தொடுவானம் 58. பிரியாவிடை

Madras University Centinary Hallசென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நுழைவுத் தேர்வு நடைப்பெற்றது. அது மெரினா கடற்கரையின் எதிரே அமைந்துள்ள பிரமாண்டாமான கட்டிடம்.

சுமார் நானூறு மாணவ மாணவிகள் தேர்வு எழுதினோம். மூன்று மணி நேரம் தரப்பட்டது. மொத்தம் ஐநூறு கேள்விகள். ஒவ்வொன்றுக்கும் ஐந்து விடைகள் தரப்பட்டிருந்து. அவற்றில் சரியான ஒரு விடையைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. தவறான  விடை தந்தால் மதிப்பெண்களை இழக்க நேரிடும்! சுலபம்தான். ஆனால் படித்து பார்க்கும்போது ஐந்தும் சரியான விடைபோன்று தெரியும். அதுதான் சிக்கல். நான் நிதானமாக ஒவ்வொரு பதிலையும் படித்துப் பார்த்து எனக்கு சரி எனப்பட்டதை தேர்ந்தெடுத்தேன். விடை தெரியாவிட்டால் பதில் சொல்லாமல் விட்டு விடுவதே நல்லது. தவறாக சொல்லி மதிப்பெண்களை ஏன் இழக்க வேண்டும்? ஒரு வகையில் எனக்கு கவலை இல்லை. இதில் தேர்ச்சி பெற்றால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அங்கு ஒரு வேளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தால்தான் வாய்ப்பு அதிகமாகும். தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை. மருத்துவத்தை அதோடு மறந்துபோக வேண்டியதுதான். இருக்கவே இருக்கிறது தமிழ் இலக்கியம்! அதில் சேரவேண்டுமென்று இந்நேரம் வெரோனிக்கா பிரார்த்தனைகூட செய்துகொண்டிருப்பாள்.

தேர்வு எழுதுகிறேன் என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் கிடு கிடுவென்று அந்த ஐநூறு கேள்விகளுக்கும் பதில் தந்துவிட்டு தேர்வு நேரம் முடிவதற்குள் வெளியேறிவிட்டேன்! மற்றவர்களில் பெரும்பாலோர் இன்னும் எழுதிக்கொண்டுதான் இருந்தனர்.

மிகுந்த ஆர்வத்துடன் தாம்பரம் திரும்பினேன். அத்தை வீட்டில் மதிய உணவு தயாராக இருந்தது. அத்தை மகள் ஆர்வத்துடன் உணவு பரிமாறி மகிழ்ந்தாள். தேர்வு பற்றி கேட்டாள். சுலபமாக இருந்தது என்றேன். நிச்சயம் நீங்கள் பாஸ் செய்துவிடுவீர்கள் என்றாள். அவளுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. அப்போது டாக்டர் அத்தான் என்று அழைக்கலாம் அல்லவா ?

கொஞ்ச  நேரம் படுத்துத்  தூங்கினேன். மாலையில் வெரோனிக்கவைப் பார்க்க புறப்பட்டேன். அவள் நிச்சயம் எனக்காகக்  காத்திருப்பாள் நான்தான் முன்பே கடிதம் எழுதியிருந்தேனே.

அவளின் தாயார் என்னை மிகுந்த அன்புடன் உபசரித்தார். அவளுடைய தந்தையும் அன்பாகப் பேசினார். தங்களுடைய மகள் நெருங்கிப் பழகும் கல்லூரித் தோழனைப் பற்றி அவர்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் விருந்துபசரிப்பது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டியது. அவள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலித்தது. ஒரு வேளை நாங்கள் இருவரும் வேதாகமம் தொடர்புடைய ஓய்வு நாள் பள்ளியுடன் தொடர்புடைய நண்பர்கள் என்பதால் அந்த நம்பிக்கை கொண்டிருக்கலாம். கடவுளின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் தவறான வழியில் செல்லமாட்டோம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

சிற்றுண்டியும் தேநீரும் பரிமாறினார்கள். அன்று எழுதிய தேர்வு பற்றி கேட்டார்கள். நன்றாக எழுதியதாகச் சொன்னேன்.
” மெடிக்கல் கிடைக்கணும் என்று நான் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறேன். ” அவளின் தாயார் கூறினார். அவளைப் பார்த்தேன்.அவள் புன்னகைத்தாள். நிச்சயம் அவள் மருத்துவம் கிடைக்கக் கூடாது என்றுதான் வேண்டியிருப்பாள்.

          ” ஒரு வேளை கிடைக்காவிட்டால் இங்கேயே இலக்கியம் படிக்கப் போகிறீர்களா?  வெரோனிக்கா அப்படிதான் சொன்னாள் .”  அவளுடைய தந்தை கேட்டார்.
          ” அப்படிதான் யோசித்துள்ளேன்.” நான் பதில் கூறினேன்.
          அவளிடம் அங்கு தனிமையில் பேசமுடியவில்லை. கண் ஜாடையில் வெளியில் போகலாம் என்றேன். அதைப் புரிந்துகொண்ட அவளும் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள்.

அறைக்குள் புகுந்து சேலை அணிந்துகொண்டு வெளியில் செல்ல தயாரானாள். அதைப் புரிந்துகொண்ட பெற்றோர் இரவு உணவுக்குள் திரும்பிவிடச் சொன்னார்கள்.

” பரவாயில்லை அம்மா. நாங்கள் வெளியில் சாப்பிடப்போகிறோம் ” அவள் கூறினாள் .

” ஆமாம். மவுண்ட் ரோடு வரை செல்ல வேண்டும். அப்படியே சாப்பிட்டுவிட்டு திரும்புகிறோம். ” நான் கூறினேன்.

வீட்டை விட்டு வெளியேறி வேகமாக தாம்பரம் இரயில் நிலையம் சென்றோம். அங்கு மின்சார இரயில் நின்றது. கூட்டம் அதிகமில்லை. அருகருகே அமர்ந்து கொண்டோம். இரயில் புறப்பட்டது. அரை மணி நேரத்தில் சென்னை பூங்கா நிலையம் வந்துவிட்டது.

ஆட்டோ மூலம் மெரினா கடற்கரை சென்றோம். அங்கு கரையில் இருந்த ஒரு  தனிப் படகின் அருகே மணல் பரப்பில் அமர்ந்தோம்.
அப்போதுதான் , ” எப்படி இருக்கீங்க? ” என்று ஆவல் பொங்க கேட்டாள்.

” நான் அப்படியே .இருக்கேன். நீ எப்படி இருக்கே? ” நான் பதிலுக்குக் கேட்டேன்.

” நானும் அப்படியேதான் இருக்கேன். ” இது அவளின் பதில்.

” அந்த ” அப்படியே ” என்பதின் அர்த்தம் தெரியாமலேயே அவ்வாறு கூறிக்கொண்டோம். ”

”  எப்படி எழுதினீர்கள்? ”

” எழுதுவதற்கு ஒன்றுமில்லை.’  டிக் ‘ தான் அடிக்கணும். எது பற்றியும் யோசிக்காமல் கிடு கிடுவென்று டிக் செய்துவிட்டு வெளியேறிவிட்டேன்.”

”  இதில் பாஸ் ஆனதும் மெடிக்கல் கிடைத்துவிடுமா? ”

” இல்லை. அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவேண்டும். என்னை அழைப்பார்களா  என்பது தெரியவில்லை. அகில இந்திய ரீதியில் மொத்தம் நூற்று இருபது பேர்களைத்தான் அழைப்பார்கள்.அவர்களில் நான் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்களில் அறுபது பேர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மருத்துவம். இல்லாவிட்டால் இலக்கியம். ”

” இடம் இல்லாவிட்டால்தான் இலக்கியம்! எனக்காக இல்லை! அப்படித்தானே? ”

” ஆமாம். அப்படிதான். இது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கட்டம். நான்  இங்கு வந்ததே மருத்துவம் பயிலத்தான்.என் அப்பாவின் கனவு அது …”

” உங்கள் கனவு? ”

” எனக்கும் அந்த ஆசை உள்ளது. ஆனால் இங்கு வந்தபின்… தமிழ் வகுப்புச் சென்றபின்… உன்னைக் கண்டபின்…இலக்கியம் மீதும் ஆர்வம் பிறந்துள்ளது! இந்த இரண்டில் எது கிடைத்தாலும் சரிதான்.”

அவள் பதில்  பேசவில்லை.

அவளின் மனநிலை எனக்குப் புரிந்தது. உனக்காக மருத்துவம் பயில்வதை தியாகம் செய்துவிடுகிறேன் என்று நான் சொல்வேன் என்றுகூட அவள் எதிர்பார்த்திருக்கலாம். மருத்துவம் கிடைக்காவிட்டால்தான் நீ என்று சொன்னது போன்றிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?

பாவம்  அவள்! தெரிந்தோ தெரியமலோ என்மீது தன்னுடைய மனதைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கிறாள்!

இந்தக் காதலே இப்படித்தான்! எவ்வளவுக்கு எவ்வளவு துடிப்பு இருக்குமோ அதே அளவுக்கு தவிப்பும் இருக்கும்!

          எங்கள் எதிரில் கடல்  அலைகள் இரைச்சலுடன் கரை வரை வேகமாக வந்த வேகத்தில் மறைந்து போயின. பாவம் லதா. அவள் இந்தக் கடலுக்கு அப்பால் இருக்கிறாள். இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்கிறாளோ. இப்போதெல்லாம் அவளுடைய ஏக்கம் அதிகமில்லை.அவளுடைய நினைவையெல்லாம் அருகில் உள்ள இவள் அழித்து வருகிறாள். அது எப்படி என்றும் தெரியவில்லை. அவளைவிட இவள்  அழகி என்பதாலா? அழகுக்கும் காதலுக்கும் தொடர்புள்ளதா? அவளைவிட இவள் நிறமாக இருப்பதாலா? காதலுக்கும் நிறம் உள்ளதா? இப்போது இவளைக் காதலிப்பது போல் தெரிகிறதே. லதா மீது காதல் உள்ளபோதே இவள் மீதும் காதலா? லதாவை நான் பிரிந்து தானே வந்துள்ளேன்? அவளை நான்  மறந்துபோகவில்லையே. அப்படியானால் இவள்? காதலர்கள் போன்றுதானே தனிமையில் கடற்கரை வந்துள்ளோம். இவள் காதலைத்தானே என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்.இதை காதல் போன்ற நட்பு என்று எப்படிச் சொல்வது.
          எங்களின் இருவரது மனப் போராட்டத்தைப் புரிந்து கொண்டது போல கடல் அலைகள் இன்னும் வேக வேகமாக கரைக்கு வந்து மோதி மறைந்தன. அப்போது அது நுரையாகி சிதறி ஓடியது. காதல் என்பதும் இப்படித்தானா? அது வெறும் மாயையா?
          ” என்ன பெரிய யோசனை? ” என்னுடைய குழப்பமான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் வெரோனிக்கா.
         ” எல்லாம்  நம்மைப்பற்றிதான். “
          ” எனக்கும் அதே கவலைதான். நான் ஏன் இப்படி ஆனேன் என்று தெரியவில்லை…. எப்போதும் உங்கள் நினைவுதான் எனக்கு! ஆமாம். மருத்துவக் கல்லூரி கிடைத்துவிட்டால் என்னை மறந்து போவீர்களா? “
          ” உன்னால் மறக்க முடியுமா? “
          ” அதான் முடியாது என்று சொல்லிவிட்டேனே. அதான் உங்களுக்கு இலக்கியம் கிடைக்கணும் என்று பிரார்த்திக்கிறேன்.. ஏன்  என்று புரியுதா ? “
          ” புரியாமலா? உன்னை அவ்வளவு சுலபத்தில் நான் மறந்து விடுவேனா? உன்னுடன் இருப்பது எனக்கு எவ்வளவு இன்பமானது என்பது உனக்குத் தெரியுமா? சரி சரி. ஏன்  இந்த நல்ல வாய்ப்பை கவலையில் வீணாக்கணும்? நல்லதே நடக்கும் என்று நம்புவோமே? ” அவளை ஆறுதல் படுத்தினேன்.
           ” அப்படியே பிரிய நேர்ந்தாலும் வாரந்தோறும் வந்து போகணும். வராவிட்டால் நான் தேடி வந்து விடுவேன்.”
           ” கூடுமானவரை முயன்றுபார்க்கிறேன். இல்லையேல் இரு வாரத்துக்கு ஒரு முறை.”
           ” அல்லது ஒரு மாதம். பின்பு இரண்டு மாதம்.அப்படித்தானே? “
           ” அப்படியெல்லாம் இல்லை. வாய்ப்பு வரும்போது நிச்சயம் வருவேன்.போதுமா? ” அவளுடைய மென்கரம் பற்றி கூறினேன். அவள் அதை இறுகப் பற்றி தன்னுடைய நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டாள்.
            அப்படியே அவளைப் பற்றியவண்ணம் எழுந்து நின்றேன். அவளும் எழுந்து நின்றாள். இறுக அணைத்துக்கொண்டோம்!
           கைகள் கோர்த்தபடியே மெரினா புகாரிக்கு நடந்து சென்றோம்.
          சுவையான பிரியாணியை சுவைத்து உண்ண முடியவில்லை. பிரிவின் துயர் மேலிட்டது.அவள் கண் கலங்கினாள். நான் ஆறுதல் சொன்னேன். மீண்டும் சந்திப்போம் என்று வாக்குறுதி தந்தேன்.
          இது போன்று பிரிந்து செல்வது எனக்குப் புதியது அல்ல. இருந்தாலும் மனம் வலித்தது. அவளுக்கு இது புது அனுபவம்.பாவம் அவள்! இதுபோன்று சிலர் வருவதும் போவதும்தானா வாழ்க்கைப் பயணம்!
         அவளுடன் பழகிய நாட்கள் இனிமையானவை. இப்போது பிரியும் வேளை வந்துவிட்டது. இது இயற்கையின் நியதி. நடப்பது நடந்தே தீரும்.! அது நல்லதாகவே நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் புகாரியை விட்டு வெளியேறினோம்.
           இரயில் பயணம் முழுதும் என் கரத்தை அவள் இறுக பற்றியிருந்தாள். அதுவே எங்களின் பிரியாவிடை. தாம்பரம் வந்தடைந்தோம். அத்துடன் எங்கள் பயணமும் முடிந்தது!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்