தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

This entry is part 11 of 14 in the series 15 ஜனவரி 2017

Untitled-12

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன.

விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள் தங்கி, பின்பு  இருவராகி, இறுதியில் தனி அறையில் தங்கியதும் இனிமையான அனுபவமே. இப்படி கடந்த ஆறு ஆண்டுகள் வாழ்க்கையின் இளமையான பருவத்தை விடுதிகளில் தனியாகக்  கழிப்பதும் நல்லது என்றே தோன்றியது. நாம் இனி என்றுமே அடுத்தவரின் உதவியை நாடாமல் நம்மை நாமே கவனித்துக்கொள்ள நல்ல பயிற்சி இது. இந்த இளம் வயதிலேயே சுதந்திரமாக இருந்தாலும் பொறுப்புடன் வாழக் கற்றுத்தருவது விடுதி வாழ்க்கை. கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட செப்பனிடுவது விடுதி வாழக்கை. கைவசமுள்ள பணத்தை சிக்கனமாகச் செலவு செய்யும் பொருளாதார திட்டமிடுதலை கற்றுத் தருவது விடுதி வாழக்கை. உணவை நேரத்தோடு, அளவோடு உண்ண வைப்பதும் விடுதி வாழ்க்கை . நம்முடைய  அறையை ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பயிற்சியைத்  தருவது விடுதி வாழ்க்கை. என்னுடைய மேசை மீது அதிக சாமான்கள் இல்லாமல் படிக்கும் நூல்களே இருக்கும். அதோடு நூல்களை கண்டமாதிரி போடாமல் ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பேன். ( இத்தகைய நல்ல பண்புகள் இன்றுவரைத் தொடர்கின்றன )

இந்த இறுதி ஆண்டுடன் விடுதி வாழ்க்கை முடிவதில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவன் ஆனதும் ஒரு வருடம் மீண்டும் விடுதியில் தங்கி பயிற்சி மருத்துவனாக பணி செய்யவேண்டும். அப்போது வேலூர் நகரில் உள்ள சி. எம். சி. மருத்துவமனை வளாகத்தினுள் உள்ள ஆண்கள் பயிற்சி மருத்துவர் விடுதியில் தங்கவேண்டும்.அங்கும் தனி அறைதான்.

இவ்வாறு உற்றார் உறவினரையெல்லாம் விட்டுவிட்டு கடந்த ஆறு வருடங்கள் விடுதியிலேயே கழித்தது ஒருவகையில் கவலையைத் தந்தாலும், படித்து பட்டம் பெற்று கொண்ட குறிக்கோளை அடையவேண்டும் என்ற வாஞ்சையால் தனிமை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

அதிலும் எனக்கு அப்பாவுடன் சிங்கப்பூரில் இருந்த பத்து வருடங்களும் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இனிமேல் கிராமத்தில் மட்டும் இருந்து என்ன சாதிக்கப்போகிறேன். அதனால் விடுதியில் இருப்பது எனக்கு ஒருவகையில் இன்பமாகவே இருந்தது. படுக்க கட்டில் மெத்தையும், சொந்தத்தில் சூழல் விசிறியும் போதுமான சொகுசைத் தந்தன.  விடுதி நண்பர்களும்  உற்ற துணையாக மாறிவிட்டனர். இனி வருட இறுதியில் விடுதியைவிட்டு நிரந்தரமாக வெளியேறும்போது நிச்சயமாக கவலையாக இருக்கும். அதைத் தவிர்க்க இயலாது.

எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதித் தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருந்தன. தேர்வுக்கு தயார் செய்வதில் நாங்கள் அனைவருமே மும்முரமாக இருந்தோம். மொத்த விடுதியும் இரவில் ஒரு படிக்கும் தொழிற்சாலை போன்ற எனக்குத் தோன்றும். ஒவ்வொரு அறையிலும் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அப்போது இது என்ன வினோதமான வாழ்க்கை என்றும் எண்ணத் தோன்றும்!

இந்த கல்லூரிப் பருவம் காதலிப்பதற்கு ஏற்ற பருவமே. என் வகுப்பில் சில ஜோடிகள் காதலில் ஈடுபட்டிருந்தனர். எனக்கு இங்கு வருமுன்பே சிங்கப்பூரிலும் தாம்பரத்திலும் காதல் அனுபவம் இருந்ததால் இங்கு வகுப்பு மாணவியர் யாரையும் காதலிக்க விரும்பவில்லை. பெண்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தேன்.லதாவிடமிருந்தும் வெரோனிக்கவிடமிருந்தும் கடிதங்கள் சில மாதங்களாகவே வரவில்லை. அதை நானும் பெரிதாகக் கொள்ளவில்லை. தொலைவும் நீண்ட பிரிவும் இப்படிதான் ஆகும் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். நல்ல வேளையாக அவர்களின் நினைவு என் படிப்புக்கு இடையூறாகவில்லை.

நான் பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்தேன். படித்ததோடு அவற்றை முழுத்தாள்களில் குறிப்புகளாக எழுதியும் வைத்துக்கொள்வேன்.நன்றாக படங்களும் வரைவேன்.படங்களுடன் கூடிய பதில்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெறலாம். எழுதுவதைவிட படங்கள் மூலம் சிறப்பாக விளக்கலாம்.

எனக்கு இறுதி ஆண்டுக்கான தேர்வுக்கு தயார் செய்வதுடன், நான்காம் ஆண்டில் நான் தோல்வியுற்ற  சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சு இயல் பாடத்தின் தேர்வை மீண்டும் எழுதியாகவேண்டும். அதனால் அதற்கும் மும்முரமாகத் தயார் செய்தேன்.

ஆறு மாதத்தில் அந்த தேர்வு எழுதினேன்.ஆறு கேள்விகளுக்கு திருப்திகரமாக பதில் எழுதினேன். நேர்முகத் தேர்வுக்கு சென்னை சென்று நன்றாக பதில் அளித்தேன். நான் தேர்ச்சிபெற்றது அன்றே தெரிந்துவிட்ட்து. மகிழ்ச்சியுடன் வாடகை விடுதிக்கு  திரும்பினேன்.  அன்று இரவு மவுண்ட் ரோட்டிலுள்ள சீன உணவகம் சென்றேன். மறுநாளே வேலூர் திரும்பிவிட்டேன். தாம்பரம் செல்லவில்லை. இறுதித் தேர்வுகளுக்குத் தயார் செய்யவேண்டிய காரணத்தால் நாட்களை வீணாக்க விரும்பவில்லை. மனதையும் சிதறடிக்க விரும்பவில்லை!

இறுதித் தேர்வுகள் மிகவும் முக்கியமானவை. அவை  மருத்துவம் ( Medicine ), அறுவை மருத்துவம் ( Surgery ),  பிரசவமும் மகளிர் நோய் இயலும்  ( Obstetrics and Gynaecology ) ஆகிய மூன்று பாடங்கள். இவை மூன்றுமே சற்று கடினமானவை. முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுவது சிரமம். பலர் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாமல் அடுத்தடுத்த முயற்சிகள்  செய்வார்கள். அந்த நிலைக்கு நான்  ஆளாக விரும்பவில்லை. அதனால் சற்று கடுமையாகவே பாட நூல்களிலும் நோயாளிகளைப் பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிடவேண்டும்.

மருத்துவப் பாடத் தேர்வில் எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் ஆறு வினாக்களுக்கும் சரியான பதில் எழுதி தேர்ச்சியடைய வேண்டும். அதோடு அது முடிந்துவிடாது. சென்னையிலுள்ள பொது மருத்துவமனையில் வார்டில் உள்ள நோயாளி ஒருவரைப் பரிசோதனை செய்தாக வேண்டும். பரிசோதனை நேரம் முடிந்ததும் தேர்வாளர் வருவார். அவரிடம் அந்த நோயாளியைப்பற்றி விரிவாகக் கூறவேண்டும். அதில் முக்கியமாக அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும், அவற்றின் அறிகுறிகள் பற்றியும், பரிசோதனையின் மூலம் கண்டறிந்தவற்றையும் கூறி, அதற்குத் தேவையான இரத்தம், சிறுநீர், எக்ஸ்-ரே பரிசோதனைகளையும் கூறவேண்டும். இறுதியில் அந்த நோய்க்கான சிகிச்சை பற்றியும் சொல்ல வேண்டும்.  இதை ” லாங் கேஸ் ” ( Long Case ) என்போம். இதற்கு ஒரு மணி நேரம் ஆகும். இது தவிர ஆறு ” ஷார்ட் கேஸ் “களும் ( Short Cases ) உள்ளன. வரிசையாக ஆறு நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களுக்கு உள்ள நோயைச் சொல்லிவிடவேண்டும். தேவைப்பட்டால் அவர்களிடம் இரண்டொரு கேள்விகள் கேட்டு பரிசோதனைகள் செய்துகொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடங்களே தரப்படும். பரிசோதனையாளர் அப்போது உடன் வருவார். இந்த செயல்முறைத் தேர்வுகள் காலையில் முடிந்தபின் மதிய உணவுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பிற்பகல் இரண்டு மணிக்கு மீண்டும் கூடுவோம். அப்போது நேர்முகத் தேர்வு நடைபெறும். அப்போது ஒவ்வொருவராகத் தேர்வாளர்களிடம் செல்லவேண்டும். அவர்கள் இரண்டு பேர்கள். நாங்கள் எழுத்துத் தேர்விலும் செயல்முறைத் தேர்விலும் வாங்கிய மதிப்பெண்கள் அவர்களிடம் இருக்கும். அதைப் பார்த்துவிட்டு எங்களைத் தேர்ச்சியுறச் செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்திருப்பார்கள். அதற்கேற்ப வினாக்களைக் கேட்பார்கள். அவர்கள் கேட்கும் விதத்திலிருந்தே நாங்கள் தேர்ச்சியுற்றோமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரிந்துவிடும். சில வேளைகளில் அவர்களே வாழ்த்தி அனுப்புவார்கள். இல்லையேல் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து பார்க்கலாம் என்பார்கள்! மருத்துவம், அறுவை மருத்துவம், பிரசவமும் மகளிர் நோய் இயலும்  ஆகிய பாடங்களுக்கு இறுதித் தேர்வு இப்படிதான் நடைபெறும். அதன் முடிவும் அன்றே தெரிந்துவிடும். எழுத்துத் தேர்வில் நன்றாகச் செய்து தேறினாலும், சென்னையில் நடைபெறும் செயல்முறைத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால்தான் அந்தப் பாடத்தில் தேர்ச்சி ஆகலாம்.

பாடங்களை முழுமையாகக் கற்றிருந்தால்தான் தேர்வில் தடுமாறாமல் தேர்ச்சி பெறலாம். இல்லாவிட்டால் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்தாகவேண்டும்.படித்தவற்றையே மீண்டும் ஆறு மாதங்கள் படிப்பது சிரமமான காரியம். முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவதே சிறந்தது.

நானும்  கடந்த நான்கு வருடங்களில் எத்தனையோ தேர்வுகளை சந்தித்துவிட்டேன். இரண்டாம் வருடத்தில் ஒரு முறையும் நான்காம் ஆண்டில் ஒரு பாடத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளேன். அவை அனைத்தையும்விட இந்த இறுதி ஆண்டு தேர்வுகள்தான் மிகவும் கடினமானவை. இதில் மட்டும் தேறிவிட்டால் இனி தேர்வுகளே  இல்லை! நான் ஒரு மருத்துவன் ஆகிவிடுவேன்! (  ஒரு வேளை பின்னாளில் ஏதாவது ஒரு துறையில் நிபுணர் ஆக விரும்பினால் அப்போது தேர்வுகள்  எழுத நேரலாம்.) ஒருவேளை வாழ்க்கையில் இதுவே கடைசித் தேர்வாகவும் இருக்கலாம். அதனால் இதை எப்படியாவது கடந்துவிட வேண்டும்!

ஒரே குறிக்கோளுடன் இறுதியாண்டின் தேர்வுகளுக்காக தயார் செய்தென். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்!

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மனதில் மூன்று பாடங்களும் ஆழமாகப் பதிந்துகொண்டிருந்தன. இருந்தாலும் வினாத்தாளில் எந்தக் கேள்வி வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆறு கேள்விகளும் சாதகமாக இருந்தால் விடையை தங்குதடையின்றி எழுதிவிடலாம். ஏதாவது ஒரு கேள்வியில் சிக்கல் உண்டானால் அவ்வளவுதான்! தயார் செய்த அனைத்துமே வீண்!
இந்த மூன்று பாடங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை பழைய கேள்வித் தாள்களில் ஆராய்ந்து அவற்றுக்கான பதில்களையும் தயார் செய்து வைத்திருந்தேன். அவற்றைத் திரும்பத் திரும்ப புரட்டிப் பார்ப்பேன்.
ஒரு வகையாக இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டது! நான் அதை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் காத்திருந்தேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…மாமதயானை கவிதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *