்களைப் பரிமாற வேண்டும் என்று நேரடியாக சொல்லித் தராமல் வாழ்ந்து காண்பிக்கும் அப்பா, “வாழ்க்கையில மன நிம்மதிதான் முக்கியம். அது சில மனிதர்களால் கெடலாம். அதற்காக அவர்களைச் சகித்துக் கொண்டு சரிக்கட்டி இழுத்துப் பிடித்து அவ்வுறவுகளைப் பேண வேண்டியதில்லை. உன் நிம்மதிக்கு நான் தடையாக இருப்பாதாக நீ உணரும் தருணம் என்னை ஒதுக்கி வைக்கவும் நீ தயங்கக் கூடாது” என்று வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் மன அமைதியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பாடம் எடுக்கிறார்கள். “உன்னை எப்படி நடத்துறாங்களோ அதுக்கேத்த மாதிரியே நீயும் அவங்கள நடத்தினா போதும். அது ‘யாராக’ இருந்தாலும் சரி” என்று ‘யாராக’வில் ஒரு பெரிய அழுத்தம் கொடுத்துக் கூறிய என்னவன் வாழ்வில் எனது பலம். “நான்தான் என் காலத்துல பேசாமலே இருந்து நெறைய பட்டுட்டேன். எல்லாரையும் பேச விட்டு போதும் போதும்ங்கிற அளவு கேட்டாச்சு… நீயாவது என்ன மாதிரி இல்லாம தைரியமா பேசு” – இது என் மாமியாரின் அறிவுரை. இப்படியாகப் பிறந்த வீடும் புகுந்த வீடும் அழகாக அமையப் பெற்றதை … விதி, கடவுள், கர்மா… இதில் ஏதோ ஒரு வஸ்து தூரத்தில் இருந்து குறுகுறுவெனப் பார்த்து ‘எதே? எல்லாம் கச்சிதமா இருக்கா? அப்படியெல்லாம் இருக்கப்பிடாதேடா’ என்று பில்லி சூனியம் வைத்து ‘ஆ.கோ’களை என் வட்டத்திற்கு வெளியில் தெளித்து விட்டிருக்கிறது. அவற்றில் சில வட்டதிற்கு அருகில் வந்து விழுந்து தொலைத்து விட்டதோடு அல்லாமல் உள் நுழையும் முயற்சியை வேதாளம் போல மேற்கொள்கின்றன.

 

ஒரு சில ‘ஆ.கோ’கள் ‘நான் ரொம்ப நெருங்குன சொந்தம்லா’ என்று கொக்கரிக்கும் போது ‘என்ன ஒரு 2 கிலோ மீட்டர் நெருக்கம் இருக்குமா?’ என கேட்கத் தோன்றும். 0.02 மில்லிமீட்டரே ஆயினும் என் வட்டத்திற்கு வெளியில்தான். ‘தூக்கி வளர்த்த பாசம்’, ‘தூக்கில் வழிந்த பாயாசம்’ என்றெல்லாம் அளவிற்கு மீறி உரிமை கொண்டாடி என் வெளியினுள் வந்து எல்லாவற்றிலும் தமது மூக்கை இருத்திக் கடுப்பேற்றும் பேர்வழி(சல்)களை ‘ஜோகாஸ்டா’ என அன்போஓஓஓடு விளித்து இன்புறுவோமாக! தெரிந்தே தான் கேட்கிறேன்… என் பெற்றோரெல்லாம் என்னைப் பெற்று தெருவில் அனாமத்தாக அலைய விட்டு ‘நீயே வளந்துக்கோ… அப்புறமா வந்து அழைச்சிட்டுப் போறேன்’ என விட்டுவிட்டார்களா என்ன?

 

சுற்றம் – விடாமல் சுற்றி சுற்றி வருவதால் எவனோ அனுபவித்துதான் இப்பெயரை வைத்திருக்க வேண்டும். குடும்பங்களினுள் பெரிய சண்டைகள் வந்து ஒருவரை ஒருவர் பார்க்காமலும் பேசாமலும் இருந்து விட்டு சில பல வருடங்கள் கழித்து ஒன்று சேர்கிறேன் பேர்வழி என்று வந்து அளவிற்கு மீறி ஒட்ட்ட்டி உறவாடுவது கொஞ்சமும் நெருடலாகவோ செயற்கையாவோ தெரியாதாதன் காரணம் நிச்சயமாக நமது இப்போதைய வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அல்லாது வேறு என்ன இருக்க முடியும்? பாசம் தோசம்னு யாராவது இப்போ அவங்களுக்கு சொம்பு தூக்குனீங்கன்னா வல்லினங்கள் வரிசை கட்டித் தயாராக இருக்கின்றன, ஆமா. மனிதர்கள் எப்போதும் மாறுவதில்லை. சென்ற தலைமுறை வேஷ்டி கட்டியிருந்தார்கள்… இந்தத் தலைமுறை காற்சட்டை அணிந்திருக்கிறார்கள். அவ்வளவே! மனநிலையில் ஒரு முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களையெல்லாம் சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் (அல்லது அதற்குப் பயிற்சி எடுத்துப் பழகிக் கொண்டும்) போவதிலேயே என் வாழ்க்கை பாதி முடிந்துவிடும் போல… நான் எப்போதுதான் என் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பது?

 

            பெண்களின் உலகம் பற்றி கூறவே வேண்டாம். “கல்யாணம் ஆகலையா?”, (சற்றே திருமணம் முடிந்த பெண்ணிடம்) “அப்புறம் ஏதேனும் விசேஷம் உண்டா?” (அப்போ கல்யாணம் விசேஷம் இல்லியா?), (குழந்தை பிறந்த பின்) “தாய்ப்பாலா? புட்டிப் பாலா?” என்று தலையில் ஏறிக் கொண்டு கொலையாய்க் கொல்லும் அபத்தத்தை என்னவென்று சொல்ல? நெருங்கிய உறவாம்… உரிமையாம்… அக்க்கறையாம்… இப்பெயர்களில் எல்லாம் சமூகம் கொடுக்கும் அழுத்தம், நெருக்கடி ரொம்பவே எல்லை மீறிச் செல்கிறது. “நமக்குச் சம்பந்தமில்லாத இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்?” என்றெல்லாம் யோசிக்கவே மாட்டார்களா? சிலர் நடு வீட்டில் பெப்பரக்கே என்று உட்கார்ந்து நாள் முழுக்க சீரியல்களாகப் பார்த்துத் தள்ளிவிட்டு அதில் வருவது போன்றே வில்லத்தனமாக ஜாடை மாடையாகப் பேசுவது; எல்லோர் முன்னிலும் நல்லவர் போல் நம்மை ஒரு மாதிரி நடத்துவது; தனிமையில் வேறு மாதிரி வித்தியாசம் காண்பிப்பது… ஆக மொத்தம் சில்லரைத்தனங்களில் ஈடுபட்டு நம் உசுரை எடுப்பது. இவர்களின் சின்னத்தனத்தை வெளியே சொல்வது இன்னும் சின்னத்தனமாக இருக்கும் ஆதலால் இவர்கள் நம்மிடம் காண்பிக்கும் அந்த முகத்தை நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூட இயலாது. பாசம் என்ற கள்ளப் போர்வையில் இப்படியாக அத்துமீறும் உறவுகள் உவப்பானதாக இல்லை. இந்த ஊசிப் போன பாத்திரப் பண்டங்களைக் கழிக்கும் உத்தி இருந்தால் யாரேனும் சொல்லுங்களேன்.

 

            உறவுகளில் பெரும்பாலானோர் நம்முடன் போட்டி போடுவதும் நம் மீது பொறாமை கொள்வதுமாக இருப்பது கண்டு, ‘ஏன் எதற்கு இப்படி? நாம அப்படி என்ன செஞ்சுட்டோம் இவங்களை?’ என்று யோசிக்கும் ஒவ்வொரு முறையும் தொ. ப அவர்கள் கூறிய பதில்தான் நினைவிற்கு வருகிறது… “பொறாமைக்குக் காரணமும் கிடையாது; மருந்தும் கிடையாது. அவங்களோட தரம் அவ்ளோதான்னு தெரிஞ்சுட்டுப் போய்ட்டே இருக்கணும்… அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது”             

 

            எனக்கெல்லாம் வாசிக்க, படிப்பில் அடுத்த கட்டத்திற்குத் திட்டமிட, சமூகத்தில் நிலவும் ஏற்றாத்தாழ்வுகளை, அவலங்களை, அதன் பின் ஒளிந்திருக்கும் அரசியலை உற்று நோக்க, சமூகச் செயற்பாட்டாளர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள, குடும்பத்தைக் கவனிக்க, சமைத்தல் முதலான இன்னபிற வீட்டு வேலைகளில் ஈடுபட என இவற்றைத் தாண்டி நேரமே போதவில்லை. ‘ஆ. கோ’ க்களுக்கெல்லாம் எப்படித்தான் நேரம் இருக்கிறதோ? பயனில்லாத யோசனைகளில் மூழ்கும் அளவிற்கு அவ்வளவு வெட்டியாக இருக்கிறார்கள் போலும். 

 

            எனக்கு நேரடியாகச் சொந்தமில்லாமல் போனாலும் கூட கொஞ்சம் சுற்றி வளைத்து வரும் உறவு முறையிலோ அல்லது தோழர்களிலோ சிலர் என்றென்றும் நலம் விரும்பிகளாகிப் போனதற்குக் காரணம் எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி அவர்கள் எங்கள் மீது காட்டும் அன்பும் எங்களுக்கான வெளியை(space) மதித்து நடப்பதும். எதிர்பாராமல் கிடைத்த இப்பொக்கிஷங்கள்  மனதிற்கு மிக நெருக்கமாகிப் போனதில் வியப்பேதுமில்லை!

 

            சுற்றி இருக்கும் எல்லோருமே தீய சக்திகள் என்பது போன்ற பிம்பத்தைத் தந்துவிட்டேனோ? அவ்வாறெனில் அது எனது ரௌத்திரத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். நல்லவற்றைக் காணும் ஆற்றல் நமக்கு இல்லையா என்ன? பெயர் குறிப்பிட்டு எழுதுவது மரபு இல்லை என்றாலும் கூட உணர்ச்சி பொங்கும் தருணத்தில் நல்லோருள் சிலரைக் குறிக்காமல் கடந்து செல்ல இயலவில்லை. அது செயற்கையாய் அமைந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே !

 

            துளியும் எதிர்பார்ப்போ ‘என்னிடம் சொல்லவில்லை’ போன்ற மனக்குறைகளோ இல்லாமல், எங்களுக்காக உளமாற மகிழ்ந்து, நாங்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வீட்டு நடப்புகளை தங்களோடே வைத்து எங்கள் வெளியை மதித்து, எப்போதும் அன்பை வாரி இறைக்கும் தாழக்குடி முருகன் சித்தப்பா – தீபா சித்தி. இவர்களுக்கு உறவாகிப் போவதற்குத்தான் உயிர் கொண்டோம் இம்மண்ணில் என்று தோன்றுகிறது. நீண்ட நாட்கள் கழித்துப் பேச நேருமாயின் ‘ஹையோ! நானே பேசணும்னு நினைச்சேன் டா… சாரி!’ என்று மன்னிப்புடனேயே தமது கலகல பேச்சைத் துவங்கும் அமெரிக்காவில் வசிக்கும் விஜயலட்சுமி சித்தியுடன் இரண்டு மூன்று மணி நேரம் கூட அரட்டை அடிக்கலாம். கனிவு கலந்த குரலில் குயிற்ற ஆரம்பிக்கும் போதே அவ்வளவு பிடித்துப் போகும் பொள்ளாச்சி ராஜி அத்தையை. ‘ஒடம்ப பாத்துக்கோடா… சீக்கிரமே சந்திப்போம்’ என்று ஒவ்வொரு முறையும் பேச்சின் முடிவில் வார்த்தைகளால் ஆரத் தழுவும் நித்யா மதினியை நேரில் கண்டு அவர்களின் அன்பைப் பெறக் காத்திருக்கிறேன். தோழர்களிடம் பேசுவதற்குச் சமூகம் சார்ந்த பொதுவான விஷயங்கள் நிறைய இருக்கும். ஆனால் உறவுகள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஏதேனும் விழாக்கள் பற்றித்தான் பேசுவார்கள். உறவுகளிலும் புறணி பேசாத, தோண்டித் துருவிக் கேள்விகள் கேட்காத அற்புதர்கள் உண்டு என்பதற்கான உதாரணங்கள் இம்மேன்மக்கள். கேட்காமலேயே இவர்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளவும் அறிவுரை கேட்கவும் தோன்றும்.

 

            ‘ஒங்க பக்கத்து வீட்டுக்குக் குடி வந்ததுக்கு நாங்க ரொம்ப குடுத்து வச்சுருக்கணும்’ என்று மனம் திறந்து மகிழும் அன்பு அங்கப்பன் அண்ணாவும் அவர்களது குடும்பமும் எங்களுக்குக் கிடைத்த வரம். எனக்கென பிரத்யேகமாக கோவிலில் வேண்டிக் கொள்ளும் கனகா ஆன்டி, என்னைத் தமது மகளாகவே கருதும் தாரா ஆன்டி – இப்படியாகவே  உறவுகளும் அமைந்து விடாதா என்ற ஆசை… ஏன், பேராசையே உண்டு எனக்கு. அவ்வளவிற்கெல்லாம் நான் மட்டுமல்ல… இவ்வுலகில் யாருமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களில்லை. என் வாழ்வில் அழகியலைத் தீட்டுவதெற்கென ஏராளமானோர் இருக்கும் போது, தம்மை விட்டால் அவ்வுறவின் வெற்றிடத்தை(!) நிரப்ப யாரும் கிடையாது என்பது போல் திரியும் பதர்கள் எதற்கு?

 

            எனவே அடுத்த வீட்டு நிகழ்வுகளை ஒன்று விடாமல் தெரிந்து கொள்ள விரும்பும் கிசுகிசு பிரியர்களாகிப் போன பெரும்பாலான உறவுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு : அகலாது (தேவையானால் அகன்றும்) அணுகாது தீக்காய்வார் போல  வாழ்தல் சிறப்புடைத்து.

 

            எனக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் (அடிப்படை) உரிமை உண்டு. வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள் எல்லாம் அதுதானே! எனவே என்னைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் எனக்கு மட்டுமே உண்டு என்பதைத் தாழ்மையோடு…. இல்லை ! இல்லை ! ஒருவித இறுமாப்புடனும் ஆணவத்துடனும் கூறிக் கொண்டு…

 

 

  • சோம. அழகு
Series Navigationவிடாது கருப்பு…!கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *