தீராதவை…!

அம்மா கைகளில்
குழந்தை…
சும்மாச் சும்மா
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.

கன்னங்களிலோ
நெற்றியிலோ
குத்து மதிப்பாக முகத்திலோ
இன்ன இடம்தான் என்றில்லாமல்
வாகாக வாய்க்கும்
எந்த இடத்திலுமோ
வென…

வாகனங்களைக்
காட்டியொரு உம்மா
வானத்தைக்
காட்டியொரு உம்மா
மரங்களைக்
காட்டியொரு உம்மா
மனிதர்களைக்
காட்டியொரு உம்மா

கத்தும்
குருவியைக் காட்டியும்
கொத்தும்
கோழியைக் காட்டியும்
கழுவும்
கறி மீனைக் காட்டியும்
காத்திருக்கும்
கரும் பூனையைக் காட்டியும்
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.

இடது கையிலிருந்து
வலது கைக்கு
மாற்றும்போதொரு உம்மா
மயங்கும்
விழிகளில் உம்மா
மெல்லச் சுமந்து
தூளியில் இட
கிடத்தும்போதொரு உம்மா
கிடத்திய பின்னொரு உம்மா

தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா
அம்மாவின் உம்மா?

Series Navigationசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடுபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்