துளித்துளி

சிலந்தி வலையில்
சிதறித்தெளித்த
மழைத்துளி
சிறைப்பட்டுக்கிடந்த
சிலந்தியின் கால்களையும்
நனைத்திருந்தது ஈரம்.

குடித்துவிட்டுக்கீழே வைத்த
உள்ளிருப்பவை வெளித்தெரியும்
கண்ணாடிக்குவளையில்
அடியிலிருந்து மேலே
வந்த மீதமுள்ள நீர்
சிறு பாசிமணிகள் போல்
அதன் சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
கண்ணாடிக்குள்ளும் ஈரம்.

அடித்துப்பெய்த
மழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)